Published:Updated:

புதிர் அறைகள், கரணம் தப்பினால் மரணம், Saw ட்ரீட்மென்ட்... #EscapeRoom படம் எப்படி?

கார்த்தி

ஒவ்வோர் அறைக்கும் ஏகப்பட்ட புதிர்கள், விடைகளைக் கண்டுபிடித்தால் உயிர் தப்பலாம். இந்த விளையாட்டுக்குள் செல்லும் ஆறு பேருக்கு என்ன நடக்கிறது என்பதுதான் #EscapeRoom

புதிர் அறைகள், கரணம் தப்பினால் மரணம், Saw ட்ரீட்மென்ட்... #EscapeRoom படம் எப்படி?
புதிர் அறைகள், கரணம் தப்பினால் மரணம், Saw ட்ரீட்மென்ட்... #EscapeRoom படம் எப்படி?

சீட் நுனி த்ரில்லர் வகையில் சுமாரான படங்களில் இந்த பேட்டர்ன் கட்டாயம் இருக்கும். வேண்டா வெறுப்பாக பிள்ளையைப் பெற்று காண்டாமிருகம் எனப் பெயர் வைப்பது போல், காரணமே இல்லாமல் ஏதோவொரு தூண்டுதலில், உந்துதலின் பேரில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நோக்கி நகர்வார்கள். அப்படி இந்த #EscapeRoom படத்தில் ஒரு சுபயோக சுபதினத்தில் முன்பின் அறியாத ஆறு நபர்கள், ஒரு விளையாட்டுக்குத் தயாராகிறார்கள். அதுதான் Minos escape Rooms.

ஒரு கார்ப்பரேட் பணக்காரர், புதிர்கள் விளையாடும் ஜாலி ஸ்டூடன்ட், போர் வீராங்கனை, பெண் காலேஜ் ஸ்டூடன்ட், லாரி ஓட்டுநர், ஒரு ஸ்டோர் கீப்பர். இப்படி கசமுசா காம்பினேஷனில் ஓர் ஆறு பேர்தான் படத்தின் நாயக நாயகிகள். பிக்பாஸ் வீடு போல அனைத்து ரூமிலும் கேமரா, Self destructive Bomb என எல்லாம் பக்கா.

ஒவ்வோர் அறையிலும் சில புதிர்கள் வைக்கப்படுகின்றன. நெருப்பு அறை, பனி அறை, பாட்டு அறை, பாதாள அறை என ரகரகமாக செல்லும் அறைகளில் சுவாரஸ்ய அறை என்றும் ஒன்றை வைத்திருக்கலாம். புதிர்களைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்காவிட்டால், அந்த அறை வெடித்துச் சிதறிவிடும். ஆறு நபர்களுக்கான ஒற்றுமை, வேற்றுமை எல்லாம் அவர்களுக்குத் தெரியவருகிறது. தியாகம், போட்டி மனப்பான்மை, லூசுத்தனம், சம்பிரதாய மரணம் என எல்லாவற்றையும் கடந்து காலம் காலமாய் ஹாலிவுட்டில் பார்த்தது போல் சிலர் வெளியே வருகிறார்கள். அடுத்தடுத்து என்ன , அடுத்தபாகத்துக்கு என்ன போன்றவற்றை திரையில் காணலாம்.

கிட்டத்தட்ட சா ட்ரீட்மென்ட் திரைப்படம்தான். ஆனால், அதில் வருவது போல் கெட்டவர் ஒருவர் இறப்பது அல்ல. சா படங்களில் இருக்கும் தெறிவிக்கவிடும் ரத்தமோ, கை, கால்களை அறுத்துக் கொள்வதோ இதில் இல்லை. எல்லாமே லெமன் இன் தி ஸ்பூன் விளையாட்டை சற்று சீரியஸாகச் செய்வது போலத்தான் இருக்கிறது. அதுவே ஒரு கட்டத்துக்கு மேல். நாங்க எல்லாம் அந்தக் காலத்துலயே என்னென்னமோ பார்த்தவியங்க என ரசிகர்களைச் சொல்ல வைத்துவிடுகிறது. `அறைக்கு ஒரு சாவு' கேட்கிறார் இயக்குநர் ஆட ரோபிடல். ஆனால், மண்ணெண்ணெ, வேப்பெண்ணெ, வெளக்கெண்ணெ எவன் செத்தா எனக்கென்ன என இருக்கும் டல் அடிக்கும் திரைக்கதையால் சீட் நுனி த்ரில்லராக இருக்க வேண்டிய சினிமா, சுமார் சினிமா ஆகிவிடுகிறது.

ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டுமென உருவாக்கப்படும் காரணம். ஸ்பாய்லர் என்னும் கொண்டையை மறைத்து சொல்வதாயின் ஃபைனல் டெஸ்டினேசன் ஐந்து பார்ட்டுக்கும் சேர்த்து வைத்து ஒரு படத்தின் கருவை யோசித்தால் எப்படியிருக்குமோ அதுதான் #EscapeRoom. ஆரம்பத்தில் அட சொல்ல வைக்கும் சினிமா, போகப்போக கழுதை தேய்ந்து... மோடுக்கு போனதுதான் கொடுமை. திணிக்கப்படும் முத்தக் காட்சிகள், அரை நிர்வாணக் காட்சிகள் சேர்க்காமல் இருந்ததற்கு கதைக்குழுவுக்கு நன்றி. 

படத்தைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால், அந்த இரண்டாம் பாகத்துக்கான லீட் எல்லாம்.... சாமி சரணம். எஸ்கேப் ரூம் திரைப்படக் குழு சார்பாக இந்தத் தளத்தில் ஒரு விளையாட்டு வைத்திருக்கிறார்கள். அதை முயற்சி செய்து பார்க்கவும்.