Published:Updated:

`டொரன்டினோவின் ஒன்பதாவது படம், `கான்ஜுரிங்' சீரிஸ், `தி லயன் கிங்' - எதிர்பார்ப்பில் இருக்கும் ஹாலிவுட் படங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`டொரன்டினோவின் ஒன்பதாவது படம், `கான்ஜுரிங்' சீரிஸ், `தி லயன் கிங்' - எதிர்பார்ப்பில் இருக்கும் ஹாலிவுட் படங்கள்!
`டொரன்டினோவின் ஒன்பதாவது படம், `கான்ஜுரிங்' சீரிஸ், `தி லயன் கிங்' - எதிர்பார்ப்பில் இருக்கும் ஹாலிவுட் படங்கள்!

பெரும் எதிர்பார்ப்புகளுடன், இந்த ஆண்டு வெளியாக இருக்கும் சில ஹாலிவுட் படங்கள் இவை.

குவெண்டின் டொரன்டினோ, மனோஜ் நைட் ஷ்யாமளன், மார்ட்டின் ஸ்கார்செஸ், ஆங் லீ படைப்புகள்... என இந்த ஆண்டு தொடக்கம் முதலேயே சினிமா ரசிகர்கள் ஹாலிவுட்டை உற்று நோக்கிக்கொண்டிருக்கின்றனர். தவிர, 'டோராவின் பயணங்கள்', 'தி லயன் கிங்', 'அலாவுதீன்', 'டாய் ஸ்டோரி', 'தி ஆடம்ஸ் ஃபேமிலி' என 90'ஸ் கிட்ஸுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தைத் தட்டி எழுப்பும் வண்ணம் ஆங்கிலப் படங்களின் போஸ்டர்கள் வரிசைகட்டி வந்துகொண்டிருக்கின்றன.

இந்த ஆண்டு ஹாலிவுட்டுக்கு க்ளாசிக்கான ஆண்டு என்றுதான் சொல்லவேண்டும். மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸின் 'அவெஞ்சர்ஸ்' தொடர் முற்றுப்பெற, ஒரு சில வெற்றிகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த DC யூனிவர்ஸுக்கு விடிவெள்ளியாய் 'ஷசாம்' படம் வெளியாக... என ஃபேன்டஸி உலகிலும் பரபரபுக்குப் பஞ்சமில்லை. அந்த வரிசையில், பெரும் எதிர்பார்ப்புகளுடன், இந்த ஆண்டு வெளியாக இருக்கும் சில ஹாலிவுட் படங்கள் இவை.

தி கான்ஜுரிங் தொடர்

ஹாலிவுட்டின் நவீன சினிமா யுகத்தில் ஹாரர் ஜானருக்கு ஒரு புது இலக்கணம் கொடுத்த படம், 'தி கான்ஜுரிங்'. இதன் பேட்டர்னைப் பின்பற்றி பிறகு ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், உலகின் பல மொழிகளில் ஹாரர் திரைப்படங்கள் வெளிவந்தன. நம்மூர் 'அவள்' உட்பட! முதலில் 'கான்ஜுரிங்'காக மட்டும் இருந்த இந்தத் தொடர், பெரும் வணிக வெற்றியினால் அதில் வரும் சில கதாபாத்திரங்களின் பின் கதைகளைச் சொல்லும் கிளைத் தொடர்களையும் உருவாக்க வழிவகுத்தது.

அதில், இரண்டு கிளைத் தொடர்களில் தலா ஒரு படம் என இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாகவிருக்கின்றன. முதலில் இந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகும் 'தி கர்ஸ் ஆஃப் தி வீப்பிங் வுமன்'. இது 'கான்ஜுரிங்' யூனிவெர்ஸின் புதிய கிளைத் தொடராக உருவாகிறது. இந்தத் தொடருக்கே உண்டான அடையாளமாக இருக்கும் 'அனபெல்' பொம்மையும், பாதிரியார் பெரேரெஸ் மட்டும்தான் இப்போதைக்கு இந்தப் படத்தில் வரும் இணைப்பு புள்ளிகள் என சில ஸ்பாயிலர்கள் வெளியாகியுள்ளன.

படம் வெளியான பின்னர்தான் இந்தக் கதை எப்படி 'கான்ஜுரிங்' தொடருடன் இணைகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும் என்பதால், வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

'தி கான்ஜுரிங்' உலகின் மேலும் ஒரு மரண வெயிட்டிங் படம் என்றால் அது, 'ஆனபெல் கம்ஸ் ஹோம்'. இது 'ஆனபெல்' கிளைத் தொடரின் மூன்றாவது படமாகவும், ஒட்டுமொத்த கான்ஜுரிங் உலகின் ஏழாவது படமாகவும் இருக்கும். 'கான்ஜுரிங் 1'ல் அந்தக் கதையின் முதன்மைப் பாத்திரங்களான எட் வாரன் மற்றும் லோரைன் வாரன் எப்படி ஆனபெல் பொம்மையைத் தங்களின் அமானுஷ்யப் பொருள்கள் அடங்கிய அருங்காட்சியகத்துக்குக் கொண்டுவருகின்றனர் என்பதைச் சொல்லி, அந்தப் படத்தில் முடிவுறாத கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக இந்தப் படம் இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வருகிறது இது.

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்

தன் சினிமா வாழ்வில் மொத்தம் பத்து படங்கள் மட்டுமே எடுக்கப்போவதாக சபதமெடுத்துள்ள டைரக்டர்களுக்கெல்லாம் டைரக்டர் குவெண்டின் டொரன்டினோவின் ஒன்பதாவது படம் இது. உலக சினிமா பார்க்கும் இனிசியல் ஸ்டேஜ் நபர்கள் ஃப்ளோவில் ஒரு சில டைரக்டர்கள் பெயர்கள் சொன்னால், அதில் முதல் பெயர் குவெண்டின்தான். அவரின் அடுத்த படம் என்றால் சும்மாவா இருப்பார்கள்.

இவர் முன்னர் இயக்கிய, 'ஜாங்கோ அன்செய்ண்டு' படத்தின் வில்லன் டிகாப்ரியோ, 'இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்' படத்தின் நாயகன் பிராட் பிட் இருவரும்தான் 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்தின் ஹீரோக்கள். படத்தில், டிவி நடிகர் ரிக் டல்டனாக டிகாப்ரியோவும், அவரது ஸ்டன்ட் டூப் கிளிஃப் பூத்தாக பிராட் பிட்டும் நடிக்கின்றார்கள். மார்கட் ராபி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

1960-களில் மேன்ஷன் ஃபேமிலி என்னும் கல்ட் குழு, பிரபல இயக்குநர் ரோமன் பொலன்ஸ்கியின் மனைவி ஷாரோன் டேட் மற்றும் சில பிரபலங்களைக் கொடூரமாகக் கொல்கின்றனர். இது போன்று பல கிளைக் கதைகளுடன் ஹாலிவுட்டின் பொற்காலமான ரெட்ரோ காலத்துக்கு ஒரு சமர்ப்பணமாக இந்தப் படம் இருக்கும். இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகை உமா துர்மனின் மகள் மாயா ஹாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தி லயன் கிங்

ஏற்கெனவே பார்த்து பார்த்துப் பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும், இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் 'தி லயன் கிங்' படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னால், 1994-ல் வெளியான 'தி லயன் கிங்' படத்தின் ரீமேக் இது.

வெள்ளி விழா கொண்டாட ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் கூடுதல் சிறப்பு, ரீமேக் செய்யப் பயன்படும் தொழில்நுட்பம். 'ஃபோட்டோ ரியலிஸ்டிக் கம்ப்யூட்டர் அனிமேட்டட்' வடிவத்தில் இந்தப் படம் மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது, சாதாரண கார்ட்டூன் போன்ற 2டி அனிமேஷனில் எடுக்கப்பட்ட அந்தப் பழைய படத்தை அப்படியே உண்மைத் தன்மையான க்ராஃபிஸோடு உருவாக்கி, கதை, திரைக்கதையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அதே படத்தை எடுத்துள்ளனர்.

மற்ற இளவரசி, இளவரசர் கதைகள் போன்றோ, அரேபிய இரவுக் கதைகள் போன்றோ அல்லாமல், டிஸ்னியின் முதல் சொந்தக் கதை என்பதால், இந்தப் படத்துக்கு எப்போதுமே அந்த நிறுவனம் ஒரு தனி இடத்தை வைத்துள்ளது. இத்தனை பெருமைகள், புதுமைகளோடு, 90'ஸ் கால நினைவுகளும் சேர்ந்தே வருவதால், ஜூலை மாதம் வெளியாகும் இந்த 'தி லயன் கிங்' 2019-ஆம் ஆண்டின் ஒரு தவிர்க்க முடியாத படமாக இருக்கும்.

தி ஐரிஷ்மேன்

'ஷட்டர் ஐலேண்ட்', 'ஹூகோ', 'தி உல்ஃப் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட்' போன்ற க்ளாசிக் படங்களுக்கு மட்டுமே பெயர்போன மார்ட்டின் ஸ்கார்செஸ்ஸின் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் படம், 'தி ஐரிஷ்மேன்'.

ராபர்ட் டி நீரோ, அல் பசினோ என இருபெரும் நடிப்பு அரக்கர்களை முன்னணிப் பாத்திரங்களில் வைத்து இந்த பயோ-க்ரைம்-பிக் ஜானர் படத்தை இயக்கியுள்ளார், மார்ட்டின். பயோ-க்ரைம் என்றால், பெரும் குற்றத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் செய்த குற்றத்தைக் கதைக்களமாக வைத்துக்கொண்டு அவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வது.

ஜிம்மி ஹாஃபா எனும் 1970-களின் அமெரிக்காவில் பிரபலமாக அறியப்பட்ட தொழிற் சங்கத் தலைவரை, குற்றப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த ஃப்ராங் ஷீரான் எனும் வேறொரு தொழிற் சங்க உறுப்பினர் படுகொலை செய்த கதையைத்தான் 'தி ஐரிஷ்மேன்' சொல்லப்போகிறது. இதில், ஜிம்மியாக அல் பசினோவும், ஃப்ராங்காக ராபர்ட் டி நீரோவும் நடிக்கின்றனர்.

ஒரு கதையைச் சொல்லும்போது அதன் காலக்கட்டம், அந்த மண் சார்ந்த வாழ்வியல் என எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய திரைக்கதையை சொல்வதில் வல்லவர், ஸ்கார்செஸ். அதனாலேயே அவர் படத்துக்கான எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டின் இறுதியில் இப்படம் திரைக்கு வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு