Published:Updated:

மருத்துவமனைகளைத் தேடி அலைகிறார் ஜானி டெப்... ஏன்?

மருத்துவமனைகளைத் தேடி அலைகிறார் ஜானி டெப்... ஏன்?
மருத்துவமனைகளைத் தேடி அலைகிறார் ஜானி டெப்... ஏன்?

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால்... ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் கடற்கரைப் பகுதியில், பைரேட்ஸ் ஆஃப் தி கரிபீயன் - 5யின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. ஷுட்டிங் பிரேக். உட்கார்ந்திருந்த ஜானி டெப் திடீரென எழுகிறார். தன்னுடைய பைலட்டிடம் சொல்லி ஹெலிகாப்டரை எடுக்கச் சொல்கிறார். ப்ரிஸ்பேனில் இருக்கும் ஒரு குழந்தைகள் மருத்துவமனையின் மொட்டை மாடியில் அது தரையிறங்குகிறது. 

எலும்பில் ஏற்படும் கேன்சரான ஆஸ்டியோசர்கோமாவினால்  (Osteosarcoma) பாதிக்கப்பட்டிருக்கும் ஊலா, வராண்டாவில் நடந்துக் கொண்டிருக்கிறார். திடீரென கேப்டன் ஜாக் ஸ்பேரோவைப் பார்த்ததும், வாயடைத்துப் போய் நிற்கிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு... கேன்சர் பாதித்த எலும்புகளினால் அவரால் வேகமாக ஓடமுடியாவிட்டாலும் கூட, மெதுவாக நடந்தபடி சென்று அவரைக் கட்டி அணைத்துக் கொள்கிறார். மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் கொட்ட, ஊலாவின் அம்மா ஓரம் நின்று கொண்டிருக்கிறார். 
ரேடியேஷனின் வலியில் படுத்துக் கிடக்கிறான் 7வயது கார்டர். ஜேக்கைப் பார்த்ததும் மெதுவாக படுக்கையிலிருந்து இறங்குகிறான். கஷ்டப்பட்டு சிரிக்கிறான். முடி உதிர்ந்து போன மொட்டைத் தலை, பற்கள் விழுந்த பொக்கை வாயில் அத்தனை சிரிப்பு அவனுக்கு. அவனுடன் சிரித்துப் பேசி அவனை மகிழ்ச்சிப் படுத்துகிறார், ஜானி டெப். இப்படியாக வாழ்வின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் பல குழந்தைகளை, அவர்களின் வலி மறைத்து சிரிக்க வைத்தார் ஜானி டெப். 

அதே போன்று, சில மாதங்களுக்கு முன்பு ஒரு பள்ளிக் கூடத்திற்கும் திடீர் விசிட் அடித்தார் ஜானி டெப். அதன் தொடர்ச்சியாக, தற்போது லண்டனில் இருக்கும் ஒரு குழந்தைகள் மருத்துவமனைக்கு தன்னுடைய கேப்டன் ஜேக் ஸ்பேரோ கெட்டப்பில் சென்று குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார். மலியா என்ற ஒரு பெண் குழந்தை ஹார்ட் சர்ஜரி முடித்துவிட்டு பெரும் வலியில் படுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் கிட்டத்தட்ட கால் மணி நேரம் செலவிட்டு, அந்த முகத்தில் புன்னகையை வரவைத்துள்ளார். வதந்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் புகழ்பெற்ற ஜானி டெப்பின் இந்த செயலுக்கும் சிலர் "விளம்பரத்திற்காக செய்கிறார்" என்ற விமர்சனத்தை முன்வைத்தார்கள். ஆனால், ஜானிடெப் செய்யும் இந்த உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்குப் பின்னர், ஒரு உணர்ச்சிமயமான கதை இருக்கிறது. 

ஜானி டெப்பின் வாழ்வில் சில காதல்கள் கடந்து போயிருக்கின்றன... மனைவிகள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால், தன் குழந்தைகள் மீது என்றுமே பேரன்பு செலுத்தும் தந்தையாகவே அவர் இருந்து வந்துள்ளார் . தான் செய்யும் இந்த காரியங்களுக்குப் பின்னரான காரணத்தை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஜானி டெப் வெளிப்படுத்தியுள்ளார்...

" 2007 ஆம் ஆண்டு... என் 7 வயது மகள் லில்லி ரோசுக்கு கிட்னி பெயிலியர் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவளோடு நான் கழித்த அந்த 15 நாட்கள் என் வாழ்வில் நான் மறக்க முடியாதது. அந்த நாட்களில் நான் அனுபவித்த வலியை என்னால் வார்த்தைகளில் வடித்திட முடியாது. அவள் பிழைத்து வந்துவிடுவாளா? என்ற கேள்வியும், வலியில் அவள் துடிப்பதையும் பார்க்கும் போது எனக்குள் ஏற்பட்ட அந்த வலி... நான் செய்யும் இந்த சின்ன விஷயங்களால் குழந்தைகள் மகிழ்ச்சியடைவது ஒரு பக்கம் என்றால், தங்கள் குழந்தைகள் சிரிப்பதைக் கண்டு... அந்தப் பெற்றோர் முகத்தில் வருமே ஒரு சின்ன நிம்மதி... அதற்காகத் தான் இவ்வளவும் செய்கிறேன்... வேறெந்த காரணங்களும் கிடையாது..." என்ற உணர்ச்சிகரமான பதிலை அளித்திருந்தார். தான் போகும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு தன்னாலான பொருளாதார உதவிகளையும் ஜானி டெப் செய்வது குறிப்பிடத்தக்கது. 

ஜானி டெப்பை உலக சினிமா ரசிகர்கள் கேப்டன் ஜாக் ஸ்பேரோவாகவேத் தான் பார்க்கிறார்கள். கேப்டன் கதாபாத்திரம் கொஞ்சம் நெகட்டிவ்வாக தெரிந்தாலும், அது ஒரு ஹீரோயிக் கதாபாத்திரம் தான். ஜானி டெப்பும், நிஜத்தில் அப்படித்தான் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். பைரேட்ஸ் ஆஃப் தி கரிபீயன் படத்தில், ஜாக் ஸ்பேரோவின் சில ஹீரோயிக் வசனங்கள்...

" உங்கள் இதயத்தை நீங்கள் பூட்டி வைக்க நினைத்தால், நிச்சயம் அதைத் தொலைத்து விடுவீர்கள்..."

" பிரச்சினை ஒரு பிரச்சினையே அல்ல. பிரச்சினையை நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பது தான் பிரச்சினை..." 

" வெள்ளியும், தங்கமும் மட்டுமே புதையல்கள் அல்ல..." 

                                                                                                                                - இரா. கலைச் செல்வன்.