Published:Updated:

பாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்!

பாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்!
பாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்!

சீரியல் பார்ப்பதில், நம்மூர் பெண்கள் மட்டும்தான் புலிகளா? உலகமே அப்படித்தான்! அதிலும், ஹாலிவுட் தரத்திற்கு சீரியல்களை உருவாக்குவதில் அமெரிக்கா கில்லி. அமெரிக்கர்களின் சீரியல் மோகத்திற்கு ''கேம் ஆஃப் த்ரோன்ஸ் - Game of Thrones (சிம்மாசனத்திற்கான விளையாட்டு)'' எனும் சீரியல் சிறந்த உதாரணம். ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு ஜி.ஓ.டி (Games Of Thrones - GOT) என்கிற செல்லப் பெயரும் இருக்கிறது.

சீரியல் தீம் :

இந்த சீரியல்  அழுகாச்சி சீரியல் அல்ல என்பது தான் நமக்கும், அவர்களுக்குமான பெரிய வித்தியாசம். ஒரு சாம்ராஜ்யத்தை பிடிக்க நடக்கும் அரசியல் விளையாட்டுகள் மற்றும் போராட்டம் போன்றவை தாம் இந்த சீரியலின் கதைக்களம். நடந்த வரலாற்றைச் சீரியல் ஆக்கியிருக்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இது ஒரு கற்பனைக் கதை! இந்த சீரியல் தொடர்கள் 'எ கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'எ க்ளாஷ் ஆஃப் கிங்ஸ்', 'எ ஸ்டோர்ம் ஆஃப் ஸ்வார்ட்ஸ்' போன்ற நாவல்களை அடிப்படையாகக் கொண்டும் எடுக்கப்படுகிறது. டிரெய்லர் லிங்க் : https://www.youtube.com/watch?v=CuH3tJPiP-U

பாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்!

சீசனாக சீறிப்பாயும் ஜீ.ஓ.டி :

ஏப்ரல், 2011-ல் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த சீரியல்கள், சீசன் 1, 2, 3, 4, 5 என்று இதுவரை ஐந்து சீசன்கள் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி சக்கை போடு போட்டிருக்கிறது. (ஒரு சீசனுக்கு 10 எபிசோட்கள் மட்டுமே, ஒரு எபிசோட் 50 - 65 நிமிடங்கள் வரை இருக்கிறது). அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 25, 2016 அன்று இந்த சீரியலின் 6ஆவது சீசன் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதன் டிரைலரை மட்டுமே 2.5 கோடி பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள்

இயக்குநர்கள் :

இந்த சீரியலை எடுத்தவர்கள் ஒருவரோ, இருவரோ, மூவரோ அல்ல 14 இயக்குநர்கள் இருக்கிறார்கள். இதில் குறிப்பாக அலெக்ஸ் க்ரேவ்ஸ், டேவிட் நட்டர், அலென் டெய்லர் போன்றவர்கள் இதுவரை ஒவ்வொருவரும் 6 எபிசோட்களை இயக்கி முன்னிலை வகிக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து டேனியல் மினாஹன் 5 எபிசோட்களை இயக்கி இருக்கிறார். மிசெல்லி மெக்லாரன், மார் மைலார்ட், ஜெரிமி பொடெஸ்வா, அலிக் சகரோவ் மற்றும் மிக்வில் சபோச்நிக் ஆகியவர்கள் 4 எபிசோட்களை இயக்கி இருக்கிறார்கள். பிரைன் கிரிக் 3 எபிசோட்களை இயக்கி இருக்கிறார். நீல் மார்ஷல் 2 எபிசோட்களை இயக்கி இருக்கிறார். ஜாக் பென்டர், டேவிட் பெட்ரகா, டேனியல் சக்ஹீம், மைக்கெல் ஸ்லோவிஸ் ஆகியவர்கள் 1 எபிசோடையும் இயக்கி இருக்கிறார்கள். ஒரே எபிசோடில் இரண்டுக்கும் மேற்பட்ட இயக்குநர்களும் சேர்ந்து இயக்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் :

இயக்குநர்கள் தான் இவ்வளவு பேர் என்றால், இதில் நடிப்பவர்களின் பட்டியலும் கல்யாண விருந்துக்கு வாங்க வேண்டிய மளிகை சாமான் லிஸ்டை விட பெரிதாக இருக்கிறது. பீட்டர் டிங்க்லேஜ், லெனா ஹெடே, எமிலியா க்ளார்க், கிட் ஹாரிங்டன், ஷோஃபி டர்னர், மைசி வில்லியம்ஸ் போன்ற முன்னணி நடிகர்கள் இதில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்து வருகின்றனர். சுருக்கமாகச் சொன்னால் அந்த ஊர் மகாபாரதம் தான். அவ்வளவு கதாபாத்திரங்கள். போர்க் காட்சிகளை எல்லாம் படமாக்க வேண்டும் என்றால் எத்தனை பேர் வேண்டும் என்பதை பாகுபலி படத்தின் போர்க்காட்சிகளை நினைவு கூர்ந்தால் தெரியும். கஷ்டம் என்ன என்பது புரியும். அவைகளையும் இயக்குநர்கள் அருமையாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

உலகின் காஸ்ட்லியான சீரியல் :

எப்படி, இப்படி ஒரு தெறி ஹிட் என்று பார்த்தால், அதன் பட்ஜெட்டில் இருக்கிறது முதல் சர்ப்ரைஸ். சுமாராக ஒரு மணிநேரத்திற்கு (ஒரு எபிசோடிற்கு) 6 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 39 கோடி ரூபாய்) செலவழித்து தயாரிக்கப்படுகிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்படும் சீரியல்களில் ஃப்ரண்ட்ஸஸென்னும் சீரியல் ஒரு எபிசோடிற்கு - 10 மில்லியன் டாலர் செலவழித்து தயாரித்தது. அதே போல் ரோம் சீரியலின் ஒரு எபிசோடிற்கு - 9 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது நம் கேம் ஆஃப் த்ரோன்ஸ். மேற்கூறிய இரண்டு தொடர்களும் முடிந்துவிட்டன. ஆக மொத்தத்தில், தற்போதைக்கு உலகில் அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் டிவி சீரியல்களில் இது தான் நம்பர் 1.

ஒளிபரப்பு :

இந்த சீரியல் முதலில் அமெரிக்காவில் ஒளிபரப்பாகி சில வாரங்களுக்கு பின் தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, கனடா போன்ற நாடுகளில் ஒளிபரப்பப்படுகிறது. குறிப்பாக சீனாவில் ஏகப்பட்ட சென்சார் வெட்டுகள் நடந்த பின் தான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்!

நேரடி பார்வையாளர்கள் 69 லட்சம் :

கேம் ஆஃப் த்ரோன்ஸின் சீசன் 5-ன் ஒவ்வொரு எபிசோடையும் சராசரியாக 69 லட்சம் பேர் தொலைக்காட்சி மூலமாக பார்த்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் ஒளிபரப்பப்பட இருக்கும் சீசன் 6 ஐ இன்னும் அதிகமான ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று கேம் ஆஃப் த்ரோன்ஸ் குழு கணித்திருக்கிறது.

டிவிடியில் சீரியல் :

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன்கள் முழுமையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய பின், டிவிடிக்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன முதல் சீசன் டிவிடிக்கள் மற்றும் கட்டணம் செலுத்தி டவுன்லோட் செய்வதிலும் முத்திரை பதித்திருக்கிறது.

முதல் சீசனின் டிவிடி ஒரு வார காலத்தில் 3,50,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. இது ஹெச்பிஓ வெளியிட்ட சீரியல்களில் நிகழ்த்தப்பட்ட பெரிய சாதனை என்று பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளியது.

இதுவரை கேம் ஆஃப் த்ரோன்ஸில் எடுக்கப்பட்ட சீசன் 5 வரையான அனைத்து எபிசோட்களையும் டிவிடியிலும் ப்ளூரே பார்மெட்டில் கட்டணம் செலுத்தி டவுன்லோட் செய்யும் விதத்தில் வெளியிட்டிருக்கிறது ஜி.ஓ.டி குழு. நம்மூரில் சீரியலை பார்ப்பதற்கு டிவிடி இருக்கிறது என்றால் வீட்டில் இருக்கும் இளசுகள் பிரச்னை இல்லாமல் டிவி பார்க்கலாம். அதையும் மீறி வீட்டில் இருக்கும் சீரியல் பிரியர்கள் கேட்டால் டிவிடி வரும் பாத்துக்கலாம் என்று சமாளித்துவிடலாம்.

ஆன்லைனில் சீரியல் விலை :

'கேம் ஆஃப் த்ரோன்ஸி'ன் ஒரு எபிசோடை சப்ஸ்கிரைப் செய்து பார்க்க அமெரிக்காவில் 15 - 25 டாலர், இங்கிலாந்தில் சுமாராக 26 பவுன்ட் ஸ்டர்லிங், ஆஸ்திரேலியாவில் 52 ஆஸ்திரேலிய டாலர் செலவழிக்க வேண்டுமாம். மேற்கூறிய பணத்தை எல்லாம் இந்திய பணத்தில் மதிப்பிட்டு பாருங்கள்!...அதிர்ந்து...! போவீர்கள்.

பைரஸி பிரச்னை :

வழக்கம் போல டொரன்ட் இந்த சீரியலுக்கும் வில்லனாகத் தான் இருக்கிறது. டொரன்டில் அதிகம் டவுன்லோடு செய்யப்படும் டிவி சீரியல்களில் கேம் ஆஃப் த்ரோன்ஸுக்குதான் முதல் இடம். அதில், ஒரு எபிசோட் மட்டும் 42,80,000 முறை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்! குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் கேம் ஆஃப் த்ரோன்ஸின் பைரசி காப்பிகள் அதிகமாக இருக்கிறதாம். 2015-ல் அதிகம் திருடப்பட்ட தொலைகாட்சித் தொடராக 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. அதோடு இதுவரை ஹெச்.பி.ஓ நிறுவனம் தயாரித்த டிவி சீரியல்களிலேயே அதிக பார்வையாளர்களை ஈர்த்த சீரியலாக தன் முத்திரையை பதித்திருக்கிறது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்!'.

பாகுபலியை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் பிரமாண்ட சீரியல்!

விருதுகள் பட்டியல் :

ஃபிரைம் டைம் எம்மி' விருதுகளின் ''சிறந்த தொலைக்காட்சி சீரியல்" விருது உட்பட பல்வேறு பிரிவுகளில் 26 ஃபிரைம் டைம் எம்மி விருதுகளை வென்றிருக்கிறது. சீரியல்களுக்கு வழங்கப்படும் பிற விருதுகளில் இதுவரை 190-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரியல். இந்த 190 விருதுகளில் கோல்டன் குளோப் விருதுகள், ஹூகோ அவார்ட் ஃபார் பெஸ்ட் டிராமாட்டிக் பிரசன்டேஷன், பீபாடி அவார்ட் போன்றவையும் அடக்கம்.

எக்கச்சக்க 'ஏ'டாகூட காட்சிகள் :

இந்த சீரியலில் ஆபாசக் காட்சிகள் கொஞ்சம் அதிகம் தான். எனவே குடும்ப சமேதமாக உட்கார்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டே பார்க்க முடியாது.

மக்கள் மதிப்பெண் :

இந்த டிவி சீரியலுக்கு ஐ.எம்.டி.பி 9.5/10 மதிப்பெண்களை வழங்கி இருக்கிறது. அதே போல் டிவி.காம் 9/10 மதிப்பெண்களையும், ராட்டன் டொமேட்டோஸ் 94% மதிப்பையும் வழங்கி இருக்கிறது.

இந்தியாவில்...?

இந்தியாவில் ஹெச்.பி.ஓ சேனலில் ஒளிபரப்பானது. அதுவும் முழுமையான சென்சார்களுக்கு உட்படுத்தப்பட்டு ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலோட ஒரு எபிசோட் காசு இருந்தா நம்ம ஊர்க்காரர்கள் திரைப்படமே எடுத்துவிடுவார்கள்.... 

- மு.சா.கெளதமன்-

அடுத்த கட்டுரைக்கு