Published:Updated:

நிலத்தில் ஒரு கால், ஆழ்கடலில் ஒரு கால்... கரை சேர்கிறானா இந்தச் சமுத்திரப் புத்திரன்? #Aquaman

கார்த்தி
ர.சீனிவாசன்
நிலத்தில் ஒரு கால், ஆழ்கடலில் ஒரு கால்... கரை சேர்கிறானா இந்தச் சமுத்திரப் புத்திரன்? #Aquaman
நிலத்தில் ஒரு கால், ஆழ்கடலில் ஒரு கால்... கரை சேர்கிறானா இந்தச் சமுத்திரப் புத்திரன்? #Aquaman

நிலத்தில் ஒரு கால், ஆழ்கடலில் ஒரு கால்... கரை சேர்கிறானா இந்தச் சமுத்திரப் புத்திரன்? #Aquaman

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய பேட்மேன் ட்ரைலாஜிக்குப் பிறகு, மார்வெல் காமிக்ஸின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல (MCU) DC காமிக்ஸும் தன் மற்ற சூப்பர்ஹீரோக்களை வைத்து DC Extended Universe (DCEU) என்று படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது. பெரும்பாலான படங்கள் காமிக்ஸ் ரசிகர்களைத் திருப்திபடுத்தினாலும், அந்தப் படங்கள் அனைத்தும் மார்வெல் படங்களைப் போல வெகுஜன சினிமாவாக ஏற்கப்படவில்லை. `வொண்டர்வுமன்' மற்றும் `மேன் ஆஃப் ஸ்டீல்' படங்கள் மட்டும் அனைவரையும் ஈர்த்தது. தற்போது கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் `அக்வாமேன்' படத்தைக் களமிறக்கி இருக்கிறது DC. சமுத்திரப் புத்திரனான #Aquaman DC காமிக்ஸ் யுனிவர்ஸை கரை சேர்க்கிறானா?கடலுக்குள் இருக்கும் அண்டர்வாட்டர் உலகின் முக்கிய நாடான அட்லான்டிஸின் ராணி அட்லானா. நிலத்தில் வாழும் சாதாரண லைட்ஹவுஸ் கீப்பர் ஒருவருடன் காதல் வயப்பட்ட அவளுக்கு ஆர்தர் கரி எனும் மகன் பிறக்கிறான். நிலப்பரப்பின் மனிதர்களும், கடலின் உள்ளே வாழும் மனிதர்களும் அமைதியுடன் ஒற்றுமையாக வாழலாம் என்பதற்குச் சாட்சியமாக தங்களின் மகன் இருப்பான் என்று பெற்றோர்கள் நினைக்கையில் அட்லானா தன் கணவனையும் மகனையும் பிரிய நேர்கிறது. இதனிடையே வளர்ந்து இளைஞனாக, அக்வாமேனாக சாகசங்கள் செய்யும் ஆர்தரை தேடி வருகிறாள் மெரா என்ற மற்றொரு கடல் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி. அட்லான்டிஸின் அரியணையை கொடுங்கோல் அரசன் ஆர்ம் இடமிருந்து மீட்டு அரசனாக ஆர்தர் அமரவேண்டும் என்று கூறுகிறாள். ஆர்ம் வேறு யாருமல்ல, அட்லானாவின் இரண்டாவது கணவனுக்குப் பிறந்த மகன். ஆர்தர் என்ன செய்யப் போகிறான்? அரியணையை மீட்கிறானா? அரசனாக அமர்கிறானா?

`அக்வாமேன்' எனும் சூப்பர்ஹீரோவின் கதை `தோர்', `வொண்டர்வுமன்' போன்ற படங்களைப் போல இரண்டு உலகங்களில் நடக்கும் கதை. நிலப்பரப்பில் சிறிது நேரம், ஆழ்கடல் ஆழத்தில் பல நேரம் எனக் கதை நீள்கிறது. இதனாலேயே படம் 3D-க்கென எழுதப்பட்ட படமாகிறது. ஐமேக்ஸ் திரையில் இன்னும் அழகாக இருக்கிறது. ஆழ்கடலில் நாம் பார்த்திராத உயிரினங்கள், பிரமிப்பூட்டும் வாழிடங்கள் என வேறு ஓர் உலகத்துக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறது படம்.இதுவரை எடுக்கப்பட்ட மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களும் சரி, மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட சோனி, ஃபாக்ஸ் படங்களும் சரி, மூலக்கதையை மட்டுமே... அவ்வளவு ஏன், சில சமயம் கதாபாத்திரங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு திரைக்கதையில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்து சினிமாவாகக் கொடுப்பார்கள். இந்த DCEU மட்டும் இதற்கு நேர் எதிர். காமிக்ஸுக்கு நியாயம் செய்வதாக அதன் படங்கள் அமைந்திருக்கும் (`ஜஸ்டிஸ் லீக்' தவிர). இந்த காமிக்ஸ் அல்லது நாவலுக்கு நியாயம் சேர்க்கும் படங்கள் பாராட்டப்பட வேண்டியவைதாம். ஆனால் பிரச்னை என்னவென்றால், அது இன்று படம் பார்க்கும் அனைவருக்கும், முக்கியமாக காமிக்ஸ் விரும்பிகளுக்கு அது பார்த்துப் பழகிய கதையாகவே இருக்கும். எனவே, அதில் வேறு ஒரு கோணம் அல்லது புதிய அணுகுமுறை இருந்தால் மட்டுமே அது அனைவருக்குமான ஜனரஞ்சகப் படமாக அமையும். அக்வாமேன் காமிக்ஸுக்கு நியாயம் சேர்க்கும் வகை என்பதால் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் சுலபமாகக் கணித்து விடலாம். அதுவும் எந்தவித சுவாரஸ்யமுமின்றி படம், பல்வேறு நாடுகளுக்குப் பயணித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் Somewhere in, Somewhere in என டேக்லைன் வேறு. கதையைத் தவிர எல்லாமே வேகமாக நகர்கிறது. அதிலும் ஒரு கட்டத்தில் மோனா திரைப்படத்தில் மோனாவும், மௌயியும் சென்றுகொண்டே இருப்பது போல், அக்வாமேனும், மெராவாவும் நடந்துகொண்டே இருக்கிறார்கள். வைகோவே தோற்றுவிடுவார்.

பசுவிடம் பாடியே பால் கறக்கும் ராமராஜன் போல், படத்தின் க்ளைமாக்ஸ் தருவாயில் நாயகனுக்கு ஒரு காட்சி வைத்திருக்கிறார்கள். அது ஸ்பாய்லர் என்பதால், நீங்களே பார்த்துக் களிப்படையவும்.இப்படியான கணிக்கக்கூடிய காட்சி அமைப்பு இருக்கும் படங்களில் வசனங்கள்தாம் அதைக் காப்பாற்றும். ஆனால், இங்கே அதிலும் சறுக்கல். ஒரு 10 வருடத்துக்கு முன்பு வரவேண்டிய ரகங்களில் இருக்கின்றன மெலொடிரெமெட்டிக் காட்சிகள். ஒரு பக்கம் மெலோடிரெமெட்டிக் காட்சிகளும் த்ராபையான வசனங்களும் வெறுப்பேற்றுகிறது என்றால், இன்னொருபுறம் மார்வெல் படங்கள் போல நாங்களும் காமெடி செய்கிறோம் என நாயகன் ஜேசன் மொமொவை வைத்து ஏதோ செய்திருக்கிறார்கள். `இந்த இடம் மிகவும் வறண்டு இருக்கிறது, நீர் தேவை' என்றால் நாயகன் `சூ சூ' போயிருப்பேனே என்கிறார். கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க டிசி.

பின்னணி இசை, பிரமாண்ட விஷுவல் எஃபக்ட்ஸ் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. அக்வாமேனாக ஜேசன் மொமொவா நல்ல சாய்ஸ். அவரைத் தவிர இந்தக் கதாபாத்திரத்துகு வேறு யாரையும் நினைத்துவிட முடியாது. டாட்டூ உடம்போடு கேம் ஆஃப் த்ரோன்ஸின் கால் த்ரோகோ அப்படியே அக்வாமேனாக இருக்கிறார். மெராவாக ஆம்பர் ஹெர்ட் மற்றும் அட்லானாவாக நிக்கோல் கிட்மேன். ஆம்பர் ஹெர்ட் தான் படத்தின் கதையையே நகரச் செய்கிறார். அதேபோல் ஸ்டன்ட் காட்சிகளிலும் ஒதுங்கி நிற்காமல் புகுந்து விளையாடி இருக்கிறார். வாவ் ஆம்பர்!


 

இந்த அக்வாமேன் தக்கி முக்கி, திணறித்தான் கரை ஏறுகிறான்.

அடுத்த கட்டுரைக்கு