பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விளையாட்டு, ஆனால் விளையாட்டில்லை!

 விளையாட்டு, ஆனால்  விளையாட்டில்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
விளையாட்டு, ஆனால் விளையாட்டில்லை!

கார்த்தி

மிழில் நீங்கள் பார்த்து ரசித்த சினிமாக்கள், விரும்பி வாசித்த புத்தகங்கள், உணவகங்கள் எல்லாவற்றையும் ஒரு திரைப்படத்துக்குள் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் படத்துக்குள் வரும் ஒரு விளையாட்டில். நீலாம்பரி,  இரும்புக்கை மாயாவி, தலப்பாகட்டி பிரியாணி, கட்டப்பா, கிஷ்கிந்தா, கண்ணகி, மாயா, ஜெஸ்ஸி, சச்சின், ஹாசினி, கோச்சடையான், ‘கண்ணே கலைமானே’ பாடல் என நம் ஃபேவரைட்ஸ் அனைத்தையும் ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி கேமுக்குள் அடக்கி அதை வைத்து ஒரு திரைப்படம் எடுத்தால்,  நமக்கு எவ்விதமான ஓர் உணர்வைக் கடத்துமோ அதை அப்படியே தருகிறது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருக்கும் ‘ரெடி பிளேயர் ஒன்’ என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி திரைப்படம்.

விர்ச்சுவல் உலகத்தில் (OASIS) வாழும் கதாபாத்திரங்கள், அவர்களுக்கான போட்டிகள், வெற்றி தோல்விகள், அந்த மாய உலகத்தை உடைக்கப் போராடும் கலகக்காரர்கள் (IOI), மாய உலகத்தை ரசித்து வாழும் கதாநாயகன் என பக்கா பேக்கேஜ். கலகக்காரர்களுக்கு எதிராக நாயகன் கிளர்ந்து எழுவது என நாம் பார்த்துப் பழக்கப்பட்ட கதைதான் என்றாலும், கடந்த கால நினைவுகளை அப்படியே நம் கண் முன்னர் கொண்டுவந்து நிறுத்தி, நம்மைக் களிப்படையச் செய்கிறது படம்.

 விளையாட்டு, ஆனால்  விளையாட்டில்லை!
 விளையாட்டு, ஆனால்  விளையாட்டில்லை!

பேட்மேன், சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன், ஹார்லி குயின், வொண்டர் வுமன் என சூப்பர் ஹீரோக்களை மையப்படுத்திய காட்சிகளும் வசனங்களும் வரிசைகட்டி வருகின்றன. ‘பேக் டு ஃபியூச்சர்’ படத்தில் வரும் கார், அதன் இயக்குநர் ராபர்ட் ஜெமெகிஸ், கிங் காங், ஜுராஸிக் பார்க், டெர்மினேட்டர், ஹெல்பாய், மேட் மேக்ஸ் எனப் பல படங்களுக்கு ட்ரிப்யூட் செய்திருக்கிறார் இயக்குநர் ஸ்பீல்பெர்க். இதெல்லாம் போக, பல கார்ட்டூன்கள், கடைகள், பாப் பாடல்கள் எனக் கடந்த நூற்றாண்டில் நாம் லயித்த, ரசித்த எல்லா விஷயங்களையும்கொண்ட திரைக்கதையை அமைத்து, காட்சிக்குக் காட்சி விசில் அடிக்க வைக்கும் ஸ்பீல்பெர்க்குக்கு வயது 72. தலீவா, நீ யூத்துதான்!

 ‘ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ திரைப்படத்திற்கான திரைக்கதையையும் 600-க்கும் மேற்பட்ட ஸ்டோரிபோர்டு ஓவியங்களையும் ஸ்பீல்பெர்க்கிடம் கொடுத்து ‘இந்தப் படத்தை நீ இயக்கு, நான் தயாரிக்கிறேன்’ என்று இன்ப அதிர்ச்சியளித்தார் குப்ரிக். ஆனால், அது குப்ரிக் உயிரோடு இருக்கும்வரை கைகூடவில்லை. குப்ரிக்கின் மறைவுக்குப் பிறகு 2001-ல் வெளிவந்த ‘ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ திரைப்படத்தையே குப்ரிக்கிற்கான ட்ரிப்யூட்டாக எடுத்திருந்தார் ஸ்பீல்பெர்க். அந்தப் படத்தின் பல காட்சிகளின் அமைப்பு குப்ரிக்கின் முந்தைய படங்களின் காட்சி அமைப்போடு பொருந்தும்படி அமைத்திருப்பார். ஆனால், அதையெல்லாம் தகர்த்தெறியும் வகையில், விர்ச்சுவல் ரியாலிட்டியில் குப்ரிக்குக்கு மிகப்பெரும் ட்ரிப்யூட் ஒன்றைச் செய்திருக்கிறார் ஸ்பீல்பெர்க். அதே சமயம், இவை எதுவும் படத்தில் துருத்திக்கொண்டு தெரியவில்லை.

 விளையாட்டு, ஆனால்  விளையாட்டில்லை!
 விளையாட்டு, ஆனால்  விளையாட்டில்லை!

1980-ல் வெளிவந்த  ‘தி ஷைனிங்’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான காட்சிகளை அப்படியே திரைப்படத்துக்குள் கொண்டு வந்து, அதை கேமின் ஒரு லெவலாக மாற்றியமைத்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்.

“ஒவ்வொரு முறையும் பிரச்னைகளுக்கான தீர்வைத் தேடுகிறோம். பின் பிரச்னைகளோடு வாழப் பழகிக்கொள்கிறோம்” என்பான் படத்தின் நாயகன் வேட் வாட்ஸ். 2045-ல் உலகம் இன்னும் மோசமாக விர்ச்சுவல் உலகத்துக்குள் சிக்கித்தவிக்கும் என எச்சரிக்கிறது ரெடி பிளேயர் ஒன். ‘வாரத்தில் இரு நாட்களுக்கு OASIS விளையாட்டுக்கு லீவு’ என இறுதியில் அறிவிக்கப்படுகிறது. 70 வயதைக் கடந்த ஸ்பீல்பெர்க் குழந்தைகளுக்கான விளையாட்டு சினிமா ஒன்றை எடுத்திருக்கிறார். அதே சமயம், விர்ச்சுவல் ரியாலிட்டி பற்றிய ஒரு விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

 விளையாட்டு, ஆனால்  விளையாட்டில்லை!

சுவாரஸ்யமும் சமூக அக்கறையும்தான் ஒரு கலைஞனுக்கான அடிப்படைகள். ஸ்பீல்பெர்க் அந்த வகையில் முழுமையான திரைக்கலைஞர். அதை நிரூபித்திருக்கிறது ‘ரெடி பிளேயர் ஒன்!’