Published:Updated:

கார்ஸ்-3, கோகோ, டாய் ஸ்டோரி.. அனிமேஷன் காதலர்களுக்கு காத்திருக்கும் விருந்து! #DisneyMovies

முத்து பகவத்
கார்ஸ்-3, கோகோ, டாய் ஸ்டோரி.. அனிமேஷன் காதலர்களுக்கு காத்திருக்கும் விருந்து! #DisneyMovies
கார்ஸ்-3, கோகோ, டாய் ஸ்டோரி.. அனிமேஷன் காதலர்களுக்கு காத்திருக்கும் விருந்து! #DisneyMovies

அனிமேஷன் படங்களில் மிகப்பெரிய புரட்சியைச் செய்தது வால்ட் டிஸ்னிதான். டிஸ்னியின் அடிபொளி  கார்ட்டூனான மிக்கி மவுஸ் கேரக்டரில் ஆரம்பித்த மவுசு, இன்று வரையிலும் குறையவில்லை. ஒவ்வொரு படமும் கற்பனையின் உச்சத்தில் நம்மை ஆழ்த்தும். உச்ச ஹீரோக்களின் படங்களைக்கூட அனிமேஷன் படங்கள் ஆட்டம்கொள்ளவைக்கும். அந்த அளவுக்கு அனிமேஷன் படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. கடந்த வருடம் டிஸ்னி ரிலீஸ்  செய்த ‘மோனா’ ‘ஃபைண்டிங் டோரி’ மற்றும் `ஜூடோஃபியா’ போன்றவை உலகத் திரைகளில் மாஸ் ஹிட். வால்ட் டிஸ்னியும் அதன் செல்லப்பிள்ளையான ஃபிக்ஸர் நிறுவனமும்  இணைந்து அடுத்தடுத்து வெளியிடும் படங்கள் இவைதான்! 

கார்ஸ் 3:

கார்கள் மட்டும்தான் உலகம்; ஹீரோஸ். பல விமர்சனங்களுக்கு மத்தியில் இரண்டு பாகங்கள் வெளியாகிவிட்டன. படம் முழுக்க ரேஸ்தான். ஜேம்ஸ்பாண்ட் டெக்னிக், கார் சண்டை, கார்களுக்கு என தனிவீடு என, கார் பிரியர்களின் லைக்ஸை அள்ளுகிறது இந்தப் படம். படத்தின் மெயின் கேரக்டரான லைட்னிங் மெக்குயின், பல ரேஸ்களைப் பார்த்துவிட்டதால் ஓய்வுபெற்றுவிட்டது. நண்பர்களின் உதவியுடன் மீண்டும் ரேஸில் கலந்துகொள்ளும் கலக்கல் ஸ்டோரிதான்  ‘கார்ஸ் 3’. விதவிதமான கார்களை 3டியில் பார்ப்பதும், கலர்ஃபுல் கற்பனைகளும்தான் படத்தின் ஹைலைட்ஸ். ‘கார்ஸ் 3', வரும் ஜூன் 16-ம் தேதி ரிலீஸ்

கோகோ:

 ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்பில் இருக்கிறது இந்த `கோகோ'. ‘டாய் ஸ்டோரி’, ‘ஃபைண்டிங் டோரி’, ‘இன் சைடு அவுட்’ பட க்ரியேட்டர்களின் அடுத்த க்ளாசிக் மூவி இது. மாய உலகத்துக்குச் செல்லும் 12 வயது சிறுவன் மிக்குவல். அவனின் கனவு, குடும்பம், சந்தோஷம் மற்றும் மாய உலகம் ஆகியவற்றின் மீதான ஆழ்ந்த தேடலே படம். இளமைப் பருவத்தில் நாம் தவறவிட்ட  விஷயங்களை இந்தச் சிறுவன் நிச்சயம் நினைவுபடுத்துவான். நவம்பர் 22-ம் தேதி, ஹாலிவுட்டில் படம் ரிலீஸ். அதற்கு அடுத்த வாரமே இந்தியாவிலும் வெளியாகும் 

தி இன்கிரிடிபிள்ஸ் 2 :

உலகத்தையே அழிக்க நினைக்கும் வில்லனும், அந்தப் பிரச்னையிலிருந்து உலகத்தைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோ ஃபேமிலியும்தான் ‘தி இன்கிரீடிபிள்ஸ்’. 2004-ம் ஆண்டில் முதல் பாகம் வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட். அதே சூப்பர் ஹீரோ ஃபேமிலி ஸ்டோரிதான் இந்தப் படமும். ஆனால், கொஞ்சம் ட்விஸ்ட்டும் வித்தியாசமான கதைக்களமுமாக இருக்கும். முதல் பாகத்தின் இயக்குநர் பிராட் பேர்டு மற்றும் அவரது டீம்தான் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார்கள். 2018-ம் ஆண்டில் படத்தை எதிர்பாக்கலாம் பாஸ்!  

டாய் ஸ்டோரி 4:

90-களில் பிறந்த குழந்தைகளின் ஃபேவரிட் மூவி ‘டாய் ஸ்டோரி’. வீட்டில் யாரும் இல்லாவிட்டால் உயிர் பெற்றுவிடும் பொம்மைகளின் அட்டகாசம்தான் இந்தப் படத்தின் நாட். ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொரு ஃபீலிங். ஹீரோ கெளபாய் உட்டிக்கும், விண்வெளி வீரன் பஸ்ஸுக்குமான நட்புதான் கதை. முதலில் எழுதப்பட்ட ஸ்க்ரிடைக் கலைத்துவிட்டு, தொழில்நுட்பரீதியிலும் சிறுவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையிலும் கதையில் பல்வேறு மாற்றங்கள் செய்திருக்கிறது படக்குழு. டிஸ்னியின் அல்ட்டிமேட் படைப்புகளில் இதுவும் ஒன்று. வெளிவந்த மூன்று பாகங்களுமே செம ஹிட். `இந்தப் படத்தின் நான்காவது பாகம் வரும் ஜூன் மாதம் வெளியாகும்' என டிஸ்னி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் படம் 2019-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை `டாய் ஸ்டோரி'க்காகக் காத்திருப்போம்.   

அலாதீன்:

டிஸ்னியின் மெகா ஹிட்டான அனிமேஷன் படம் ‘அலாதீன்’. இரண்டு ஆஸ்கர் விருதுகள், மில்லியனில் வசூல் என அசரடித்த இந்தப் படம் வெளியாகி 25 வருடங்கள் ஓடிவிட்டன. டிஸ்னி நிறுவனம், மீண்டும் அலாதீனுக்கும், ஜீனி பூதத்துக்கும், அற்புத விளக்குக்கும் உயிர்கொடுக்கவிருக்கிறது. ஆம்! லைவ்-ஆக்‌ஷன் சினிமாவாக ‘அலாதீன்’ ரீமேக்காகவிருக்கிறது. `அலாதீன்' வெற்றிக்குக் காரணம், ஜீனி பூதத்துக்கு டப்பிங் கொடுத்த ராபின் வில்லியம்ஸின் குரல்தான். ராபினை மிஸ்செய்த டிஸ்னி, இந்தப் படத்துக்கு வில் ஸ்மித்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. `அலாதீன்' மற்றும் `ஜாஸ்மின்' கேரக்டர்களுக்கு புதிய முகம் தேடிவரும் டிஸ்னி, படத்தை அடுத்த வருட இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. ஷர்லாக் ஹோம்ஸ் இயக்குநர் கே ரிட்ச்சி (Gay Ritchie) தலைமையில்தான் இந்தப் படம் உருவாகவிருக்கிறது.

இந்தப் படங்கள் மட்டுமல்லாமல் ‘Wreck-It Ralph 2’, ‘முல்லன்’, ஜிகாண்டிக் உள்ளிட்ட பல படங்களும் டிஸ்னி ஸ்டூடியோவுக்காகச் செதுக்கப்பட்டுவருகின்றன. எல்லா படங்களையும் நேரம் பார்த்து, சரியான காலகட்டத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது வால்ட் டிஸ்னி நிறுவனம்