Published:Updated:

ஆஸ்கர் மூலம் கறுப்பினக் கலைஞர்களின் வாழ்வில் தீபமேற்றிய ‘மூன்லைட்’! #Oscar2017 #Moonlight

பா.விஜயலட்சுமி
ஆஸ்கர் மூலம் கறுப்பினக் கலைஞர்களின் வாழ்வில் தீபமேற்றிய ‘மூன்லைட்’!  #Oscar2017  #Moonlight
ஆஸ்கர் மூலம் கறுப்பினக் கலைஞர்களின் வாழ்வில் தீபமேற்றிய ‘மூன்லைட்’! #Oscar2017 #Moonlight

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் விழாவில், சர்வதேச அளவில் சிறந்த திரைப்படத்துக்கான உயரிய ஆஸ்கர் விருதினை வென்று உலக சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது ‘மூன்லைட்’ திரைப்படம். இவ்விருதினைப் பெற்றதன் மூலமாக அமெரிக்க கறுப்பினத்தவர்களின் திரைக்கனவுகளுக்கு ஒளிபாய்ச்சியுள்ளது மூன்லைட். ஆஸ்கர் விருதுகளுக்காக, 8 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது இப்படம். அதில் சிறந்த படம், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த தழுவல் திரைக்கதை என மூன்று பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது.

‘மூன் லைட் ப்ளாக் பாய்ஸ் லுக் ப்ளூ’ என்னும் நாடகத்தழுவல்தான் படத்தின் கதை. ஒரிஜினல் கதையை எழுதிய டாரெல் ஆல்வின் மெக்ரேனி, பேரி ஜென்கின்ஸ் இணையில் ஜென்கின்ஸ் மூன்லைட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ‛மூன்லைட்’ ஆஸ்கர் வெல்ல இரு காரணம். முதலாவது கதை. இரண்டாவது கதை சொல்லிய நேர்த்தி.

போஸ்டரிலேயே கதையைப் புரிய வைக்கும் அளவிற்கு மூன்லைட் திரைப்படத்திற்கான உழைப்பைக் கொட்டியுள்ளனர் குழுவினர். ஒரு கறுப்பின இளைஞனின் வாழ்க்கை, பயணப்படும் மூன்று பருவநிலைகள்தான் ‘மூன்லைட்’. வெறுப்பு, துரோகம், சோகம், தனிமை என சுற்றிச் சுழலும் வாழ்க்கையில் அவனது பயணம் தொடர்கிறது. அவனது 20 ஆண்டுகால வாழ்க்கையை கதை நகர்விலேயே சொல்லி முடிக்கிறார் இயக்குநர். கூடவே, ‘தான் யார்?’ என்பதை அவன் உணர்ந்துகொள்ளும் தருணத்தையும், அற்புதமாக உணர்வோட்டத்துடன் படம்பிடித்துக் காட்டியுள்ளார் ஜென்கின்ஸ். கதையின் முக்கிய கரு, அமெரிக்க மியாமி பகுதியில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் கும்பல்களும், அதன் உருவாக்கமும். படம் முழுவதும் கதைதான் ஹீரோ.

முதல் பகுதி, ‘லிட்டில்’ என்னும் டைட்டிலுடன் விரிகிறது. ‘சிரோன்’ - அதுதான் நம்முடைய கதாநாயகனின் பெயர். வீட்டை விட்டு ஓடிவந்துவிடும், கூச்சசுபாவமுள்ள சிரோன் என்னும் சிறுவன், தன்னை வம்பிழுக்கும் கும்பலிடமிருந்து தப்பிக்க ஓடி ஒளியும் நிலையில் ஜூவான் (மகெர்ஷலா அலி - மூன்லைட் திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றவர்) என்பவரிடம் அடைக்கலம் அடைகிறான். அவன் தன்னை எல்லோரும் அழைக்கும் லிட்டில் என்ற பெயரிலேயே அறிமுகம் செய்து கொள்கிறான். ஜூவான் தன்னுடைய வீட்டிற்கு சிரோனை அழைத்துச் செல்கிறார். அவரிடம் தன்னுடைய கதையைச் சொல்கிறான் சிரோன். மறுதினம், சிரோனை அவனது தாயான பவ்லா (நயோமி ஹாரிஸ்) விடம் ஒப்படைக்கிறார் ஜூவான். சிரோனின் ஒரே ஒரு உற்ற நண்பன் கெவின் (ஜேடன் பைனெர்). 

சிரோன், ஜூவானுடன் அடிக்கடி சந்திப்பை ஏற்படுத்திக் கொள்கிறான். சிரோனுக்கு கடலில் நீச்சலடிக்க சொல்லித்தருகிறார் ஜூவான். தாயின் நடவடிக்கைகளால் மனம் நொந்துபோகும் சிரோன், அவளை வெறுப்பதாக ஜூவான் மற்றும் அவரது காதலி தெரசாவிடம் பகிர்ந்து கொள்கிறான். அதற்காக ஆறுதல் சொல்லும் ஜூவானிடம், ‘நீங்கள் போதைமருந்துகளை விற்கிறீர்களா?’ என்று கேட்கிறான் சிரோன். தலையைக் குனிந்து கொள்ளும் ஜூவானிடம், ‘என் அம்மாவும் போதைப்பொருள் எடுத்துக்கொள்கிறார்தானே?’ என்று கேட்டுவிட்டு எழுந்து சென்றுவிடுகிறான். இந்த இடத்தில் நிறைவுபெறுகிறது ‘லிட்டில்’ சிரோனின் கதை. ‘லிட்டில்’ சிரோனாக நடித்திருந்தது அலெக்ஸ் ஹைபெர்ட்.

இரண்டாவது பகுதியில், சிரோன் (ஆஸ்டன் சாண்டெர்ஸ்) இருப்பது டீன் ஏஜ் வயதில். அவரது சக பள்ளி மாணவனான டெரல் என்பவனால் கேலிக்கு உள்ளாக்கப்படுகிறான். இதிலும் கெவின், சிரோனுடைய மனம் புரிந்த தோழமையாகத் தொடர்கிறான். போதைக்கு மேலும் அடிமையாகும் பவ்லா, போதைப்பொருளுக்காகத் தன்னைப் பாலியல் தொழிலும் ஈடுபடுத்திக் கொள்கிறாள். ஜூவான் இறந்தபிறகு, தெரசாவுடனேயே தங்கிவிடுகிறான் சிரோன். அவனுக்கு தெரசா கொடுக்கும் பணத்தை, வற்புறுத்திப் பிடுங்கிக் கொள்கிறாள் பவ்லா.

ஒருநாள் இரவு, அருகிலிருக்கும் கடற்கரையில் சந்தித்துக்கொள்ளும் சிரோனும், கெவினும் ஒருவருக்கொருவர் செல்லப்பெயர் ஒன்றினை இட்டுக் கொள்கிறார்கள். சிரோனுக்கு கெவின், ‘ப்ளாக்’ என்று பெயரிடுகிறான். இருவருக்குமிடையில் மெலிதான ஒரு உணர்ச்சித்தழுவல் நடைபெறுகிறது. மறுநாள், சிரோன் தாக்கப்படுகிறான். காரணம்,  டெரல். மறுநாள் வகுப்பறைக்குச் செல்லும் சிரோன் டெரலை நாற்காலியால் அடித்துத் துவைத்து விடுகிறான். அதற்காக காவல்துறை அவனைக் கைது செய்கிறது.

மிஞ்சியிருப்பது, ‘ப்ளாக்’ என்னும் இளைஞனின் கதை மட்டுமே. சிரோன், கெவின் வாழ்க்கை இளைஞர்களாக எப்படிப் பயணப்பட்டது? தான் வெறுத்த போதைப்பொருள் விற்பனைக்குள் சிரோன் எப்படிச் சிக்கிக் கொள்கிறான் என்பதே படம். கடந்த வருடம், ஆஸ்கரில் கறுப்பினத்தவருக்கு விருதுகள் மறுக்கப்படுகிறது என்கிற பிரச்னை வெடித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் கறுப்பின நடிகர்களும், திறமையாளர்களும் கெளரவிக்கப்பட்டுள்ளனர். அதில், ‘மூன்லைட்’ திரைப்படமும் ஒன்று.  கறுப்பின நடிகர்களுக்கு விருது, முதல் முறையாக இஸ்லாமியருக்கு விருது, தடை செய்யப்பட்ட ஈரான் தேசத்து சேல்ஸ்மேன் படத்துக்கு விருது என இந்த ஆஸ்கர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எதிரான சாட்டையடியாக இருக்கிறது. 

- பா.விஜயலட்சுமி