Published:Updated:

சீசியம், அன்டர்கவர் ஆபரேஷன், கொஞ்சம் ட்விஸ்ட்... மற்றுமொரு மிஷன் இம்பாசிபிளா இந்த #Mile22?

சீசியம், அன்டர்கவர் ஆபரேஷன், கொஞ்சம் ட்விஸ்ட்... மற்றுமொரு மிஷன் இம்பாசிபிளா இந்த #Mile22?
சீசியம், அன்டர்கவர் ஆபரேஷன், கொஞ்சம் ட்விஸ்ட்... மற்றுமொரு மிஷன் இம்பாசிபிளா இந்த #Mile22?

மார்க் வால்பெர்க் நடிப்பில் `மிஷன் இம்பாசிபிள்' போல மற்றுமொரு ஆக்ஷன் ஸ்பை த்ரில்லர் படத்தொடரைத் தொடங்கி வைக்கும் முனைப்பில் வெளியாகியிருக்கும் `Mile 22' படம் எப்படி?

90 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய ஆங்கிலப் படங்கள், அதுவும் மிலிட்டரி ஆக்ஷன் படங்கள் என்றால் விறுவிறுப்புக்குப் பஞ்சமே இருக்காது. கூடவே இரண்டு நாடுகளுக்கு இடையேயான பனிப்போர், அதற்காக உளவு பார்க்கும் உளவாளிகள் என்ற கதைக் கரு கொண்ட படங்கள் பாப்கார்ன் சாப்பிடக்கூட நேரம் கொடுக்காமல் திரையை வெறித்துப் பார்க்க வைக்கும். திரைக்கதை, ஸ்டைல், கதாபாத்திரத் தேர்வு, அவை எழுதப்பட்ட விதம் போன்ற விஷயங்களில் அசால்டாக ஜெயித்துவிடும் இந்த espionage ஸ்பை த்ரில்லர்கள் கோட்டைவிடுவது என்னவோ சித்தாந்தத்திலும், லாஜிக்கிலும்தான். மார்க் வால்பெர்க் நடிப்பில் `மிஷன் இம்பாசிபிள்' போல மற்றுமொரு ஆக்ஷன் ஸ்பை த்ரில்லர் படத்தொடரை ஆரம்பித்துவைக்கும் முனைப்பில் வெளியாகியிருக்கும் `Mile 22' படம் எப்படி?

அமெரிக்கன் ஏஜென்ட் ஜேம்ஸ் சில்வா (மார்க் வால்பெர்க்) தலைமையில் இயங்கும் ஓவர்வாட்ச் என்று அழைக்கப்படும் ஸ்ட்ரைக் டீம் அமெரிக்காவில் இருக்கும் ரஷ்யாவின் சேஃப் ஹவுஸ் ஒன்றைத் தகர்க்கிறது. அவர்களிடம் இருக்கும் சீசியம் (`விஸ்வரூபம்’ படத்தில் வருவதுதான்!) எனப்படும் வெடிப்பொருள் பல உயிர்களைக் காவு வாங்குவதற்கு முன் தடுக்கவே இந்த ஆபரேஷன். 16 மாதங்கள் கழித்து இந்தோனேசியாவில் இருக்கும் போலீஸ் அதிகாரி லி நூர் (இகோ உவைஸ்) அமெரிக்கன் எம்பஸியில் சரணடைகிறான். மீதமிருக்கும் சீசியம் குறித்த தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கைத் திறக்க வேண்டுமென்றால், தன்னை உடனே இந்தோனேசியாவிலிருந்து வெளியேற்றி அமெரிக்காவில் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று டீல் பேசுகிறான். குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த ஹார்ட் டிஸ்க்கை அன்லாக் செய்யாவிட்டால் சீசியம் குறித்த தகவல்கள் யாருக்கும் கிடைக்காது என்ற நெருக்கடிக்கிடையே, அவனை அமெரிக்காவுக்குக் கடத்தும் பொறுப்பு ஜேம்ஸ் சில்வா டீமுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்கா பறக்கவிருக்கும் விமானம் இருக்கும் ஏர்ஸ்ட்ரிப்பை அடைய 22 மைல்கள்தாம் என்றாலும், பகை வளர்த்துக்கொண்ட இந்தோனேசிய போலீஸுக்கும் தண்ணி காட்டிவிட்டு இந்த மிஷனை முடிக்க வேண்டும். ஜேம்ஸ் சில்வா டீம் இதில் வெற்றியடைந்தார்களா, சீசியம் கைப்பற்றப்பட்டதா, இந்த லி நூர் உண்மையில் யார்... போன்ற பல கேள்விகளுக்கான விடையை 90 நிமிடங்களில் சுவாரஸ்யமாகச் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள்.

பரபர மிலிட்டரி ஆபரேஷனுடன் தொடங்கும் படம் அந்தப் பரபரப்பை இறுதிவரை தக்கவைத்து கொண்டே நகர்கிறது. ஃபீல்டில் இருப்பவர்களை `Child’ என்றும், ஆபரேஷனை சேஃப் ஹவுஸிலிருந்து நடத்தும் அதிகாரியை `Mother’ என்றும் கோட் வேர்டுடன்  அழைப்பது, ஃபீல்டில் இருப்பவர்களின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவற்றை இங்கிருந்தே கண்காணித்து தகவல் சொல்வது, சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கடமையே கண்ணாக இருப்பது... என எப்போதும் உயிருக்கு ஆபத்தான வேலையில் இருக்கும் ஸ்ட்ரைக் டீம் அதிகாரிகளின் வாழ்வியலை அப்படியே கண் முன் நிறுத்துகிறது படம். அதற்காக அவர்களைப் புனிதர் ஸ்தானத்தில் வைக்காமல், அவர்களும் மனிதர்கள்தாம்; அவர்களுக்கும் ஆசை, வெறுப்பு போன்றவை உண்டு; தவறும் செய்வார்கள் எனக் காட்டியிருப்பது ஆறுதலான விஷயம்.

ஸ்ட்ரைக் டீமை களத்தில் வழிநடத்தும் பொறுப்பு கொண்ட மார்க் வால்பெர்க்கிற்கு இது சற்றே பொருந்திப் போகாத வேடம்தான். இருந்தாலும், சிடுமூஞ்சித் தனத்துடன் சகட்டுமேனிக்குக் கெட்டவார்த்தைகள் பேசிக்கொண்டு, கையிலிருக்கும் எலாஸ்டிக் பேண்டை கோபம், டென்ஷன் வரும்போதேல்லாம் இழுத்துவிட்டுக் கொண்டு வித்தியாசமான உடல் மொழியில் கவனம் ஈர்க்கிறார். உயர் அதிகாரிகள், உடன் வேலை செய்யும் அதிகாரிகள் முதல் தங்களுடைய எம்பஸி இருக்கும் இந்தோனேசிய நாட்டின் அதிகாரிகள் வரை ஒருவரையும் மதிக்காமல் அவர் செய்யும் சேட்டைகள் இப்படியும் யாரேனும் இருப்பார்களா என யோசிக்க வைக்கிறது. நீங்க ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்தான் பாஸ்... அதுக்காக இப்படியா?

படத்தில் பழம்பெரும் நடிகர் ஜான் மால்கோவிச், நடிகைகள் லாரென் கோஹன், ரோண்டா ரௌசே, தமிழ் வம்சாவளி நடிகையான `டெல்லி பெல்லி’ புகழ் பூர்ணா ஜெகநாதன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தாலும், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி கவனம் ஈர்த்திருக்கிறார், லி நூராக வரும் இகோ உவைஸ். எம்பஸியின் உள்ளேயே தன்னைக் கொல்ல வந்த ரஷ்யர்களை துவம்சம் செய்யும் அந்தச் சண்டைக்காட்சி ஒன்றுபோதும். ஒரே அறையில் நடக்கும் அந்த ஸ்டன்ட்டை விரைவில் இந்தியப் படங்களில் எதிர்பார்க்கலாம். இகோவை நம்பலாமா வேண்டாமா என இந்தோனேசிய அரசாங்கமும், அமெரிக்கன் எம்பஸியும் பெரிய விவாதமே நடத்திக் கொண்டிருக்க... அவரோ மிகவும் கூலாக மெடிட்டேஷன் செய்வது, சிசிடிவி கேமராவில் ``நீங்க டைம் வேஸ்ட் பண்றீங்க” என்று எழுதிய காகிதத்தை தூக்கி காட்டுவது என அதகளம் செய்கிறார். குறைவாகப் பேசினாலும் சரியான திட்டத்துடன் களமிறங்கியிருக்கிறேன் என்பதைச் சொல்லாமல் புரியவைக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால், அது கேமராவும் ஜெஃப் ருஸ்ஸோவின் பின்னணி இசையும்தான். நிகழும் அத்தனை சம்பவங்களையும் வெறும் 90 நிமிடங்களுக்குள் அடக்கப் பார்த்திருக்கிறது, கோல்பி பார்க்கர் ஜூனியர் மற்றும் மெலிஸ்ஸா லாசனின் படத்தொகுப்பு. நடந்துகொண்டிருக்கும் கதையின் டைம்லைன் ஆங்காங்கே குழப்பியடிக்கப்பட்டு, மிஷன் முடிந்ததும் வரும் காட்சிகளையும் இடையிடையே திணித்திருப்பது சற்றே கண்ணைக் கட்டும் சமாசாரம்தான். படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் நம் மிஷன் இம்பாசிபிள் வகையறாக்கள்தாம் என்றாலும், இதில் ஒரு நம்பகத்தன்மை இழையோடியிருக்கிறது.

22 மைல் தூரம்தான். ஆனால், அதைக் கடப்பதற்குள் நடக்கும் சாகசங்கள், சண்டைக் காட்சிகள், சேஸிங் போன்றவை கடைசி நாற்பது நிமிடங்களுக்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கின்றன. அதிலும், அந்தக் குடியிருப்புப் பகுதியினுள் சிறுமி ஒருத்தியுடன் நிகழும் சம்பவங்கள் திக்திக் வகையறா. இவை அனைத்தும் இருந்தும் படத்தில் குறைகளும் வரிசைகட்டி நிற்கின்றன.

கதையின் முக்கியமான விஷயமே படத்தின் இறுதியில் வரும் அந்த ட்விஸ்ட்தான். ஆனால், அதுதான் மொத்தப் படத்தையும் காலி செய்திருக்கிறது. இதற்கு எதற்கு இவ்வளவு ஓட்டம், இவ்வளவு ஏமாற்று வேலை. முதலிலேயே செய்திருந்தால் சுலபமாக வெற்றி அடைந்திருக்கலாமே. அதிலும், ரஷ்யர்கள் பழிவாங்கத் தூண்டும் சம்பவத்துக்குக் காரணமான மார்க் வால்பெர்கை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை வேட்டையாடுவது என்ன லாஜிக்கோ... ஹீரோ அவர், செகண்ட் பார்ட் வேறு எடுக்க வேண்டும் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ. மார்க் வால்பெர்க்கும் `விஸ்வரூபம்’ கமல் போல `இந்தக் கதை தொடரும்’ என்று வில்லன் படத்தை வெறித்துப் பார்த்தவாறே செகண்ட் பார்ட்டுக்கு பில்டப் கொடுக்கிறார். டபுள் ஏஜென்டாகச் செயல்படும் ஒருவர் ட்ரிபிள் ஏஜென்ட்டானால் என்னவாகும் என்பது சுவாரஸ்யமான ஒன்லைன்தான். ஆனால், அந்த ட்ரிபிள் ஏஜென்ட், தான் வந்த காரியத்தை முடிக்க வழி நெடுக பல சந்தர்ப்பங்கள் அமைந்தும் இறுதிக் காட்சி வரை காத்திருப்பது ஏனோ?

ஸ்டைல், பரபர திரைக்கதை, நல்ல மேக்கிங் இருந்தும் கதையில் பெரிதாகக் கோட்டைவிட்டிருக்கிறது, இந்த `Mile 22'. இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் கவனமா இருங்க மார்க்!

அடுத்த கட்டுரைக்கு