Published:Updated:

குழந்தைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமும் ஜூனியர் கொக்கும் #Storks

குழந்தைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமும் ஜூனியர் கொக்கும் #Storks
குழந்தைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமும் ஜூனியர் கொக்கும் #Storks

முன்பெல்லாம் சிறுவணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடியான பந்தம் இருந்தது. பால்காரர்  மாட்டைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் பால் கறந்து தருவார். பாட்டி கூடையில் கொண்டு வரும் காய்கறிகளைத் தொட்டுப் பார்த்து ஜாலியாக பேரம் பேசி வாங்கலாம். வியாபாரம் என்பதைத் தாண்டி இரு தரப்பும் தங்களைப் பற்றிய சொந்தக் கதைகளைப் பேசிக் கொள்வார்கள்; துயரங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், இந்தப் போக்கும் உறவும் இன்று ஏறத்தாழ மறைந்து கொண்டு வருகிறது. கடன் அட்டையைக் கொண்டு  இணையத்தில் தேர்வு செய்தால் போதும், எதுவாக இருந்தாலும் அட்டைப் பெட்டியில் வந்து விடும் இயந்திரமயமாகி விட்டிருக்கிறது. இந்தத் திரைப்படமும் இது போன்ற வணிக கலாசாரத்தை மென்மையாக இடித்துரைக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் குழந்தைகள் விரும்பும் விதத்தில் சுவாரஸ்யமான அனிமேஷன் திரைப்படமாகவும் இருக்கிறது.

கொக்கு மற்றும் நாரை என குறிப்பிடப்படும் பறவைகள், குழந்தைகளை துணியில் கட்டிப் பறந்துவந்து வீட்டு வாசலில் போட்டுச் செல்லும் என்கிற மரபு சார்ந்த புராதன நம்பிக்கை இருக்கிறது. இது சார்ந்து பல்வேறு கதைகள் உள்ளன. இந்தத் திரைப்படமும் இந்தக் கதையாடலையொட்டிப் பயணிக்கிறது.

அப்படி ஒரு காலம் இருந்தது. எந்தவொரு தம்பதியினருக்காவது குழந்தை வேண்டும் என்று விரும்பினால் அந்த நிறுவனத்திற்கு கடிதம் எழுதி அனுப்பினால் போதும். எம்மாதிரியான குணாதிசயங்களுடன் குழந்தை வேண்டும் என்றுகூட குறிப்பிடலாம். நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குழந்தைகள் வீடு தேடி வரும். பறவைகள் இந்தப் பணியைச் செய்யும்.

பல தலைமுறைகளாக நடந்து கொண்டிருந்த இந்தப் பழக்கம் ஒரு சமயத்தில் நின்று போனது. நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஜேஸ்பர் என்கிற கொக்கு, விநியோகம் செய்யப்பட வேண்டிய குழந்தையை தானே வளர்க்க விரும்பி வைத்துக்கொள்ள அதனால் ஏற்படும் குழப்பத்தில் குழந்தை சேர்க்கப்பட வேண்டிய முகவரி தொலைந்து விடுகிறது. ஜேஸ்பர் நாடு கடத்தப்பட, அந்தக் குழந்தை நிறுவனத்திலேயே வளர்கிறது. இந்தக் குழப்பத்தாலும் லாபம் குறைவதாலும் குழந்தைகளை விநியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டு அதற்கு மாறாக பொருட்களைச் சென்று சேர்க்கும் பணியாக மாறுகிறது. இதனால் நிறுவனம் லாபத்தில் நடக்கிறது.

பதினெட்டு வருடங்கள் நகர்கின்றன. நிறுவனத்தில் வளரும் குழந்தை இளம் பெண்ணாக வளர்ந்திருக்கிறாள்.

அந்த நிறுவனத்தில் விநியோகம் செய்வதில் சிறப்பான பணியாளராக இருக்கிறது ஜூனியர் என்கிற கொக்கு. ஒரு நாள் நிறுவனத்தின் முதலாளியான ஹண்ட்டர் கொக்கு அதனை அழைக்கிறது. 'சபாஷ். உன் பணி சிறப்பானது. நான் இந்த நிறுவனத்தின் சேர்மனாகப் போகிறேன். எனவே என்னுடைய  இடத்தில் உன்னை அமர்த்தி பதவி உயர்வு தரலாம் என்றிருக்கிறேன்" என்கிறது. ஜூனியரின் கண்கள் வியப்பாலும் மகிழ்ச்சியாலும் விரிகின்றன. "ஆனால், நீயொன்று செய்ய வேண்டும். நம் நிறுவனத்தில் வளரும் பெண்ணான துலிப்பின் கோமாளித்தனங்களை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது. அவளுடைய அட்டகாசம் தாங்கவில்லை.அவளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சரியா?" என்கிறது.

பதவிக்காக இதை ஒப்புக் கொள்ளும் ஜூனியர் கொக்கு, துலிப்பை நிறுவனத்திற்குள்ளே மறைத்து வைக்கிறது. எவரும் வராத இடத்தில் பணியமர்த்தி ஏதாவது கடிதம் வந்தால் அதைத் தந்தால் போதும் என்கிறது. "ஆனால் மகளே.. எக்காரணத்தைக் கொண்டும் இந்த இடத்தை விட்டு நீ வெளியே வரக்கூடாது". ஆனால் செய்ய வேலை ஏதுமின்றி சலிப்புறுகிறாள் துலிப்.

நட்டே கார்டனர் என்கிற சிறுவன் தன்னுடன் விளையாட எவருமே இல்லையே என்று ஏங்குகிறான். எப்போதும் தங்களின் பணியில் ஈடுபட்டிருக்கும் அவனுடைய பெற்றோர் இவனுடன் நேரம் செலவழிப்பதில்லை. 'எனக்கொரு தம்பி பாப்பா' வேண்டும் என்கிறான் கறாராக. அவனுடைய பெற்றோர்கள் சிரிக்கின்றனர். சலிப்புறும் சிறுவன் பரணில் ஏறி பழைய பொருட்களை உருட்டுகிறான். ஒரு விளம்பர அறிவிப்பு அவன் கண்ணில் படுகிறது. 'குழந்தைகள் வேண்டுமா, ஆர்டர் கொடுங்கள். எங்கள் நிறுவனத்தின் கொக்குகள் மிக விரைவில் கொண்டு வந்து உங்கள் வீட்டில் சேர்த்து விடும்' என்கிறது அந்தப் பழைய விளம்பரம்.

குழந்தைகள் உற்பத்தி செய்வது இப்போது நிறுத்தப்பட்ட விட்ட விவரம் தெரியாத சிறுவன் மிக ஆர்வத்துடன் தனது பெற்றோர்களின் பெயரில் கடிதம் எழுகிறான். 'நிஞ்சா மாதிரி சண்டை போடத் தெரிந்த தம்பி வேண்டும்'. அந்தக் கடிதம் நிறுவனத்திற்கு சென்று சேர்கிறது.

சலிப்பாக உட்கார்ந்திருந்த துலிப் புதிதாக வந்திருக்கும் இந்தக் கடிதத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறாள். ஜூனியரிடம் இந்தக் கடிதத்தைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக தன் இருப்பிடத்திலிருந்து வெளியே வருகிறாள். அவள் முதலாளியின் கண்ணில் பட்டு விடக்கூடாதே என்பதற்காக ஜூனியர் கொக்கு பதட்டமடைகிறது. ஆர்வக் கோளாறு காரணமாக குழந்தையை உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் கடிதத்தை துலிப் போட, எத்தனையோ வருடங்களாக உறைந்து போயிருந்த அந்த பிரமாண்டமான இயந்திரம் ஆவேசமாக இயங்கத் துவங்கிறது.

மேலும் பதட்டமடையும் ஜூனியர் பகீரதப் பிரயத்தனங்களுடன் இயந்திரத்தை நிறுத்தப் போராடுகிறது. இந்தப் போராட்டத்தில் அதன் சிறகுகள் காயமடைகின்றன. ஆனால் இயந்திரம் வெற்றிகரமாக ஒரு குழந்தையை உருவாக்கி வெளியே தள்ளுகிறது. இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தன்னுடைய பதவி உயர்வு பறிபோய் விடும் என்று உணர்கிற ஜூனியர் குழந்தையை குறிப்பிட்ட முகவரியில் ரகசியமாக விநியோகம் செய்யக் கிளம்புகிறது. அதனால் பறக்க முடியாது என்கிற காரணத்தால் துலிப்பும் கூட வருகிறாள்.

ஆனால் இந்தப் பயணம் எளிமையானதாக இல்லை. இடையில் நிறையத் தடைகள் தோன்றுகின்றன. இந்த விஷயத்தை அறிந்து கொள்ளும் முதலாளி  கொக்கு தன் பங்கிற்கு முட்டுக் கட்டைகளைப் போடுகிறது.

இன்னொரு புறம், தன் வீட்டிற்கு வரப் போகும் தம்பிக்காக சிறுவன் மிக ஆவலுடன் காத்திருக்கிறான். அதற்காக பல ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறான். அவனுடைய பெற்றோரும் மனம் மாறி அவனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

ஜூனியர் மற்றும் துலிப் குழந்தையுடன் செய்த சாகசப் பயணம் என்னவானது? குழந்தையை சரியாக டெலிவரி செய்ய முடிந்ததா? சிறுவனுக்கு தம்பி கிடைத்தானா? துலிப்பின் பின்னணி என்ன? அவளும் தன்னுடைய குடும்பத்தைச் சென்று சேர்ந்தாளா என்பதையெல்லாம் மிக மிக சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

பழுப்பு நிற சுருட்டை முடியும், முட்டைக் கண்களுமாக துலிப் செய்யும் துறுதுறு சாகசங்கள் நம்மைக் கவர்கின்றன. தானே உருவாக்கிய ஒரு விமானத்தில் ஜூனியர் கொக்கை ஏற்றிக் கொண்டு அதைப் படாத பாடு படுத்தும் நகைச்சுவைகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கின்றன. டெலிவரி செய்யப்பட வேண்டிய குழந்தையை துலிப் பெட்டிக்குள் இருந்து வெளியே கொண்டு வர, வழியெங்கும் அந்தக் குழந்தை செய்யும் அலப்பறையும் 'களுக், மொளுக்' என்று அது சிந்தும் புன்னகையும் கலாட்டாக்களும் சுவாரஸ்யமானவை. குழந்தையை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக துரத்தும் ஓநாய்க்கூட்டம்  ஒன்று, தங்களை விதம் விதமான வடிவங்களில் தங்களை உருமாற்றிக் கொள்வது ரசிக்க வைக்கிறது.

ஜூனியர் செய்யும் இந்தப் பயணத்தை பதவி உயர்விற்காக தனது முதலாளியிடம் காட்டிக் கொடுக்கும் புறா, குழந்தையைப் பிடுங்குவதற்காக போராடும் பெங்குவின்கள் எனப் பல விதமான சுவாரசிய காட்சிகள்.

தன்னுடைய பெற்றோரின் முகவரியை அறிந்து கொண்டாலும், குழந்தையை அதன் இடத்தில் டெலிவரி செய்த பிறகுதான் தன் வீட்டிற்கு திரும்புவேன் என்கிற துலிப்பின் தியாக உணர்வு, பதவி உயர்விற்காக அடிமைப்பட்டு கிடைக்கும் ஜூனியர் ஒரு கட்டத்தில் ஆவேசமாக தன் நிறுவனத்தையும் முதலாளியையும் எதிர்க்கும் வீரம், விளையாட்டுத் தோழன் இல்லாமல் அவதிப்படும் சிறுவன், புதிய தம்பிக்காக காத்திருக்கும் ஆர்வம் போன்ற காட்சிகள் சுவாரசியமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

உச்சக்காட்சியில், பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கடிதங்கள், இயந்திரத்தினுள் செலுத்தப்பட்டு பல குழந்தைகள் உருவாக்கப்படும் காட்சி அற்புதமானது. பாடல்களும் பின்னணி இசையும் இதன் காண் அனுபவத்தை உன்னதமாக்குகின்றன.

வார்னர் நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம் அபாரமான கற்பனையுணர்வுடனும் கலையுணர்வுடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனதன் பிரத்யேகமான குணாதியசத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இயந்திர உலகத்தைத் தாண்டி மனிதர்களும் இதர உயிரினங்களும் தங்களின் உறவை நேசத்துடன் பராமரிக்க வேண்டும் என்கிற நீதி உறுத்தாமல் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.

கட்டாயம் குழந்தைகளுடன், பெற்றோர் கண்டுகளிக்க வேண்டிய படங்களில் ஒன்று.