Published:Updated:

'காட்பாதர்'... மாஃபியாக்கள்... போதைப் பொருள்கள்... என்ன சொல்கிறது 'நார்கோஸ் மெக்ஸிகோ’

சமீபத்தில் வெளியான 'நார்கோஸ்' சீரிஸின் நான்காம் பாகம், 'இதைப் பார்க்க முதல் மூன்று பாகங்களையும் பார்த்திருக்க வேண்டியது இல்லை' என்ற அறிவிப்போடு வெளியானது.

'காட்பாதர்'... மாஃபியாக்கள்... போதைப் பொருள்கள்... என்ன சொல்கிறது 'நார்கோஸ் மெக்ஸிகோ’
'காட்பாதர்'... மாஃபியாக்கள்... போதைப் பொருள்கள்... என்ன சொல்கிறது 'நார்கோஸ் மெக்ஸிகோ’

கேங்க்ஸ்டர் திரைப்படங்கள், சீரிஸ்களுக்கு எப்போதும் மவுசும், மார்கெட்டும் அதிகம். நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்த சீரிஸ்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்த லிஸ்ட்டில் 'நார்கோஸ்' சீரியஸுக்கு எப்போதுமே இடமுண்டு. போக, வழக்கமாக வெளிவந்து கொண்டிருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படங்களுக்கும், 'நார்கோஸ்' சீரிஸுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது. உலகமே வியந்து பார்த்த போதை மருந்து மாஃபியா தலைவன் பாப்லோ எஸ்கொபாரின் வாழ்க்கைதான் 'நார்கோஸ்' முதல் சீசன். கொலம்பியாவின் நிலத்தையும், அழகான ஸ்பேனிஷ் மொழி, அந்த நாட்டின் அரசியல் திருப்பங்கள் பாப்லோவின் போதை மருந்து பிஸினஸில் செய்யும் மாற்றங்கள், பாப்லோவின் கைது, மீண்டும் அவனது வளர்ச்சி, இறுதியில் சுட்டுக் கொல்லப்படுதல்... என உண்மைக்கு நெருக்கமான கதையை பாப்லோ எஸ்கொபாரின் பார்வையிலும், அமெரிக்க போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவனின் பார்வையிலும் நார்கோஸில் சொல்லியிருப்பார்கள். முதல் மூன்று சீஸனும் கொலம்பியாவில் மையம்கொண்டு இந்த பார்முலாவில் இயங்கியவை. 

மூன்றாவது சீசனின் இறுதியில் பாப்லோ எஸ்கொபார் கொலம்பியாவில் கொல்லப்பட, கதை அடுத்த கட்டமாக மெக்சிகோவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு முடிந்தது. அதன்படி, சமீபத்தில் வெளியான 'நார்கோஸ் மெக்ஸிக்கோ' சீரிஸின் நான்காம் பாகம், 'இதைப் பார்க்க முதல் மூன்று பாகங்களையும் பார்த்திருக்க வேண்டியது இல்லை' என்ற டிஸ்க்ளைமரோடு  வெளியானது. 

1980-களிலிருந்து தொடங்குகிறது கதை. அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு போதைப் பொருள் தடுப்பு அதிகாரியாக வருகிறார் கிகி கெமரெனா. மெக்சிகோவில் புதிய மரபணு மாற்றப்பட்ட கஞ்சா செடியை விளைவித்து, அதனை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலைத் தொடங்குகிறான் மிகெய்ல் ஃபெலிக்ஸ் கல்லார்டோ, சுருக்கமாக ஃபெலிக்ஸ். கிகி ஒருபக்கம் ஃபெலிக்ஸின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வர, மறுபக்கம் ஃபெலிக்ஸ் தன் நண்பர்களுடன் மிகப்பெரிய மாஃபியா நெட்வொர்க்கை உருவாக்குகிறான். 

முதல் மூன்று பாகங்களில் பயன்படுத்தப்பட்ட அதே திருடன் - போலீஸ் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வெளியான 'சேக்ரட் கேம்ஸ்' சீரியஸிலும் இதே ஃபார்முலாவைப் பயன்படுத்திதான் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் ஹாலிவுட் பிரியர்களால், 'இந்தியாவின் நார்கோஸ்' என்றும்கூடஅழைக்கப்பட்டது. மெக்சிகோவில் சாதாரண காவல்துறை அதிகாரியாக வாழும் ஃபெலிக்ஸ், தன் நண்பன் உருவாக்கும் புதிய ரகமான கஞ்சா செடியைச் சந்தையில் அறிமுகப்படுத்தி, அதை விரிவுபடுத்த மற்ற டான்களைப் பயன்படுத்திறான். அப்படியே மெள்ள மெள்ள 'காட்ஃபாதர்' ஆகிறான். ஒவ்வொரு முறையும் அரசு, கூட்டாளிகள், குடும்பம் என அவன் மீது அழுத்தம் பரவிக்கொண்டே இருக்கிறது. கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் ஒரே வழி மெக்சிகோ மட்டும்தான். அதைப் பயன்படுத்தி கொலம்பியாவின் மாஃபியாக்களுக்கு உதவி, வியாபாரத்தைப் பெரிதாக்க நினைக்கிறான் ஃபெலிக்ஸ். ஏற்கெனவே நார்கோஸ் பார்த்தவர்களுக்கு, இந்த இடத்தில் பெரிய சர்ப்ரைஸாக ஒரு காட்சியில் பாப்லோ எஸ்கொபார்  கேமியோரோலில் வருகிறார்.    

ஃபெலிக்ஸ் உருவாக்கியிருக்கும் ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் கண்காணித்து, அவனின் அடுத்தகட்ட நகர்வுகளைக் கணிக்கிறான், அமெரிக்க ஏஜென்ட் கிகி. மெக்சிகோ நாடு முழுவதும் ஊழல்மயப்படுத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவுக்கு எந்தத் தொந்தரவும் தராமல் அமைதியாக இருப்பதால், அமெரிக்க அரசும் மெக்சிகோ அரசோடு இணக்கமாகிறது. கிகி நடத்தும் ஒவ்வொரு புலனாய்வும் இந்தக் காரணத்தினாலே வீணாகப் போகிறது. இருவரும் எப்படியோ ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அது என்ன என்பதைக் காட்டுகிறது இந்த சீசன். அதோடு சேர்த்து 'அந்த சந்திப்பு ஏற்படுத்தும் விளைவுகளை அடுத்த சீசனில் பார்க்கப் போகிறீர்கள்' என்பதோடு முடிகிறது.

ஃபெலிக்ஸ் கதாபாத்திரத்தில் மெக்சிகோ நாட்டின் நடிகர் டியூகோ லூனா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர். கிகி கதாபாத்திரத்தில் மைக்கேல் பென்யா; 'ஏன்ட் மேன்' உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர். 'நார்கோஸ் மெக்சிகோ' சீரிஸில் மிக முக்கியமான கதாபாத்திரம், ஃபெலிக்ஸ் கும்பலுக்கு மரபணு மாற்றப்பட்ட கஞ்சா விளைவித்துத் தரும், டெனோக் ஹுவர்தா நடித்த 'ரஃபா' கதாபாத்திரம்.  ரஃபா 'ஸ்கார்பேஸ்' திரைப்படத்தைப் பார்த்து அல் பச்சீனோ ரசிகனாகச் செய்யும் ரகளைகள் அனைவரையும் ஈர்க்கும். முதல் மூன்று பாகங்களைப் போலவே, நடிகர்களின் பெர்ஃபாமன்ஸ் உயர்தரத்தில் இருக்கிறது. பின்னணி இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்கள்.        

நார்கோஸின் முதல் இரண்டு சீசன் முடிந்த சசமயத்திலே. பாப்லோ எஸ்கொபாரின் தம்பி, தங்கள் குடும்பத்தைப் பற்றி அனுமதியில்லாமல் படம் எடுத்துவிட்டதாகக் கூறியதோடு இல்லாமல், ஒரு பில்லியன் டாலர் பணம் கேட்டு மிரட்டினார். தற்போது வெளியாகியிருக்கும் நான்காவது சீசன் படப்பிடிப்புக்காக லொகேஷன் பார்க்கச் சென்ற மேலாளர் கார்லோஸ் போர்டல் மெக்சிகோ போதைப் பொருள் மாஃபியாவால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

உயிரைப் பணயம் வைத்து உண்மைக்கு நெருக்கமான கேங்ஸ்டர் சீரிஸாக 'நார்கோஸ்' பேசப்படுகிறது. ஆனால் முதல் மூன்று பாகங்களில் இருந்த ஸ்டைல், இந்த பாகத்தில் மிஸ்ஸிங். பாப்லோ எஸ்கொபார் போல இல்லாமல்  சாதாரண பிசினஸ்மேன் தோற்றத்தில் உலவுவதும், கிகியின் விசாரணை முந்தைய சீசன்களில் வருவது போல சவாலாக இல்லாமல் இருப்பதும் இந்த சீசனின் வெளிப்படையான குறைகள். 

'நார்கோஸ்' மூன்று சீசன்களைப் பார்க்காமல் இருப்பவர்கள், நல்ல கேங்க்ஸ்டர் சீரிஸ் பார்க்க விரும்பினால் கண்டிப்பாக இதைப் பரிந்துரைக்கலாம். ஆனால் 'நார்கோஸ்' ரசிகர்களுக்கு முதல் மூன்று சீசன்களோடு ஒப்பிடுகையில் 'நார்கோஸ் மெக்சிகோ' கொஞ்சம் சுமார் தான்.