Published:Updated:

அரசியல் பேசும் அயல்நாட்டு சினிமாக்கள்! #WorldPoliticalMovies

நித்திஷ்
அரசியல் பேசும் அயல்நாட்டு சினிமாக்கள்! #WorldPoliticalMovies
அரசியல் பேசும் அயல்நாட்டு சினிமாக்கள்! #WorldPoliticalMovies

ரசியல் பேசும் படங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். 'முதல்வன்', 'அமைதிப்படை' என மேலோட்டமாக அரசியல் பேசும் படங்கள்கூட பல சிக்கல்கள் தாண்டித்தான் வெளியாகின்றன. சமீபத்தில் வெளியான 'ஜோக்கர்' மட்டும்தான் விதிவிலக்கு. ஆனால் உலக சினிமாவைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னைகள் இல்லை. அவர்கள் அசால்ட்டாய் அரசியலை உறித்து உப்பு தடவிவிடுகிறார்கள். அப்படி பொலிடிக்கல் ஜானரில் வெளியான சில முக்கியப் படங்களின் லிஸ்ட்தான் இது. 

Citizen Kane :

1941-ல் வெளியான அரசியல் படம் இது. பணக்காரக் குடும்பத்தில் பிறந்த சார்லஸ் கேன் காலேஜ் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு செய்தித்தாள் நிறுவனம் ஒன்றை நடத்தத் தொடங்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நாட்டின் மிக முக்கிய அதிகார மையமாக மாறுவதுதான் கதை. இந்தக் கதை அமெரிக்காவின் மிகப்பெரும் ஊடகங்களுக்குச் சொந்தக்காரரான வில்லியம் ஹெர்ஸ்ட் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்ற பேச்சு உண்டு. ரிலீஸானதும் விமர்சகர்கள் பாராட்டினாலும் படம் பெரிதாகப் போகவில்லை. பின்னர் ரீ ரிலிஸ் செய்ய, படம் சூப்பர்ஹிட். 9 பிரிவுகளில் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த திரைக்கதைக்காக விருதும் பெற்றது.

Mr. Smith Goes to Washington :

லூயிஸ் பாஸ்டரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் 1939-ல் வெளியானது. ஸ்மித் என்ற இளைஞர் அமெரிக்க செனட்டராக நியமிக்கப்படுகிறார். சுற்றி எங்கும் ஊழல் நிறைந்திருப்பதைப் பார்ப்பவர் அதற்கு எதிராக போராடுவதுதான் கதை. இதை நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள். படம் சிலபல சிக்கல்களோடுதான் வெளியானது. ஆனால் 'தி பெஸ்ட்' எனக் கொண்டாடினார்கள் விமர்சகர்கள். ஹீரோ ஸ்டீவர்டுக்கு அதன்பின் சுக்கிர திசைதான். பதினோரு பிரிவுகளில் நாமினேட் ஆகி சிறந்த கதைக்கான ஆஸ்கார் விருதை வென்றது. 

Election :

இதுவும் டாம் பெர்ரோட்டா என்பவர் எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான். இதில் வித்தியாசமாய் பள்ளியைக் கதைக்களமாக அமைத்திருந்தார்கள். ட்ரேஸி தன் பள்ளியில் நடக்கும் மாணவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற நினைக்கிறாள். இது பிடிக்காத மெக் அலிஸ்டர் என்ற ஆசிரியர் அவள் வெற்றியைத் தடுக்க முயற்சிக்கிறார். இந்த ஜாலிவாலி போட்டியில் யார் ஜெயித்தார்கள் என்பது மிச்சமுள்ள ரோலர்கோஸ்டர் சவாரி. படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அநியாயத்திற்கு சொதப்பியது. ஆனால் விமர்சகர்கள் இன்றுவரை படத்தைக் கொண்டாடுகிறார்கள். 

The Candidate :

ஏற்கெனவே வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு தேர்தலில் போட்டியிடுவது எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்கான பதிலை காமெடியாக சொல்லியிருப்பார்கள் இந்தப் படத்தில். தேர்தலில் பழம் தின்று கொட்டை போட்ட ஜார்மனை எதிர்த்து களமிறக்கப்படுகிறார் ஒரு புதுமுகம். தோல்வி நிச்சயம் என உறுதியான நிலையில் ஜாலியாக நினைத்ததை எல்லாம் சொல்லி பிரசாரம் செய்கிறார் அந்த புதுமுகம் மெக்கே. கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே இவருக்கு ஆதரவு அதிகரிக்க, எதிர்த்தரப்பு பயப்படுகிறது. அதற்குப் பின் என்ன நடந்தது என்பதுதான் கதை. திரைக்கதைக்கான ஆஸ்காரை வென்ற இந்தப் படம் வசூலிலும் குறை வைக்கவில்லை.

Lincoln :

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் க்ளாஸிக் சினிமா. அடிமைத்தனத்தை ஒழித்துக்கட்ட தைரியமாகப் போராடிய லிங்கனின் வரலாற்றைச் சொல்லும் படம். நியூயார்க் திரைப்பட விழாவில் முதன்முதலாக திரையிடப்பட்டபோதே அபார வரவேற்பைப் பெற்றது. அதன்பின் தியேட்டர்களில் ரிலீஸாக வாரி அணைத்து வரவேற்றார்கள் ரசிகர்களும் விமர்சகர்களும். லிங்கனாகவே வாழ்ந்திருக்கிறார் என ஹீரோ டேனியல் டே லூயிஸுக்கு வாழ்த்துமழை பொழிந்தது. 12 பிரிவுகளில் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டு சிறந்த ப்ரொடக்‌ஷன் டிசைன், சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் வென்றது.

Wag the Dog :

லேரி பெய்ன்ஹார்ட்டின் அமெரிக்கன் ஹீரோ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட சினிமா. வித்தகக் கலைஞன் ராபர்ட் டி நீரோவின் மற்றுமொரு மெர்சல் நடிப்பு இந்தப் படத்தில் வெளிப்பட்டது. பலான சர்ச்சை ஒன்றால் மொத்த அதிபர் தேர்தலும் கேள்விக்குள்ளாகும் நிலையில் அதை திசைதிருப்ப யாரும் எதிர்ப்பார்க்காத சம்பவம் ஒன்றை நடத்திக் காட்டுகிறார் ராபர்ட் டி நீரோ. அரசு நினைத்தால் மக்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்பதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன். படம் வெளியான கொஞ்ச நாளிலேயே நிஜத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடக்க, பப்ளிசிட்டி பிய்த்துக்கொண்டது படத்திற்கு. 

In the Loop :

பி.பி.சி-யில் 'தி திக் ஆஃப் இட்' என்ற பெயரில் சீரியலாக வெளியாகி ஹிட்டடித்த கதையை முழுநீளப் படமாக மாற்றி எடுத்தார்கள். உலக அரசியலின் இரு பெரும் நாட்டாமைகளான அமெரிக்கா, இங்கிலாந்தைக் கலாய்த்து எடுக்கப்பட்ட படம் இது. மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்து போர் தொடுக்க முடிவெடுக்கின்றன இரு நாட்டின் அரசுகள். அதைத் தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பிற்கும் நடுவே நடக்கும் அகாதுகா சம்பவங்கள்தான் கதை. முக்கியத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

The Ides of March :

சால்ட் அண்ட் பெப்பர் ஹீரோ ஜார்ஜ் க்ளூனி இயக்கி நடித்த படம். அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுகிறார் மைக் மோரிஸ். தன் பிரசாரத் திட்டங்களை வடிவமைக்க வலுவான ஆள் தேவை என மேயர்ஸ் என்பவனை நியமிக்கிறார். ஒரு கட்டத்தில் மேயர்ஸுக்கும் மோரிஸுக்கும் முட்டிக்கொள்கிறது. மோரிஸை பிளாக்மெயில் செய்ய முடிவெடுக்கிறான் மேயர்ஸ். அதன்பின் நடக்கும் அரசியல் திருப்பங்கள்தான் கதை. பாக்ஸ் ஆபீஸிலும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி, படத்திற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு.  

- நித்திஷ்