Published:Updated:

அன்பின் உலகில் அழகிய உயிர்கள்!

அன்பின் உலகில் அழகிய உயிர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பின் உலகில் அழகிய உயிர்கள்!

அன்பின் உலகில் அழகிய உயிர்கள்!

டிராகன் என்கிற கற்பனையான விலங்கை வைத்து பயமுறுத்திவந்த ஹாலிவுட்டை, அன்பின் பக்கம் திருப்பியது, How to train your dragon படத்தொடர். இதன் மூன்றாவது பாகம்தான், How to Train Your Dragon: The Hidden World .

பெர்க் என்னும் கிராமத்தில் வசிக்கும் வைக்கிங் இனத்தைச் சேர்ந்தவன், ஹிக்கப். அங்கு ஒருமுறை நைட்ஃப்யூரி இனத்தைச் சேர்ந்த டூத்லெஸ் என்னும் டிராகன் வந்துவிடுகிறது. முதலிரண்டு பாகங்களிலும் இருவரின் நட்புதான் பிரதானம்.

மனிதர்களும் டிராகன்களும் எப்படி ஒற்றுமையாக வாழ்வது என்பதுதான் கதை. என்னதான் ஒற்றுமையாக வாழ்ந்தாலும், வில்லன் என்று ஒரு ஜீவன் இருக்கத்தானே செய்யும்? அப்படித்தான் முதலிரண்டு பாகங்களிலும் வில்லனை, வைக்கிங் எப்படி வெல்கிறார்கள், எப்படி டிராகனுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள் என்பதை ஜாலியாகச் சொல்லியிருந்தார்கள்.

அன்பின் உலகில் அழகிய உயிர்கள்!

மூன்றாவது பாகத்தில், இந்தக் கதைகளை இன்னும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் டிராகன்கள் சிறைப் பிடிக்கப்படுகின்றன. அங்கெல்லாம் பெர்க் கிராமத்தின் ஹிக்கப்பும் அவனது குழுவும் தங்களது நட்பு டிராகன்களின் உதவியுடன் சென்று, சிறைப்பட்ட டிராகன்களை மீட்கிறார்கள்.

ஹிக்கப்புக்கு அவனது தந்தை சொல்லிவந்த டிராகன்களின் ரகசிய உலகம் நினைவுக்கு வருகிறது.   டிராகன்களில் நைட்ஃப்யூரிக்களை கொல்வதையே வழக்கமாக வைத்திருக்கும் வில்லன் க்ரிம்மல். அவன் நம்ம டூத்லெஸ் டிராகனை தேடி அலைகிறான்.

தீவில் இருக்கும் பெர்க் கிராமத்தை க்ரிம்மல் தாக்க முயற்சி செய்கிறான். டிராகன்களைப் பாதுகாக்க அங்கிருந்து தப்பித்து வேறு இடத்துக்குப் பயணம் செய்கிறார்கள்.  அங்கேயும் வந்துவிடுகிறான் க்ரிம்மல்.

இதற்கிடையே, கறுப்பு டிராகனான டூத்லெஸ், வெள்ளை டிராகனான லைஃப்யூரியுடன் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கவைக்கிறது.

ஹிக்கப்பும் அவனது காதலி ஆஸ்ட்ரிடும் நைட்ஃப்யூரியைத் தேடிச்செல்ல, அது ரகசிய உலகில் பாதுகாப்பாக இருக்கிறது. அங்கிருக்கும் டிராகன்களுக்கு நைட்ஃப்யூரியும் லைட்ஃப்யூரியும்தான் ராஜா மற்றும் ராணி.  ஓராயிரம் டிராகன்கள், கடலுக்குள் உலகம் என அந்தக் காட்சிகள் விஷுவலாக செம்ம ட்ரீட்.

இறுதியில் எல்லாம் சுபம் என்கிற நிலையில், எல்லா டிராகன்களும் ரகசிய உலகத்துக்குள் செல்கின்றன. சில ஆண்டுகள் கழித்து ஹிக்கப் மற்றும் ஆஸ்ட்ரிடு, தங்கள்  குழந்தைகளுடன் சென்று டிராகன்களைப் பார்த்துவிட்டு வருகிறார்கள். மனிதனால் டிராகனுக்கு எந்தவித துன்பமும் வராது என்கிற காலம் வரும் வரை டிராகன்கள் ரகசிய உலகத்தில் இருப்பதுதான் சரி என்கிறான் ஹிக்கப்.

சக உயிரினங்களான குருவி, நாய், பறவைகள், விலங்குகள் என எல்லாவற்றிடமும் மனிதர்கள் எல்லோரும் என்றைக்கு அன்பு செலுத்துகிறார்களோ, அன்றுதான் இந்த உலகத்தை சொர்க்கமாக்க முடியும். அன்றுதான் ரகசிய உலகில் இருக்கும் டிராகன்கள் மீண்டும் இந்த உலகத்துக்கு வரும்.

கற்பனையே என்றாலும், அன்பின் வழியே டிராகன்கள் வாழ்கின்றன என்னும் நம்பிக்கையை விதைக்கிறது படம்!

-கார்த்தி