Published:Updated:

முதல் ஆஸ்கரும் லியோனார்டோவும் - ஒரு ஃப்ளாஷ்பேக்!

முதல் ஆஸ்கரும் லியோனார்டோவும் - ஒரு ஃப்ளாஷ்பேக்!
முதல் ஆஸ்கரும் லியோனார்டோவும் - ஒரு ஃப்ளாஷ்பேக்!

”அப்பாடா... ஒருவழியாக இந்த மனுஷனுக்கு ஆஸ்கர் கிடைத்துவிட்டது” இப்படிச் சொல்லாத ஆட்களே இருக்க மாட்டார்கள். அப்படி பல போராட்டங்களைக் கடந்து ஆஸ்கரை ஜெயித்துள்ளார் லியோனார்டோ டிகாப்ரியோ.

சரி இவருக்கு மட்டும் தான் இப்படி ஐந்து நாமினேஷன்களுக்குப் பிறகு ஆஸ்கர் கிடைத்துள்ளதா என்றால் இவருக்காவது ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டு ஐந்தாவது முறை கிடைத்துவிட்டது. இவரை விட துரதிர்ஷ்டம் பிடித்த ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜேக் நிக்கோல்சன் என்னும் நடிகர் சுமார் 12 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு மூன்று முறை விருது பெற்றவர். ஏன் லாரன்ஸ் ஒலிவியர் 10 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு ஒரே ஒரு முறை சிறந்த நடிகர் விருது பெற்ற மகான். இப்படி அதிக பரிந்துரைகளும், மிக சொற்ப வெற்றிகளும் என கணக்கிட்டால் லியோனார்டோ நிலை மிகவும் பரவாயில்லை  தான். ஏன் இதே ஆஸ்கரில் 13வது முறையும் ஏமாற்றப்பட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் ரோஜர் டிகீன்ஸ்.

முதல் ஆஸ்கரும் லியோனார்டோவும் - ஒரு ஃப்ளாஷ்பேக்!

  எனினும் ஏன் லியோவுக்கு இத்தனை கிரேஸ் எனக் கேட்டால். 'டைட்டானிக்' படம் கொடுத்த பிரபலம். உலக நாடுகளைக் கடந்து, நம்மூர் கிராமத்துவாசிகளிடம் கூட டைட்டானிக் கப்பலும், உணர்வுப் பூர்வமான காதலும் மறையாத பாதிப்புகளை உருவாக்கியதே லியோனார்டோவுக்குக் கிடைத்த ஏமாற்றத்தை பெரிதாக்கியது. மேலும் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் , அவருடன் அதே படத்தில் சேர்ந்து நடித்த நடிகர்கள் என பலருக்கும் விருது கிடைத்து லியோனார்டோவுக்குக் கிடைக்காது போனதும் மற்றொரு காரணம்.

”இவர் கூட நடிக்கிற கரடிக்குக் கூட ஆஸ்கர் கிடைக்கும் இவருக்குக் கிடைக்காதுப்பா” என ஸ்டேட்டஸ் மட்டும் இல்லை மீம்ஸ், அனிமேஷன் ஜிஃப் படங்கள் போடும் அளவிற்கு இவருடன் சம்மந்தப் பட்டவர்கள் ஆஸ்கர் அடித்துள்ளனர். சமூக வலைகளின் தாக்கமும், இன்னொரு காரணம்.

எல்லாவற்றிற்கும் மேல் லியோனார்டோவின் நடிப்பு. ரிஸ்க் எடுத்து நடிக்கும் திறன் உடையவர். அதனால் தான் 1993ம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான பரிந்துரை (வாட்’ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்), 2005ம் ஆண்டு ’ஏவியேட்டர்’, 2007ம் ஆண்டு ’பிளட் டைமண்ட்’, 2014ம் ஆண்டு ’தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ , இம்மூன்று படங்களிலும் சிறந்த நடிகருக்காக பரிந்துரைப் பட்டியலில் இருந்தும் விருது கிடைக்காமல் போனதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரசிகர்களை விடுங்கள், சக நடிகர்களும், ஏன் சக போட்டியாளரான எட்டி ரெட்மெய்னி போன்றோரும் கூட லியோவுக்கு விருது கிடைக்க வேண்டும் எனக் கூறியது நாமறிந்ததே. இப்போது 2016ம் ஆண்டு ’தி ரெவெனண்ட்’ அந்தச் சோகக் கதையை முடித்து வைத்து சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுத் தந்துள்ளது. லியோனார்டோவுக்கு விருது கிடைத்த போது அவரின் நெருங்கிய தோழியான டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட் கண் கலங்கியதும் நம்மால் காண முடிந்தது. 

முதல் ஆஸ்கரும் லியோனார்டோவும் - ஒரு ஃப்ளாஷ்பேக்!

இப்படி பலரின் விருப்பமும் கூட லியோனார்டோவின் ஏமாற்றத்தை இன்னும் பெரிதாக்கியது. சரி எல்லாம் சுபமாக முடிந்து விருதை வாங்கிய லியோனார்டோ பேசியது இதுதான், இயற்கைக்கும், மனிதனுக்கும் உள்ள உறவுதான் ’தி ரெவனெண்ட்’ படத்தின் உருவாக்கம். பருவ நிலை மாற்றங்கள் என்பது உண்மை. இப்போதும் ஆபத்தான பருவநிலை மாற்றம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. நமது மொத்த மனித இனமும் அச்சுறுத்தும் நிலைக்கு தள்ளப்பட உள்ளோம். நாம் ஒன்றாக இணைந்து தாமதிக்காமல் செயல்பட வேண்டும். இவ்வாறு உலகம் வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு வார்த்தைகளை முதலில் தெரிவித்தார் லியோனார்டோ.

தொடர்ந்து பேசியவர், ”இந்தப் படத்திற்காக அங்கீகாரம் கிடைத்தது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. என் வாழ்வில் ”தி ரெவெனண்ட்” பட உருவாக்கம் வெகுமதியும், பல அனுபவங்களையும் கொடுத்த படம். இயக்குநர் அலிஜாண்ட்ரோவின் திறமை, தொலைநோக்குப் பார்வை, மற்றும் மன உறுதியாலும் மட்டும் தான் இது சாத்தியப்பட்டது. மற்றும் டெடிகேஷனான படக்குழுவுக்கும் இந்த வெற்றித் தருணங்கள் உரியவை. மேலும் இந்தப் பிரிவிற்கு பரிந்துரைக்கப்பட்ட என் சக நடிகர்களுக்கும் வாழ்த்துகள். அகாடமிக்கு எனது நன்றி என்றார்.

இப்போது ஆஸ்கர் வாங்கிய லியோனார்டோவின் மிக முக்கிய பிரச்சாரம் உலக வெப்பமாயமாதலுக்கு எதிராகக் குரல் கொடுப்பது. அதற்காக நடிப்பை விடவும் தயாராக இருக்கிறார். லியோனார்டோ. 

- ஷாலினி நியூட்டன் -