Published:Updated:

'டோத்ராக்கிகளுக்காக டினேரியஸின் முடிவு!' 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் - அத்தியாயம் 4

தார்மிக் லீ
'டோத்ராக்கிகளுக்காக டினேரியஸின் முடிவு!' 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் - அத்தியாயம் 4
'டோத்ராக்கிகளுக்காக டினேரியஸின் முடிவு!' 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் - அத்தியாயம் 4

டிரியனின் வருகை, புது ராஜா ஜோஃப்ரி பராத்தியனுக்கு அதிருப்தியளிக்கிறது. காரணம், டிரியன் லானிஸ்டருக்கும் ஜோஃப்ரி லானிஸ்டருக்கும் எப்போதுமே ஆகாது. அவர் செய்யும் தவறுகளுக்கெல்லாம் கன்னத்தில் அறைந்தே பாடம் புகட்டும் அளவுக்குத் தைரியம் கொண்டவர் டிரியன். தாய் மாமன் அல்லவா!

கடந்த அத்தியாயம் வரை... ஜோஃப்ரி பராத்தியனின் எதிர்பாராத அந்தக் கொடூரத் தீர்ப்பு, அதனால் பலியான நெட் ஸ்டார்க், எஸ்ஸோஸின் அரசன் கல் டிராகோவின் இறப்பு, டிராகனின் பிறப்பு... என முதல் கேம் ஆஃப் த்ரோன்ஸ் முதல் சீஸனின் ஹைலட்ஸ்களைப் பார்த்தோம். இந்த அத்தியாயத்திலிருந்து சீஸன் 2-வில் நடந்ததைப் பார்க்கலாம். 

முடிசூடிய மறுகணமே நெட் ஸ்டார்க்கின் தலையைத் துண்டிக்கச் சொல்லித் தீர்ப்பு வழங்கிய ஜோஃப்ரி பராத்தியன், தனது கொடுங்கோல் ஆட்சியை மெள்ள மெள்ள ஆரம்பிக்கும் விதமாக சில காட்சிகள் நகரும். முதல் சீஸனில் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் டல்லி ராஜ்ஜியத்திடம் ஒரு பிரச்னையில் மாட்டிக்கொள்வார் டிரியன் லானிஸ்டர். தனது பேச்சுத் திறனாலும் புத்திசாலித்தனத்தாலும் அங்கிருந்து தப்பித்து, ப்ரான் என்பவரின் உதவியோடு கிங்க்ஸ் லேண்டிங் வந்தடைகிறார் டிரியன் லானிஸ்டர். இவர் செர்சி லானிஸ்டருக்கும் ஜேமி லானிஸ்டருக்கும் உடன் பிறந்த சகோதரர். கேம் ஆஃப் த்ரோன்ஸைப் பொறுத்தவரை யார் நல்லவர், யார் கெட்டவர் என்று சொல்ல முடியாவிட்டாலும், லானிஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்த டிரியன் ரொம்பவே நல்லவர்தான். 

ஆனால், டிரியனின் வருகை, புது ராஜா ஜோஃப்ரி பராத்தியனுக்கு அதிருப்தியளிக்கிறது. காரணம், டிரியன் லானிஸ்டருக்கும் ஜோஃப்ரி லானிஸ்டருக்கும் எப்போதுமே ஆகாது. அவர் செய்யும் தவறுகளுக்கெல்லாம் கன்னத்தில் அறைந்தே பாடம் புகட்டும் அளவுக்குத் தைரியம் கொண்டவர் டிரியன். தாய் மாமன் அல்லவா! தன் அப்பா டைவின் லானிஸ்டரிடம் தற்போது இருக்கும் ஆட்சி ஆபத்தைப் புரியவைத்து, `Hand of King' பதவியை நூதனமாகப் பேசிப் பெற்றுக்கொள்வார் டிரியன் லானிஸ்டர். மறுபக்கம், `என் அப்பா குற்றவாளி. என் அம்மாவும் அண்ணன்களுமே குற்றவாளிதான்’ என்று சான்ஸா ஸ்டார்க்கையே சொல்லவைக்கும் அளவுக்கு ஜோஃப்ரி பராத்தியன் அவரைப் பயமுறுத்தி வைத்திருப்பார். வெஸ்டிரோஸில் இப்படியாகக் கதை நகர்ந்துகொண்டிருக்கும். 

எஸ்ஸோஸில் கல் டிராகோ இறந்த பிறகு, ஒட்டுமொத்த டோத்ராக்கி மக்களும் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். வெவ்வேறு ஊர்களுக்குப் புறப்பட்டுவிட்டதால், படை பாதியாகிவிடும். இருப்பினும், அவரின் மனைவி டினேரியஸ் டார்கேரியன் சாவை வென்று, மூன்று டிராகன்களுக்கும் உயிர் கொடுத்ததையடுத்து, சிறிது டோத்ராக்கி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பார். அதுமட்டுமன்றி, தனது பயணத்தின்போது ஏற்படும் வறட்சியால் மக்கள் இறப்பார்கள், குதிரைகள் சிலவும் இறந்துபோகும். இந்தச் சூழலில், டினேரியஸ் டார்கேரியனுக்குத் தைரியம் சொல்லும் ஒரே ஆள், ஜோரா மோர்மன்ட். இவர் மோர்மன்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர். தவிர, டினேரியஸ் டார்கேரியனுக்குப் பாதுகாவலராகவும் பணியாற்றி வருபவர். `இப்படியேபோனால், படை படுத்துவிடும், டிராகன்களையும் இழக்க நேரிடும்’ எனச் சொல்வார் ஜோரா மோர்மன்ட்டின். இதனால், டோத்ராக்கி இனத்தின் படைத் தளபதியைப் பக்கத்து ஊர்களுக்குப் பயணித்து உதவி நாடிச் செல்லும்படி உத்தரவிடுவார் டினேரியஸ்.

இப்போது, அரியணையில் அமர ஆசைப்படும் மற்றொரு குடும்பத்தின் அறிமுகம். பெயர், ஸ்டானிஸ் பராத்தியன். இறந்த மன்னர் ராபர்ட் பராத்தியனின் உடன் பிறந்த சகோதரர். ராபர்ட் பராத்தியனுக்காகப் பல போரில் சண்டையிட்டுள்ளார். இருப்பினும், ஆட்சிமேல் இருக்கும் ஆசையில் இருவருக்கும் எப்போதுமே சண்டைதான். தான் அரசனான பிறகு முழுக்கவே ஸ்டானிஸ் பராத்தியனை நிராகரிக்கத் தொடங்குவார் ராபர்ட் பராத்தியன். அதை வெளிப்படுத்தும் விதமாக, தன் இளைய சகோதரர் ரென்லி பராத்தியனுக்குக் குறிப்பிட்ட இடத்தை ஆட்சிசெய்யக் கொடுப்பார். ராபர்ட் பராத்தியனின் இந்த முடிவில் அதிருப்தியடையும் ஸ்டானிஸ் பராத்தியன், அவரிடமிருந்து விலகி வந்துவிடுவார். இதெல்லாம் முன்பு நடந்தவை. நிகழ்காலத்தில் ராபர்ட் பராத்தியனின் இறப்புச் செய்தி கேட்டு, `இதுதான் அரியணையில் அமர சரியான தருணம்’ எனத் தனது படைபலத்தைப் போருக்குத் தயார்படுத்தத் தொடங்குவார் ஸ்டானிஸ் பராத்தியன். இவர் மனைவியின் பெயர், செலைஸ் ஃப்ளோரன்ட், மகள் ஷிரின் பராத்தியன், பாதுகாவலர் டேவோஸ். இவர்களைத் தவிர மெலிஸாண்ட்ரே என்பவர், ஸ்டானிஸ் பராத்தியனுக்கு ஆலோசகராகப் பணியாற்றி வருவார். இவர் ப்ளாக் மேஜிக் செய்யக்கூடியவர். 

இதற்கு நடுவில், ராபார்ட் பராத்தியனுக்கு ஜெண்ட்ரி என்ற மகன் இருக்கிறார் என்பது ராஜ்ஜியத்துக்குத் தெரியவருகிறது. இவர் ராபர்ட் பராத்தியனின் `பாஸ்டர்ட்’ (வேறொரு மனைவிக்குப் பிறந்தவர்). ராபர்ட் பராத்தியனுக்குப் பிறந்த அத்தனை குழந்தைகளையும் கொல்லச் சொல்லி உத்தரவிடுவார், செர்சி லானிஸ்டர். அதில், சில கைக்குழந்தைகள்கூட பலியாவார்கள். ஜெண்ட்ரி அவரைக் கொல்ல வருவது தெரிந்து கிங்ஸ் லேண்டிங்கிலிருந்து ஆர்யா ஸ்டார்க்குடன் தப்பிவிடுகிறார். ஆம்! தந்தை நெட் ஸ்டார்க், தனது கண் முன் கொல்லப்பட்டதையடுத்து, தலைமறைவாக கிங்ஸ் லேண்டிங்ல் உலாவிக்கொண்டிருந்த ஆர்யாவும் அங்கிருந்து ஜெண்ட்ரியோடு தப்பிவிடுகிறார். சில படையோடு அனைவரும் நைட்ஸ் வாட்ச்சுக்குப் பயணப்படுகிறார்கள். ஆனால், நைட்ஸ் வாட்ச் ராணுவத்தைச் சுற்றி எதிர்பாராத சில தடங்கல் ஏற்படும். அதை விசாரிப்பதற்காக `ஒயில்டுலிங்ஸ்’ இருப்பிடத்தை நோக்கிப் பயணப்படுவார்கள். இவர்களோடு ஜான் ஸ்நோவும் பயணப்பட்டுக்கொண்டிருப்பார்.  

`Hand of King’ பதவியேற்ற பிறகு, டிரியன் லானிஸ்டர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் ஆதிக்கத்தைத் தொடங்குவார். தன் பாதுகாவலரான ப்ரான்னை படைத் தளபதியாகவும் பதவிவேற்கச் செய்வார். டிரியனின் சில நடவடிக்கைகள், செர்சி லானிஸ்டருக்குப் பிடிக்காது. மறுபக்கம், ராப் ஸ்டார்க்குக்கு உதவியாக இருக்கும் தியான் க்ரேஜாய், `ஐயர்ன் ஐலாண்ட்’ எனும் இடத்தை நோக்கிப் பயணப்படுவார். அதுதான், க்ரேஜாய் குடும்பத்தின் பிறப்பிடம். அவருடைய குடும்பமும் படையும் அங்குதான் வசித்து வரும். அங்கு சென்றபின்தான், தன் தந்தையான பேலான் க்ரேஜாய்க்கும் அரியணையில் அமர ஆசையிருப்பது இவருக்குத் தெரியவரும். தனது பிறப்பிடத்தையே விட்டுவிட்டுப் பல வருடங்களுக்கு முன்பே ஸ்டார்க் குடும்பத்துக்குப் பாதுகாவலராகப் பணியாற்றி வருவார் தியோன் க்ரேஜாய். இதனால், இவரின் தந்தையே இவரை மதிக்கவே மாட்டார். அங்கிருப்பவர்களே இவரை இழிவுப்படுத்தத் தொடங்குவார்கள். இவரின் அக்கா யாரா க்ரேஜாய் மட்டும்தான், இவருக்குத் கொஞ்சம் துணையிருப்பார். 

கணவர் கொல்லப்பட்டதையடுத்து கேட்லின் ஸ்டார்க், ரென்லி பராத்தியனின் உதவியை நாடிச் செல்வார். கிங்ஸ் லேண்டிங்கில் சில பிரச்னைகளை எதிர்கொள்ளும் சான்ஸா ஸ்டார்க்கைக் காப்பாற்ற, டிரியன் லானிஸ்டர் சின்னச் சின்ன முடிவுகளை எடுப்பார். ஸ்டானிஸ் பராத்தியன் மெள்ள மெள்ளத் தனது படையைப் பலப்படுத்திக்கொண்டிருப்பார். ஆர்யா ஸ்டார்க்குக்கு, ஜேக்கன் என்பவரின் அறிமுகம் கிடைக்கும். இருவரும் மாறி மாறி சில உதவிகளைச் செய்துகொள்வார்கள். எஸ்ஸோஸில் உதவி தேடிச்சென்ற டோத்ராக்கி படைத் தளபதி இறந்துவிட, கார்த் என்ற ஊருக்கு உதவி கேட்டுச் செல்வார் டினேரியஸ் டார்கேரியன். இதைப் பயன்படுத்தி டினேரியஸை சில சிக்கல்களில் மாட்டவைக்க அங்கிருக்கும் ஆளுமைகள் முயற்சி செய்துகொண்டிருக்கும். இப்படி, சாதாரணமாக நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே ஒரு சில டிவிஸ்ட்டுகள்! 

மெலிஸாண்ட்ரேவின் ப்ளாக் மேஜிக்கைப் பயன்படுத்தச் சொல்லி ரென்லி பராத்தியனைக் கொன்றுவிடுகிறார் ஸ்டானிஸ் பராத்தியன். இதை அவரின் பாதுகாவலரான ப்ரையின் டார்த்தான் செய்தார் என்று அவரைக் கொல்ல வருவார்கள், ரென்லி பராத்தியனின் விசுவாசிகள். அவரை அங்கிருந்து தப்பிக்க வைக்கும் கேட்லின் ஸ்டார்க், தனக்கு உதவும்படி உத்தரவிடுவார். நைட்ஸ் வாட்ச் ராணுவம் ஒயில்டுலிங்ஸ் இனத்தை அழிப்பதற்காக அவர்களது இருப்பிடம் நோக்கிப் பயணப்படும்போது, இக்ரிட் என்ற ஒயில்டுலிங் ஜான் ஸ்நோவிடம் மாட்டிக்கொள்வார். பெண் என்பதால் அவரை விடுவிக்கக் கோரும் முயற்சியில் நைட்ஸ் வாட்ச்சுக்குள்ளே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடும். இதனால், அங்கிருந்து இக்ரிட்டை அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிடுவார் ஜான் ஸ்நோ. இதற்கு நடுவே ப்ரான் ஸ்டார்க் கனவில் சில விஷயங்களைப் பார்ப்பார். அவையெல்லாம் வருங்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்கள். இதுபோன்று எதிர்காலத்தைப் பார்ப்பவர்களை `Three Eyed Raven’ என்று அழைப்பார்கள். இது நடப்பது வின்டர்ஃபெல்லில்.

மறுபக்கம், தியோன் க்ரேஜாய்யை எல்லோரும் இழிவுப்படுத்துவதால், தன் பலத்தைக் காட்ட ராப் ஸ்டார்க்குக்கு எதிராகச் செயல்படத் தொடங்குவார். இதனால், வின்டர்ஃபெல்லுக்குச் சென்று அதைக் கைப்பற்ற நினைப்பார் தியோன் க்ரேஜாய். ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த கேட்லின் ஸ்டார்க், ராப் ஸ்டார்க் படை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். சான்ஸா ஸ்டார்க் கிங்க்ஸ் லாண்டிங்கிலேயே அடைபட்டுக்கிடப்பார். ஆர்யா ஸ்டார்க் கிங்க்ஸ் லேண்டிங்கிலிருந்து தப்பித்து நைட்ஸ் வாட்ச் பயணப்பட்டுக்கொண்டிருப்பார். ஜான் ஸ்நோ நைட்ஸ் வாட்ச்சில் இருப்பார். இப்படி வின்டர்ஃபெல்லில் யாருமே இல்லாத நிலையில் ஸ்டார்க் குடும்பத்திலிருந்து ப்ரான் ஸ்டார்க் மட்டும் அங்கிருப்பார். ஒரு விபத்து ஏற்பட்டு, இவரால் நடக்க முடியாத நிலை. தியோன் க்ரேஜாய் செய்த துரோகத்தால் தன் பாதுகாவலர் ஓஷோவின் உதவியோடு, ப்ரான் ஸ்டார்க் ஹோடோரோடு வின்டர்ஃபெல்லிலிருந்து தப்பிவிடுவார். இப்படியாக நடந்துகொண்டிருக்க, திடீரென எதிர்பாராத டிவிஸ்ட் ஒன்று நடக்கிறது. ஏழு ராஜ்ஜியங்களையும் ஆட்சி செய்யும் கனவோடு மாபெரும் படையைத் திரட்டிக்கொண்டு கடல் வழியே கிங்ஸ் லேண்டிங்கை அடைகிறார் ஸ்டானிஸ் பராத்தியன். 

போரைச் சமாளிக்கும் அளவுக்கு ஜோஃப்ரி பராத்தியனுக்குத் திறமை உள்ளதா... அங்கிருக்கும் மக்கள் மத்தியில் வெறுப்பை மட்டுமே சம்பாதித்து வைத்திருக்கும் ஜோஃப்ரி பராத்தியன், இந்தப் போரை எப்படிச் சமாளிக்கப்போகிறார்... கண்டிப்பாக இவரால் சமாளிக்க முடியாது. ஆகையால், ஸ்டானிஸ் பராத்தியனுடன் போரில் சண்டையிடுவதற்காக `ஹேண்ட் ஆஃப் கிங்கான’ டிரியன் லானிஸ்டர் போர்க்களத்தில் இறங்குகிறார். கிங்க்ஸ் லேண்டிங் அடைந்த ஸ்டானிஸ் பராத்தியனின் போர் முரசுகள் முழங்குகின்றன. அந்தச் சமயத்தில் டிரியன் லானிஸ்டர் அனுப்பிவைக்கும் ஒரே ஒரு கப்பல் மட்டும் கிங்ஸ் லேண்டிங்கிலிருந்து ஸ்டானிஸ் பாராத்தியன் கப்பல் படையை நோக்கி நகர்கிறது. அது என்ன, உள்ளே யார் இருக்கிறார்கள், டிரியன், ஸ்டானிஸை எப்படிச் சமாளிக்கப்போகிறார்? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்! 

வின்டர் வந்துகொண்டிருக்கிறது...

அடுத்த கட்டுரைக்கு