Published:Updated:

அலிட்டா எனும் யுத்த தேவதை... ஜேம்ஸ் கேமரூன் திரைக்கதை எழுதித் தயாரித்த #AlitaBattleAngel படம் எப்படி?

கார்த்தி
அலிட்டா எனும் யுத்த தேவதை... ஜேம்ஸ் கேமரூன் திரைக்கதை எழுதித் தயாரித்த #AlitaBattleAngel படம் எப்படி?
அலிட்டா எனும் யுத்த தேவதை... ஜேம்ஸ் கேமரூன் திரைக்கதை எழுதித் தயாரித்த #AlitaBattleAngel படம் எப்படி?

உலகம் அழிந்து போன ஒரு காலத்தில் மீதமிருக்கும் ஒரு பெண் சைபோர்க், தான் யார் என்பதை அறிந்து, அந்த உலகைக் காக்கும் போராட்டமே அலிட்டா: பேட்டில் ஏஞ்சல்.

'The Fall' என்னும் பெரிய யுத்தத்துக்குப் பின்னர், உலகம் முற்றிலுமாய்ச் சிதைந்துவிட, மீதமிருக்கும் ஸ்பேர்பார்ட்ஸை வைத்து ஓர் உலகம் இயங்குகிறது. ஏழைகளின் பாதாள உலகமாக அயர்ன் சிட்டியும், பணக்காரர்களின் வான் நகரமாக ஜலேமும் உருவாகின்றன. அயர்ன் சிட்டியில் எஞ்சிய மனிதர்களும், மிச்ச சொச்சமான சைபோர்குகளும் வசித்து வருகிறார்கள். சைபோர்க் சயின்டிஸ்ட் இடோவுக்குக் கிடைக்கும் ஒரு பழைய சைபோர்கில் உயிர் இருக்க, அதை மேம்படுத்தி, இரும்பில் இருக்கும் ஓர் இதயத்துக்கு மற்ற பாகங்கள் பொருத்துகிறார். 300 ஆண்டுகள் பழைமையான அந்த சைபோர்குக்கு உருவமும் 'Alita' என்னும் பெயரையும் கொடுக்கிறார்.

`அடிச்சு வர்ற வெள்ளத்த அணை போட்டுத் தடுத்தாலும், அது ஒடச்சுட்டுப் பாயத்தான் செய்யும் என்பது போல்' என்னதான் இடோ அலிட்டாவை அம்முவாக மாற்றி உலவவிட்டாலும், அது ஒரு கட்டத்தில் அடித்து நொறுக்க ஆரம்பிக்கிறது. அயர்ன் சிட்டியில் நடக்கும் மோட்டார்பால், ஹன்டர் வாரியர், ஹூகோ க்ரெவிஸ்கா, வெக்டர் , நோவா என அடுத்த பாகத்துக்கான கதை மாந்தர்கள் வரை நீள்கிறது கதை. 

அலிட்டாவாக ரோசா சலசார். WETA, DNEG என்னும் விசுவல் எபெக்ட்ஸ் நிறுவனங்களால் மாறிப்போன ஒரு முகத்தைத்தான் காட்டுகிறார்கள் என்றாலும் அவ்வளவு அழகாக இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு நிஜமான படத்தில், அனிமேஷன் கதாபாத்திரம் ஒன்றை இவ்வளவு உயிரோட்டத்துடன் பார்த்து எத்தனை நாள்கள் ஆகின்றன! 

காலம் காலமாக ஹீரோயினுக்கு ஒரு பிரச்னை என்றால் ஹீரோ இருக்கும் வேலையை விட்டுட்டு ஓடுவது; ஹீரோயினுக்காக இதயத்தையே கொடுப்பது என ஹீரோ செய்யும் எல்லாவற்றையும் இதில் ஹீரோயின் செய்கிறார். அட அவ்வளவு ஏன் உயிரைக் கொடுத்துக்கூட காப்பாற்றுகிறார் (ஸ்பாய்லர் எல்லாம் இல்லை சர்ப்ரைஸ்தான்). இப்படியாகப்பட்ட கதாநாயகனாக ஹூகோ. இத்தனை நாள்களாக ஒரு விமர்சனத்தில் ஹீரோயினுக்கு எவ்வளவு எழுதி இருப்பார்களோ, அதைத்தான் அவருக்கும் எழுத முடியும்.

படத்தில் ஏதோ அப்படி இப்பிடி வந்து போகிறார் வெக்டர் (மார்ஷா அலி). இதுக்கு எதுக்கு மார்ஷா அலி என்பது போலத்தான் இருந்தது. சரி அடுத்த பாகமோ என்றால் அடப்போங்கடாதான். அதிலும் நோவா கதாபாத்திரம் 'ஆரா'வா இல்லை '2.0'வுக்கே தெரியாத விஞ்ஞானமா எனச் சந்தேகிக்க வைக்கிறது. மற்றொரு பவுன்டி ஹன்டரான ஸப்பானாக வருகிறார் எட் ஸ்கீரின். கேம் ஆஃப் த்ரோன்ஸில் கலீஸி டீமில் டாரியோ நகாரீஸாக வருபவர்தான், இதில் ஜப்பான வந்திருக்கிறார் என்பதை விக்கிப்பீடியாவில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கும். முகத்தை அந்தளவுக்கு மாற்றியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் அதன் விசுவல்ஸ். இடங்கள், பொருள்கள் எல்லாமே சின்னச் சின்ன பழைய உபயோகமற்ற உலோகங்களால் ஆனவை. ஹீரோவின் பைக் முதல் அந்த உலகின் பல்வேறு விஷயங்கள் அட, சொல்ல வைக்கின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு காட்சியிலும் VFX தேவை என்ற படத்தில் ஓளிப்பதிவுக்கு நிறையவே பொறுப்புகள் இருக்கும். இங்கே அதில் எந்தவொரு பிசிரோ, சமாளிப்போ இருந்ததாக தோன்றவே இல்லை. இத்தனை பர்ஃபெக்ட்டான அவுட்புட் கொடுத்த மொத்த குழுவுக்கும் பாராட்டுகள். ஜேம்ஸ் கேமரூன் இஸ் தி பாஸ்!

1990களில் வெளிவந்த ஜப்பானின் மங்கா தொடரின் காமிக்ஸைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள். அலிட்டாவுக்குத் திரைக்கதை எழுதி தயாரித்து இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். ஒரு சூப்பர்ஹீரோயின் டைப் கதை என்பதால் அதற்கேற்ப எந்த ட்விஸ்ட் டர்ன்கள் இல்லாமல்தான் படம் செல்கிறது. படத்தின் சுவார்ஸ்யத்தைக் குறைப்பதும் அதுவே. ஸ்பை கிட்ஸ், சின் சிட்டி எனப் பல படங்களை இயக்கிய ராபர்ட் ஆன்டனி ரோட்ரிகஸ் (Robert Anthony Rodríguez) இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் மற்றுமொரு மிகப்பெரிய பட சிரீஸாக அலிட்டா வெற்றி கொடி ஏற்றுவாள்.

வொண்டர் வுமன், மோனா வரிசையில் பெண்ணை முதன்மையாக வைத்திருக்கும் மற்றொரு சூப்பர்ஹீரோ சினிமாதான் அலிட்டா. சில காட்சிகள் யூகிக்கும் நிலையில் இருந்தாலும், சிறப்பாகவே வந்து 'ஹாய்' சொல்லி இருக்கிறாள் இந்த அலிட்டா!

அடுத்த கட்டுரைக்கு