Published:Updated:

வேகத்தை விட வேகமானவன்! பால் வாக்கர் நினைவுக் கட்டுரை #PaulwalkerMemories

Vikatan Correspondent
வேகத்தை விட வேகமானவன்! பால் வாக்கர் நினைவுக் கட்டுரை #PaulwalkerMemories
வேகத்தை விட வேகமானவன்! பால் வாக்கர் நினைவுக் கட்டுரை #PaulwalkerMemories
வேகத்தை விட வேகமானவன்! பால் வாக்கர் நினைவுக் கட்டுரை #PaulwalkerMemories

பால் வாக்கர் - ஹாலிவுட்டின் பீனிக்ஸ் பறவை. சூப்பர்ஸ்டார் இடத்துக்கான ஸ்டார் வார்ஸில் ரேஸ் கார்களின் மூலம் முத்திரை பதித்தவர். லேசாக பல்லைக் கடித்தபடி ஆக்ஸிலேட்டர் மிதித்து இன்ஜினை உறுமவிடும் பாலின் ஸ்டைலுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரவுன் நிற முடி, பச்சையும் நீலமும் கடந்த கண்கள், பளீர் சிரிப்பு என பெர்ஃபெக்ட் ஆணழகன். சினிமா, தோற்றம் தாண்டி பால் வாக்கரைப் பற்றி பேச பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது - நேற்றோடு (நவம்பர் 30) அவர் இறந்து மூன்றாண்டுகள் ஆகின்றன. 

பாலின் ரத்தத்திலேயே அதிரடி ஆக்‌ஷன் ஊறியிருந்தது. காரணம் பாலின் அப்பா வில்லியம் வாக்கர் ஒரு பாக்சிங் சாம்பியன். தாத்தா போர்ட் நிறுவனத்தின் ரேஸ் கார் டிரைவராக இருந்தார். அம்மா மூலமாக சின்ன சின்ன விளம்பரங்களில் தலை காட்டியவர் 'மாஸ்டர் இன் தி க்ளோசெட்' படத்தில் அறிமுகமானார். ஓவர்நைட்டில் ஒபாமா ஆவதெல்லாம் பால் வாக்கரின் விஷயத்தில் நடக்கவில்லை. விடலைப் பையனாக அறிமுகமாகி, துணை நடிகராக தலைகாட்டி, சுமாரான படங்களில் ஹீரோ வேடங்களில் நடித்து இறுதியாக 'பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' படத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்க பதினேழு ஆண்டுகள் அவர் போராட வேண்டியிருந்தது. அதனால்தானோ என்னவோ சூப்பர்ஸ்டார் இமேஜை அவர் கடைசிவரை விட்டுத்தரவே இல்லை.

முதல் பாகம் எதிர்பார்க்காத அளவிற்கு பயங்கர ஹிட். வின் டீசல், பால் வாக்கர், மிச்செல் ரோட்ரிகஸ் என நடித்த அத்தனை பேரும் லைம்லைட்டிற்கு வந்தார்கள். அப்புறமென்ன ஹாலிவுட் சம்பிரதாயப்படி அடுத்தடுத்து பாகங்கள் எடுக்க களமிறங்கியது படக்குழு. இரண்டே ஆண்டுகளில் அடுத்த பாகம் களமிறங்கி ஹிட்டடித்தது. அதன் பின் மூன்று படங்களில் லீட் ரோலில் நடித்தார் பால். மூன்றுமே அட்டர் ப்ளாப். விமர்சகர்கள் வழக்கம்போல் வறுத்தெடுக்கத் தொடங்கினார்கள். அதே நேரம் மாறுபட்ட திரைக்கதை காரணமாக பாஸ்ட் அண்ட் பியூரியஸ் மூன்றாம் பாகத்திலும் பால் வாக்கரால் நடிக்க முடியாமல் போனது.

திரும்பவும் ஆரம்பித்த இடத்தில் இருந்து தொடங்க வேண்டிய நிலை. வரமாய் வந்தது 'எய்ட் பிலோ' படம். நாய்களுக்கும் மனிதனுக்குமான உறவை உயிரும் உணர்ச்சியுமாய் சொன்ன படம். வாக்கருக்கு நாய்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும். படத்தில் 'வாழ்ந்தார்'. பாக்ஸ் ஆபிஸில் பட்டை கிளப்பியது படம். அதற்குப் பின் சில படங்களில் நடித்தாலும் ஒரு படத்தைத் தவிர மற்றவை எல்லாம் சுமார் ரகம்தான். அதை வாக்கரும் ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டார்.

பின்னர் எஃப் எஃப் வரிசையின் அடுத்தடுத்த பாகங்கள். ஒவ்வொன்றும் ஹாலிவுட்டின் வசூல் சாதனையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றன. 2013-ல் ஆறாம் பாகம் வெளியான கொஞ்ச நாட்களிலேயே ஏழாம் பாகத்தையும் ஷூட் செய்யத் தொடங்கினார்கள். தொடங்கிய இரண்டாவது மாதம், அமெரிக்கா முழுவதும் தேங்க்ஸ்கிவிங் கொண்டாட்டங்களில் டயர்டாகி ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு மத்தியான பொழுதில் கார் விபத்தில் பலியானார் பால். 

வேகத்தை விட வேகமானவன்! பால் வாக்கர் நினைவுக் கட்டுரை #PaulwalkerMemories

அதிவேகம், கவனக்குறைவு என பல காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனாலும் நடந்தது நடந்ததுதான். ரசிகர்கள் அதிர்ந்து நிற்க, பால் வாக்கர் இல்லாமல் படம் எடுப்பதா என தயங்கி நின்றது படக்குழு. 'அதெல்லாம் இல்ல, எங்களுக்காக இல்லன்னாலும் பாலுக்காக தொடர்ந்து எடுங்க' என காதலையும் பாசத்தையும் பொழிந்தது ரசிகர் கூட்டம். மிச்ச படத்தை பாலின் தம்பியை வைத்தும் சி.ஜியை வைத்தும் எடுத்து ரிலீஸ் செய்தார்கள். படம் இதுவரை இல்லாத அளவிற்கு தெறி ஹிட். அத்தனையும் பாலின் மேல் மற்றவர்கள் வைத்திருந்த காதல். 

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் இல்லாவிட்டால் பால் வாக்கர் இல்லை என சொல்பவர்களும் உண்டு. அவர்களுக்கு எல்லாம் பாலின் நண்பரான வின் டீசல் சொல்லும் பதில், 'இது ஒரு குடும்பம். பெஸ்ட் இன் தி வேர்ல்ட். எங்கள் சாதனையை எங்களால் மட்டுமே முறியடிக்க முடியும்' என்பதுதான். உண்மைதான். எஃப் எஃப் குழுவின் வித்தைகளை முறியடிக்க இனி ஏலியன்கள்தான் வரவேண்டும்.

வேகம், அதிவேகம், முரட்டுத்தனம் தாண்டி பாலுக்கு மென்மையான ஒரு மறுபக்கம் உண்டு. அதுதான் அவரை 'Reach Out WorldWide' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்க வைத்தது. பூகம்பத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிலியில் முதல் ஆளாய் களமிறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட கற்றுக் கொடுத்தது. லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பொருளாதார உதவிகளையும் செய்ய வைத்தது. பால் வாக்கர் கொண்டாடப்படுவதற்கான நிஜ காரணம் இதுதான். சிலி அரசாங்கம் நன்றிக்கடனாக பெல்லுகே நகரின் ஒரு பகுதிக்கு அவர் பெயரை சூட்டியதே இதற்கு சாட்சி.

'When you put good will out there it ́s amazing what can be accomplished' 

- வாக்கரின் வார்த்தைகள் இவை. கனவும் இதுதான். அதை நிறைவேற்ற அவருக்குப் பின் அவர் தம்பி கோடி வாக்கர் களமிறங்கியிருக்கிறார். முதல் வரியில் சொன்னது போல கோடி அண்ட் குழுவின் பணிகளின் மூலம் சாம்பலில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் பால் வாக்கர் ஒரு பீனிக்ஸைப் போல்.

பால் வாக்கருக்கு விடைகொடுக்க விருப்பமில்லாத எஃப் எஃப் குழு அவர் ஓய்வு பெறுவதாக கடைசி பாகத்தை முடித்தது. அதன்பின் பாலுக்காக ஒரு பாடலையும் டெடிகேட் செய்தார்கள். இன்றும் பாலின் நினைவு வரும்போதெல்லாம் இந்தப் பாட்டை பார்த்து கண் கசிகிறார்கள் ரசிகர்கள்.    

-நித்தீஷ்