Published:Updated:

போருக்கு முந்தைய ஓர் இரவு... மனிதர்களும் ஆழ்மன ஆசைகளும்... #GameOfThronesS08E02 ஒரு பார்வை

போருக்கு முந்தைய ஓர் இரவு... மனிதர்களும் ஆழ்மன ஆசைகளும்... #GameOfThronesS08E02 ஒரு பார்வை

சென்ற எபிசோடு ரீ-யூனியன்களால் நிறைந்தது என்றால், இது ஒரு மாபெரும் போருக்கு முந்தைய இரவில் நடக்கும் காட்சிகளை அடுக்குகிறது. Game Of Thrones சீஸன் 8 எபிசோடு 2: A Knight of the Seven Kingdoms ஒரு பார்வை.

போருக்கு முந்தைய ஓர் இரவு... மனிதர்களும் ஆழ்மன ஆசைகளும்... #GameOfThronesS08E02 ஒரு பார்வை

சென்ற எபிசோடு ரீ-யூனியன்களால் நிறைந்தது என்றால், இது ஒரு மாபெரும் போருக்கு முந்தைய இரவில் நடக்கும் காட்சிகளை அடுக்குகிறது. Game Of Thrones சீஸன் 8 எபிசோடு 2: A Knight of the Seven Kingdoms ஒரு பார்வை.

Published:Updated:
போருக்கு முந்தைய ஓர் இரவு... மனிதர்களும் ஆழ்மன ஆசைகளும்... #GameOfThronesS08E02 ஒரு பார்வை

நிறைவேறாத ஆசைகளுக்கு அதிக கனம் உண்டு. சிறியதோ பெரியதோ அதைத் தூக்கிச் சுமப்பது வலீரியன் வாளைப் போரில் பயன்படுத்துவதைவிடக் கடினமான ஒன்றுதான். நாளை சூரிய உதயத்தின்போது மரணம் வாசலில் நிற்கப்போகிறது. இறந்தவர்களின் படைக்கு ஆட்களைச் சேர்க்க மரணத்தின் தூதுவன் குதிரையில் வரக்கூடும். அப்படியான தருணத்தில் ஒன்று சேர்ந்துவிட்ட அல்லது சேர்ந்ததாய் நினைத்துக்கொள்ளும் மனிதக் கூட்டங்களின் மனங்களில் எவ்வகையான எண்ணங்கள் எழும்? பிரமாண்ட அரங்கு அமைப்புகள், நாலாபுறமும் படைகள் சூழும் போர் காட்சிகள், டிராகன்கள் கக்கும் நரக நெருப்புகள்... இவற்றையெல்லாம் தாண்டி கதாபாத்திரங்களின் மனிதில் எழும் எண்ணங்கள், விருப்பு வெறுப்புகள், அவர்கள் அதை அடிப்படையாகக்கொண்டு எடுக்கும் முடிவுகள்... இதுதான் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'ன் அடிநாதம். ஒரு மாபெரும் போருக்கு முன் நிகழும் சீஸன் 8-ன் இந்த 2-வது எபிசோடு அதை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டி இருக்கிறது. இந்த எபிசோடில் வரும் 'Jenny of Oldstones' பாடலைப்பற்றி இறுதியில் பார்ப்போம். #GameOfThrones

சென்ற எபிசோடு ரீ-யூனியன்களால் நிறைந்தது என்றால், இது ஒரு மாபெரும் போருக்கு முந்தைய இரவில் நடக்கும் காட்சிகளை அடுக்குகிறது. அழையா விருந்தாளியாக, ஓர் எதிரியாகக் கருதப்படும் ஜெய்மி லானிஸ்டர் Winterfell-லுக்கு வருகிறான். தற்போது எதிரிகளான ஒயிட்வாக்கர்ஸ் படையிடமிருந்து காக்க வந்திருக்கும் டெனேரியஸ் டார்கேரியனின் தந்தையைக் கொன்றவன் ஜெய்மி. முக்காலமும் உணர்ந்து, அதே சமயம் நடக்கவே இயலாமல் இருக்கும் ப்ரான்டன் ஸ்டார்க்கின் இன்றைய நிலைக்குக் காரணமானவனும்கூட. இப்படி அவன் மேல் குற்றங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இப்போது அவன் பழைய ஜெய்மி இல்லை. அதே சமயம் தன் குற்றங்களையும் அவன் மறுக்கவில்லை. போருக்கு உதவியாக, சக மனிதர்களோடு இணைந்து போராட வந்திருப்பதாகவே அவன் கூறுகிறான். "இது விஸ்வாசத்துக்கும் அப்பாற்பட்டது. இது பிழைத்திருப்பதற்காகப் போராட வேண்டிய தருணம்!" என்கிறான்.

ஜெய்மி என்ற கதாபாத்திரத்தின் பரிணாம வளர்ச்சி, அதன் எண்ண ஓட்டங்கள் நமக்கு ஆச்சர்யமூட்டுபவை. ஜெய்மிக்காக டிரியன் பேசும்போது அதை கலீஸியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ப்ரயனின் சொற்கள்தான் சான்ஸாவையே மாற்றுகிறது. அப்படி ஒரு கொடூரனாக இருந்த ஜெய்மி திருந்திவிட்டான் என்பதற்காகவே அவனுக்காக நாம் ஏன் வருத்தப்படுகிறோம்? விடை தெரியாது. அவன் மீண்டும் செர்ஸிக்காக, அவன் காதலிக்காக, அவனது எல்லாமுமாய் இருந்தவளுக்காக மீண்டும் அணி மாறமாட்டான் என்னும் உத்தரவாதத்தை யார்தான் தருவது? இப்படியொரு கேள்வி நமக்குள் எழவே எழாது. அதுதான் ஜெய்மி பாத்திரப் படைப்பின் பலம்.

ஜெய்மி லேனிஸ்டருடன் இந்த எபிசோடின் ரீயூனியன் நட்சத்திரங்கள் தியான் க்ரேஜாய், கோஸ்ட், கில்லி, டார்மண்டு. சில சீஸன்களாகவே தலைகாட்டாத கோஸ்ட் எனும் Direwolf-யை சம்பிரதாயத்துக்காக சாம் டர்லி அருகே நிறுத்தியிருக்கிறார்கள். சாம் டர்லியின் கில்லியும் அப்படியானதொரு காட்சியில்தான் வருகிறார். குழந்தைகளையும் சிறார்களையும் 'க்ரிப்ட்' (Crypt) என்னும் பாதுகாப்புக் கலனில் வைக்க முடிவு செய்கிறார்கள்.

அயர்ன் த்ரோன் டெனேரியஸுக்கு என்றானதும், Winterfell மட்டுமாவது தன் வசமாக்கிக்கொள்ளப் போராடுகிறாள் சான்சா. யார் யாரை ஆட்கொண்டார்கள் என்னும் டெனேரியஸின் காதல் சாம்ராஜ்யக் கோட்டை இன்னும் கொஞ்சம் நீடித்திருக்கலாம்.

ஆர்யாவுக்கும் கென்ட்ரிக்கும் இடையே நெருக்கம் கூடுகிறது. ஒயிட்வாக்கர்ஸ் படையை நேரில் பார்த்தவன் கெண்ட்ரி என்பதால் அவனிடம் விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறாள் ஆர்யா. பின் மீண்டும் பின்னிரவில் சந்திக்கும் இருவரையும் காமம் ஆட்கொள்கிறது. இன்றைய இரவுதான் கடைசி எனும் தறுவாயில் அவர்களின் இந்த முடிவு ஒன்றும் ஆச்சர்யத்தைத் தரவில்லை.

வடக்கே புதிதாக வந்திருக்கும் ஜெய்மி பலரையும் சந்தித்து உரையாடுகிறான். லேடி ப்ரயின் ஆஃப் டார்த்துக்கும் அவனுக்கும் இடையேயான அந்த மெல்லிய காதல் உணர்வுகள் இப்போதும் துளிர்விடுவதை உணர முடிகிறது. ஒரு பெண்ணாக இருப்பதாலேயே தன்னுடைய நீண்டநாள் கனவான Knight-ஆக மாறவே முடியவில்லை. இப்போது நாளை மாபெரும் போர் என்ற நிலையில் அந்த நிறைவேறாத ஆசை ஒரு வடுவாக ப்ரயினின் மனதிலேயே தங்கிவிடும். அதை உணர்ந்த ஜெய்மி அவளை நைட்டாக (Knight) பதவியேற்க வைக்கிறான். அவன் ஒரு Knight-ஆக இருப்பதால் யாரை வேண்டுமானாலும் பணியில் அமர்த்த அவனுக்கு அதிகாரம் உண்டு. இது நிகழும் முன் ப்ரயினை ஒருதலையாகக் காதலிக்கும் குறும்பன் டார்மண்டு தான் மட்டும் அரசனாக இருந்தால் அவளை எப்போதே கிங்ஸ்கார்டில் இணைத்திருப்பேன் என்கிறான். மரணத்தின் வருகை, பாலினப் பேதங்களையும் களைந்துவிடுகிறது.

எல்லாப் பெண்களின் தேவையும் டார்மண்டுபோல் ஒரு காதலன்தான். 'அந்த பிக் லேடி வந்திருக்கிறாளா?' என்பதில் ஆரம்பித்து டார்மண்டுக்கு ப்ரயினின் மீது கொள்ளைப் பிரியம். 'எல்லோரும் ஒன்றாக இறக்கலாமே' என்றுகூடக் காதலாய் அவளைப் பார்ப்பான். இவனது காதல் இறுதிவரையில்கூட ப்ரயினுக்குப் புரியாமல் போகலாம். ப்ரயினின் காதல் வேறானது. அவளுக்கு Knight ஆவதைவிடப் பெரிய காதல் ஒன்றுமில்லை. அதேபோல், ஆர்யாவின் காதல் வேறாக இருந்தது.

ஜெய்மிக்கும் டிரியனுக்கும் இடையே நிகழும் செர்ஸியைப் பற்றிய உரையாடலில் தொனிக்கும் டிரியனின் நகைச்சுவையும் குரூரமும் அபாரம். தானும் தன் சகோதரன் ஜெய்மியும் தங்கள் குடும்பத்தின் பரம எதிரிகளான ஸ்டார்க் குடும்பத்துக்காகப் போரிடுவதைப் பார்த்து கோபம் அடைவதற்கேனும், தங்களின் தந்தை இருந்திருக்கலாம் என நக்கல் அடிப்பான் டிரியன். கொன்றவனே, பிணத்தின் உயிர்த்தெழுதலைப் பார்க்க ஆசைப்படும் தருணங்கள் பலருக்கும் வந்திருக்கும். ஆனால், அது சிலருக்குக்கூட வாய்த்திருக்க இயற்கை அனுமதிப்பதில்லை. செர்ஸியின் கைகளில் இறப்பதற்கு, நான் ஒயிட்வாக்கர்ஸிடம் இறப்பதே மேல் என்பான் டிரியன். அந்த மகிழ்ச்சியைக்கூட செர்ஸிக்கு கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். பிறகு, அந்த நிலையில் இருந்து சட்டென தன் எண்ணத்தை மாற்றுகிறார். தான் இறந்துவிட்டால், ஒயிட்வாக்கர்ஸ் ஆர்மியில் இணைந்து கிங்ஸ் லேண்டிங் சென்று செர்ஸியைத் தன் கையாலேயே கொல்ல வேண்டும் எனச் சொல்லிவிட்டு சிரிப்பான் டிரியன்.

டிரியன் முதல் தருணத்தில் இருந்தே இப்படியான மனிதராகத்தான் இருக்கிறான். எப்படி இறக்க வேண்டும் என எப்போதும் டிரியனுக்கு ஒரு கனவு உண்டு. அதைக்கூட தன் அக்காள் செர்ஸிக்காகத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார். தாயைக் கொன்றவன் என்னும் பழியோடு, தந்தையைக் கொன்ற டிரியன் தற்போது சகோதரியின் உயிர் வரைக்கும் சென்றுவிட்டான். ஆனால், நம் பார்வையில் டிரியன் என்றுமே நல்லவராகவே தெரிகிறான். ஷே, டைவின், செர்ஸி என டிரியனுக்கு எல்லோருமே தீங்கிழைத்திருக்கிறார்கள். ஜெய்மி சொல்வதுபோல், செர்ஸி நல்ல விஷயங்களைக்கூட பொய்யாகப் பரப்புபவள். டிரியன் எப்படியும் உயிர்பிழைத்து வேண்டுமென நினைக்கும் ஒரு ஜீவன். அதே சமயம், அனைத்துத் தவறுகளையும் செய்திருந்தாலும், அதில் தனக்கான ஒரு நியாயத்தை எப்போதும் வைத்திருப்பவன் ஜெய்மி. இங்கே அதிகாரம்தான் எல்லாம் என நினைக்கும் டைவினும், செர்ஸியும் அதே அதிகாரத்தின் கோரப் பற்களால், துரோகத்தால் வீழ்த்தப்படுகிறார்கள். "A lannister Always pays his debt" என்பது GoTன் கிளாசிக் வசனம். ஆனால், லேனிஸ்டர்களுக்கென பிரத்தியேக குணம் தொடர் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

வாலிபன் ஒருவன் போருக்குச் செல்ல மறுப்பது, சிறுமி ஒருத்தி போருக்கு ஆர்வமாக ஆயத்தமாவது என ஆண்டாண்டுக் காலமாகப் பார்த்த க்ளீஷேக்களும் இந்த எபிசோடில் வந்தன. ஆனால், அந்தச் சிறுமியின் முகம் சர் டாவோஸ்க்கும் நமக்கும் வேறொருத்தியை நினைவுபடுத்தியதுதான் GoT ஸ்டைல்.

'War Room' திட்டமிடலாகக் காட்டப்படும் காட்சிகளில் பெரிய சுவாரஸ்யம் ஏதுமில்லை. ப்ரயனுக்கு Left flank ஒதுக்கப்படுகிறது. பிரானைப் பகடைக்காயாகப் பயன்படுத்தலாம் எனப் பிரானே ஆலோசனை தருகிறான். தன் வாழ்வின் தேடல் எதை நோக்கியது என்பது புரியாமல் இருக்கும் தியான் கிரேஜாய் பிரானுக்குப் பாதுகாப்பாய் இருக்க முன்வருகிறான்.

ஜென்னியின் பாடல்:

டார்மண்டின் சொற்பொழிவைக் கேட்பதற்குப் பதில், நாமும் குடிக்கலாம் என முடிவெடுக்கிறார் சர் டாவோஸ். அந்த அளவுக்குப் பேசிக்கொண்டே இருக்கிறார் டார்மண்டு. எபிசோடின் இறுதியில் யாரேனும் பாடுங்கள் எனப் பேச்சு நீட்டிக்கப்படுகிறது. அந்த இரவைக் கழித்தாக வேண்டும். எல்லோருக்கும் அந்த இரவைக் கழிக்க ஒரு காரணம் வேண்டும். ஜான் ஸ்நோவுக்கு தன் ரகசியம் உடைதலில், ஆர்யாவுக்குத் தன் பெண்மை உணரப்படுவதில், ப்ரயனுக்கு நைட் ஆவதில், என எல்லோருக்கும் ஒரு காரணம். இறுதியாக போட்ரிக் ஜென்னியின் பாடலைப் பாடுகிறான். Inside the Episode-ல் ஷோவின் கிரியேட்டிங் ஹெட் இது பற்றிக் கூறுகையில், புத்தகத்தில் ஜார்ஜ் மார்ட்டின் எழுதிய சில வரிகளை இதில் சேர்த்திருக்கிறோம் என்றார்.

High in the halls of the kings who are gone
Jenny would dance with her ghosts.
The ones she had lost and the ones she had found
And the ones who had loved her the most.
The ones who’d been gone for so very long
She couldn’t remember their names
They spun her around on the damp cold stone
Spun away all her sorrow and pain
And she never wanted to leave
Never wanted to leave

பாடலில் வரும் ஜென்னிக்கான புத்தக பின்கதை, மீண்டும் டார்கேரியன் வம்சத்தை நோக்கி செல்கிறது. 'Jenny of Oldstones'-ம் இளவரசர் டன்கன் டார்கேரியனும் காதலிக்கிறார்கள். ஜென்னிக்காக அரியணையை இழக்கிறான் டன்கன். டன்கனுக்கான அரியணைதான் அவனது இளைய சகோதரரான ஏரிஸுக்கு வருகிறது. பாழ்பட்ட ஒரு அரண்மனையின் பெயர்தான் சம்மர்ஹால். ஸ்டார்ம்லாண்ட்ஸில் இருக்கும் சம்மர்ஹால் பெரும் தீக்கு இரையாகிறது. அதில் டன்கன் டார்கேரியனும் அவன் தந்தை ஏகான் V டார்கேரியனும் அதில் கொல்லப்படுகிறார்கள். அந்தச் சமயத்தில்தான் அங்கு ரேகார் டார்கேரியன் பிறக்கிறான்.

டெனேரியஸின் இரு அண்ணன்களும் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்டார்கள். முதல் சீஸனில் விசீரஸும், முன் கதைகளில் ரேகாரும் (ஜான் ஸ்நோவின் தந்தை) கொடூரமாகக் கொலைசெய்யப்படுகிறார்கள். இந்த மூவரின் தந்தையான ஏரிஸ் டார்கேரியன் 'Mad King'-ஐத்தான் ஜெய்மி கொன்றிருக்கிறார்.

இந்த எபிசோடின் இறுதியில்தான் யார் என்னும் உண்மையை ஜான் ஸ்நோ டெனேரியஸிடம் தெரிவிக்கிறான். தன் அண்ணனின் மகனைக் காதலிக்கிறோம் என்பதைவிடத் தான் ஆண்டாண்டுக் காலமாய் ஏங்கிய அயர்ன் த்ரோன் என்ற அரியணைதான் டெனேரியஸ் கண்முன் விரிகிறது. காரணம், அயர்ன் த்ரோனுக்கான உண்மையான ஆண் வாரிசு தற்போது ஏகன் டார்கேரியன் தான் (ஜான் ஸ்நோ). ஜான் ஸ்நோ இப்போது தன் தாத்தாவான டன்கன்போல், தான் காதலித்த பெண்ணுக்காக அரியணையைவிட்டுத் தருவானா? இல்லை டன்கன் ஜென்னி இருவருக்கும், கிடைக்காத அந்த அரியணை, மீதமிருக்கும் இந்த இரு டார்கேரியன்களுக்கும் கிடைக்காமல் போய்விடுமா?

மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம் ஒன்று இருக்கிறது. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கதையில் நடக்கும் எதிர்பாராத மரணங்கள் நம்மை நடுங்கச் செய்பவை. நெட் ஸ்டார்க்கில் தொடங்கிக் கல் டிராகோ, ராப் ஸ்டார்க் எனப் பல பெயர்களைக் கொண்ட பட்டியலாக அது நீள்கிறது. இவற்றில் பல கதாபாத்திரங்கள் தங்களின் character arc முடிவதற்குள்ளாகவே இறந்திருக்கின்றனர். ஆனால், தற்போது Winterfell-ல் கூடியிருக்கும் கதாபாத்திரங்கள் பலவற்றின் arc-கள் எப்போதோ முடிந்துவிட்டன. லேடி ப்ரெயின் Knight-டாக இணைந்துவிட்டார். போரில் ஒரு படைக்குத் தலைமையேற்று செல்லப்போகிறார். சர் டாவோஸ் ஒரு நியாயமான மனிதன் அயர்ன்த்ரோனில் அமர வேண்டும் என்று எண்ணினார். அது ஜான் மூலமாக இப்போது நிறைவேறலாம். இந்த வகை கதாபாத்திரங்கள் புதிதாக செய்வதற்கு ஏதுமில்லை. நடக்கப்போகும் போரில் அவர்கள் இறந்தாலுமே 'எல்லாம் சாதித்த வாழ்க்கை'யை வாழ்ந்துவிட்டு இறந்தவர்களாகவே அவர்கள் கருதப்படுவார்கள். ஒருவேளை ஜார்ஜ் மார்ட்டினே தொடருக்கான திரைக்கதை முழுவதிலும் தலையிட்டிருந்தால் இத்தனை 'deadweight' கதாபாத்திரங்கள் இல்லாமல் இருந்திருக்குமோ?

எல்லாம் சரி Jenny of Oldstones, டார்கேரியன் பாடலை ஏன் போட்ரிக் என்னும் House of Payne குழுவைச் சேர்ந்தவன் பாடுகிறான்? எபிசோடின் இறுதியில் சாந்தமாய் வந்து காத்துக்கிடக்கும் நைட் கிங் போல், நாமும் அடுத்த திங்கள் வரை காத்திருப்போம்!

அடுத்த எபிசோடுக்கான டிரெய்லர் இதோ...