Published:Updated:

1964-ல் வெளியான படத்துக்கு இப்போ ஒரு சீக்குவல்... எப்படியிருக்கிறது மியூசிக்கல் சினிமா #MaryPoppinsReturns?

1964-ல் வெளியான படத்துக்கு இப்போ ஒரு சீக்குவல்... எப்படியிருக்கிறது மியூசிக்கல் சினிமா #MaryPoppinsReturns?
1964-ல் வெளியான படத்துக்கு இப்போ ஒரு சீக்குவல்... எப்படியிருக்கிறது மியூசிக்கல் சினிமா #MaryPoppinsReturns?

இழந்தத் தன்னம்பிக்கையையும் குழந்தைத் தனம் என்று ஒதுக்கப்படும் கொண்டாட்டமான பேரானந்தத்தையும் மீட்டெடுக்க உதவுகிறாள் மேரி பாப்பின்ஸ். எப்படியிருக்கிறது மாயாஜால தேவதைக் கதை #MaryPoppinsReturns?

குழந்தைகளுக்கான மாயாஜாலக் கதைகள் எப்போதும் குழந்தைகளுக்காக மட்டுமே எழுதப்பட்டவையாக இருந்ததில்லை. அதன் வழியே பெரியவர்களையும் குழந்தையாக மாற்றி அறிவுரை அளிப்பதுதான் அதன் பணி. அப்படி ஒரு படமாக மட்டும் இல்லாமல் ஒரு மியூசிக்கல் தேவதைக் கதையாக விரிந்திருக்கிறது இந்த #MaryPoppinsReturns. அதுவும் வரலாற்றில் இந்தப் படம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. காரணம் இது 1964-ம் ஆண்டு வெளிவந்த 'Mary Poppins' படத்தின் சீக்குவல். இவ்ளோ லேட்டா டிஸ்னி?

3 குழந்தைகள் கொண்ட பேங்க்ஸ் குடும்பத்துக்கு ஒரு மிகப்பெரிய பிரச்னை. வாங்கிய கடனுக்காக அவர்கள் வாழும் வீட்டை வங்கியே எடுத்துக்கொள்ளும் நிலை. 5 நாள்களுக்குள் கடனைத் திருப்பி தராவிட்டால் வீதியில் நிற்க வேண்டிய நிலை. ஷேர்கள் குறித்த சர்டிபிகேட் ஒன்று அவர்கள் கஷ்டத்தைப் போக்கிவிடும் என்றாலும், தற்போது அதையும் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். தன்னம்பிக்கை, மன அமைதி, மகிழ்ச்சி என அனைத்தையும் இழந்து நிற்கும் குடும்பத்துக்கு உதவ மேரி பாப்பின்ஸ் என்ற மர்ம மாயாஜால தேவதை ஒருவர் வருகிறார். குடும்பம் கஷ்டங்களிலிருந்து மீண்டு எழுந்ததா?

கதையைக் கேட்டவுடன் ஏதோ நம்மூர் சீரியல்போல கண்ணைக் கசக்க வைப்பார்களோ என்று பயப்பட வேண்டாம். இரண்டு மணி நேரம் முழுக்க காமெடி, சாகசம், சென்டிமென்ட், பாட்டு, மேஜிக் எனக் கலர் கலர் பலூன்களைப் பறக்கவிடுகிறது படம். குறிப்பாகப் படத்தில் வரும் மூன்று குழந்தைக் கதாபாத்திரங்கள் நம்மை ஈர்க்கிறார்கள். வயதைத் தாண்டிய முதிர்ச்சியுடன் வலம் வரும் ட்வின்ஸ் அனபெல் மற்றும் ஜான் ஒருபுறம், இன்னமும் குழந்தைத் தன்மை மாறாமல் திரியும் ஜார்ஜி ஒருபுறம் எனக் குழந்தைக் கதாபாத்திரங்களுக்குக்கூட அவ்வளவு சிரத்தை எடுத்திருக்கிறார்கள். அதிலும் முதன்முதலில் மேஜிக்கை உண்மை என்று உணர்ந்தவுடன் அப்பாவி ஜார்ஜி கொடுக்கும் ரியாக்ஷன்கள் அனைத்தும் `ச்சோ க்யூட்’ ரகம்! தம்பியைக் காக்கும் பெரும் பொறுப்புடன் உலவும் அக்கா அனபெல் ``எங்களையெல்லாம் நல்லாதான் வளர்த்திருக்காங்க!’’ என்று மேரி பாப்பின்ஸிடம் சீறும்போதும், பட்டத்தின் பின்னால் ஓடும் தம்பி ஜார்ஜியைப் பிடிக்கச் சேற்றில் எல்லாம் விழுந்து ஓடும்போதும் தனியே நம் மனதில் பதிந்துவிடுகிறார்.

மேரி பாப்பின்ஸாக எமிலி ப்ளன்ட். முந்தையப் பாகம் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. அதில் வரும் புகழ்பெற்ற கதாபாத்திரமான மேரி பாப்பின்ஸாக எமிலி அசத்த வேண்டும். பாடல்கள் பாட வேண்டும். நடனம் ஆட வேண்டும் என அந்தக் கதாபாத்திரம் எமிலியிடம் இருந்து எதிர்பார்க்கும் விஷயங்கள் ஏராளம். கண்டிப்பான முகத்துடன், எள்ளல் கலந்த முகபாவத்துடன் எல்லாவற்றையும் சிறப்பாக செய்துள்ளார் எமிலி. சென்ற வருடம் 'A Quiet Place' படத்தில் அமைதியாக வந்தே கவனம் ஈர்த்தவர், இதில் அடாவடிகள் செய்தி லைக்ஸ் அள்ளுகிறார். இவரைத் தவிர எப்போதும் கவலை தோய்ந்த சீரியஸ் முகம் காட்டும் மைக்கேல் பேங்க்ஸ், தோன்றும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிரித்துவிடும் அவரின் சகோதரி ஜேன் பேங்க்ஸ் என எல்லோரும் சரியான தேர்வு. பழம்பெரும் நடிகை மெரில் ஸ்ட்ரிப்பின் கேமியோ, பலூன் விற்கும் அந்தப் பாட்டி, வில்லனாக வரும் காலின் ஃபிர்த் என மற்ற அனைவருமே தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

இந்த மியூசிக்கல் சினிமாவில் பாடல்கள் அனைத்துமே அனைவருக்குமானதா என்று கேட்டால் இல்லைதான். பெரும்பாலான பாடல்கள் ``இப்ப போயா பாடுவீங்க?’’ என்று கேட்க வைத்தாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார் இசையமைப்பாளர் மார்க் ஷைமன். என்ன முயன்றாலும் இதை அனைவருக்குமான படமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். உடைந்த ஜாடியை ஒட்டவைக்க மேரி பாப்பின்ஸ் குழந்தைகளுடன் செய்யும் பயணம் படம் பார்க்கும் குட்டீஸ்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டமாக இருக்கலாம். நமக்கு டயர்டாக்கும் நம்மூர் வெளிநாட்டு டூயட் பாடல்கள்தான் மைண்டில் வந்துபோகிறது. அதே சமயம் வீட்டுக்குச் செல்லும் வழியை மறந்துபோகும் குட்டீஸ்களுக்கும் மேரி பாப்பின்ஸுக்கும் வழி சொல்லும் ஜேக் மற்றும் அவருடைய லேம்ப்லைட்டர் குழு அவர்களுடன் சேர்ந்து நம் மனத்தையும் நடனமாடச் செய்கிறது. அப்படி ஒரு நடன அமைப்பும் ஒருங்கிணைப்பும் படத்தின் எந்த இடத்தில் வந்தாலும் நம்மை மயக்கிவிடவே செய்யும்.

படத்தின் இறுதியில் பெரியவர்களும் மேஜிக் உண்மை என்பதை உணர்ந்த தருணம் பலூனுடன் அவர்களும் மகிழ்ச்சியாக விண்ணில் பறக்கிறார்கள். மேரி பாப்பின்ஸிடம் பலூன் விற்கும் பாட்டி, ``எல்லாரும் காலைல இதை எல்லாம் மறந்துடுவாங்கதானே?’’ என்று கேட்கிறாள். ``ஆமா, அதான இந்த வளர்ந்தவங்கக்கிட்ட இருக்குற பிரச்னையே!’’ என்று புன்னகையுடன் பதிலளிக்கிறாள் மேரி பாப்பின்ஸ். மகிழ்ச்சியாக எந்தக் கவலையும் இன்றி இருக்க நாம் குழந்தைகளாக மாற வேண்டும் என்று அறிவுரை சொல்கிறது படம். எது எப்படியோ, நம்மை மீண்டும் குழந்தையாக மாற்றி ரசிக்க வைத்தற்காக மேரி பாப்பின்ஸுக்கு ஒரு ஹை ஃபை!

அடுத்த கட்டுரைக்கு