`The Battle of Winterfell' முடிந்துவிட்டது. மரணத்தின் தூதுவர்களான `Whitewalkers Army' தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஆம், வின்டர்ஃபெல் விழவில்லை, வீழவுமில்லை. வடக்கின் பெருமைமிகு ஸ்டார்க் கொடி இறக்கப்படவில்லை. ஆனால், இந்த வெற்றி அத்தனை சுலபமாக கிடைத்துவிட்டதா என்ன? நிறைய மரண ஓலங்கள், ஈடுசெய்ய முடியாத இழப்புகள், கிட்டத்தட்ட தோல்வியை ருசித்துவிட்ட தளர்ந்துபோன மனித மனங்கள்... எல்லாமும் இந்தப் போர்க்களத்தில் அரங்கேறி இருக்கிறது. ``மாபெரும் யுத்தம் முடிந்துவிட்டது. இனி இறுதி யுத்தம்!" என்கிறாள் டேனி. உண்மைதான். ஆனால், இந்த இறுதி யுத்தம் மாபெரும் யுத்தத்தைவிட சேதாரங்களை நிச்சயம் ஏற்படுத்தும். அது தொடங்கும் முன்பே பலியாகியிருக்கும் உயிர்களும், மாறிப்போன மனநிலைகளும், எடுக்கப்பட்ட கடினமான முடிவுகளும் அதற்கான சாட்சியங்கள். #TheLastOfTheStarks

மாபெரும் யுத்தத்தில் தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களின் இறுதிச் சடங்குகளுடன் தொடங்குகிறது இந்த வார எபிசோடு. பிணங்கள் அடுக்கப்பட்டதில் அப்படியோர் அழகியல். ஜான் ஸ்நோ ஓர் உணர்ச்சிமிகு உரை நிகழ்த்தி ``இறந்தவர்களுக்கு நாம் எப்போதும் நன்றியுடையவர்களாக இருப்போம்" என்கிறான். லயன்னா மொர்மோன்ட்டுக்கு ஜானும், ஜோரா மொர்மோன்ட்டுக்கு டேனியும், தியானுக்கு சான்சாவும் இறுதிச்சடங்கைச் செய்கிறார்கள். தியான் க்ரேஜாய் ஒரு ஸ்டார்க்காகவே எரியூட்டப்படுகிறான். அவன் க்ரேஜாய் வம்சம் என்றாலும் வளர்ந்த விதத்திலும் போரிட்டு இறந்த விதத்திலும் அவன் ஸ்டார்க்தான். வின்டர்ஃபெல்தான் என்றுமே அவனின் வீடு. தான் வாழ்ந்த மரத்தின் அடியில் சருகாகி, பின் உரமாகி வீழ்ந்து கிடப்பதுதான் இலைகளின் சொர்க்கம். தியான் க்ரேஜாய் தன் சொர்க்கத்தினை அடைந்து இருக்கிறான். சோகங்களை எரித்த பின்னர் கொண்டாட்டம்தானே? மதுவும், மாதுவும் இல்லாத கொண்டாட்டங்கள் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' காலத்திலிருந்துவிட முடியுமா என்ன? என்ன அனைத்தையும் சிரிப்பாகி வைரலாகிக்கொண்டு இருக்கிறது அந்த ஒற்றை `Starbucks' காபி கோப்பை.
வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் அங்கேயும் சில முக்கிய நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. ஒரு பாஸ்டர்டான கெண்ட்ரி பராத்தியனுக்கு அயர்ன் த்ரோனில் உட்காரும் உரிமை (ஜான் ஸ்நோ என்கிற ஏகான் டார்கேரியன் மற்றும் டெனேரியஸ் டார்கேரியன் இருவரையும்விட) சற்றே குறைவுதான் என்றாலும் டெனேரியஸ் அதற்கான வாய்ப்பைத் தவிர்க்கவே நினைக்கிறாள். ஒன்றுமே இல்லாமல் ஆயுத பட்டறையில் இரும்படிக்கும் அவனை `Storms End' என்ற இடத்தின் Lord ஆக்குகிறாள். எல்லோரும் அதைக் கொண்டாடுகிறார்கள். தனக்கு எவ்விதத்திலும் யாரும் தடையாய் வந்துவிடக்கூடாது என்பதில் அவ்வளவு தெளிவாய் இருக்கிறாள் கலீஸி.

பின்பு அதே கொண்டாட்டத்தில் ஜான் ஸ்நோ ஒரு ஹீரோவாகக் கருதப்படுகிறான். சாவை வென்று வந்தவன், டிராகன் மேல் பறந்து யுத்தம் செய்தவன் என டார்மண்ட் போதையிலும் தெளிவாகப் பட்டங்கள் கொடுக்கிறான். டேனி அதை ரசிக்கவில்லை. ஒருவேளை ஜான் தன் காதலனாக, வெறும் ஜான் ஸ்நோ எனும் நெட் ஸ்டார்க்கின் பாஸ்டர்டாக மட்டுமே இருந்திருந்தால் நிச்சயம் ரசித்திருப்பாள். ஆனால், இப்போது அவன் ஏகான் டார்கேரியன். அயர்ன் த்ரோனில் உட்கார அவளைவிட அவனுக்கே உரிமை இருக்கிறது. டேனியின் தந்தை `Mad King' என்றால் டேனி அதைப் பின்பற்றி `Mad Queen'-ஆக எல்லாத் தகுதிகளையும் வளர்த்துக்கொண்டு வருகிறாள். அவளின் இந்த மாற்றத்தை லார்டு வேரிஸ் நன்கு உணர்ந்துகொள்கிறார். தீப்பிழம்புக்குள் மூன்று முட்டைகளுடன் சென்று டிரேகன்களுடன் வந்தவள் கொஞ்சம் கொஞ்சமாய் `Mad Queen' ஆகி வருகிறாள். இந்த முறை `Queen Slayer' ஆகப்போவது யார் என்பதில் இருக்கிறது மீதி கேம் ஆஃப் த்ரோன்ஸ்.
இதனிடையே லார்டாகிவிட்ட கெண்ட்ரி பராத்தியன், ஆர்யா ஸ்டார்க்கிடம் தன் காதலைச் சொல்கிறான். தன்னுடைய லேடியாக தன் நிலத்தைச் சேர்ந்து ஆள்வதற்கு அவளை அழைக்கிறான். ஆனால், ஆர்யா அதற்கானவள் இல்லை. தான் எப்போதும் ஒரு லேடியாக, ஒரு லார்டின் மனைவியாக எல்லாப் பெண்களையும்போல் வாழ விரும்பவில்லை என்கிறாள். அவளின் தந்தை நெட் ஸ்டார்க் உயிருடன் இருந்திருந்தால், கெண்ட்ரியைப் பார்த்து சிரித்திருப்பார். இதே ஆர்யா, சிறுவயதில் அவரிடமே அதைத்தானே கூறினாள்? இதோ, மீண்டும் ஹௌண்டுடன் தனக்கான பயணத்தை நோக்கிப் புறப்பட்டுவிட்டாள்.

ஆர்யாவுக்கு ஸ்டார்ம்ஸ் எண்டில் தனக்கான ஒரு வாழ்க்கை காத்திருப்பது புரியாமல் இல்லை. புதிதாக லார்டான கெண்ட்ரி அவளை ராணியாக்க விருப்பப்படுகிறான். ஆனால், ஆர்யாவுக்கு கெண்ட்ரியின் தேவை என்பது ஓரிரவுதான். நைட் கிங்கை கொன்றுவிட்டாலும் அவள் தனது பழிவாங்கும் கொலைப் பட்டியலை முடித்துக்கொள்வதாய் இல்லை. அதில் இன்னும் அழிக்கப்பட வேண்டிய பெயர்கள் இருக்கவே செய்கின்றன. கிங்ஸ் லேண்டிங்கில் அது முழுமைபெறும் என நம்பலாம். அவளுடன் பெரும்பாலான நாள்களைக் கழித்த ஹவுண்டின் கதாபாத்திரம்தான் பலருக்கும் ஃபேவரைட். ஆரம்பம் முதலே ஹவுண்டின் கதாபாத்திரத் தன்மை ஒன்றாகவே இருக்கிறது. சிக்கன் உண்பது. மது குடிப்பது. சகோதரன் மவுன்டைனை கொல்ல தருணம் எதிர்பார்த்து காத்திருப்பது. இப்படியான பாத்திரங்கள் எப்போதும் அப்ளாஸ் அள்ளக்கூடியவை!
தனிமையில் சந்திக்கும் டேனி - ஜான் காதல் ஜோடி தங்களின் பழைய காதலை உடைக்கும் தயக்கத்துடனே இருக்கிறார்கள். பழைய ஜானாக மட்டுமே அவன் இருக்கவேண்டும் என டேனி கெஞ்சுகிறாள். அவன் பிறப்பின் ரகசியம் யாருக்கும் தெரியவேண்டாம் என்று யோசனை சொல்கிறாள். ஆம், சுயநலம்தான். கிட்டத்தட்ட, டேனி தன் வாழ்வில் எத்தனையே இடர்பாடுகளைச் சந்தித்ததும், தன் உயிரையே கையில் பிடித்துக்கொண்டு தன் வாழ்நாளின் லட்சியமாக நினைத்ததும் அந்த அயர்ன் த்ரோனைத்தானே? அதைத் தன் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக, தன் அண்ணன் மகன் என்பதற்காக, தன்னைக் காதலிக்கிறான். தன் காதலன் என்பதற்காக ஜானுக்கு அதைக் கொடுத்துவிட முடியுமா என்ன? ஆனால், மொத்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் வரலாற்றிலேயே டேனி ஒரு விஷயத்திற்காக தன்மையாக இப்படிக் கெஞ்சி எவருமே பார்த்ததில்லைதான். இதை `Character Assassination' என்றும் சொல்லலாம். சுயநலம், பதவி பித்து என்றும் முடித்துக்கொள்ளலாம். ஆனால், ஜான் அதற்கு உடன்படவில்லை. தன்னுடைய சகோதரிகளான சான்ஸாவுக்கும் ஆர்யாவுக்கும் அதைத் தெரிவிப்பது கடமை என்கிறான். ப்ரான் ஸ்டார்க் ஜானிடம் `உண்மையைச் சொல்வதும் சொல்லாமல் போவதும் நீ எடுக்க வேண்டிய முடிவு' என்கிறான். தனக்கு அரியணை ஆசை இல்லாவிட்டாலும் அதைப் பகிர்வதே நியாயம் என்று நினைக்கிறான் ஜான்.

`கேம் ஆஃப் த்ரோன்ஸ்' - தொடரைப் பொறுத்தவரை அதன் பெரிய பலமாக பலரும் நினைப்பது அதன் பிரமாண்ட அரங்குகள், மெய்சிலிர்க்க வைக்கும் போர் காட்சிகள்தாம். ஆனால், அது தொடங்கிய சமயத்தில் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டினின் `A Song of Ice and Fire'-க்கு நியாயம் சேர்த்த முதல் நான்கு சீஸன்கள் வரை அதன் அடையாளமே வேறு. வெறும் வசனங்கள். எண்ணற்ற கூடல் காட்சிகள், அதனிடையே பேசப்படும் வசனங்கள், எடுக்கப்படும் முடிவுகள் மொத்த சிரீஸின் கதையையும் அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.
ராபர்ட் பராத்தியன் - நெட் ஸ்டார்க்கின் உரையாடல், செர்ஸி - ஜெய்மி உரையாடல்கள், முதல் சீஸனில் டிரியன் ஜான் ஸ்நோவுக்கு அளிக்கும் போதனை, கேட்லின் ஸ்டார்க் - நெட் ஸ்டார்க்குடன் மன்றாடும் காட்சிகள், பின்னர் டேனிக்கும் டிரியனுக்கு நடக்கும் அனல் பறக்கும் `I am going to break the wheel' காட்சி அனைத்துமே நிச்சயமாக `வாவ்' தருணங்கள்தாம். பல கோடிகளுக்கு செட்கள் போட்டு, ஒரு எபிசோடு வரை நீளும் போர்க்காட்சிகள் கதையை சிறிது மட்டுமே முன்னோக்கி எடுத்துச்செல்லும். ஆனால், வெறும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்களே அடுத்து பல எபிசோடுகளுக்கான கதையைக் கட்டமைத்து நிற்கும். அத்தகைய நிஜ `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தருணங்கள் தற்போது கமர்ஷியலாக்கப்பட்ட `டிராகன் 65 மசாலா' திரைக்கதையில் கொஞ்சமே கொஞ்சம் மட்டுமே இருக்கின்றன. போருக்கு முந்தைய 2-வது எபிசோடில் அது நிறையவே இருந்தாலும் அங்கேயும் கதை ஒயிட்வாக்கர்களின் ஆர்மியைப் போல மெதுவாகத்தான் நகர்ந்தது.

அதிர்ஷ்டவசமாக இந்த எபிசோடில் வெஸ்டரோஸின் இருபெரும் அறிவாளிகளான டிரியனுக்கும் வேரிஸுக்கும் நடக்கும் அந்த உரையாடல் கதைக்கு முக்கியத்துவம் அளித்த பழைய கேம் ஆஃப் த்ரோன்ஸை நினைவுப்படுத்தியது. `ராஜ விஸ்வாசம் பெரிதா? மக்களின் பெரு நன்மை பெரிதா?' ஜானின் பிறப்பு ரகசியம் குறித்து சான்ஸா பகிர்ந்த உண்மை வெரிஸுக்குத் தெரிய வருகிறது. யாரிடமும் தெரிய வேண்டாம் என்று நினைத்த ஒரு விஷயம் தற்போது ரகசியம் இல்லை. அது எப்போதே தகவலாகிவிட்டது என்கிறார் வேரிஸ். முன்பு, டேனியின் குணநலன்களில் மாற்றங்களை உணர்ந்த வேரிஸ், தற்போது ஜான்தான் அரசனாக சரியான ஆள் என்கிறார். ஏற்கெனவே டேனிக்கு விஸ்வாசமாக இருக்கும் டிரியன் அதை ராஜ துரோகம் என்கிறான். இருவரும் திருமணம் செய்துகொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது அவன் வாதம். ஆனால், எல்லாம் உணர்ந்த வேரிஸ் அதற்கு வாய்ப்பில்லை என்கிறார். இதே போன்றதோர் உரையாடல் மூன்றாவது சீசனில் நிகழும். லிட்டில் ஃபிங்கரும், வேரிஸூம் பேசிக்கொள்வார்கள். ரெட் கீப்பில் இருக்கும் ரியால்ம் வருங்காலத்தில் யாருக்கானதாக இருக்கும் என்பதுதான் அந்த உரையாடல்களின் சாராம்சம். அப்போதும் எப்போதும் வேரிஸ் சொல்வது இதுதான் ``I did what I did for the good of the realm". தற்போது லிட்டில்ஃபிங்கர் இல்லை. ஆனால், அவனின் வரிகள்தான் இன்னும் கேம் ஆஃப் த்ரோன்ஸை இயக்கிக்கொண்டிருக்கிறது.
Chaos isn't a pit. Chaos is a ladder.
ப்ரெய்னின் கதாபாத்திரத்தையும், ஆர்யாவின் கதாபாத்திரத்தையும் இந்த சீசனில் சற்று பொருத்திப்பார்க்க வேண்டியதிருக்கிறது. ப்ரெய்ன் முழுக்க முழுக்க தான் சார்ந்த அறத்தின்பால் மட்டுமே நிற்பவள். தனக்கான கடமைகள், தனக்கான உறுதிகள் என்பதில் மட்டுமே நிற்பவள். சான்சாவை இறுதிவரை காப்பாற்றுவேன் என கேட்லின் ஸ்டார்க்கிடம் சத்தியம் செய்ததற்காக அதை நோக்கி நகர்ந்துகொண்டு இருந்தவள். பராத்தியன், ஸ்டார்க் என அவளது விஸ்வாசம் மாறி இருக்கலாம். ஆனால், அது என்றும் குறைந்ததோ, தாழ்ந்ததோ, துரோகம் புரிந்ததோ இல்லை. போருக்கு முந்தைய இரவில் ஆர்யாவின் தேவை காமமாக இருந்தது. ப்ரெய்னுக்கு அப்படி எதுவும் இல்லை. அவள் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடக்கிறது. நைட் ஆக்கப்படுகிறாள். இந்த எபிசோடில் truth or dare-ன் அரசகால வெர்ஷனை விளையாடுகிறார்கள். விர்ஜின் என்னும் கேள்விக்கு பதில் சொல்லாமல் வெளியேறுகிறாள்.

பின்னர் ஜெய்மியுடனான காதல். மீண்டும் இருவரும் காதல் கொள்கிறார்கள். அவள், தான் என்றும் நினைக்காத ஒரு வாழ்வு தனக்குக் கிடைத்ததாகவே எண்ணுகிறாள். ஜெய்மி தனக்கான நியாயங்களுடன் அவளைவிட்டுப் பிரிந்து கிங்ஸ் லேண்டிங் நோக்கிச் செல்கிறான். ப்ரெய்ன் பிரிதலை ஏற்றுக்கொள்ள முடியாது உடைந்து அழுகிறாள். அவளால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதுவும் எதிர்பார்த்திராத ஒரு வாழ்வில், எல்லா சுகங்களும் நொடிப்பொழுதில் கிடைத்துவிடுகின்றன. பின் அவை, அதே நொடிப்பொழுதில் அவற்றுக்கான தர்க்க நியாயங்களுடன் பிரிகையில் கல் மனதுடன் இருக்கும் ப்ரெய்ன் போன்ற நபர்களால்கூட அதைக் கடந்து செல்ல முடிவதில்லை. அங்கே ப்ரெய்னின் கதாபாத்திரம் அதற்கான முழுமையைப் பெற்றிருக்கிறது. செர்ஸியை இந்த உலகம் வெறுப்பதற்கான காரணங்களும், காரணியங்களும் நிறைய இருப்பதுபோல, தன்னையும் இந்த உலகம் வெறுக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன என்பதை தீர்க்கமாக நம்புகிறான் ஜெய்மி. அவன் சொல்வதில் யாதொரு தவறுமில்லை. ப்ரெய்ன் இதுவரை பெறாத எல்லாவற்றையும் அவளுக்கு செய்துவிட்டதாக எண்ணுகிறான் ஜெய்மி. புத்தகத்தில் வரும் சூனியக்காரக் கிழவி சொல்வது போலத்தான் செர்ஸியின் முடிவு இருக்கப்போகிறதா? ஜெய்மி கிங்ஸ் லேண்டிங் செல்கிறான் என்பது அதை நினைவுபடுத்தவே செய்கிறது.

இன்னும் இரண்டு எபிசோடுகளே இருக்கிறது என்பதால் சில கதாபாத்திரங்கள் அப்படியே முடிக்கப்பட்டன. Wildlings இனி அவர்களின் இடம் இதில்லை என்பதை நினைவுப்படுத்தி அங்கு இருந்து வெளியேறுகிறார்கள். சாம் டர்லியும், அவனது மனைவியும் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை பற்றி ஜானிடம் சொல்கிறார்கள். ஆண் குழந்தை என்றால் `ஜான்' எனப் பெயர் சூட்ட விரும்புவதாகச் சொல்கிறார்கள். பெண் குழந்தையாக இருக்கும் என எண்ணுகிறேன் என்கிறான் ஜான். இத்தனை காயங்களையும், துரோகங்களையும் இன்னொரு ஜான் பெற வேண்டாம் என ஜான் ஸ்நோ நினைத்திருக்கக்கூடும். ஆனா, முதல் சீசனிலிருந்து கூடவே வரும் கோஸ்ட் ஏனோ அநாதையாய் ஒரு தூரத்தில் நிற்கிறது. சாம் டர்லி எப்படி தன் மனைவியைக் கர்ப்பமாக்கினேன் என காமெடி வசனங்களுக்கு பதில் கோஸ்ட்டுக்கும், ஜானுக்குமான காட்சிகள் ஒன்றாவது இருந்திருக்கலாம். அரியணையில் அமரப்போவது ஜான் என்றால் அங்கு கோஸ்ட்டும் கட்டாயம் இருக்கும். கோஸ்ட் இப்போதே Wildlings உடன் செல்கிறது என்றால், கதை எதை நோக்கிப் பயணப்படுகிறது?
ஊர்ப்பக்கம் சொல்லும் காரியக்கிறுக்கன் என்னும் சொல்லுக்கு அப்படியே பொருந்துகிறாள் சான்சா ஸ்டார்க். முதல் சீசனிலிருந்தே அப்படித்தான் இருக்கிறாள். தான் நேசித்த சிறு wolf-ன் கொலையோ, தந்தை நெட் ஸ்டார்க்கின் கொலையோ அவளைப் பெரிதாக அசைத்துப் பார்க்கவில்லை. அவளை ஓர் இக்கட்டிலிருந்து யார் காப்பாற்றினாலும், அவர்களை நம்பும் ஒரு பிறவி. அவ்வளவே சான்சா. அதனால்தான் ஆர்யா சிறுமியாக இருக்கும் போது ஜான் ஸ்நோ அவளிடம் சொன்னதை, நைட் வாக்கர்ஸ் வரும்போது ஆர்யா சான்சாவிடம் அதையே சொல்ல வேண்டியதிருக்கிறது. தனக்கான வின்டர்ஃபெல்லை பெற்றுவிடுவதில் அவ்வளவு தெளிவாய் இருக்கிறார் சான்சா. டெனேரியஸுக்குத் துணைபோய்விட்டான் டிரியன் என்னும் போது ஏற்றுக்கொள்ளாத அவளது மனம், ``நீ ஒரு காலத்தில் புத்திசாலியாக இருந்தாய்" என்கிறது. நைட் வாக்கர்ஸ் அரண்மனையை முற்றிலும் சூழ்ந்துவிட்டதொரு தருணத்தில் அவளுக்கு டிரியனை விட்டால் ஆள் இல்லை. ``என்னுடன் இருந்தவர்களில் நீதான் சிறந்தவன்" என்கிறாள். இந்த எபிசோடில் டிரியனிடம் ஜான் பற்றிய ரகசியத்தைச் சொல்கிறாள். அது யாரின் காதுக்கு எப்படிச் செல்லும் என்பது அவளுக்குத் தெளிவாக தெரியும். சுயநலமாக முன்பைவிடவும் மோசமாகவே அவள் இருப்பதாக தோன்றுகிறது. லிட்டில் ஃபிங்கரிடம் பாடம் பயின்றவளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? குழப்பங்களை தனக்கான ஏணிகளாய்ப் பயன்படுத்துவதில் லிட்டில் `லிட்டில் ஃபிங்கர்' இந்த சான்சா.

ரீகலின் மரணம் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அது ஏன் இப்படி அங்குச் சென்றது என்பதும் யாருமே எதிர்பார்த்திராத ஒன்று. ஹாலிவுட் சினிமாக்களில் கூட இவ்வளவு பெரிய மிருகத்தைக் கொல்ல, பல சிரமங்கள் இருப்பது போல் காட்சிப்படுத்துவார்கள். ஆனால், இதில் நேரடியாக மூன்றே மூன்று அம்புகள். நெஞ்சைத் துளைக்கிறது. றெக்கையைத் தாக்குகிறது. கழுத்தை ஊடுருவுகிறது. அதுவும் யூரான் கிரேஜாயின் சாமர்த்தியத்தில் அது வீழும் என்பதெல்லாம்... யூரானே நினைத்திடாத ஒன்று. இப்படியொரு கதாபாத்திரத்தை கொல்வதென்பது மிகவும் மோசம். கேம் ஆஃப் த்ரோன்ஸின் D&D எழுத்தாளர்களே, இதெல்லாம் எப்படி? டார்கேரியன்களுக்கு மூளை என்கிற வஸ்து என்றுமே இருந்ததில்லை, என்றாலும், இப்படியொரு முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. கஷ்டத்தின் பிடிநிலையில் இருக்கும்போது, ஜானை யாரேனும் காப்பாற்ற வேண்டியதிருக்கும். டெனேரியஸுக்கு மோர்மோன்ட் தேவைப்படுகிறார். வெறும் அம்புகளுக்கே தன்னை இரையாக்கி தண்ணிரில் மூழ்கிக்கிடக்கிறான் ரீகல். தாயைப் போல் பிள்ளை!
Everyone who isn't us is an enemy. ~ செர்ஸீ லேனிஸ்டர்

முதல் சீசனில் செர்ஸீ உதிர்க்கும் வார்த்தைகள் இவை. இப்போதுவரையில் அதில் அவள் தெளிவாகவே இருக்கிறாள். தன் இரு சதோரர்களையும் கொல்ல ஆள் அனுப்பியது வரை அவள் அவளாகவே இருக்கிறாள். மிஸ்ஸாண்டேவின் மரணம், ரீகல் டிராகனின் மரணம் டேனியை செர்ஸியைப் போல ஒரு `Mad Queen'-ஆக மாற்றும் பலம் கொண்டதா? ரெட் கீப்பில் இருக்கும் அப்பாவி வெஸ்ட்ரோஸ் வாசிகளின் உயிரைவிட டேனிக்கு அயர்ன் த்ரோனும் செர்ஸியின் உயிரை எடுப்பதும் முக்கியமானதா? டேனியை இப்படி நியாய தராசின் மேல்வைத்து விவாதிக்கும் நாம் செர்ஸியை அப்படி வைத்துபார்க்கவே தேவையில்லை. அவளுக்கு இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. சுயநலம் மிக்க அவளின் மனம் அயர்ன் த்ரோனைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்காது. ஜெய்மியுமே அதில் சேர்த்தி இல்லை. டேனி ஒன்றும் செர்ஸி இல்லைதான். ஆனால், அடுத்தடுத்து அரங்கேறியுள்ள சம்பவங்கள் அவளையுமே அப்படி ஒரு `Mad Queen' ஆக்கலாம். அந்த செர்ஸி தன்மை டேனிக்குள்ளும் தற்போது ஒரு டிராகனைப் போல இருப்பதாகவே தோன்றுகிறது. அது நெருப்பைக் கக்கப்போகும் நொடியும் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. மிஸ்ஸாண்டே இறுதியாகச் சொல்லும் வார்த்தைதான், இனி டெனேரியஸ் என்றும் சொல்லப்போவது... DRACARYS
Valar Morghulis - All Men Must Die!
சென்ற எபிசோடு கட்டுரையில் சொல்லப்பட்ட செர்ஸியைக் கொல்லும் தியரி போல், மற்றொன்றும் உண்டு. The House of the Undyingல் (முதல் சீசன்) டெனேரியஸ் இவ்வாறாக கனவு காண்பாள். எல்லாம் எரிந்துவிட்டு பனி சூழ்ந்த ஒரு அயர்ன் த்ரோனை நோக்கி அவள் நடப்பாள். ஆனால், அதில் அமராது பனி சூழ்ந்த வெளிப்புறத்தை நோக்கி நகர ஆரம்பிப்பாள். வெஸ்ட்ரோஸ் வரலாற்றின் நைட் கிங், நைட் குயின் தியரி கதை சற்றே சுவாரஸ்யமானது. அதைச் சற்றே மெருகேற்றி டேனிக்குப் பொருத்திப்பார்க்கும் தியரி ஒன்று உலாவுகிறது. சற்றே அதீத ஸ்பாய்லர்தான். எல்லாவற்றையும் கைப்பற்றும் அரசி, மற்றுமொரு கொடூர மேட் குயின் ஆகிவிடுகிறாள். இந்த முறை குயின் ஸ்லேயர் ஆகிறான், அவளது நேசமிக காதலன். எல்லாம் முடிந்துவிட்ட ஒரு தருணத்தில் பனிக்காடுகளை நோக்கி நைட் குயினாக பேரமைதி கொள்கிறாள் அவள். அவள் மக்களை ஒன்றும் செய்யாத வண்ணம், இந்த உலகைக் காக்க நைட்ஸ் வாட்சில் அமர்கிறான் அவளது காதலன். யார், யார் இங்கே பேசப்படுகிறார்கள் என்பதை நீங்களே பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.