Published:Updated:

உலகமே எதிர்பார்த்த அந்த ஒரு நொடி... எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா `கேம் ஆஃப் த்ரோன்ஸ்'-ன் `கிரேட் வார்'?

கார்த்தி
ர.சீனிவாசன்

82 நிமிடங்கள் நீடித்த இருள் பொதிந்த இரவின் யுத்தம்... 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'-ன் 'எண்டு கேம்' எப்படி இருக்கிறது?

உலகமே எதிர்பார்த்த அந்த ஒரு நொடி... எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா `கேம் ஆஃப் த்ரோன்ஸ்'-ன் `கிரேட் வார்'?
உலகமே எதிர்பார்த்த அந்த ஒரு நொடி... எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா `கேம் ஆஃப் த்ரோன்ஸ்'-ன் `கிரேட் வார்'?

ஒரு குறுவாள். ப்ரான்டன் ஸ்டார்க்கை முக்காலமும் உணர்ந்த ஞானியாக மாற்றும் பாதையில் பயணிக்கச் செய்தது; ஐந்து அரசர்கள் பங்கெடுத்த யுத்தத்தைத் தொடங்கி வைத்தது; மாபெரும் சகுனியாகக் கருதப்பட்ட லிட்டில் ஃபிங்கரை வதம் செய்ய பயன்பட்டது; சொல்லப்போனால், கிட்டத்தட்ட இந்த அரியணைக்கான ஆட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்த பெருமையும் உடையது. அதன் வரலாற்றைப் பற்றி பெரிதாகத் தரவுகள் இல்லாவிட்டாலும் விலையுயர்ந்த வலீரியன் ஸ்டீலால் உருவாக்கப்பட்ட அது, ஒயிட்வாக்கர்களைக் கொல்லும் திறன் உடையது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.

முந்தைய கட்டுரைகள்: எபிசோடு 1 | எபிசோடு 2

கடந்த 7-வது சீஸனில் தன் சகோதரி ஆர்யாவை நீண்ட நாள்களுக்குப் பிறகு, சந்திக்கும் ப்ரான் தன்னைக் கொல்ல வந்தவன் எடுத்துவந்த குறுவாளை அவளுக்குப் பரிசாக கொடுக்கிறான். "இது என்னைவிட உனக்கே அதிகம் தேவைப்படும்!" என்கிறான். முக்காலமும் உணர்ந்தவன் சொல்வது பொய்த்துவிடுமா என்ன? சொல்லப்போனால் இப்போது அது ப்ரானுக்கும் உதவியிருக்கிறது. லிட்டில் ஃபிங்கர், ப்ரானைக் கொல்ல வந்த கொலைகாரன், ப்ரான், ஆர்யா எனப் பல கைகள் மாறிய அந்தக் குறுவாள் இறுதியில் தன் பணியைச் சரியாக முடித்திருக்கிறது. எங்கோ தொடங்கிய 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கதை, தற்போது நம் இதயத்தினுள் இடம்பிடித்ததைப்போல்... எங்கோ எவராலோ செதுக்கப்பட்ட ஒரு குறுவாள் ஒருவனின்/ஒன்றின் இதயத்தில் பாய்ந்திருக்கிறது. உலக ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நொடி, மரணத்தின் மரணம்... அவர்கள் முற்றிலும் எதிர்பாராத ஒருவரால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. வின்டர்ஃபெல் விழவில்லை. சாவை வென்று வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. அந்தக் குறுவாளைக் கொண்டு சரித்திரம் எழுதியவள் 'மரணத்தையே இன்று போய் நாளை வா!' என்று பலமுறை சொன்ன ஸ்டார்க் குடும்பத்தின் குறுவாள்!

"What do we say to the God of death?"

"Not today!"

ஆர்யா ஸ்டார்க்கின் பயணம் யாராலும் செய்துவிட முடியாத ஒன்று. சிறு வயதில் தன் தந்தையின் தலை வெட்டப்படுவதைப் பார்த்து கதறும் எந்த ஒரு குழந்தையும் பின் வரும் காலத்தில் ஆர்யா போன்ற ஒரு பெண்ணாக நிச்சயம் இருக்க முடியாதுதான். அவள் சந்தித்த பிரச்னைகள், தன் நீண்ட பயணத்தில் கண்ட இடர்ப்பாடுகள், எடுத்துக்கொண்ட கடினமான பயிற்சிகள், பார்வை இழந்தும், விடாமல் போராடிய நாள்கள் என அவளின் தனிக்கதை மட்டுமே ஒரு சகாப்தத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது. முன்பிருந்தே ஆர்யாவுக்கு இப்படியானதொரு முக்கியப் பணி இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள், குறியீடுகள் ஆங்காங்கே தரப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, மாயக்காரி மெல்லிசாண்ட்ரே முதன்முதலில் ஆர்யாவைச் சந்திக்கும் தருணம். அவள் கூறும் வசனம், "உனக்குள் இருள் மண்டிக் கிடக்கிறது. அந்த இருளில் சில கண்கள் என்னைப் பார்க்கின்றன. ப்ரௌன் நிற கண்கள், நீல நிற கண்கள், பச்சை நிற கண்கள்... எல்லாவற்றையும் நீ நிரந்தரமாக மூடப்போகிறாய்!" அப்போது இந்த வசனத்துக்கான அர்த்தம் நமக்குப் புரிய வாய்ப்பில்லைதான். ஆனால், இப்போது அதுதான் நிகழ்ந்திருக்கிறது. இந்த எபிசோடிலும் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். ஆர்யா ஸ்டார்க் முன்னின்று போரிடுகிறாள். நாம் சாவை எதிர்த்து தோற்றுவிட்டோம் என்கிற விரக்தியில் ஹௌண்டு போன்றவர்களே அயர்ச்சியாகிவிட, ஆர்யா மட்டும் போராடிக்கொண்டே இருக்கிறாள். தன் அடுத்த இரையைத் தேடிக்கொண்டே இருக்கிறாள். அவளின் பயணங்கள் அவளை வழிநடத்துகின்றன. ப்ரௌன் நிற கண்கள், நீல நிற கண்கள், பச்சை நிற கண்கள் பற்றி மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறாள்  மெல்லிசாண்ட்ரே. இந்த முறை நீல நிறக் கண்கள் நிரந்தரமாக மூடப்பட்டு இருக்கின்றன.

Oh for **** Sake , You took your time என இந்த எபிசோடின் ஆரம்பத்தில் சாம் டர்லியிடம் சொல்வான் எட். இந்தப் போருக்கான ஆயுத்தமும் நைட் கிங்கின் நீண்ட நெடுதூர பயணமும் அப்படியாகத்தான் இருந்தது. முதல் எபிசோடில் அம்பர் பாயின் கொலையிலாவது நைட் கிங்கின் துளி எங்கோ இருந்தது. இரண்டாவது எபிசோடு முழுக்கவே, போருக்கு முந்தைய இரவின் நிகழ்வுகள்தான். அதில் செர்ஸி , கிரேஜாய், கிங்ஸ் லேண்டிங் என எதற்கும் இடமில்லை. ஒருவழியாக இரண்டாம் எபிசோடின் இறுதியில் நைட் கிங் வின்டர்ஃபெல்லின் வாயிலில் நிற்பதோடு முடியும். ஜான் ஸ்நோவுக்கும் டினேரியஸுக்குமான கருத்து வேறுபாட்டில் ஆரம்பிக்கிறது வின்டர்ஃபெல்லின் முதல் வீழ்ச்சி. ஜானின் எண்ணம் முழுக்க நைட் கிங் மீதுதான் இருந்தது. அவன் 'Night King is Coming' என்றால், டினேரியஸோ 'Dead are already here' என்பாள். டொத்ராக்கிகளின் படை குறித்து அவள் கவலை கொண்டாள். அங்கே, டொத்ராக்கி குழு முழுக்க wights படையை நோக்கி ஓடுகிறது. இறந்த பிணங்களின் கூட்டத்தை, Army of dead-ஐ மட்டுமே அது அதிகரித்ததே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.

சீஸன் ஒன்றின் முதல் எபிசோடில் வரும் முதல் காட்சியிலிருந்து உருவான எதிர்பார்ப்பு இது. எல்லையில் காவல் காக்கச் சென்ற வீரர்களை ஒயிட்வாக்கர்ஸ் குழு ஒன்று கொன்றுவிடும். அப்போது இருந்தே இறந்துபோன உடல்களை அரைகுறையாய் உயிர்ப்பித்து போருக்கு அழைத்துவரும் ஒயிட்வாக்கர்ஸ்தான் நம் கதை மாந்தர்களின் எதிரி என்பது தெரிந்துவிடும். இறுதி யுத்தம் அவர்களோடுதான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த தருணத்தில் அதை மாபெரும் யுத்தமாக புரொமோஷன் கொடுத்து மூன்று எபிசோடுகளுக்கு முன்னமே முடித்துவிட்டிருக்கிறார்கள். சட்டென முடிந்த போரை யாரும் பெரிதாய் விரும்பவில்லை. போர் முடியவில்லை என்றாலும், தியான் கிரேஜாய் மடிந்ததும் 'தொடரும்' வரும்; ஜான் ஸ்நோ டிராகனிடமிருந்து தப்பிக்கும் தறுவாயில் 'தொடரும்' வரும் என எதிர்பார்த்த பல தருணங்களைக் கடந்து நைட் கிங்கை குறுவாளின் குறுவாளை வைத்தே முடித்திருக்கிறார்கள்.

முந்தைய கட்டுரைகள்: எபிசோடு 1 | எபிசோடு 2

10,000 ஆண்டுகளாய் அலைபவர்கள், இத்யாதி இத்யாதி எனக் கொடுத்துவந்த பில்ட் அப்புகளை எல்லாம் நைட்ஸ் வாட்ச்சின் Wall போல் ஒரு நொடியில் வீழ்த்தி இருக்கிறார்கள். சல்லடையாக உடைத்திருக்கிறார்கள். ஆனால், அதுதான் கேம் ஆஃப் த்ரோன்ஸ். நெட் ஸ்டார்க்கின் இறப்பு என்பது யாரும் எதிர்பார்க்காத ஒரு தருணம். அந்த தலை தரையில் உருண்டோடும் என முதல் சீஸனின் முதல் எபிசோடு பார்க்கும் யாராலும் யூகிக்க முடியாது. சர்வ வல்லமை பொருந்திய, பல்வேறு மந்திர சக்திகளால் பிண்ணி பிணைக்கப்பட்ட Wall, நைட் கிங்கின் டிராகனால், ஒரு நிமிடத்துக்குள்ளாக உருகி விழும். ஜொஃப்ரியின் இறப்பு என்பது எல்லோரும் யூகித்த ஒன்றுதான். ஆனால், ஜெஃப்ரியின் சகோதரனின் அந்தத் தற்கொலை முடிவு! எல்லாம் முடிந்து மடிந்த பின், எதற்கான ராஜா நான், யாருக்கான அரியணை இது என்னும் விரக்தியில் அவன் எடுக்கும் முடிவு ஒரு நொடியில் எடுக்கப்படுவதுதான். செர்ஸியை 'Shame Shame' என உடையின்றி அலைக்கழித்து, அவமானப்படுத்தி சித்ரவதை செய்யும் HIGH Sparrows-ன் முடிவுகூட அப்படிப்பட்ட ஒன்றுதான். என்ன, அதை அவர்கள் எடுக்கவில்லை. செர்ஸி எடுத்தாள். தன் எதிரிகளை ஒரு நொடியில் கொன்று குவித்தாள். கேம் ஆஃப் த்ரோன்ஸில் பல விஷயங்கள் இப்படிதான் நிகழ்ந்துள்ளன.  

82 நிமிடங்கள் நீண்ட இந்த எபிசோடில் போர், போர், போர் மட்டுமே. 11 வாரங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இரவு நேர ஷுட்டிங். அதுவும் ஒரு டிவி தொடருக்கு. கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கு மட்டுமல்ல மொத்த தொலைக்காட்சி வரலாற்றிலுமே, இது மிகப்பெரும் சாதனை!

பயத்தோடு போருக்குத் தயாராகும் சாம், நமக்கும் அந்தப் பதற்றத்தைக் கடத்துகிறான். டோத்ராக்கிகள் முன் நிற்க, இரண்டாவது அடுக்கில் அன்சலீடு போர் வீரர்கள், அதன் பிறகு கோட்டைக்குப் பாதுகாப்பாக விறகுகள் அடுக்கப்பட்ட குழி. நைட்கிங்கின் ஆர்மி உள்ளே வராமல் தடுக்க நெருப்பு மூட்ட வசதியாக... எனப் போருக்கான திட்டம் நன்றாகவே இருக்கிறது. பலம் சேர்க்கும் விதமாக ரெச் விட்ச்சான மெலிசாண்ட்ரே 'லார்டு ஆஃப் தி லைட்'டின் ஆசியுடன் உதவ வந்திருக்கிறாள். முன்பு இறந்துபோன ஜானை உயிர்ப்பித்தவள் இங்கேயும் பல முக்கியப்பணிகளைச் செய்கிறாள். தக்க தருணத்தில் வர வேண்டிய டிராகன்கள் எங்கோ சிக்கிக்கொள்ள இங்கே எல்லாமுமாய் இருக்கிறாள் மெலிசாண்ட்ரே. ஸ்டேனிஸ் பெராத்தியனுக்கு உதவ முடியாத மெலிசாண்ட்ரே இறுதியாக ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் உதவுகிறாள். இந்தச் சூனியக்காரி அவளுக்கான இறுதித் தருணங்களை அடைந்துவிட்டாள். பனிச்சூழுந்த அந்தக் காலைப் பொழுதில் தனக்கான முடிவை தேர்வு செய்துகொள்கிறாள். "நாளை காலை எனக்கான முடிவு தீர்மானிக்கப்பட்டுவிடும். என்னை நீங்கள் இப்போது கொல்லத்தேவையில்லை" என சர் தேவோஸிடம் சொல்வாள் மெலிசாண்ட்ரே. அதுதான் நிகழ்ந்திருக்கிறது.

லயன்னா மொர்மோன்ட். மொர்மோன்ட் வம்சத்தின் கடைசி வாரிசு. அந்தச் சிறுமிக்கு 10 வயது இருந்தால் பெரிது. போர்க்களம் வேண்டாம் என ஜோரா மொர்மோன்ட் அறிவுறுத்தும்போது அவர் மீதே கோபம் கொள்கிறாள். ஒட்டுமொத்த சிறுவர்கள் கூட்டமும், குழந்தைகளும், ராணியார் சான்சாவும், டிரியனும் க்ரிப்ப்டுக்குள் இருக்கும் போதும், மொர்மோன்ட் மட்டும் வாளேந்தி நிற்கிறாள்.

எல்லாம் முடிந்துவிட்டதென எல்லோரும் சோர்ந்து நிற்கிறார்கள். நைட் வாக்கர்ஸுடன் சண்டையிட்ட Wun Weg Wun Dar Wun என்னும் Wildling ஜெயன்ட், தற்போது ஒரு Wight. Winterfellன் அரணைத்தாண்டி அவன் உள்நுழைந்துவிட்டான். எல்லா பாதுகாப்பையும் துவம்சம் செய்துகொண்டிருக்கிறான். அவள் முதுகெலும்பு உடைக்கப்படும் தருணத்தில்கூட, அந்த ஜெயன்ட் எனும் எதிரியைக் கொல்ல முற்படுகிறாள். அதைச் செய்தும் முடிக்கிறாள். நைட்கிங்கின் டிராகனுக்கும், ஜான் ஸ்நோவுக்கும் நடந்த சண்டையைவிட, இது சுவாரஸ்யமானது, தீர்க்கமானது. அவள் எங்கும் ஓடி ஒளியவில்லை. எப்படியும் இறக்கப்போகிறோம் என அவளுக்குத் தெரியும். அதையும் கடந்து அவனுக்கு எதிராக நிற்கிறாள். அவளுக்காக நாம் கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கும் போதே, அவளது கண்கள் நீல நிறமாக மாறுகிறது. அதற்கான அர்த்தம்... நமக்குத் தெரிந்ததுதான். ஆயிரம் ஆச்சர்யங்களை தனக்குள்ளே புதைத்துவைத்து, நம் உணர்வுகளுடன் விளையாடுவது கேம் ஆஃப் த்ரோன்ஸ்-க்குப் புதிதா என்ன?

எண்ணற்ற ஃபேன் தியரிகள், எதிர்பார்ப்புகளைப் படித்தவர்களைப் பயங்கரமாக ட்ரோல் செய்திருக்கிறார்கள் ஷோ கிரியேட்டர்களான D&D. இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் பெரும்பாலான படைப்புகள், அப்படியே அதே கதையைக் கொண்டு எடுக்கப்பட்டவை கிடையாது. அங்கே திரைமொழிக்கு ஏற்றவாறு மாற்றங்கள் நிகழ்த்தப்படும். கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர்பாக இணையத்தில் உலாவரும் தியரிகள் பல புத்தக வாசிப்பாளர்களால் எழுதப்பட்டவை. டிவி தொடர் புத்தகக் கதையைவிட்டு விலகி தற்போது 3 சீஸன்கள் ஆகிவிட்டன. இனியும் எதிர்பார்த்தது நிகழவில்லை என்று நினைப்பது நம் தவறுதான். இனியும் இரண்டு நாவல்கள் வரவிருக்கும் நிலையில் நிச்சயம் அதன் முடிவு டிவி தொடர்போல இருக்க வாய்ப்பில்லைதான்.

இந்த எபிசோடின் நிஜ ஹீரோ இசையமைப்பாளர் Ramin Djawadiதான். 82 நிமிடங்கள் செல்லும் இந்த எபிசோடு முழுக்க 'ராஜா'ங்கம் நிகழ்த்தியிருக்கிறார். ஒட்டுமொத்த அடிமைக் கூட்டங்களையும் டினேரியஸ் விடுவிக்கும் தருணம், Light of the seven, Red wedding இறுதி இசை, நைட்வாக்கர்ஸ் முழுவதுமாக அவதரிக்கும் தருணம் என Ramin Djawadi கேம் ஆஃப் த்ரோன்ஸில் செய்த செயல் அளப்பரியது.

இந்த எபிசோடு முழுக்க அது வேறுமாதிரியாக இருந்தது. ஒவ்வொரு நொடியையும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் ஓர் இசை அது. தன்னைத் தானே தின்று விழுங்கி பெரிதாகும் ஏதோ கிருமிபோல, கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக்கொண்டெ இருக்கிறது. ஒரு கட்டத்தில் அது நம்மையும் விழுங்கத் தொடங்குகிறது. அதன் பின் அனைத்தும் மயான அமைதிதான். காட்சிகளின் நகர்வுகளுக்கு ஏற்ப அடக்கி வாசித்தும், பதற்றத்தைக் கூட்ட வேண்டிய இடத்தில் அதைச் செய்தும், நம் எலும்புக்கூட்டின் உள்ளே வரை அவர் பியானோவின் இசை நுழைகிறது. அதுவும் நைட் கிங்கும் ப்ரானும் நேருக்கு நேர் சந்திக்கையில், நைட் கிங் தன் ஆயுதத்தை எடுக்க முற்படுகையில் வரும் இசை எல்லாம் நம்மை எழுந்து நிற்க செய்யும் அளவுக்குப் படபடப்பை வரவைத்தது. 

தன் ஊழிக்காலத்தை வின்டர்ஃபெல்லில், அதாவது தான் துரோகம் புரிந்த வின்டர்ஃபெல்லில் செலுத்த விரும்பியிருப்பான் தியான் கிரேஜாய். அங்கே பிரானுக்கு பாதுகாவலனாய் இருக்க விழைகிறான். அப்போதும் ஏதுவொன்று அவனை உறுத்திக்கொண்டே இருக்கிறது. தான் செய்த தவறுகளுக்கான தீர்வாக அதுவரையிலும் அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மேட் மேக்ஸ் படத்தில் வரும் ஒருவன் 'Witness Me' எனச் சொல்லி தன் உயிரை தியாகம் செய்வதுபோல், தியான் கிரேஜாய்க்கு ஒரு தருணம் தேவைப்பட்டது. 'You are a Good man Theon' என ப்ரான் சொல்லும் போதுதான் தியானுக்கான சொர்க்கவாசல் திறக்கிறது. அம்புகளற்று, அடுத்து தான் என்ன செய்வது என திகைத்து நிற்கும் தருணத்தில் ப்ரான் இவ்வாறாக சொல்ல, நைட் கிங்கை நோக்கி ஓடுகிறான் தியான் கிரேஜாய். ஆர்யா அங்கு வருவதற்கான கால நேரத்தை நீட்டிக்கிறான். இன்னொரு வகையில். 'You have become a good man' தியான்.

கிரேட் வார் முடிந்துவிட்டது. அடுத்து இறுதி யுத்தம். அரியணையில் இருக்கும் கொடுங்கோல் ராணியை வீழ்த்தி ஜானும் டேனியும் அரியணை ஏற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. ஏற்கெனவே ப்ரௌன் கண்கள், நீலக் கண்கள் கொண்டவர்களைக் கொன்றுவிட்ட ஆர்யா ஸ்டார்க், தன் அடுத்த இலக்கான பச்சைக் கண்களை நோக்கி நகர்கிறாள். அதிர்ஷ்டவசமாக அந்த எதிரி ராணியின் கண்கள் பச்சை நிறத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. ஆனால், சுலபமாகத் தோற்றுப்போக அவள் ஒன்றும் முட்டாள் நைட் கிங் கிடையாது. அவள் Mad Queen. அவள் செர்ஸி லேனிஸ்டர்!

மேகியும் செர்ஸியும்

செர்ஸி தன் சிறுவயதில் ஒரு சூனியக்காரியிடம் சிக்குகிறாள். அவள் சூனியக்காரி சொன்ன கணக்கை முழுவதுமாக அறுவடை செய்துவிட்டாளா. ஐந்தாவது சீஸனின் முதல் எபிசோடில் இதற்கான காட்சிகள் வந்தாலும், புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு குறுப்பிட்ட குறிசொல்லுதலை காட்சிகளாக மாற்ற மறுத்துவிட்டது D&D. முதல் மூன்று குறிசொல்லுதல்களும் ஏறக்குறைய நிகழ்ந்துவிட்டன. செர்ஸிக்கு மூன்று குழந்தைகள்தான் என்கிறாள் குறிசொல்லும் Wood Witch. அப்போது இந்த கிரேஜாய் நினைத்துக்கொண்டு இருக்கும் கரு என்னவாகும். சரி, அதைவிடவும் முக்கியமான ஒன்று இருக்கிறது. அந்த நான்காவது குறி இதுதான். சற்றே கொடூர ஸ்பாய்லர்தான். ஸ்கிப் செய்து கொள்பவர்கள் செய்துகொள்ளலாம்.

முந்தைய கட்டுரைகள்: எபிசோடு 1 | எபிசோடு 2

And when your tears have drowned you, the valonqar shall wrap his hands about your pale white throat and choke the life from you. 

Valonqar என்றால் High Valyrian மொழியில் சகோதரர் என்றே அர்த்தம். புத்தகத்தின் கூற்றுப்படி கொல்ல இருப்பது லிட்டில் பிரதர் டிரியனா இல்லை இளைய சகோதரரும் கிங்ஸ் ஸ்லேயருமான ஜெய்மி லேனிஸ்டரா, செர்ஸியின் ஆசை எதுவாக இருக்கும். முதலில் டிவிக்கென எழுதுபவர்களுக்கு இந்த ஆசை இருக்குமா... புத்தகங்களை எழுதிய ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டினுக்கே அது தெரிய வாய்ப்பில்லைதான்!

கார்த்தி

ர.சீனிவாசன்

Creative Writer | Movie Observer | Science Enthusiast | Still Human