Published:Updated:

ஹேஹேய்... அயர்ன் மேன், ஹல்க், வுல்வரின், டெட் பூல்.... இணைகிறார்கள்..! எப்படி?

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரில் பெற்ற தோல்வியை நம் சூப்பர்ஹீரோக்கள் எப்படிச் சரி செய்யப் போகிறார்கள்? அழிந்துபோன பாதி உலகை எப்படி மீட்டு எடுப்பார்கள்? எக்ஸ்-மென் குடும்பம் இவர்களுடன் எப்படி இணையப் போகிறது? இணையத்தில் பரவும் ஒரு தியரி சொல்வது இதைத்தான்.

ஹேஹேய்... அயர்ன் மேன், ஹல்க், வுல்வரின், டெட் பூல்.... இணைகிறார்கள்..! எப்படி?
ஹேஹேய்... அயர்ன் மேன், ஹல்க், வுல்வரின், டெட் பூல்.... இணைகிறார்கள்..! எப்படி?

புகழ்பெற்ற மார்வல் காமிக்ஸ் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் பல்வேறு ஹாலிவுட் படங்களை அலங்கரித்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஹீரோக்கள், இந்தியாவிலும் புகழ் கொடி ஏற்றியவர்கள் என்றால் அது அவெஞ்சர்ஸ் குடும்பம்தான். மார்வலின் காமிக்ஸ் கதைகளை வைத்து சோனி, ஃபாக்ஸ் போன்ற நிறுவனங்கள் ஸ்பைடர்மேன் மூன்று பாகங்கள், ஃபென்டாஸ்டிக் ஃபோர் இரண்டு பாகங்கள், தொடராக நீளும் எக்ஸ்-மென் படங்கள் எனக் கல்லா கட்ட, மார்வல் நிறுவனம் சற்றே சுதாரித்தது. நமது கதைகளை நாமே எடுப்போம் என `மார்வல் ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியது. ஆனால், ஒரு சில கதாபாத்திரங்களை பயன்படுத்தும் காப்புரிமையை சோனி, ஃபாக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு விற்று விட்டதால், அவெஞ்சர்ஸ் ஹீரோக்களான அயர்ன் மேன், ஹல்க், தோர், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட கதாபாத்திரங்களை மட்டும் வைத்து விளையாட வேண்டிய நிலைமை. சரியான திட்டமிடலுடன் 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய அதன் திரைப்பயணம் (மார்வல் சினிமேடிக் யுனிவர்ஸ் – MCU), இன்று அதன் அனைத்து சூப்பர்ஹீரோக்களையும் ஒன்றிணைத்த அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் என்ற பிரமாண்ட படம் வரை நீண்டிருக்கிறது. இடையில், ஏன்ட்மேன், ப்ளாக் பேந்தர் எனப் புதுப்புது கதாபாத்திரங்கள், சோனி நிறுவனத்துடன் டீல் பேசி புது ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி அதையும் தன் MCU-யுடன் இணைத்துக் கொண்டுவிட்டது.

அடுத்த அவெஞ்சர்ஸ் படத்துடன், இந்த MCU-வின் பிரதான கதை நிறைவுபெறும் என்ற நிலையில், அடுத்தது என்ன என்ற கேள்விக்கு தள்ளப்பட்ட மார்வல் ஸ்டுடியோஸ் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்தது. புகழ்பெற்ற தன்னுடைய பல கதாபாத்திரங்களின் காப்புரிமை ஃபாக்ஸ் நிறுவனத்துடன் சிக்கிக் கொண்டுவிட்டது. அதை வைத்து படங்கள் எடுத்து ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் (லோகன்) ஆவது வரை அவர்கள் போய்விட்டார்கள். இனியும் தாமதிக்கக் கூடாது என அந்த ஃபாக்ஸ் நிறுவனத்தையே தனதாக்கிக் கொண்டுவிட்டது மார்வல் ஸ்டுடியோஸின் தாய்க்கழகமான டிஸ்னி நிறுவனம். இப்போது மார்வல் ஸ்டுடியோஸ் தனக்கு வேண்டிய காமிக்ஸ் கதாபாத்திரங்களை தன் இஷ்டம்போல தன்னுடைய MCU-வினுள் கொண்டு வந்துவிடலாம். ஹிட்டடித்த டெட் பூல் உட்பட அனைத்து எக்ஸ்-மென் கதாபாத்திரங்களும், அவெஞ்சர்ஸ் சூப்பர்ஹீரோக்களுடன் ஒரே படத்தில் தோன்றினால் எப்படி இருக்கும். இது எப்படிச் சாத்தியாமாகும். அதைப் பார்க்கும் முன்பு, ஃபாக்ஸ் மார்வல் இதுவரை உருவாக்கி வைத்த எக்ஸ்-மென் யுனிவர்ஸில் என்ன நிலைமை என்பதைப் பார்த்து விடுவோம்.

எக்ஸ்-மென் உலகம் (ஃபாக்ஸ் மார்வல் யுனிவர்ஸ்):

எக்ஸ்-மென் படங்களைப் பார்த்தவர்களுக்கு இந்த அறிமுகம் தேவையில்லை. இருந்தும் ஒரே வரியில்...
எக்ஸ்-மென் படங்களில் வருபவர்கள் சூப்பர் ஹீரோக்களல்ல. அவர்கள் மரபுபிறழ்ந்தவர்கள். அதாவது ஆங்கிலத்தில் `Mutants’ என்று அழைக்கப்படுபவர்கள். இவர்களுக்கு அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களைப் போல சமுதாயத்தில் மதிப்பு கிடையாது (படத்தின் கதைப்படி மட்டுமே). வித்தியாசமான மனிதர்கள் என மக்களே இவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இவர்களைப் பார்த்து மக்கள் பயப்படவே செய்வார்கள். ஒடுக்கப்பட்ட இந்தச் சமூகத்தைத் தன் வழிகாட்டுதல் மூலம் காத்து வருபவர் சார்லஸ் சேவியர் (Charles Xavier). இந்த Xavier-யின் வழியைப் பின்பற்றுபவர்கள் எக்ஸ்-மென் (X-Men) என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால் ப்ரொபசர் சார்லஸ் சேவியர், மேக்னட்டோ, வுல்வரின், ஜீன் க்ரே, மிஸ்டிக் போன்றவர்கள். முதல் மூன்று பாகங்கள் முடிந்த நிலையில், அடுத்த பாகத்தில் மொத்த டைம்லைனையும் மாற்றி பழைய கதாபாத்திரங்களுக்குப் புதிய முகங்களைக் கொடுத்து வைத்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு அதிக ரசிகர்களைக் கொண்ட வுல்வரின் கதாபாத்திரத்தையும் `லோகன்’ படத்தில் கொன்று விட்டார்கள். இந்த நிலையில் மக்களால் வெறுக்கப்படும் (படத்தில் மட்டும்) மியூடன்ட்ஸ் (mutants) எப்படி மக்களால் போற்றப்படும் அவெஞ்சர்ஸ் சூப்பர்ஹீரோக்களுடன் இணையப் போகிறார்கள். இப்போது அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்த்து விடுவோம்.

அவெஞ்சர்ஸில் என்ன நிலைமை?

அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தில் அத்தனை சூப்பர்ஹீரோக்கள் எவ்வளவு தடுத்தும் வில்லன் தானோஸ் வெற்றி பெறுகிறான். தான் நினைத்ததுபோலவே பாதி உலகை (மக்களை) அழித்து விடுகிறான். இதில் ஸ்பைடர்மேன், ப்ளாக் பேந்தர் உள்ளிட்ட சூப்பர்ஹீரோக்களும் அடக்கம். பலரும் இதில் சோகமடைந்தாலும், அடுத்து வரவிருக்கும் புது கதாபாத்திரம் கேப்டன் மார்வல் மற்றும் இன்ஃபினிட்டி வார் இரண்டாம் பாகம் ஆகியவற்றின் மேல் எதிர்பார்ப்பு கூடியிருக்கவே செய்கிறது. இப்படியொரு நிலையில், அவெஞ்சர்ஸ் தானோஸிடம் ஏன் தோற்றார்கள் என்பதற்கு ஒரு தியரியும், எக்ஸ்-மென் மியூடன்ட் கதாபாத்திரங்கள் எப்படி MCU-வில் இணையப்போகின்றன என்பதற்கு ஒரு தியரியும் இணையத்தில் சுற்றி வருகின்றன.

இரண்டு தியரிகள்:

இன்ஃபினிட்டி வார் படத்தில், ஓரிடத்தில், விண்வெளியில் அந்தரத்தில் மிதந்துகொண்டு பூமியைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருப்பார்கள் அயர்ன் மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ், ஸ்டார் லார்ட் மற்றும் ஸ்பைடர்மேன். அப்போது அடுத்து என்னவெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அறிய, காலத்தை வென்ற சூப்பர்ஹீரோ டாக்டர் ஸ்ட்ரேஞ் எதிர்காலத்தை உற்று நோக்குவார். அதில் எதிர்காலம் பல லட்சம் வழிகளில் விரியும் வாய்ப்பு இருப்பதாகவும். ஆனால், அதில் அவெஞ்சர்ஸ் வெற்றிபெற்று உலகைக் காக்க ஒரே ஒரு வழி மட்டும்தான் இருப்பதாகவும் கூறுவார். அதன்பின் நடந்த கலவரங்களில், தோர் மற்றும் ப்ளாக் பேந்தரின் உதவியுடன் வெற்றியின் விளிம்பு வரை செல்லும் அவெஞ்சர்ஸ் குழு தோல்வியைத் தழுவும். தானோஸ், தான் நினைத்ததுபோலவே பாதி உலகை அழித்துவிடுவான். இக்கட்டான இந்தச் சூழ்நிலையில், ஷீல்ட்டின் தலைவர் நிக் ஃப்யூரி உதவிக்கு கேப்டன் மார்வலை அழைப்பதோடு படம் முடிந்திருக்கும்.

அவெஞ்சர்ஸ் பெற்ற இந்தத் தோல்வியை எப்படிச் சரி செய்யப் போகிறார்கள். எப்படிக் காணாமல்போன பாதி உலகை மீட்டு எடுப்பார்கள். இணையத்தில் பரவும் ஒரு தியரி சொல்வது இதைத்தான்.

அவெஞ்சர்ஸ் இதில் தோல்வி பெற வேண்டும் என்பதுதான் விதி. அதை முன்பே அறிந்தவர் டாக்டர் ஸ்ட்ரேஞ். இப்போது மீதமிருப்பவர்கள் கேப்டன் மார்வலின் உதவியுடன் டைம் ட்ராவல் போன்றதொரு யுக்தியைப் பயன்படுத்தி இறந்தவர்களை மீட்டெடுத்து இறுதிப் போரில் வெல்வார்கள் என்கிறது அந்த தியரி. இதில் இன்ஃபினிட்டி வாரில் இடம்பெறாத ஏன்ட்மேன் மற்றும் ஹாக்-ஐ கதாபாத்திரங்கள் உதவும் என எதிர்பார்க்கலாம். சரி, எக்ஸ்-மென் படங்களின் மியூடன்ட் கதாபாத்திரங்கள் எப்படி இதற்குள் வரும்?

முன்னர் கூறியது போலவே, மியூடன்ட்கள் ஓர் ஒதுக்கப்பட்ட சமூகம். இவ்வளவு ஏன், அவென்ஜர்ஸில் வரும் ஸ்கேர்லட் விட்ச் கதாபாத்திரமே ஒரு மியூடன்ட்தான். காப்புரிமை காரணமாக மட்டுமே அந்த வார்த்தையை அவெஞ்சர்ஸ் படங்களில் மார்வலால் பயன்படுத்த முடியவில்லை. இணையத்தில் உலாவும் அந்த தியரியின்படி, இன்ஃபினிட்டி வார் படத்தில் இறந்தவர்கள் மீண்டும் கொண்டுவரப்படுவார்கள். ஆனால், அவர்கள் மனிதர்களாக இருக்க மாட்டார்கள். எக்ஸ்-மென் படங்களில் வருவதைப் போல மியூடன்ட்களாக இருப்பார்கள். நம் சூப்பர்ஹீரோ கோஷ்டியைத் தவிர, உயிர்ப்பிக்கப்படும் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் உடலில் மாற்றம் நிகழ்ந்திருக்கும். இன்ஃபினிட்டி ஸ்டோன் அவர்களின் உடலில் மறைந்திருக்கும் மியூடன்ட் ஜீனை உயிர்ப்பிக்கும். அதனால், அவர்கள் சக்திவாய்ந்த மியூடன்ட்களாக மாற்றப்படுவார்கள். எப்போதும்போல சாதாரண மனிதர்கள் அவர்களைப் பார்த்து அஞ்சுவார்கள், அவர்களை வெறுத்து ஒதுக்குவார்கள். இதன் மூலம், எக்ஸ்-மென் மற்றும் அவெஞ்சர்ஸ் இணைப்பு, ஃபாக்ஸ் மார்வல் யுனிவர்ஸ் மற்றும் MCU இணைப்பு என்பது சாத்தியப்படும்.

இந்த தியரி எந்த அளவுக்கு உண்மை?

இந்த தியரிதான் திரையில் அரங்கேறப் போகிறது என்றால், எக்ஸ்-மென் கதாபாத்திரங்களில் டெட்-பூல் தவிர மற்ற அனைத்தையும் ரீ-பூட் செய்ய வேண்டியிருக்கும். காரணம், டெட்-பூல் எக்ஸ்-மென் யுனிவர்ஸின் உள்ளே இதுவரை முழுமையாக நுழையவே இல்லை எனலாம். வுல்வரினாக அசத்திய ஹக் ஜாக்மேனின் ஒப்பந்தம் முடிந்துவிட்ட நிலையில் இதைச் செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மேலும், இந்த வருடம் வெளியாகவிருந்த இரண்டு எக்ஸ்-மென் யுனிவர்ஸ் படங்களான ‘டார்க் பீனிக்ஸ்’ மற்றும் ‘நியூ மியூடன்ட்’ படங்கள் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டன. மார்வல் ஸ்டுடியோஸ் ஃபாக்ஸ் நிறுவனத்தை வாங்கியவுடனே  கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்தத் தள்ளிப்போடல் உத்தரவு நிகழ்ந்திருக்கிறது. எனவே, இவர்கள், அந்த எக்ஸ்-மென் உலகத்தையும் இதனுடன் இணைக்கப் பார்க்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் `மார்வல் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் தாய்க்கழகமான டிஸ்னி நிறுவனத்தின் தலைவர் பாப் இகர் (Bob Iger) அளித்த பேட்டியில், ``மார்வல் சினிமேடிக் யுனிவர்ஸுடன் (MCU) எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் டெட் பூல் கதாபாத்திரங்களை இணைப்பது என்பது சாத்தியமான ஒன்றுதான். அதை நாங்கள் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். இந்த இணைப்பு உண்மையில் அரங்கேறப்போகிறது என்றால் மேலே நாம் படித்த இந்த தியரியைவிட சிறந்த வழி எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. எது எப்படியோ, அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா போன்றவர்களுடன் டெட் பூல், வுல்வரின் (ரீ-பூட் செய்யப்பட்ட) போன்ற கதாபாத்திரங்கள் தோன்றும் என்பதே நமக்கு டபுள் ட்ரீட்தானே?