Published:Updated:

"எல்லாம் ஹைடாவுங்க! இதைப் பார்த்தால் மரணம்தான்..." பதறவைக்கும் நெட்ஃபிளிக்ஸின் #BirdBox

"எல்லாம் ஹைடாவுங்க! இதைப் பார்த்தால் மரணம்தான்..." பதறவைக்கும் நெட்ஃபிளிக்ஸின் #BirdBox

இந்த வருட இறுதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஒரு செம த்ரில்லர்/ஹாரர் படைப்பு என இதைப் பலர் கொண்டாடுகிறார்கள். சாண்ட்ரா புல்லக்கின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த Bird Box படம் எப்படி?

"எல்லாம் ஹைடாவுங்க! இதைப் பார்த்தால் மரணம்தான்..." பதறவைக்கும் நெட்ஃபிளிக்ஸின் #BirdBox

இந்த வருட இறுதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஒரு செம த்ரில்லர்/ஹாரர் படைப்பு என இதைப் பலர் கொண்டாடுகிறார்கள். சாண்ட்ரா புல்லக்கின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த Bird Box படம் எப்படி?

Published:Updated:
"எல்லாம் ஹைடாவுங்க! இதைப் பார்த்தால் மரணம்தான்..." பதறவைக்கும் நெட்ஃபிளிக்ஸின் #BirdBox

"நீங்கள் எத்தனைப் பேர் இருக்கிறீர்கள்? அதில் குழந்தைகள் எவரேனும் இருக்கிறார்களா? ஏனென்றால் இந்த இடத்திற்கு வேகமாக வந்தடைவதற்கு ஒரே வழி அந்த ஆற்றின் வழியே வருவதுதான். குழந்தைகளுடன் நீங்கள் அதை நிச்சயம் கடக்க முடியாது!"

Bird Box என்ற நெட்ஃபிளிக்ஸ் சினிமாவில் ஒலிக்கும் முதல் வசனம் இது. ஒரு சாட்டிலைட்போனில் இந்த வசனம் ஒலிக்கும்போது அந்த ஆறு நமக்குக் காட்டப்படுகிறது. 48 மணி நேரங்கள் அதில் பயணம் செய்யவேண்டும். அப்போதுதான் பாதுகாப்பான இடம் ஒன்றுக்குச் செல்ல முடியும். அது சரி, எதிலிருந்து பாதுகாப்பு வேண்டும்? அப்படியென்ன ஆபத்து அது? காற்றாய்... இல்லை காற்றுடனே பயணிக்கும் ஆபத்து அது. வெளியே நின்று கண்களைத் திறந்தால் கண்களுக்கே புலப்படாத அந்த மிருகம் நம் புத்தியைப் பேதலிக்கச் செய்துவிடும். அடுத்த நிமிடம் நம் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு எடுத்திருப்போம். அதுவும் எப்படி? வேண்டி விரும்பி முழு மனதுடன் கொடூரமான முறையில் தற்கொலைக்கு முயல்வோம்.

பதற வேண்டாம். தப்பிக்க வழி இருக்கிறது. வெட்ட வெளியில் மட்டும் கண்களைத் திறக்கவே கூடாது. கறுப்புத் துணியால் இறுகக்கட்டிகொண்டு மட்டுமே வெளியே வரவேண்டும். வீட்டிற்குள் இருக்கும்போது, வெளியிலுள்ள வெளிச்சம் உள்ளே வராதவாறு பார்த்துக்கொண்டால் போதும். பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், எத்தனை நாள்களுக்கு அப்படிக் கூண்டில் அடைபட்ட பறவையாக வாழ்ந்துவிட முடியும்? வெளியே பாதுகாப்பான ஒரு சரணாலயத்துக்கு, இப்படியான ஆபத்து ஏதுமில்லாத இடம் ஒன்றுக்குச் செல்ல அந்தப் பறவைபோல நாமும் ஏங்கத்தானே செய்வோம்! இங்கே மெலொரி (Sandra Bullock) அதற்கு ஆசைப்படுகிறாள். ஆனால், அது சாத்தியமில்லாத ஒரு விஷயம்தான். காரணம், அவளுடன் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. ஒரு சிறுவன், சிறுமி என இரண்டுமே 5 வயதுக் குழந்தைகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஆபத்தான ஆற்றுப் பயணத்தில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. கண்களைக் கட்டிக்கொண்டே பயணம் செய்பவர்கள் ஒரு கட்டத்தில் பாதையைப் பார்க்க, எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்பதை அறிய யாரேனும் ஒருவர் கண்களைத் திறக்க வேண்டும். அப்படிப் பார்ப்பவர் அதன் பிறகு உயிரோடு இருப்பாரா என்பது சந்தேகம்தான். காரணம், கண்களைத் திறந்தால்தான் அந்த மிருகத்தினால் நமக்குத் தற்கொலை எண்ணம் வந்துவிடுமே? இரண்டு குழந்தைகளுடன் இந்தப் பயணத்தைத் தொடங்கும் மெலொரி அந்த இடத்தில் என்ன செய்யப்போகிறாள்? அந்தச் சரணாலயம் சென்று சேர்வாளா?

இத்தனைப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத கன்டென்ட் இருந்தும் மற்றொரு கிளைக் கதையும் இதனுடன் இணையாகப் பயணிக்கிறது. அது இந்தக் காற்றில் உலவும் மிருகத்தின் தாக்குதல் முதன்முதலில் தொடங்கிய நாளில் இருந்து (5 வருடங்களுக்கு முன்பு) ஃபிளாஷ்பேக்காக விரிகிறது. கர்ப்பிணியான மெலொரி தன் சகோதரி ஜெஸ்ஸுடன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்கிறாள். அங்கே ஆரம்பிக்கும் அந்தத் தற்கொலை படலம் ஊர் முழுக்க பரவுகிறது. தற்கொலை செய்யும்முன், அவரவர்களின் அடிமனதில் இருக்கும் ஆசைகள், பார்க்க விரும்பும் நபர்கள் ஆகியன அவர்களுக்குக் காட்சிகளாகத் தோன்றும். நம்மோடு தற்போது இல்லாத நம் நேசத்திற்குரிய நபர்கள், அவர்களின் குரலின் மூலம் அசரீரி போல் நம்முடன் பேசுவார்கள். அடுத்த நிமிடம் நாம் மரணத்தை நோக்கி நடக்கத் தொடங்கியிருப்பார்கள். தன் சகோதரியை அதில் பலிகொடுக்கும் மெலொரி ஓர் விட்டில் தஞ்சம் அடைகிறாள். அங்கே அவளைப் போலவே சிலர் தஞ்சம் அடைகின்றனர்.

ஒரு குழுவாக இருந்தவர்களுள் இந்த இரண்டு குழந்தைகளுள் மெலொரியும் எப்படித் தனி மரமாக ஆனார்கள், எப்படி இந்த உயிருக்கே ஆபத்தான ஆற்றின் மீது படகுப் பயணம் செய்யும் முடிவுக்கு வந்தார்கள் என்பது வரையாக அந்தக் கதை விரிகிறது. இதற்கு 5 வருடங்களுக்குப் பிறகு மெலொரி தன் குழந்தைகளுடன் தான் இருக்கும் கூட்டைவிட்டு ஆபத்தில்லாத ஓர் இடத்துக்குச் செல்ல துணிகிறாள். அந்தத் திகில் ஆற்றுப் பயணம் ஏற்படுத்தும் பதைபதைப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஃபிளாஷ்பேக் கதை சற்றே சுவாரஸ்யத்தை இழக்கிறது. காரணம் இது எப்படி முடியப்போகிறது என்றுதான் நமக்கு இப்போதே தெரியுமே! இருந்தும் நிறைய கதாபாத்திரங்கள், வித்தியாசமான காட்சியமைப்புகள் என நம் கண்களைக் கட்டப் பார்த்திருக்கிறார்கள்.

கடந்த 2014-ம் ஆண்டு இதே பெயரில் வெளியான ஒரு நாவலின் அடிப்படையாகக் கொண்டுதான் நெட்ஃபிளிக்ஸின் Bird Box வெளியாகியுள்ளது. நாவலில் இருக்கும் கதாபாத்திரங்களின் இயல்பைச் சற்று அதிகமாகவே மாற்றியிருக்கிறார்கள். நாவலின் முடிவையும் திரைப்படத்தில் மாற்றி அமைத்திருக்கிறார் படத்தின் இயக்குநரான சூசேன் பியர்.

அடடே இந்த கான்செப்ட் நல்லாயிருக்கே என வியக்கும்படி கதையின் ஒன்லைன் இருந்தாலும், இது ஒரிஜினலான ஐடியாவா என்றால் சற்றே யோசனை செய்ய வேண்டியிருக்கிறது. காரணம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த 'The Happening' படம் மற்றும் இந்த வருடம் வெளியான 'A Quiet Place' படமும் Bird Box பார்க்கையில் நம் கண்முன்னே வந்துபோகின்றன.

'The Happening' படத்தில் மெல்லிய தென்றல் வீசும்போதெல்லாம் மக்கள் சாவி கொடுத்த பொம்மைகள்போல நடந்து தற்கொலை செய்துகொள்வார்கள். அதை ஓர் இயற்கை நிகழ்வாகப் படம் காட்டிருக்கும். 'A Quiet Place' படம் கிட்டத்தட்ட Bird Box தான். கண்களுக்குப் பதில் காதுகள். ஆம், நம்மால் ஏற்படும் சின்ன சின்ன ஒலிகளை வைத்து அந்த மிருகம், நம்மை வேட்டையாடி விடும். அதில் இருந்து தப்பிக்க சப்தம் எழுப்பாமல் நம் நாள்களைக் கடத்தியாக வேண்டும். எமிலி பிளன்ட் நடித்த அத்திரைப்படம் , 2018ம் ஆண்டு வெளியான த்ரில்லர் சினிமாக்களில் முக்கியமான ஒன்று. A quiet place , இந்தப் படத்தை விடவும் சிறப்பானதோ என எண்ண வைப்பது, அதில் நடக்கும் சில கொலைகள்தான்.

Bird Box-ல் மெலொரியாக நடித்திருப்பது ஹாலிவுட்டின் மூத்த நடிகையர்களில் ஒருவரான 'ஸ்பீட்' மற்றும் 'கிராவிட்டி' புகழ் சாண்ட்ரா புல்லக். குழந்தைகள் என்றுகூடப் பார்க்காமல் அவர்களிடம் கத்துவது, ஆரம்பம் முதலே கூடுதல் கண்டிப்புடன் இருப்பது, கர்ப்பிணியாக இருக்கும்போதும் தயங்காமல் நியாயத்துக்காகப் போராடுவது என தன் பாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார். அவரின் பின்கதை வழக்கம்போல கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் கதைதான். டெம்ப்ளேட்டை மாத்துங்க ஹாலிவுட்!

படத்தில் சில காட்சிகளே வந்தாலும், girl கதாபாத்திரத்தில் வரும் அச்சிறுமி தரும் க்யூட் ரியாக்ஷன்களில் ஈர்க்கிறாள். " தப்பிப் பிழைப்பது மட்டுமே வாழ்வது அல்ல " என டாம் கதாபாத்திரம் சொல்லும் வரியில் அவ்வளவு அர்த்தம் பொதிந்து இருக்கிறது. படத்தின் பெரிய பலம் அதன் திரைக்கதை. 2 மணி நேரங்கள் ஓடும் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பதைபதைப்பு நமக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. அந்த வீட்டுக்குள் தஞ்சம் அடையும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இயல்புடன் இருப்பதைப் பிரச்னை என்றவுடன் அவர்கள் ஒவ்வொருவரும் எடுக்கும் வித்தியாசமான முடிவுகள் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. அந்த த்ரில் அத்தியாயங்களில் நம் இதயத்துடிப்பை அதிகம் அதிரவைப்பது அந்த சூப்பர்மார்கெட்டில் நடக்கும் கலவரம்தான். பின்னணி இசையும் இத்தகைய காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறது.

வீட்டில் நண்பர்களுடன் கையில் சிப்ஸுடன் பரபரப்புடன் பார்த்து மகிழவேண்டிய த்ரில்லர் படம் இந்த Bird Box.