Published:Updated:

``எல்சா, ஆன்னா... ஃப்ரோஸன் சகோதரிகளை மறக்கமுடியுமா?!" - #5YearsOfFrozen

`Frozen' படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்தப் படம் குறித்த ரீவைண்டு கட்டுரை.

``எல்சா, ஆன்னா... ஃப்ரோஸன் சகோதரிகளை மறக்கமுடியுமா?!" - #5YearsOfFrozen
``எல்சா, ஆன்னா... ஃப்ரோஸன் சகோதரிகளை மறக்கமுடியுமா?!" - #5YearsOfFrozen

வ்வொரு வீட்டிலும் சுட்டித்தனம் செய்து திரியும் மழலை நெஞ்சங்களுக்கு தினமும் உணவை சாப்பிட வைப்பதற்குள் அவர்களுடைய அம்மாக்கள் படும் அவஸ்தைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஒவ்வொரு வீட்டிலும் ஏராளமான சேட்டைகளும், லூட்டிகளும் இருக்கும். குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டும் காலம் போய், கார்ட்டூன் கதாபாத்திரங்களைக் காட்டி சோறு ஊட்டும் காலம் வந்துவிட்டது. அதில், முக்கியமானது ஃப்ரோஸன். 20'ஸ் கிட்ஸைக் கவர்ந்த அனிமேஷன் திரைப்படங்களில் ஆஸ்கரை வென்று பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த படம், `ஃப்ரோஸன்’. வால்ட் டிஸ்னியின் `குயின்' திரைப்பட வரிசையில் அதிக மவுசு வாய்ந்த திரைப்படம். அதற்கு முக்கியக் காரணம், படத்தின் அனிமேஷன் கதாபாத்திரங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை இசைக்கும், திரைக்கதைக்கும் கொடுத்ததுதான். அதுதான் இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் கொண்டாட வைத்தது. பெரும்பாலான காட்சிகள் பாடல்களாகவே வருவதால், இதை ஒரு இசைக்காவியம் என்றுகூட சொல்லலாம்.

``எல்சா, ஆன்னா... ஃப்ரோஸன் சகோதரிகளை மறக்கமுடியுமா?!" - #5YearsOfFrozen

பிறக்கும்போதே தொட்டதையெல்லாம் உறையவைக்கும் ஓர் அபூர்வ சக்தியுடன் பிறக்கிறாள், மூத்த மகளான எல்சா. எல்சாவின் இளைய சகோதரி ஆன்னா படு சுட்டி. ஒரு நாள் இரவில் இருவரும் விளையாடிக்கொண்டிருக்கும்போது, எல்சாவின் சக்தி விளையாட்டாக வினையாக மாற, இருவரையும் பிரித்து தனித்தனியே வைக்கின்றனர், பெற்றோர். காலம் கடந்து செல்கிறது. ஒரு நாள் கடல் பயணம் மேற்கொள்ளும் ராஜாவும் ராணியும் ராட்சத அலையில் சிக்கிக் கப்பலோடு மூழ்கிவிடுகின்றனர். அதன்பின் ராஜ்ஜியம் எல்சாவின் கைகளுக்கு வருகிறது. முடிசூடும் நிகழ்வுக்காக அண்டை நாட்டிலிருந்து பலரும் கலந்து கொள்கின்றனர். பலநாள்களாக சந்தித்துக்கொள்ளாத சகோதரிகள் அன்று சந்தித்துக்கொள்கின்றனர். முடிசூடும் நிகழ்வில் பக்கத்து ராஜ்ஜிய இளவரசன் ஹன்ஸ் மேல் காதல் வயப்படுகிறாள், ஆன்னா. அதை எல்சாவிடம் கூற முற்படுகிறாள். அதன் பின்புதான் தொடங்குகிறது, நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகள். தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத எல்சா, ராஜ்ஜியத்தையே பனியில் மூழ்கடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறாள். குளிர்காலத்தை நீக்கி மீண்டும் வெயில் காலத்தை மீட்டு வர ஆன்னா எடுக்கும் முயற்சிகள்தான், ஃப்ரோஸனின் அட்வெஞ்சர் விருந்து.

வீட்டில் இரு சகோதரிகள் சண்டையிட்டுக்கொண்டாலும், அவர்களுக்கிடையே இருக்கும் அளவுகடந்த பாசமானது என்றென்றும் எவர்கிரீன். அதே அளவுகடந்த பாசம்தான் எல்சாவுக்கும், ஆன்னாவுக்கும். பெற்றோர்கள் அவர்களைப் பிரித்து வைத்தாலும், கதவின் ஒரு பக்கம் நின்றுகொண்டு எல்சா பாடும், `டூ யு வான்ட் டூ பில்ட் எ ஸ்னோமென்' பாடலுக்கு மறுபாட்டு பாடும் ஆன்னாவின் பாசத்தில் அவ்வளவு கியூட்னஸ். பல வருடங்கள் பிரிந்து வாழ்ந்தாலும் அதே பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என அனைத்தும் படத்தைக் காணும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பாடமாகவே இருந்தது.

``எல்சா, ஆன்னா... ஃப்ரோஸன் சகோதரிகளை மறக்கமுடியுமா?!" - #5YearsOfFrozen

படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இசை. படத்தில் தோன்றும் பெரும்பாலான காட்சிகள் பாடல்களாக வருவதால், அவை எளிதில் கடந்தாலும் பாடல்கள் மனதில் நிற்கும். அதே பாடல்கள்தாம் ஆஸ்கர் விருதுக்கும் வழிவகுத்துக் கொடுத்தது. பின்னணி இசையில் விறுவிறுப்பைக் கூட்டிய கிறிஸ்டோஃப் பெக்கிற்கு வாழ்த்துகள்.

ஆஸ்கரைச் தட்டிச் சென்ற வால்ட் டிஸ்னியின் முதல் பெண் இயக்குநர் ஜெனிஃபர் லீ, சிறந்த அனிமேஷன் மற்றும் `லெட் இட் கோ' சிறந்த பாடல் என்ற இருபிரிவுகளில் இரண்டு ஆஸ்கர்கள், டிஸ்னியின் முடிசூடிய ராணி, பாக்ஸ் ஆபீஸ் பம்பர் ஹிட்... என இப்படத்துக்கு எக்கச்சக்க ஸ்பெஷல்.

ஃப்ரோஸனின் தாக்கம் இதோடு நின்றுவிடவில்லை. ஏனெனில், எல்சாவும், ஆன்னாவும் மட்டும் குழந்தைகளைக் கவரவில்லை; பல பெற்றோர்களையும் தன் வசப்படுத்தியது. அமெரிக்காவிலுள்ள ஃப்ரோஸன் திரைப்படத்தின் ரசிகர்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு எல்சா, ஆன்னா பெயர்களை வைத்து அழகு பார்த்தனர். அதுமட்டுமன்றி, எல்சாவின் உடைகள் மற்றும் பொம்மைகள் இன்றும் இணையத்தில் அமோகமாக விற்பனையாகி வருகிறது.

``எல்சா, ஆன்னா... ஃப்ரோஸன் சகோதரிகளை மறக்கமுடியுமா?!" - #5YearsOfFrozen

எல்சா, ஆன்னா மட்டுமன்றி படத்தின் ஹீரோ கிரிஸ்டோஃப் சிறுவயதில் எல்சாவும், ஆன்னாவும் சேர்ந்து உருவாக்கிய பனிபொம்மை ஓலாஃப்... என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும்  வரவேற்பைப் பெற்றது. இந்த ஃப்ரோஸன் ஃபீவரை மேலும் பரவவிட, `ஃப்ரோஸன் ஃபீவர்' என்ற எட்டு நிமிடக் குறும்படத்தை 2015-ம் ஆண்டு வெளியிட்டனர். தொடர்ந்து, `ஓலாஃப்ஸ் ஃப்ரோஸன் அட்வெஞ்சர்' 2017-ம் ஆண்டு வெளியானது.

என்னதான் தனித் தனி கதாபாத்திரங்களின் படங்கள் வெளிவந்தாலும், அனைத்து கதாபாத்திரங்களையும் ஒரே சினிமாவில் காணக் காத்திருக்கும் ஃப்ரோஸனின் ரசிகர்களுக்காக, அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கிறது, `ஃப்ரோஸன் 2'. முடிசூடிய ராணி எல்சாவின் அரசாட்சியையும், ஆன்னாவின் பாசம் கலந்த சுட்டிச் சேட்டைகளையும் காண குழந்தைகள் மட்டுமல்லாமல் குடும்பங்களும் வெயிட்டிங்.