Published:Updated:

``அதைச் சொன்னா மனசு சங்கடப்படும்.. `வொண்டர் வுமன்' கேல் கடோட்டுக்கு ஹாப்பி பர்த்டே மட்டும் சொல்லிடுவோம்!" #HBDGalGadot

தார்மிக் லீ
``அதைச் சொன்னா மனசு சங்கடப்படும்.. `வொண்டர் வுமன்' கேல் கடோட்டுக்கு ஹாப்பி பர்த்டே மட்டும் சொல்லிடுவோம்!" #HBDGalGadot
``அதைச் சொன்னா மனசு சங்கடப்படும்.. `வொண்டர் வுமன்' கேல் கடோட்டுக்கு ஹாப்பி பர்த்டே மட்டும் சொல்லிடுவோம்!" #HBDGalGadot

கேல் கடோட்... உலகத்தின் வொண்டர் வுமனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம். 

வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு வாய்ப்புதான் வரும். அதைப் பயன்படுத்திக்கொண்டால் வாழ்க்கையே தனதாகிவிடும். அப்படித் தனக்கு வந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இளைஞர்களின் கனவுக்கன்னியானவர்தான், கேல் கடோட். உலகத்தின் வொண்டர்வுமனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம்! 

இஸ்ரேலில் பிறந்த இவர் அங்கேயே வளர்ந்து இன்ஜினீயரிங் படித்து முடித்தார். ஐந்து அடிக்கும்மேல் உயரமாக இருந்ததால், கூடைப்பந்தை விரும்பி விளையாடினார். கேல் கடோட்டின் 18 வயதில் இஸ்ரேல் அழகிப் போட்டியில் கலந்துகொண்ட இவர், அதில் வென்று, 2004-ன் `மிஸ்.இஸ்ரேல்' பட்டம் பெற்றார். பின் இஸ்ரேல் சார்பாக உலக அழகி போட்டியிலும் கலந்துகொண்டார். 15 நபர்களுக்குள் வந்த இவரால், உலக அழகி பட்டத்தை வெல்ல முடியவில்லை. நடுவர்கள் `பேரழகிக்கு ஏன் அழகிப் பட்டம்?' என நினைத்தார்களோ என்னவோ... 14 வருடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை உலக அழகிக்குப் போட்டியிடலாமே கடோட்! இது ரசிகனின் வேண்டுகோள். 

தன் 20 வயதில் இஸ்ரேல் மிலிட்டரியில் 2 வருடப் பயிற்சியில் சேர்ந்தார். இஸ்ரேல் விதிமுறைப்படி அந்நாட்டு குடிமகன் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 18 வயதைக் கடந்துவிட்டால் 2 வருடம் மிலிட்டரி பயிற்சி எடுக்கவேண்டும் என்பது சட்டம். அதன்படி, மிலிட்டரியில் சேர்ந்து 2 வருடங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டார், கேல் கடோட். `வொண்டர் வுமன்' படத்தில் எதிரிகளை அடித்த அடிக்கும், செய்த சாகசத்திற்கும் இங்கேதான் பயிற்சி எடுத்திருக்க வேண்டும். அந்தப் படத்தில் இடம்பெற்ற சில ஸ்டன்ட்டுகளை டூப் போடாமல் இவரே செய்தாராம். 

முதலாம் ஆண்டு கல்லூரிப் படிப்பு முடிந்த சமயத்தில் `குவாண்டம் ஆஃப் தி சோலேஸ்' படத்தில் பாண்ட் கேர்ளாக (Bond Girl) நடிப்பதற்குக் கேல் கடோட்டுக்கு அழைப்பு வந்துள்ளது. அந்தச் சமயத்தில் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. பின்னர், இஸ்ரேலில் சில நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. அந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இறுக்கப் பற்றிக்கொண்டார். ஆறு நடிகைகள் கலந்துகொண்ட அந்த ஆடிஷனில் எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு, அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேர்வானார். `வொண்டர் வுமன்' வெற்றி பெற்ற பிறகுதான், இவர் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படத்தில் நடித்தார் என்பதே பலருக்கும் தெரியவந்தது. தட் தங்கத்தைத் தகர டப்பான்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க மொமன்ட்! 

பிறகு, சின்னச் சின்ன கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வந்தார். 2016-ல் வெளியான `Batman v Superman: Dawn of justice' படத்தில் வொண்டர் வுமனாக நடித்திருந்தார். இவர் ராசியோ என்னவோ... அந்தப் படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை. மார்வெல்லின் ரசிகர்கள் படத்தையும், இவரையும் விமர்சித்துத் தள்ளினர். சில DC ரசிகர்கள் கேல் கடோட்டின் உருவத்தைக் கேலி செய்து பதிவிடத் தொடங்கினார்கள். பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது இது சார்ந்து கேட்ட கேள்விக்கும் `அமேசான் காட்டில் இருப்பவர்களின் உடலமைப்பு இப்படித்தான் இருக்கும்!' என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாராம். இதுதான் கேல் கடோட்! 

அதற்குப் பிறகு பேட்டி ஜென்கின்ஸ், 'வொண்டர் வுமன்' கதாபாத்திரத்தை மையமாக வைத்துப் படமெடுக்க ஒப்பந்தமாகியிருந்தார் கேல் கடோட். கதாபாத்திரத் தேர்வில் கேல் கடோட்டின் பெயரைப் பார்த்ததும் மிகுந்த அதிருப்திக்கு ஆளானாராம், ஜென்கின்ஸ். அதற்குப் பின் கேல் கடோட்டிடமே விலகும்படி சுற்றி வளைத்தெல்லாம் பேசியுள்ளார். இதை `ப்ளேபாய்' இதழில் அவர் கொடுத்த பேட்டியில் சொல்லியிருப்பார். இந்நேரம் வேறு நடிகர்களாக இருந்தால், அந்தப் படத்திலிருந்தே விலகியிருப்பார்கள். ஆனால் கேடட் செய்ததோ வேறு. முழுக்கவே அந்தக் கதாபாத்திரத்துக்காக தன்னை மாற்றிக்கொண்டார். குங்ஃபூவில் ஆரம்பித்து வாள் பயிற்சி, ஜியூ ஜிட்ஸு, கேப்போய்ரா போன்ற பல கலைகளைக் கற்றுக்கொண்டார். படப்பிடிப்பும் ஆரம்பித்தது.

இஸ்ரேல் இராணுவப் பயிற்சியின்போது கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் படப்பிடிப்புத் தளத்தில் இறக்கினார். இதைப் பார்த்ததும் இயக்குநர் பேட்டி ஜென்கின்ஸுக்குப் பெரும் வியப்பு. நடிப்பில் ஆரம்பித்து சண்டைக் காட்சிகள், ஸ்டன்ட் என அனைத்திலும் வெளுத்து வாங்கினார். நல்லபடியாக படப்பிடிப்பும் முடிந்தது. ஃபைனலாகப் படத்தைப் பார்க்கும்போது, இயக்குநர் சில காட்சிகளில் திருத்தம் செய்து மீண்டும் படம்பிடிக்க நினைத்தார். ரீஷூட் செய்வதற்காக இயக்குநர் ஜென்கின்ஸ், கேல் கடோட்டை அழைத்துள்ளார். அப்போது, கேல் கடோட் ஐந்து மாத கர்ப்பிணி. அதைக் காரணமாக வைத்துப் படப்பிடிப்பிலிருந்து நழுவாமல், மொத்தக் காட்சிகளையும் வயிற்றில் ஒரு க்ரீன் மேட் வைத்து நடித்துக் கொடுத்தாராம். அதற்குப் பின் படம் வெளிவந்து இளைஞர்கள் கொண்டாடியதெல்லாம் வரலாற்று நிகழ்வு. படம் பாக்ஸ் ஆபீஸிலும் மாபெரும் வெற்றியடைந்தது. விமர்சித்த வாய்கள் அனைத்தும், 'தலைவி வாழ்க' என்று புகழ் பாடியது. 

DC Extended Universe-க்கு அது ஒரு மாபெரும் மைல்கல் வெற்றியாக அமைந்தது. தற்போது, `வொண்டர் வுமன்' இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருக்கும் கேல் கடோட்டுக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இதையெல்லாம் விரிவாகச் சொன்னால், அவரைக் கனவுக்கன்னியாக கொண்டாடும் ரசிகர்களின் மனங்கள் சங்கடங்களுக்கு உள்ளாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொண்டு... இஸ்ரேல் இளவரசிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை மட்டும் சொல்வோம்! 

அடுத்த கட்டுரைக்கு