Published:Updated:

`தீவிரவாதியா? பீஃப் வெச்சிருக்கியா?'' - `கெளல்' பேசும் ஆபத்தான அரசியல்! #Ghoul #PartOne

`தீவிரவாதியா? பீஃப் வெச்சிருக்கியா?'' - `கெளல்' பேசும் ஆபத்தான அரசியல்! #Ghoul #PartOne
`தீவிரவாதியா? பீஃப் வெச்சிருக்கியா?'' - `கெளல்' பேசும் ஆபத்தான அரசியல்! #Ghoul #PartOne

சிறுபான்மை மதத்தினர் அனைவரும் கடும் அடக்குமுறைக்கு ஆளாகிவரும் காலகட்டம். நாடு ராணுவமயமாக்கப்பட்டிருக்கிறது. எதிர்த்துக் கேள்வி இல்லை... லேசாக மூச்சுவிடுபவர்கள்கூட `தேசத் துரோகிகள்' என முத்திரை குத்தப்பட்டு ராணுவ வதை முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள்.

தற்கு முன்பாக வந்த பேய்ப்படங்களும் சீரிஸ்களும் நம்மைப் பயமுறுத்தியிருக்கின்றன இல்லையெனில் சிரிப்பு மூட்டியிருக்கின்றன. முதன்முறையாக அரசியல்... அதுவும் இன்றைய தேதியில் மிக முக்கியமான அரசியல் ஒன்றைப் பேசியிருக்கிறது `கெளல்' சீரிஸ். நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் இரண்டாவது ஒரிஜினல் சீரிஸ். முதல் ஒரிஜினலான `Sacred Games'-ஐ இயக்கிய அனுராக் காஷ்யப்பும் விக்ரமாதித்ய மோட்வானேயும்தான் இதிலும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இம்முறை தயாரிப்பாளர்களாக...!

எப்போதென்று சொல்லப்படாத எதிர்காலத்தில் ஒருநாள். இப்போது நம்மை ஆளுயர அரக்கனாகப் பயமுறுத்தும் மதவாதம் பிரமாண்ட ராட்சஷனாக உருப்பெற்றிருக்கும் எதிர்காலமது. சிறுபான்மை மதத்தினர் அனைவரும் கடும் அடக்குமுறைக்கு ஆளாகிவரும் காலகட்டம். நாடு ராணுவமயமாக்கப்பட்டிருக்கிறது. எதிர்த்து கேள்வி இல்லை.. லேசாக மூச்சுவிடுபவர்கள்கூட `தேசத் துரோகிகள்' என முத்திரை குத்தப்பட்டு ராணுவ வதை முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். `தீவிரவாதிகள் நம் மத்தியில்தான் இருக்கிறார்கள்' என விளம்பரப்படுத்தப்படுகிறது. புத்தகங்கள் ஆபத்தான பொருள்கள் எனத் தடைசெய்யப்படுகின்றன. பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு அரசு சொல்லும் பாடத்திட்டத்தை நடத்தும் கல்வி நிலையங்கள் மட்டுமே இயங்குகின்றன. ஆங்கிலத்தில் சொல்லப் போனால்... `Dystopian State'.

அப்படியான ஒரு சூழ்நிலையில் அரசு தேடிவரும் ஒரு பயங்கரவாதக் கும்பலின் தலைவன் அலி சயீத் பாழடைந்த ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாகத் தகவல் வருகிறது. அங்கே குவிகிறது ராணுவம். இருள் விரவியிருக்கும் ஹோட்டல் தளங்களில் மெதுவாக முன்னேறுகிறது ராணுவக் குழு. தூரத்து இருட்டிலிருந்து ஏதோ சொல்லியபடி நடந்து வருகிறது ஓர் உருவம். நெருங்கி வந்து தன் போர்வையை அது விலக்க, அந்த அழுக்கான ஆளின் வயிற்றில் ஒரு சின்னம் ரத்தம் தோய கிழிக்கப்பட்டிருக்கிறது. அவனை இரு வீரர்கள் இழுத்துச் செல்ல, அந்தப் பாதையின் முடிவிலிருக்கும் அறைக்குள் செல்கிறார்கள் வீரர்கள். சுற்றிலும் பிணங்கள் ரத்த வெள்ளத்தில் மிதக்க, நடுவே அமர்ந்திருக்கிறான் அவர்கள் தேடிவந்த அலி சயீத். அவனை நெருங்கும் வீரரை இழுத்து அவர் காதோரம் ஏதோ சொல்கிறான்.

நிற்க... இங்கே கெளல் பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடலாம். கெளல் என்பது அரேபிய புராணங்களில் சொல்லப்பட்டுள்ள ஒரு தீய சக்தி. தன் ரத்தத்தால் கெளலின் சின்னத்தை வரைந்து தன் ஆன்மாவை அதனிடம் அர்ப்பணிக்கும் ஒருவன் முன் கெளல் தோன்றி அவன் வேண்டுவதை நிறைவேற்றும் என்கின்றன புராணங்கள். மற்ற பேய்களிடமிருந்து கெளலை வித்தியாசப்படுத்திக் காட்டும் குணம் - அது மனிதர்களின் ஆழ்மனதில் புதைந்து போயுள்ள குற்றவுணர்ச்சியை இரையாகக் கொண்டு அவர்களை மனதளவிலும் பின்னர் உடலளவிலும் புசிக்கத் தொடங்கும். கடைசியாக யாரின் மாமிசத்தை உண்டதோ அந்த உருவத்தில் மனிதனைப் போல உலா வரும்.

இப்போது கதைக்கு... சிறுபான்மையினருக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தன் தந்தையோடு வசித்து வருகிறார் நீடா ரஹீம் (ராதிகா ஆப்தே). பயிற்சியில் இருக்கும் ராணுவ அதிகாரி. அவரும் அவர் அப்பாவும் காரில் பயணிக்கும்போது வழியில் நிறுத்துகிறது காவல்துறை. 

`பெயரென்ன?' - நீடாவின் அப்பாவிடம் விசாரிக்கிறது ஒரு காக்கிச்சட்டை.

பெயரைச் சொல்கிறார்.

`கார்ல எங்களுக்குத் தெரியாம என்ன வச்சுருக்க, ஆயுதங்களா?'

`இல்ல'

`வெடிகுண்டுகளா?'

`இல்ல'

`மாட்டுக்கறி?'

`இல்ல'
 
`உன்ன நம்பமாட்டேன்'

அவரை நம்பாமல் காரை சோதிக்க முயல்கிறார்கள். நீடா சட்டென தலையிட்டு தன் ராணுவ ஐ.டி கார்டை காட்ட பயந்து பணிந்து பின்வாங்குகிறது போலீஸ்.

காரைக் கிளப்பிக்கொண்டே, `பாத்தியா? இதான் அடக்குமுறை. இதுக்கு எதிராத்தான் நான் போராடுறேன். என் மாணவர்களுக்கு அரசியல் சொல்லித்தர்றேன். ஆனா, நீ தேசபக்தி அது இதுன்னு சொல்லி என்னைக் குற்றவாளியா பாக்குற?' என நீடாவிடம் சொல்கிறார். `அரசாங்கம் நம்ம நல்லதுக்குத்தான் இதெல்லாம் பண்ணுது. நீ அதுக்கெதிரா போராட நினைக்குறது பைத்தியக்காரத்தனம்' எனக் கொதிக்கிறார் நீடா. மகளை அப்பா அப்பாவி எனவும் அப்பாவை மகள் பைத்தியக்காரர் எனவும் நினைத்துக்கொள்கிறார்கள்.

ஒருகட்டத்தில் தன் தந்தை அரசுக்கெதிராகப் பேசுவதைப் பொறுக்கமுடியாத `தேசபக்தி' நிறைந்த நீடா அவரைக் கைது செய்ய வைக்கிறார். ராணுவ முகாமில் நல்லெண்ணம் போதிக்கப்பட்டுத் தேசபக்தி மிக்கவராகத் திரும்புவார் என்பது நீடாவின் எண்ணம். கொஞ்ச நாள்கள் கழித்து, கைதிகளை விசாரணை செய்யும் `மேகதூத் 31' என்ற ரகசிய மையத்திலிருந்து நீடாவுக்கு அழைப்பு வருகிறது. பயிற்சி முடியும் முன்னரே அங்கே விசாரணை அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொள்ளச் செல்கிறார்கள்.

அங்கே அவரை வரவேற்கின்றன இருவிதமான பார்வைகள். ஒன்று, `தேசத்துரோகியின் மகளும் தேசத்துரோகியாகத்தான் இருப்பாள்' என்பது. மற்றொன்று, `பெற்ற தந்தையையே நாட்டுக்காக தியாகம் செய்தவள்' என்பது. இருவேறு பார்வைகளுக்கும் பழகிவரும் அதே நேரத்தில் அந்த அறிவிப்பு வருகிறது. `அலி சயீத் அந்த முகாமுக்கு அழைத்து வரப்படுகிறான்'. அதிகாரிகளும் அந்த முகாமில் முன்னரே அடைபட்டிருக்கும் சயீத்தின் கூட்டாளிகளும் பதற்றமாகிறார்கள்.

மழை கொட்டித் தீர்க்கும் அந்த இரவில் மின்னல் கீறும் வெளிச்சத்தில் வந்து நிற்கிறது ஒரு வேன். வீரர்கள் ஒவ்வொருவராக அதிலிருந்து இறங்க, இறுதியாக இருட்டிலிருந்து வெளிப்படுகிறான் அலி சயீத். முகாமில் இருக்கும் நாய்கள் அலறத் தொடங்குகின்றன.

இருள் முன்னினும் அதிகமாகக் கவியத் தொடங்குகிறது. 
     

அடுத்த கட்டுரைக்கு