
எஃகு நகரின் வீர நாயகி!
ஜப்பானைச் சேர்ந்த யுகியோ கிஷிரோ (Yukito Kishiro), மங்கா காமிக்ஸ் வடிவத்தில் உருவாக்கிய ‘பாட்டில் ஆஃப் அலிட்டா’ கதையின் அடிப்படையில் வெளியாகியிருக்கிறது, ‘அலிட்டா: பாட்டில் ஏஞ்சல்’ (Alita: Battle Angel) என்ற அதிரடி திரைப்படம். சுட்டி விகடன் சார்பாக, ஐந்து சுட்டிகளை இந்தத் திரைப்படத்துக்கு அழைத்துச் சென்றிருந்தோம். படம் பற்றி அவங்க என்ன சொல்றாங்க?

ஹரிணி:
‘‘இது 26ஆம் நூற்றாண்டில், அதாவது 2563-ம் வருஷத்தில் நடக்குது. போரினால் பூமியே அழிந்துபோகுது. சாதாரண மக்கள் எல்லாம் ‘ஸ்டீல் சிட்டி’ என்கிற இடத்திலும், பணக்காரர்கள் அந்தரத்தில் உருவாக்கிய ‘ஜலேம்’ என்ற இடத்திலும் வாழறாங்க.
ஸ்டீல் சிட்டியில் இருக்கிற முக்கால்வாசி பேர், பாதி மனுஷனாகவும், பாதி ரோபோவாகவும் இருக்காங்க. அந்த மனுஷங்களுக்கு ரோபோ பார்ட்ஸ் மாற்றும் டாக்டர், டைசன் ஐடோ. ஸ்டீல் சிட்டியின் குப்பையிலிருந்து மனித மூளைகொண்ட உடைந்த ரோபோவைக் கண்டுபிடிக்கிறார் டாக்டர். அதை ரிப்பேர் செஞ்சு தன் மகள் நினைவாக ‘அலிட்டா’ எனப் பெயர் வைக்கிறார்.
கார்த்திக்:
‘‘மிச்சத்தை நான் சொல்றேன்... அலிட்டாவுக்குக் கடந்த காலம் பற்றிய நினைவுகள் இல்லை. ஆனால், சண்டை என வந்துட்டா, தூள் கிளப்புகிறாள். ஹீமோ என்கிற நண்பன் அறிமுகமாகிறார். அந்தரத்தில் மிதக்கும் ஜலேம் என்கிற பகுதிக்க்ச் செல்வதுதான் ஹீமோவின் வாழ்நாள் கனவு.
அலிட்டாவின் உடல் முழுவதும் எந்திரமாக இருந்தாலும், மனிதர்களின் ஃபீலிங்ஸ் இருக்கு. ஹீமோவும் அலிட்டாவும் நேசிக்கிறாங்க. அவனுக்காக, தனது இயந்திர இதயத்தையே எடுத்துக்கொடுக்க ரெடியா இருக்கா அலிட்டா. தமிழ் சினிமாவில் ஹீரோவுக்குத்தான் இந்த மாதிரி சீன் வைப்பாங்க. இதில், ஒரு பெண் கேரக்டரை இவ்வளவு அழகா, கெத்தா பார்க்கிறதுக்குப் புதுசா இருந்துச்சு.’’
அர்ஜூன்:
‘‘சரி, சரி, கதைக்கு வா... ஹன்டர் வாரியர் குழுவில் இணைந்து மக்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களை அழிக்க நினைக்கிறாள் அலிட்டா. ஒருகட்டத்தில் அவளாகவே தன்னை ஹன்டர் வாரியராகப் பதிவு செய்துகொள்கிறாள். சிறுமியான இவள் எப்படி எதிரிகளைச் சமாளிக்க முடியும்னு மற்ற ஹன்டர் வாரியார்கள் அலட்சியம் செய்யறாங்க. அதற்கு, தனது அதிரடி திறமையால் அலிட்டா எப்படி பதில் சொல்கிறாள் என்பதுதான் மீதிக் கதை!’’

சஞ்சய்:
3டி எபெஃடில் ஒவ்வொரு காட்சியும், நம்மையும் ஸ்டீல் சிட்டிக்கே கூட்டிட்டுப் போகுது. உடம்பில் விதவிதமான, ஸ்டீல்கள், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஹன்டர் வாரியார்கள், அவர்களை அழிப்பதற்காக உருவாக்கப்படும் பயங்கரமான இயந்திர வில்லன்கள், அவர்களோடு நடக்கும் அதிரடிச் சண்டைகள் எனப் படம் ஆரம்பிச்சதில் இருந்து முடியற வரைக்கும் கண்களைத் திரையைவிட்டுத் திருப்ப முடியலை. முக்கியமா, க்ரீவிஷா என்கிற இயந்திர மலை மாதிரி இருக்கும் வில்லனுடன் அலிட்டா மோதும் காட்சிகள் செம!’’
ஸ்ரீகர்:
‘‘ஆமா! அவனுடன் நடக்கும் சண்டையில், அலிட்டா, துண்டு துண்டாகச் சிதைந்துடும்போது, அழுகையே வந்துடுது. அப்புறம், புதிய உடம்போடு மீண்டுவந்து, செய்யும் சாகசம் எல்லாமே அட்டகாசம். க்ளைமாக்ஸ் சீன் செமையா இருந்துச்சு. ஆனா, படம் முழுசா முடியாத ஃபீல். அந்த ஜலேம் நகரம் மாதிரியே அந்தரத்தில் படம் முடிஞ்சுடுச்சு. செகண்ட் பார்ட் வரும்னு நினைக்கிறேன்.’’
ஹரிணி:
‘‘ராபர்ட் ராட்ரிக்ஸ் என்பவர் டைரக்டர் என்றாலும், ‘டைட்டானிக்’, ‘அவதார்’ படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி, தயாரிச்சு இருக்கார். ஸோ, அவருக்கேயான ஸ்பெஷல் இதிலும் இருக்கு. டெக்னாலஜியை அழகாகப் பயன்படுத்தி இருக்கும் அதேநேரம், சென்டிமென்ட் மூலம் மனசை தொடும் விஷயங்களும் இருக்கு. சக உயிர்களை நேசிக்க வேண்டும், உயர்வு தாழ்வு கூடாது என்பதை படம் சொல்லுது.
படம் பார்க்கிறவங்களுக்கு புதுசா எனர்ஜிடிக்கா ஒரு டெக்னாலஜி விஷன் கிடைக்கும். எங்களுக்கும் அப்படித்தான் கிடைச்சிருக்கு. ஸ்கூல் சயின்ஸ் புராஜெக்ட்டுக்கு இந்தப் படத்திலிருந்து ஒரு ஐடியா கிடைச்சிருக்கு!’’
தனது க்யூட் ரியாக்ஷன் அதிரடி ஆக் ஷன் மூலம் அனைவரையும் கவர்ந்துவிட்டாள் அலிட்டா!
-வெ.வித்யா காயத்ரி
படங்கள்: வீ.நாகமணி