உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் சீரிஸ் படங்களில் இடம்பெறும் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் ஜானி டெப்புக்குப் பதிலாக புதிய நடிகர் நடிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரீபியன் தீவுகளில் கொள்ளையடிக்கும் கடற்கொள்ளையர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் சீரிஸ் படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இந்த வரிசையில் முதல் படமான தி கர்ஸ் ஆஃப் தி பிளாக் பேர்ல் (The Curse of the Black Pearl) படம் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. மொத்தம் 5 படங்கள் இந்த வரிசையில் வெளியாகியுள்ளன. இறுதியாகக் கடந்த 2015-ல் டெட் மேன் டெல் நோ டேல்ஸ் (Dead Men Tell No Tales) படம் வெளியானது. இந்தப் படங்களை டிஸ்னி நிறுவனம் தயாரித்திருந்தது. குறிப்பாகப் படத்தில் வரும் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அவரது கதாபாத்திர வடிவமைப்பு, ஜாக் ஸ்பேரோ என்ற பெயரை உலகம் முழுவதும் கொண்டுசேர்த்தது.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் பட வரிசையில் அடுத்த படம் குறித்த கேள்வி ரசிகர்களிடம் எழுந்தநிலையில், அந்தப் படத்தின் பேவரைட் ஸ்டார் ஜானி டெப் இல்லாமல் அடுத்த படம் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியானது. அந்தப் படங்களுக்குத் திரைக்கதை எழுதிய ஸ்டூவர்ட் பீட்டி (Stuart Beattie) கடந்த அக்டோபரில் கொடுத்த ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், `பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் வரிசைப் படங்களில் ஜானி டெப்பின் நடிப்பு சிறப்பாக இருந்தது’ என்று இறந்தகாலத்தைக் குறிப்பிட்டு அவர் பேசியது ஜேக் ஸ்பேரோ ரசிகர்களைக் கவலை கொள்ளச் செய்தது.

இந்த நிலையில், ஜானி டெப் இல்லாமல் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் சீரிஸின் ரீபூட் வெர்ஷன் தயாராக இருப்பதாக டிஸ்னி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் சீன் பெய்லி கூறியிருக்கிறார். அதேபோல், ரீபூட் வெர்ஷனுக்கானத் திரைக்கதை எழுதும் பொறுப்பை டிஸ்னி நிறுவனம் `டெட்பூல்’ புகழ் பால் வெர்னிக் (Paul Wernick) மற்றும் ரெட் ரீஸ் (Rhett Reese) ஆகியோரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஹாலிவுட் ரிப்போர்ட்டர் பத்திரிகைக்கு சீன் பெய்லி அளித்துள்ள பேட்டியில், `நாங்கள் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் சீரிஸ் படங்களுக்கு புதிய ஆற்றலையும், ஆயுளையும் அளிக்க விரும்புகிறோம். அந்தப் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. புதிய பரிணாமத்தைக் கொடுப்பதற்காகவே பால் வெர்னிக் மற்றும் ரெட் ரீஸ் ஆகியோர் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள். அதைத் தான் நான் அவர்களிடமும் கேட்டிருக்கிறேன்’ என்று கூறி அதிரவைத்திருக்கிறார்.