Published:Updated:

மிஸ் பண்ணக் கூடாத 2016-ன் டாப் 10 ஹாலிவுட் படங்கள்..! #2016Rewind

Vikatan Correspondent
மிஸ் பண்ணக் கூடாத 2016-ன் டாப் 10 ஹாலிவுட் படங்கள்..! #2016Rewind
மிஸ் பண்ணக் கூடாத 2016-ன் டாப் 10 ஹாலிவுட் படங்கள்..! #2016Rewind

தமிழ் படங்களைப் போல, நாம் லைக்கிடும் பிற மொழிப்படங்களில் முதலிடம் பிடிப்பது ஹாலிவுட். இந்த வருடம் மட்டும் ஹாலிவுட்டில் 180க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகிவிட்டன. அதில் தோராயமாக 60 படங்கள் மட்டுமே இந்தியாவில் வெளியாகியிருக்கும். அனிமேஷன், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, சூப்பர் மேன் கதைகள் என்று இந்தவருடம் வெளியான படங்களில் மிஸ் பண்ணக்கூடாத 10 படங்கள் இது. 

தி ரெவனன்ட் : 

கடந்த வருடமே அமெரிக்காவில் ரிலீஸாகிவிட்டாலும், இந்தியாவில் இந்த வருட ஜனவரியில் தான் வெளியானது. ரெவனன்ட் என்றால் மரணத்தில் விளிம்பிலிருந்து மீண்டு வந்தவன் என்பது பொருள். ஐந்துமுறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு மிஸ் ஆனது. இறுதியில் ஆஸ்காரை லியோனார்டோ டிகாப்ரியோ தன்வசப்படுத்தியது இந்தப்படத்தில் தான். இந்தியாவில் வெளியாகி வசூலிலும் சூப்பர்ஹிட். தனிமையிலிருப்பவர்களையும், வாழ்க்கையில் வெறுமையின் உச்சியில் இருப்பவர்களையும் கவர்ந்திழுக்கும் படம் ரெவனன்ட். இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மைக்கேல் புன்கே எழுதிய நாவலை தழுவி Alejandro González Iñárritu இயக்கினார். மகனைக் கொன்றவனை தந்தை பழிவாங்கும் பழைய கதை தான் என்றாலும், திரைக்கதையில் பிரம்மிப்பூட்டுகிறான் ரெவனன்ட். மொத்த படத்திற்குமான க்ளாஸ் சீன், கரடியுடனான லியோவின் சண்டைக்காட்சிகள் தான். 

ஜங்கிள் புக்: 

இந்தியக் காடுகளை மையமாக கொண்டு ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான கதை. தூர்தர்ஷனில் பார்த்துரசித்த இந்த தொடரை திரையில் முழுபடமாக பார்ப்பதே செம கிக். ஸ்பெஷல் என்னவென்றால், பொதுவாக ஹாலிவுட் படங்கள் அமெரிக்காவில் ரிலீஸாகி ஒரு வாரம் கழித்து தான் இந்தியாவில் வெளியாகும். ஆனால் இங்கு வெளியாகி ஒரு வாரம் கழித்து தான் இப்படம் அமெரிக்காவில் ரிலீஸானது. மனித இனத்தைச் சேர்ந்த மெளக்லியை, தன் மகனாக வளர்க்கிறது பெண் ஓநாய் ராக்‌ஷா. காட்டுக்குள் வளரும் மெளக்லியால் மிருகங்களுக்கு ஆபத்து என்று கொல்லத் துடிக்கும் புலி ஷேர்கான். மெளக்லி காட்டை விட்டு வெளியேறினானா?, “பேட் பாய்” ஷேர்கானின் கதி என்னவானது?, மெளக்லிக்கான இடம் எதுவென்பதே கதை. கா என்ற பாம்பு, கரடி, குரங்கு கூட்டம் என்று அனைத்துமே செமையான அட்வென்சர்ஸ். மெளக்லியால் காட்டுக்குள் வரும் சிகப்பு பூ காட்சிகள்.... என சிறுவர்களை மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பெஸ்ட் நாஸ்டாலஜிக் மொமண்ட்.

தி மேன் ஹு ந்யூ இன்ஃபினிட்டி: 

சிறு கூட்டல்-கழித்தல் கணக்கிற்கு கால்குலேட்டரைத்தேடும் மார்டன் யூத்ஸ் தெரிந்துகொள்ளவேண்டிய மனிதர் இவர். கணிதமேதை ஸ்ரீநிவாச ராமானுஜத்தின் வாழ்க்கை பல பயோபிக் படங்களாக வெளியாகிவிட்டாலும், இது கொஞ்சம் ஸ்பெஷல். ஹாலிவுட் இயக்குநர்  மேத்யூ ப்ரவுன் இயக்கியிருக்கும் “தி மேன் ஹு ந்யூ இன்ஃபினிட்டி” இந்தியாவிலிருந்து லண்டன் பயணிக்கும் ராமானுஜத்தின் இறுதிக் காலக்கட்டத்தை விவரிக்கிறது. ராமானுஜமாக ஒவ்வொரு காட்சியிலும் நச்சென பொருந்தியிருப்பார் தேவ் படேல். ஹார்டிக்கும் ராமானுஜத்திற்குமான காட்சியே முழு படத்திற்கான காட்சியின் வீரியத்தை புரிய வைத்துவிடும். ராமானுஜம் தன்னுடைய கணிதவியல் புத்தகத்தை ஹார்டியிடம் காட்டுகிறார். ஹார்டி,“ இதற்கான மதிப்பீடுகளை கண்டறிவதற்கே முழு வாழ்நாளையும் செலவழிக்கவேண்டுமே” என்று சொல்லும் நேரத்தில் ராமானுஜம் தன்னுடைய இரண்டாவது கணிதவியல் புத்தகத்தை நீட்டுவார். நம்மால் கணிக்கமுடியாத வேகம் கொண்ட ராமானுஜத்தின் கவணிக்கவேண்டிய பக்கங்கள் இந்தப்படம். 

பீலே: 

வெள்ளையர்கள் கோலோச்சிய கால்பந்து விளையாட்டில், முதன்முறையாக கருப்பின பீலே அசத்திய அசாத்தியமான திரைக்கதையை 107 நிமிடங்களில் தொய்வில்லாமல் சொல்லும் படம் தான் “பீலே”. வழக்கமான விளையாட்டு சம்பந்தமான படம் தான் என்றாலும் கதாபாத்திரங்களின் நடிப்பும், புத்துணர்சியைத் தூண்டும் கதைக்களமும் தான் நம்மை உணர்வுப்பூர்வமாக படத்தோடு ஒன்றிணைக்கும். Edson Arantes do Nascimento என்ற சிறுவன் பீலேவாக எப்படி மாறினான் என்பதில் தொடங்கி, அவன் சந்தித்த சோகங்கள், அவமானங்கள் இதையெல்லாம் தாண்டிய மிகப்பெரிய வெற்றி தான் திரைக்கதை. படத்தின் மற்றுமொரு ப்ளஸ் ஏ.ஆர்.ரஹ்மான் இசை. “ஜெய் கோ” போல இங்கே “ஜிங்கா ஜிங்கா”வும் வேற லெவல். 

தி லெஜண்ட் ஆஃப் டார்சான்: 

பிரம்மிப்பூட்டும் அடர் காடுகள், மொரட்டுத்தனமான மிருகங்கள், காட்டாறுகள் என மிரட்டும் காட்டின் ஒரே ஹீரோ டார்சான். எவராலும் நெருங்கமுடியாக அசாத்திய வீரன். காட்டில் வளர்ந்த டார்சான் திருமணமாகி நகரத்தில் வாழ்கிறான். காங்கோ பழங்குடியின தலைவரிடமிருந்து வரும் அழைப்பினால் காட்டிற்குள் மீண்டும் வருகிறான் டார்சான். வைரத்திற்காக காட்டையே அடிமைப்படுத்த நினைக்கும் கிரிஸ்டோஃபரிடமிருந்து காட்டையும் தன் மனைவியையும் காப்பாற்றும் சுவாரஸ்ய பயணமே கதை. டார்சானாக அலெக்ஸாண்டர் மிரளவைத்திருப்பார். பழைய நண்பன் என்று சிங்கத்தை கட்டிப்பிடிப்பது, அடிபட்ட இடத்தில் எறும்பினை வைத்து தையல் போடுவது, சகோதரர்களான மனித குரங்குடன் சண்டையிடுவது என்று எல்லாமே பிரம்மிப்பின் உச்சம். “இந்த காடு டார்சானுடையது. அவனை யாராலும் வீழ்த்தமுடியாது. என் காதலுக்காக அவன் வருவான்” என்று காதல் மனைவியின் ரொமான்ஸூம் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். ஹாரிபாட்டரின் இறுதி நான்கு பாகங்களை இயக்கிய டேவிட் யெட்ஸ் தான் இப்பட இயக்குநர். 

டோன்ட் ப்ரீத்: 

அமெரிக்காவில் வெளியாகி முதல் வாரத்திலேயே பட்ஜெட்டை விட நான்கு மடங்கு வசூல். பக்காவான ஹாரர் படம் பாஸ், என்ன த்ரில்லிங்கு.... என்று பதறவைத்த படம் தான் “டோன்ட் ப்ரீத்”. கண்பார்வையற்ற முதியவரின் வீட்டிற்குள் திருடுவதற்காக மூன்று பேர் நுழைகிறார்கள். அங்கு நடக்கும் ஒவ்வொரு காட்சிக்குமே 1000 லைக்ஸ். அந்த அளவிற்கு ஹாரர் பிரியர்களுக்கான ஃபுல் மீல்ஸ். க்ளைமேக்ஸை முதலிலேயே சொல்லும் அசாத்திய துணிவு, ஒவ்வொருவரின் பார்வையிலும் நகரும் கேமிரா கண்கள், அலறல் சத்தங்கள் ஏதுமின்றி இதயத் துடிப்பை எகிறவைப்பது என்று படமே பக்கா பேக்கேஜ். இந்த வருடத்திற்கான தி பெஸ்ட் ஹாரர் படம் இது தான்.  கோலிவுட்டில் விக்ரம் நடிப்பில் இப்படம் ரீமேக் செய்யப்படலாம் என்ற செய்தியும் உலாவுகிறது. Don't Miss... Don't Breathe..

 தி கேர்ள் ஆன் தி டிரெய்ன்: 

மூன்று பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளும், சம்பந்தமே இல்லாத அந்த மூன்றுபேரையும் இணைக்கும் மையப்புள்ளியும், இறுதியில் என்ன நடக்கிறது என்பதும் தான் தி கேர்ள் ஆன் தி டிரெய்ன். பிரிட்டிஷ் எழுத்தாளர் பெளலா ஹாக்கின்ஸ் எழுதிய நாவலை மையமாகக் கொண்டு உருவான படம். நாவலில் கதை லண்டனில் நடக்கும், படத்தில் நியூயார்க்கில் நடக்கிறது... அவ்வளவு தான் வித்தியாசம். கணவனை இழந்த பெண்ணாக, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவராக ரேச்சல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எமிலி பிளன்ட் தான் இப்படத்தின் வுமன் ஆஃப் தி மூவி. ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் மிரட்டுகிறார். அடுத்த ஆஸ்காரில் இவருக்கு விருது உறுதி என்கிறார்கள் விமர்சகர்கள். எமோஷனாக நிச்சயம் நம்மை உறையவைக்கும்.

தி டேனிஷ் கேர்ள்: 

ஆண் பெண்ணாக மாறுவதற்கான சிகிச்சைப் பெற்று இறந்து போன முதல் திருநங்கையாக அறியப்படும் லில்லி எல்போவின் பயோகிராஃபி கதையே டேனிஷ் கேர்ள். திருநங்கையாக எட்டி ரெட்மெய்னி நடித்திருக்கிறார். டாம் ஹூப்பர் இயக்கியிருக்கும் இப்படம், உலகளவில் பெரிய ஹிட்டடித்தது. 15 மில்லியனில் உருவான இப்படம், 65 மில்லியன் வரை வசூலிலும் எகிறியது. தன்னுடைய மனைவியின் உடை, பிற மாடல்களின் உடைகள் மீது எட்டி ஏக்கத்துடன் பார்க்கும் காட்சிகள், பெண்களுக்கான உடையை போட்டு பார்க்கும் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியுமே உணர்ச்சியின் உச்சத்தில் நிச்சயம் நம்மை ஆழ்த்தும். படத்தின் ப்ளஸ்ஸே 1920களில் கதை நடப்பதால் அதற்கேற்ற உடை, நாகரிகம், சிம்பிளான செட் என்று நம் கண்களைக் கவரும். 

ஜூட்டோபியா: 

மனித இனம் இந்தப் பூமியில் தோன்றாமல் விலங்குகளே முழு பூமியிலும் ஆக்கிரமித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அதுதான் ஜூட்டோபியா. விலங்குகளின் நகரம் தான் இந்த ஜூட்டோபியா. காவல்துறையில் சேர்ந்து சாகசம் செய்ய ஆசைப்படுகிறது ஜூடி ஹாப்ஸ் என்னும் பெண் முயல். நகரத்தில் நடக்கும் சில பிரச்னைகளால், ஜூடிக்கு ஒரு பணி தரப்படுகிறது. அதை சரியாக இந்த முயல் செய்ததா என்பதே கதை. டிஸினியின் தயாரிப்பில் பைரன் ஹோவர்ட் மற்றும் ரிச் மூர் இயக்கியிருக்கும் இப்படம் கற்பனையின் உச்சம். கம்பீரமான புலி கிளப்பில் டான்ஸ் ஆடுவது, தம்மாத்தூண்டு முயல் போலீஸாவதெல்லாம் ஜூடோபியாவில் மட்டும் தான் நடக்கும். 

மோனா: 

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் அனிமேஷன் கலக்கல் 3டி படம் மோனா. குழந்தைகளுக்காகவே செய்யப்பட்ட அழகி தான் இந்த மோனா. வானத்திற்கும் காற்றிற்கும் டெமி கடவுளான மௌயி, பல வருடங்களுக்கு முன் தீவுகளின் கடவுளான டீ ஃபீட்டியின் இதயத்தை திருடிவிடுகிறார். மீண்டும் அந்த இதயத்தை டீ ஃபீட்டியிடம் கொண்டு சேர்க்கும் சாகசப் பயணத்தை மேற்கொள்கிறார் மோனா. பாட்டுக்குள் படமா, படத்திற்குள் பாட்டானு கன்ப்யூஷன் கூட ஆகலாம். இந்த தாளமும், ராகமும் நிச்சயம் நம்மை கிரங்கடிக்கும். க்ளைமேக்ஸையே ஓர் பாட்டில் முடித்துவிடுவது குழந்தைகளைக் குஷிப்படுத்தும். ஹாலிவுட்டை ஆட்டிப்படைத்த வெள்ளை நிற டிஸ்னி அனிமேஷனுக்கு நடுவே இந்த வருடத்திற்கான டாப் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டை திருடியிருப்பவர், மாநிற மோனா. 

பி.எஸ்.முத்து