ரசிகர்களுக்கு அது போட்டியாக இருந்தாலும், கலைஞனுக்குப் பெருமைதான் என நிரூபித்துவிட்டார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். உலக பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பட்டியலில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக தன்னுடைய `டைட்டானிக்' படம் பிடித்து வைத்திருந்த ஒரு நிலையை வெறும் 11 நாள்களில் முறியடித்தது `அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம்.
மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸின் `அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. ஏற்கெனவே அதன் முந்தைய பாகங்களான எல்லா அவெஞ்சர்ஸ் படங்களும் உலக பாக்ஸ் ஆபீஸ் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பதால், இந்தப் படம் அந்த எல்லா ரெக்கார்டையும் முறியடித்துவிடும் என்று முன்பே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக `அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படம், வெளியான முதல் வாரத்திலேயே எல்லாப் படங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு உலக அளவில் வசூல் சாதனை படைத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதுவரை மூன்றாவது இடத்தில் இருந்தது 'ஸ்டார் வார்ஸ்' தொடரின் 'தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்' திரைப்படம்.
அதைத் தொடர்ந்து, வெளியாகிய பதினோராவது நாள் இரண்டாவது இடத்திலிருந்த `டைட்டானிக்' திரைப்படத்தின் வசூலான 2.187 பில்லியன் டாலர்களைத் தாண்டியது `எண்ட் கேம்'. 1997-ம் ஆண்டு வெளியான 'டைட்டானிக்'தான் உலகின் முதல் பில்லியன் டாலர் வசூல் படம். அதன் 3-டி வெர்ஷன் 2012-ம் ஆண்டு வெளியாகி மீண்டும் 343 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. இரண்டும் சேர்ந்து 'டைட்டானிக்'கை பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் அசைக்கமுடியாத இடத்தில் வைத்திருந்தன. இதற்கிடையில், நீண்ட நாள்களாக முதல் இடத்தில் இருந்த `டைட்டானிக்' படத்தின் சாதனையை முறியடித்து 2.78 பில்லியன் டாலர் வசூல் செய்து முதல் இடத்துக்கு வந்தது 2009-ம் ஆண்டு வெளியான `அவதார்' திரைப்படம். அதை இயக்கியதும் கேமரூன்தான்.
இந்நிலையில், 22 ஆண்டுக்கால சாதனையை வெறும் 11 நாள்களில் தரைமட்டமாக்கியதால் மார்வெல் ரசிகர்கள் அடுத்தது நீதான் என `அவதார்' படத்தை நோக்கிப் படையெடுத்துள்ளனர். என்றாலும், கேமரூன் ரசிகர்கள், `இதெல்லாம் ஒரு சாதனையே இல்ல. அவெஞ்சர்ஸ் படமா இருந்தாலும் சரி, ஸ்டார் வார்ஸ் படமா இருந்தாலும் சரி, ரெண்டு தொடருக்கும் பல ஆண்டுக்கணக்கா நீண்ட வரலாறு இருக்கு. ஆனா டைட்டானிக்கோ, அவர்தாரோ அப்படியில்லை. தானா மொளச்சு, தனியா வளர்ந்து அந்த இடத்துக்கு வந்த படங்கள் அவை. முடிஞ்சா அப்படி ஒரு ரெக்கார்டை தூக்கிக்கிட்டு வாங்க' என எளிதில் அதைத் தட்டிவிட்டுச் செல்கின்றனர்.
ரசிகர்களின் இந்த இன்டர்நெட் சண்டைகளுக்கு நடுவில், ஜேம்ஸ் கேம்ரூன் அந்த ட்வீட்டை பதிவேற்றினர். `ஒரு பனிப்பாறை உண்மையான டைட்டானிக்கை மூழ்கடித்தது. அவெஞ்சர்ஸ் என்னுடைய டைட்டானிக்கை மூழ்கடித்துவிட்டது. மார்வெல் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் எங்கள் சல்யூட். சினிமா இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது, முன்பை விட இன்னும் பெரிதாக இருக்கிறது எனப் புரியவைத்துவிட்டீர்கள்', என அவர் ட்வீட் செய்தார்.
எப்படியும் இன்னும் சில நாள்களில் `அவதார்' ரெக்கார்டையும் 'எண்ட்கேம்' முறியடித்துவிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகவிருக்கும் `ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்' "அப்ப நாங்கனாப்பல யாரு? மண்ட பத்தரம்" எனச் சொல்லிக்கொண்டபடியே ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், மார்வெல் சினிமாட்டிக் யூனிவெஸுக்கு 'எண்ட்கேம்' திரைப்படம் எப்படியோ அந்த அளவுக்கு ஸ்டார் வார்ஸுக்கு 'தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்' மிக முக்கியமான படம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த எல்லாப் படங்களையும் தட்டிவிட்டு விரைவில் முதலிடத்தைப் பிடிக்க வருகிறது 'அவதார்-2' என ஜேம்ஸ் கேமரூன் ரசிகர்களும் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றனர். எது எப்படியோ, 'அவதார், மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ், ஸ்டார் வார்ஸ், எல்லாமே எனக்குத்தான் சொந்தம், அதுவரை எனக்கு லாபம்தான்' என எங்கோ ஒரு மூலையில் அமர்ந்த படி உற்சாகத்தில் இருக்கிறது வால்ட் டிஸ்னி நிறுவனம்.