Published:Updated:

``எதுவும் நிரந்தரமில்லை ஜான்!'' பழைய சந்திப்புகள், புதிய பிரச்னைகள்! #GameOfThronesS08E01 ஒரு பார்வை

``எதுவும் நிரந்தரமில்லை ஜான்!'' பழைய சந்திப்புகள், புதிய பிரச்னைகள்! #GameOfThronesS08E01 ஒரு பார்வை

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர் காட்சிகள், ஆக்‌ஷன் இல்லாவிட்டாலும் எதிர்பார்த்த ரீ-யூனியன்கள் நிகழ்ந்துவிட்டன. எதிர்பார்க்காத சந்திப்புகள்கூட அரங்கேறிவிட்டன. இனி வரப்போகும் எபிசோடுகள் பேசப்போகும் புதிய பிரச்னைகளுக்கு ஒரு நல்ல முன்னுரையாக அமைந்திருக்கிறது இந்த எபிசோடு!

``எதுவும் நிரந்தரமில்லை ஜான்!'' பழைய சந்திப்புகள், புதிய பிரச்னைகள்! #GameOfThronesS08E01 ஒரு பார்வை

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர் காட்சிகள், ஆக்‌ஷன் இல்லாவிட்டாலும் எதிர்பார்த்த ரீ-யூனியன்கள் நிகழ்ந்துவிட்டன. எதிர்பார்க்காத சந்திப்புகள்கூட அரங்கேறிவிட்டன. இனி வரப்போகும் எபிசோடுகள் பேசப்போகும் புதிய பிரச்னைகளுக்கு ஒரு நல்ல முன்னுரையாக அமைந்திருக்கிறது இந்த எபிசோடு!

Published:Updated:
``எதுவும் நிரந்தரமில்லை ஜான்!'' பழைய சந்திப்புகள், புதிய பிரச்னைகள்! #GameOfThronesS08E01 ஒரு பார்வை

இன்றைய எபிசோடை பார்க்காதவர்கள் தவிர்க்கவும். 'ஸ்பாய்லர்ஸ்' வார்னிங்!

நிகழ்வுகள்... முன்பு, யாரோ ஒருவன் எங்கேயோ தொடங்கி வைத்த செயல். அப்படி யாரோ எடுத்த ஒரு முடிவு பல்வேறு தொடர் நிகழ்வுகளுக்கு வித்திடும். ஒன்றாக இருந்த குடும்பங்கள், நண்பர்கள், காதலர்கள் பிரிக்கப்பட்டு உலகின் மற்றொரு எல்லை வரைகூட தூக்கி எறியப்படலாம். பின்பு நிகழும் சம்பவங்கள், அவர்களை என்றேனும் ஒருநாள் மீண்டும் சந்திக்க வைக்கலாம். அந்தச் சந்திப்புகள், அப்போது அவர்கள் பகிரும் ஆத்மார்த்த அரவணைப்புகள் கடுங்குளிரில் கிடைக்கும் கதகதப்பைப் போன்றவை. #WinterIsHere #GameOfThrones

நிறைய கதாபாத்திரங்கள், நிறைய குறிக்கோள்கள்... இதுதான் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கதைக்களம். ஒவ்வொருவரும் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்பட, இந்தச் செயல்பாடுகள் மற்றவர்களை எங்கேனும் ஓரிடத்தில் நிச்சயம் பாதித்திருக்கும். சில சமயங்களில் நல்ல விதமாக... சில சமயங்களில் கடும் பிரச்னையாக! அப்படிக் குற்றம் இழைத்தவர்கள் தங்களால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் சந்திக்க நேரிடலாம். பிரிந்தவர்களும் பிரிக்கப்பட்டவர்களுமே சந்திக்கையில், சந்திக்கவே கூடாது என்று நினைத்தவர்களும் சந்தித்துதானே ஆகவேண்டும்? ஆனால், இந்தச் சந்திப்புகள் நிச்சயம் கதகதப்பான அரவணைப்பாக இருக்காது. கோபம், குற்றவுணர்ச்சி, அழுகை அத்தனையும் கலந்த ஒன்றாக இருக்கும்.

இன்று வெளியாகி இருக்கும் `கேம் ஆஃப் த்ரோன்ஸ் - சீஸன் 8 எபிசோடு 1' - `தி டிராகன் அண்டு தி வுல்ஃப்' இந்த இரண்டையும் கொண்டதாகவே இருந்தது. ஸ்டார்க் குடும்பக் குழந்தைகளுக்கும், வுல்ஃபுக்குமான பிணைப்பு முதல் சீசனிலிருந்தே தொடர்ந்துகொண்டிருக்கிறது. அனைத்து வுல்ஃப்களும், இந்த சீசனில் முதல் முறையாக மீண்டும் சந்திக்கிறார்கள். அதில் ஒரு வுல்ஃப், டிராகன் என்பது கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்கிறது.

நடக்க வேண்டும் என்று நினைத்த ரீ-யூனியன்களுக்கு மத்தியில் மீண்டும் சந்திக்க விரும்பாத கதாபாத்திரங்களும் சந்தித்துக் கொண்டன. ஜான் ஸ்னோ - ஆர்யா ஸ்டார்க், ஜான் ஸ்னோ - ப்ரான் ஸ்டார்க், கென்ட்ரி - ஆர்யா ஸ்டார்க், யாரா க்ரேஜாய் - தியான் க்ரேஜாய், சாம் - ஜான் ஸ்னோ ரீ-யூனியன்கள் நெகிழ்ச்சி என்றால், டிரியன் லேனிஸ்டர் - சான்ஸா ஸ்டார்க், கலீஸி - சாம், ஆர்யா ஸ்டார்க் - ஹவுண்ட், ஜெய்மி லானிஸ்டர் - ப்ரான் ஸ்டார்க் ஆகியோரின் சந்திப்புகள் கடினமான ஒன்றாகவே இருந்தன. காரணம் இதில் ஒருவரால் மற்றொருவர் உடலளவில் அல்லது மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இதுதானே வாழ்க்கை?

சிறுவயதில் ஆர்யா துருதுருவென விளையாடிக்கொண்டு இருந்த அதே வீதியில் தற்போது அன்சலிடுகளுடன் கூடிய பெரும் படை ஒன்று வருகிறது. அந்தப் பனிக்காடுகளை பிளந்துகொண்டு வருகிறது ஒரு ஜனத்திரள். ஒரு சிறுவன் அதை ஆர்வமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறான். இந்த எபிசோடின் ஆரம்பக் காட்சிகள் முழுக்கவே அச்சிறுவன்தான். எங்கிருந்தோ ஓடி வந்து, பிறகு அப்படியே ஆர்யாவின் பக்கம் நிற்கிறான். பின்பு அந்த இடமும் அவனுக்குத் தேவையான சுவாரஸ்யத்தைத் தர மறுக்கிறது. அங்கிருந்து ஒரு மரத்தில் ஏறுகிறான். ஸ்டார்க் குடும்பக் கட்டடங்களைவிடவும் உயரமான அந்த மரத்தின் கிளையிலிருந்து அவன் கலீஸி கொண்டு வந்திருக்கும் அந்தப் படையை ரசிக்கிறான். அந்தச் சிறுவனுக்கு வழிவிட்டு ஆர்யாவும் அதை ரசிக்கிறாள்.

ஸ்டார்க் குடும்பத்தில் இருக்கும் ஆர்யா, ப்ரான் போன்றவர்களின் அதீத பக்குவம் ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. ஆம், ஜான் தன் சொந்த ஊரான வின்டர்ஃபெல்லுக்குப் பெரும் படையை அழைத்து வருகிறான். ஒயிட்வாக்கர்ஸின் படைகளை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்று மக்களிடம் தெரிவிக்கிறான். ஆனால், அவர்களுக்கு அவன் மேல் கோபம். காரணம், அரசனாகச் சென்றவன், தற்போது வேறு ஒருத்தியை தன் ராணி என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு அவர்களின் படை மற்றும் இரண்டு டிராகன்களின் உதவியைக் கேட்டுப் பெற்றிருக்கிறான். மக்கள்தாம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவனின் சகோதரி சான்ஸாவும் அதை ஏற்கவில்லை. டார்கேரியர்களின் வாரிசான கலீஸியை (டினேரியஸ் டார்கேரியன்) எப்படி அவளால் அரசியாக ஏற்றுக்கொள்ள முடியும்? அவர்கள் தன் தந்தைக்கு எதிரானவர்கள் ஆயிற்றே? ``ஒன்று சொல் ஜான். நீ படைபலத்துக்காகவும் நம் பாதுகாப்புக்காகவும் அவளிடம் சரணடைந்தாயா, இல்லை அவள் மேல் இருக்கும் காதலாலா?" என்று சான்ஸா கேட்கும் கேள்வி ஜானை மட்டுமல்ல, நம்மையுமே சிந்திக்க வைக்கிறது.

ஜானும் ஆர்யாவும் மீண்டும் சந்தித்துக் கொள்கிறார்கள். தன் தந்தை நெட் ஸ்டார்க் அதிக நேரம் செலவிடும் அந்தப் பழைய கடவுள் மரத்தின் நிழலில் இருவரும் தங்களின் வாள்களைக் காட்டி சிரித்துக்கொள்கின்றனர். நிறைய மனிதர்களை வெவ்வேறு காரணங்களுக்காக ஆர்யா தன் `நீடில்' வாளால் கொன்றிருக்கிறாள். ஆனால், ஜான் கேட்கையில், ``தன் வாளுக்குப் பெரிதாக வேலை இருக்கவில்லை" என்று மறுக்கிறாள். தன் வேறு முகத்தை, தனது ஸ்டார்க் குடும்பம் பார்த்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாள் ஆர்யா. ஹவுண்டு ஆர்யாவை மீண்டும் பார்க்கையில் ஒன்று சொல்கிறார். ``நீ ஓர் இதயமற்றவள். அதுதான் உன்னை இதுவரை பிழைக்க வைத்திருக்கிறது!" சத்திய வார்த்தைகள். அதுதான் ஆர்யா!

கென்ட்ரியும் ஆர்யாவும் சந்தித்துக் கொள்கிறார்கள். அதில் எதிர்பார்த்த அன்னியோன்னியம் இல்லாவிட்டாலும் அவர்கள் சந்திக்கையில் ஸ்பார்க்குகள் ஆங்காங்கே தெரித்தன. காட்சியிலும், அவர்களின் அகத்திலும்! ஜான் ஸ்னோவுக்கான புதிரை இந்த எபிசோடில் உடைத்தது போல், கென்ட்ரிக்கான புதிர்களும், விரைவில் அவிழும் என நம்பலாம்.

கிங்ஸ் லேண்டிங்கில் கைதியாக இருக்கும் தன் அக்கா யாரா க்ரேஜாயை விடுவிக்கிறான் தியான். அவர்கள் தங்கள் ஊரான அயர்ன் தீவை மீண்டும் கைப்பற்றக் கிளம்புகிறார்கள். ஆனால், தியானுக்கு வேறு ஒன்றில்தான் விருப்பம். ஸ்டார்க் குடும்பத்திற்காகக் களம் காண வேண்டும். அவர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இதுதான் சரியெனக் கருதுகிறான்.

ஒயிட்வாக்கர்ஸின் படை பாதுகாப்புச் சுவரை உடைத்துவிட்டு உள்ளே வந்துவிட்டதாக அரசி செர்ஸிக்குத் தகவல் வருகிறது. அவள் கேட்ட கோல்டன் ஆர்மியுடன் வந்த யூரான் க்ரேஜாய் அவளுக்கு எரிச்சல் மூட்டும் ஒருவனாகவே இருக்கிறான். தன்னை மதிக்காமல் சென்றுவிட்ட இரண்டு சகோதரர்களையும் கொல்ல கட்டளை பிறப்பிக்கிறாள், செர்ஸி. அவள் என்றுமே மாறமாட்டாள். அதற்கான தேவையும் அவளுக்கு இல்லை. எல்லாமே நிலையற்ற கேம் ஆஃப் த்ரோன்ஸில் உலகில், செர்ஸி மட்டும் அப்படியே இருக்கிறாள். தான் நினைத்தது ஈடேற எதையும் செய்யும் செர்ஸி மீண்டும் சிலவற்றை செய்கிறாள்.

கலீஸியை தன் உயிரைக் காப்பாற்றிய சாமிடம் அறிமுகப்படுத்துகிறார் சர் ஜோரா மொர்மான்ட். சாமின் குடும்பப் பின்புலம் பற்றித் தெரிந்தவுடன் கலீஸி முன்பு நடந்தவற்றைச் சொல்கிறாள்.

ஆக்‌ஷன் காட்சிகள் இல்லையே என்ற குறை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு ரொமான்ஸ் காட்சியின் நீட்சியாக ஜானும் டேனியும் டிராகன்களில் பறந்து செய்யும் சாகசங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். யாரையும் டேனியிடம் நெருங்கவிடாத டிராகன்கள் ஜானை மட்டும் ஒன்றும் செய்வதில்லை. அதை ஜான் தற்போது உணர்ந்துகொள்கிறான்.

இதற்கிடையே, டெனேரியஸை தங்கள் கலீஸியாக (ராணியாக) வின்டர்ஃபெல்லின் மக்கள் ஏற்றுக்கொள்ள ஒரு ஐடியா கொடுக்கிறார் சர் டாவோஸ். டிரியனிடமும் வேரிஸிடமும் ஜானும் டேனியும் திருமணம் செய்துகொண்டால் இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம் என்கிறார். ஏற்கெனவே காதலில் இருக்கும் இருவரையும் சம்மதிக்க வைப்பது ஒன்றும் கடினம் அல்லவே? ஆனால் அங்குச் சொல்லப்படும் ஒரு வசனம் எல்லோருக்குள்ளும் கேள்வியை விதைக்கிறது. "Nothing Lasts Forever" என்கிறது லார்டு வேரிஸின் குரல். இதனிடையே ஒயிட்வாக்கர்ஸ் தலைவனான `நைட் கிங்' ஆம்பர் இனத் தலைமை சிறுவனைக் கொன்று ஒரு செய்தி அனுப்புகிறான். அவன் எப்போதும் அனுப்பும் செய்திதான்; எப்போதும் விடுக்கும் எச்சரிக்கைதான். 'மரணம்!'.

இவ்வளவு கலவரங்கள் நிகழ்கையில் ப்ரான் ஸ்டார்க் எப்போதும்போல அமைதியாக உட்கார்ந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான். சாமிடம், ``ஜான் ஸ்நோ தன் பிறப்பு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று கூறுகிறான். அவன் ஆலோசனைப்படி சாம் ஜானிடம் ஒரு மாபெரும் ரகசியத்தை உடைக்கிறான். கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்ப்பவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும், ஜானுக்கு தற்போதுதான் தெரிகிறது அந்தப் புதிர். அரியணையில் அமர எல்லாத் தகுதியும் உடைய வாரிசு அவன்தான்! இதை ஜான் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறான்? அவன் ஆதரவு தெரிவித்திருக்கும் காதலி கலீஸி டினேரியஸ் டார்கேரியனைவிட அந்த அரியணையில் அமரும் உரிமை தனக்கே அதிகம் உண்டு என்பதை அவளிடம் எப்படிக் கூறப் போகிறான்? முந்தைய காட்சியில் லார்டு வேரிஸ் சொன்ன வார்த்தைகள் ஜானின் காதில் விழுந்திருக்காது. ஆனால், அதை அவன் புரிந்துகொள்ள வேண்டும். "இங்கு எதுவும் நிரந்தரமில்லை ஜான்!"

கடைசிக் காட்சியை வழக்கம்போல ஒரு கிளிஃப் ஹேங்கராக முடித்து இருக்கிறார்கள். ``ஒரு பழைய நண்பனுக்காகக் காத்திருக்கிறேன்" என்று கால்களை இழந்த ப்ரான் வாசலிலேயே அமர்ந்திருக்கிறான். அந்தப் பழையவனும் வருகிறான். இனி என்ன நடக்கும்? அடுத்த வாரம் பார்க்கலாம்! 

லார்டு அம்பர் என்னும் சிறுவன் தன் படையை அழைத்து வரச் செல்கிறான். இல்லை, அவ்வாறு சொல்லிவிட்டுத்தான் WInterfellல்;இருந்து வெளியேறுகிறான். வொய்ல்டுலிங்ஸ் அவனைக் கண்டுகொள்கிறார்கள். அந்தச் சிறுவன் இப்போது வேறாக இருக்கிறான். நைட் கிங்கின் எச்சரிக்கையாக இருக்கலாம் என்கிறார்கள் வொய்ல்டுலிங்ஸ். ஆனால், அந்த இடம் தீப்பற்றி எரிய, நமக்கு ஒரு ஹவுஸின் கொடிதான் நினைவுக்கு வருகிறது. இன்னும் எத்தனை புதிர்களை ஒளித்து வைத்திருக்கிறார்களோ!

இந்த எபிசோடு முழுக்கவே வசனங்கள் அனைத்தும் இணைத்துச் சிலிர்க்க வைக்கின்றன. சான்சா டிரியனிடம் சொல்லும், ``I used to think You are the cleverest man alive " என்பதில்தான் அத்தனை அர்த்தம். ஆம், கலீசியை சான்சாவால் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லாம் அறிந்த ப்ரான் யாருக்காகவோ காத்திருக்கிறான், ``பழைய நண்பர் ஒருவரைப் பார்க்கக் காத்திருக்கிறேன் " என்கிறான். அப்போது உள்நுழைகிறார் அந்த நபர். ஆர்யாவும் ஜானும் சந்தித்துக்கொள்ளும் காட்சியின் வசனங்களும் அப்படியே. "நான் நம் குடும்பத்தை டிஃபெண்டு செய்கிறேன்" என சான்சாவின் பக்கம் நிற்பதை நியாயப்படுத்துகிறாள் ஆர்யா. "நானும் அந்தக் குடும்பம்தான்" என ஜான் சொன்னதும், "அதை மறந்துவிடாதே!" என்கிறாள் ஆர்யா. ஜானும் சாமும் பேசிக்கொள்ளும் வசனங்களில் வரும் "அது துரோகமல்லவா?", என்பதற்கு "ஆனால், அதுதான் உண்மை" என்ற வசனமும் அப்படியே. 

நெட் ஸ்டார்க் ஜானிடம் இறுதியாகச் சொன்ன வார்த்தைகளைக் கூட மீண்டும் நினைவூட்டி இருந்தார்கள். "அடுத்த முறை நான் உன்னைப் பார்க்கும் பொழுது உனது தாய் குறித்துப் பேசுவோம்" என்பார் நெட் ஸ்டார்க். இந்த எபிசோடில் ஜான் ஸ்னோவிடம், சாம் ஜான் ஸ்னோவின் புதிர் குறித்து விளக்க, அங்கு நெட்டின் சிலை அனைத்தையும் கவனித்துக்கொண்டு இருப்பதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆர்யாவின் `நீடில்' எனும் குட்டி கத்தி, நெட் ஸ்டார்க் என நாஸ்டால்ஜியாவின் குவியலாகவே இருந்தது இந்த எபிசோடு. செர்ஸி, ராபர்ட், ஜெய்மி, தியான் குறித்து சொல்லும் ஒப்பீடும் அப்படியான ஒன்றுதான்.

சில எபிசோடுகளுக்குப் பின்னர் மீண்டும் லயான்னா மொர்மான்ட். இந்தச் சிறுமி வரும் எல்லாக் காட்சியுமே கூஸ்பம்ப்ஸ்தான். கலீஸியின் நுழைவு தருணத்தில் இவள் காட்டும் கோபம், ஐந்தாவது சீசனில் இவள் சொல்லும் படை எண்ணிக்கையை நினைவுபடுத்துகிறது. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர் காட்சிகள், ஆக்‌ஷன் இல்லாவிட்டாலும் எதிர்பார்த்த ரீ-யூனியன்கள் நிகழ்ந்துவிட்டன. எதிர்பார்க்காத சந்திப்புகள்கூட அரங்கேறிவிட்டன. இனி வரப்போகும் எபிசோடுகள் பேசப்போகும் புதிய பிரச்னைகளுக்கு ஒரு நல்ல முன்னுரையாக அமைந்திருக்கிறது இந்த எபிசோடு! #ForTheThrone

அடுத்த எபிசோடுக்கான டிரெய்லர் இதோ...