Published:Updated:

கார்த்தி இடத்தில் தமன்னா நடித்திருந்தால்? தோழாவைப் போல இங்கே தோழி! Me Before You - ஒரு பார்வை!

கார்த்தி இடத்தில் தமன்னா நடித்திருந்தால்? தோழாவைப் போல இங்கே தோழி! Me Before You - ஒரு பார்வை!
கார்த்தி இடத்தில் தமன்னா நடித்திருந்தால்? தோழாவைப் போல இங்கே தோழி! Me Before You - ஒரு பார்வை!

ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து ஊர் சுற்றி, வானத்தில் பறந்து வாழ்க்கையையே கொண்டாடும் ஒருவன், எதிர்பாராத விபத்தால் கை, கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையாக மாறிவிட்டான் என்றால் அவனின் மனநிலை என்னவாக இருக்கும். அவனது எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும் என சிந்தித்துப் பார்க்கவே இதயம் படபடத்துக்கொள்ளும்.

இப்படியான ஒருவரே "மி பிஃபோர் யூ" படத்தின் நாயகன் சாம் கிளாஃலின். மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஏற்படும் விபத்தினால் கழுத்துக்குக் கீழே எல்லா பாகங்களும் செயலிழந்து வீல் சேரில் முடங்குகிறார். அவரின் கேர் டேக்கராக வேலைக்கு சேர்கிறார் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் எமிலியா கிளார்க். கிட்டத்தட்ட , தோழா படத்தில், கார்த்திக்குப் பதில் அந்த இடத்தில் தமன்னா வேலைக்கு சேர்ந்து இருந்தால், என்ன நடந்து இருக்கும் என சொல்கிறது “மீ பிஃபோர் யூ (ME BEFORE YOU)திரைக்கதை.

இருந்த வேலையையும் கைவிட்டுப் போக விரக்தியில், பணத்தேவைக்காக வில் ட்ரெய்னருக்கு (சாம் கிளாஃலின்) பணிப்பெண்ணாக வேலைக்கு சேரும் லூயிசா கிளார்க் (எமிலியா கிளார்க்). " உன்னைப் பார்த்துக்கவெல்லாம் நான் இல்லை. எனக்கு இப்ப பணம் தேவைப்படுது. அதுக்குத் தான் வேலைக்கு வந்து இருக்கேன் " என கோபமாக நடந்துகொள்கிறார், வில்லின் உடல் நிலையால், வேறொருவரை மணக்க முடிவு செய்கிறார் வில்லின் காதலி. இவ்வாறாக தொடங்குகிறது திரைக்கதை.

யாருடைய இரக்கமும் பிடிக்காமல், பிடிப்பே இல்லாமல் வாழ்க்கையை நகர்த்தும் வில் (அதாங்க தமிழ்ல நாகர்ஜூனா கேரக்டர்) ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் டிக்னிடாஸ் அமைப்பில் தன் பெயரை பதிவு செய்து இருக்கிறார். சட்ட ரீதியாக நோயாளிகளை, கருணைகொலை செய்யும் அமைப்பு டிக்னிடாஸ். ஆறு மாதத்திற்குப் பிறகு, வில் இறக்க முடிவு செய்கிறார். இது நாயகி க்ளார்க்கு தெரிந்துவிட, வில்லிடம் சிரித்துப் பேசி பழகுகிறார். அதுவரையில், யாருமே வில்லிடம் இப்படி பேசியது இல்லை, என்பதால், வில்லுக்கு லூயிசா மேல் ஓர் ஈர்ப்பு உண்டாகும் காட்சிகளை காதலும் காமெடியும் கலந்து சொல்லியிருக்கும் காட்சிகள் செம..

லூயிசா, வில்லின் மனநிலையை மாற்ற முயற்சி மேற்கொள்கிறார். லூயிசாவின் தந்தைக்கு வேலை வாங்கித் தருகிறான் வில். ஒரு கட்டத்தில் வில்லின் மேல் காதல் வயப்படுகிறாள் லூயிசா. எல்லாம் சுபம் என நினைத்தாலும், வில் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. தான் அனுபவித்த வாழ்க்கையை, மீண்டும் அவனால் திரும்பப் பெற முடியவில்லை. காதல் கொடுத்த சந்தோஷத்தோடு மரணத்தை ஆசையோடு ஏற்றுக்கொள்ள ஸ்விட்சர்லாந்து செல்ல முடிவெடுக்கிறார் வில்.

வில்லுடன் லூயிசா இருக்கும் கடைசி நாட்களில், இருவரின் சொல்லமுடியாத அந்த காதல் மூலம், நாயகனுக்கு உணர்ச்சிகள் இல்லை, ஆனால் உணர்வுகள் கொட்டிக்கிடக்கிறது என்பதை வசனங்கள் மூலம் பரிமாறும் காட்சிகள்.. நச்.

ஜோஜோ மோயஸ் 2012-ம் ஆண்டு, எழுதிய மீ பிஃபோர் யூ நாவல், சக்கை போடு போட்டது. அதை மையமாக வைத்து, இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் தியா ஷராக் இயக்கி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பிளஸ் எமிலியா கிளார்க்கின் நடிப்பும், கிரெய்க் ஆர்ம்ஸ்ராங்கின் இசையும் தான்.

ஒரு விபத்தால், தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு, கழுத்துக்கு கீழே செயல் இழந்த மனிதர்கள் பற்றிய கதை பல எடுக்கப்பட்டு இருக்கின்றன. தி இன்டச்சபிள்ஸ், கார்த்தி நடித்த தோழா, இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த குஜாரிஷ், ஆஸ்கர் விருது வென்ற தி சீ இன்சைட், தி டைவிங் பெல்ல் அண்டு தி பட்டர்ஃபிளை என பல படங்கள் , இதே கருவை மையமாக வைத்து வெளிவந்து இருக்கிறது.

 ஆனால், குஜாரிஷ், தி சீ இன்சைட் மாதிரியான படங்களில், நோயாளி இறப்பதற்காக போராடுவது போல் எடுக்கப்பட்டு இருக்கும். இதில் நாயகன் எடுக்கும் முடிவு. இப்படத்திற்கு கடும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. ஏனென்றால் படத்தில், நோயாளிகள் வாழத் தகுதியற்றவர்கள், கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதாக வலியுறுத்தப்பட்டிருப்பதே. இதுவரையில் டிக்னிடாஸ் அமைப்பில் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் சுய அனுமதியுடன் கருணைக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.


எத்தனையோ நபர்கள் இந்த மாதிரியான குறைபாடுடன் இருப்பதால், மரணத்தை எதிர்கொள்ள ஆசைப்படுவதுண்டு. அவர்களுக்கான தீர்வை அவர்களே தேர்ந்தெடுக்கட்டும் என்பதை அழுத்தமாக பதிவுசெய்து விவாதத்தை கிளப்பியிருக்கிறது இந்தப் படம்.