Published:Updated:

ஜேம்ஸ் பாண்டுக்கு வில்லனாகும் ஆஸ்கர் நாயகன் -`பாண்ட் 25’ அப்டேட்

ஜேம்ஸ் பாண்டுக்கு வில்லனாகும் ஆஸ்கர் நாயகன் -`பாண்ட் 25’ அப்டேட்
ஜேம்ஸ் பாண்டுக்கு வில்லனாகும் ஆஸ்கர் நாயகன் -`பாண்ட் 25’ அப்டேட்

கடந்த சில நாள்களாகத் தகவலாகவும், எதிர்பார்ப்பாகவும் ஹாலிவுட்டில் பரவிக்கொண்டிருந்த ஒரு செய்தி, தற்போது உண்மையாகப் போகிறது. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வில்லன் யார் என்பது பற்றிய செய்திதான் அது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 8 -ம் தேதி வெளியாகவிருக்கும், இன்னும் பெயரிடப்படாத 'பாண்ட்-25' படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பல முறை செய்திகளில் வந்துவிட்டது. முதல் காரணம், இது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் நாயகனாக நடிக்கும் 25-வது படம். மேலும், தற்போதைய பாண்ட், டேனியல் க்ரேய்க் அந்தப் பாத்திரத்தில் நடிக்கும் கடைசிப் படமும் இதுவே. அதுபோக, இந்த 'பாண்ட்-25' படத்துக்கு, ஆஸ்கார்களைக் குவித்த, 'ஸ்லம்டாக் மில்லியனர்' இயக்குநர் டேனி பாயல் தான் டைரக்டர் எனவும் அறிவிக்கப்பட்டது.

இப்படி ஸ்பெஷாலிட்டிகள் ஒரு புறமிருக்க, சர்ச்சைகளும் இந்தப் படத்தைச் சூழ்ந்துள்ளன. முதலில், இந்தப் படத்துகான ரிலீஸ் 2019 செப்டம்பரில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கருத்து வேறுபாடுகளால், படத்தில் இருந்து இயக்குநர் டேனி பாயல் விலகியதால், ரிலீஸ் தேதி பிப்ரவரி 2020-க்கு தள்ளிப்போனது. மீண்டும், ஒரு முறை தயாரிப்பு நிறுவனத்தால் ஏப்ரல் 2020-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையில், 'பாண்ட்-25' படத்தின் வில்லன் யார் என விவாதங்கள் எழத் தொடங்கின. இந்நிலையில், இம்முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற ராமி மேலக், வில்லனாக நடிப்பார் என ஹாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவ ஆரம்பித்தன. இதை உறுதி செய்யும் வண்ணம், ராமி தரப்புடன் ஜேம்ஸ் பாண்ட் படத் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.

 பாண்ட் படங்களில் அந்தந்த காலகட்டத்தில் ட்ரெண்டில் இருக்கும் நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒப்பந்தம் செய்வது வழக்கம். அதுவும் ராமி போன்ற ஸ்டைலிஷான வில்லன், பாண்ட் போன்ற டெக்னிக்கலான ஹீரோவுடன் மோதினால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து, ரசிகர்கள் ஏற்கெனவே மெய் சிலிர்க்கத் தொடங்கிவிட்டனர்.

ராமி தரப்புடன் தயாரிப்பு நிறுவனம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதால், எப்படியும் அவர்தான் வில்லன் என்பதில் அவர்கள் உறுதியாகிவிட்டனர். ஒரு ஆஸ்கர் வெற்றியாளர் போனால் என்ன, இன்னொருவர் வந்துவிட்டாரே... எப்படிப் பார்த்தாலும் லாபம்தான்.