Published:Updated:

`13 Reasons Why’ முதல் ‛Game Of Thrones’ வரை... மெர்சல் காட்டும் ஆங்கிலத் தொடர்கள்!

எட்.விஸ்வநாத் பிரதாப் சிங்
`13 Reasons Why’ முதல் ‛Game Of Thrones’ வரை... மெர்சல் காட்டும் ஆங்கிலத் தொடர்கள்!
`13 Reasons Why’ முதல் ‛Game Of Thrones’ வரை... மெர்சல் காட்டும் ஆங்கிலத் தொடர்கள்!

`சின்னத்திரை தொடர்கள் என்றாலே மாமியார்-மருமகள் சண்டை, அழுகாச்சிக் காவியம் என எதிர்மறையாகத்தான் விமர்சனம் செய்யப்படுகிறது' என்பது பலரின் கருத்து. ஆனால், வித்தியாசமான கதைக்களத்தோடு புதமையான காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் கொடுத்தால், இளம் தலைமுறையும் தொடர்களைப் பார்க்கும் என்பதற்கு பெரிய உதாரணம்தான், youtube-ல் தற்போது ஹிட் அடித்திருக்கும் Web Series-கள். நம் ஊரைப்போல வெளிநாடுகளிலும் சின்னத்திரை தொடர்கள் உண்டு. ஆனால், இங்கு இருப்பதைப்போல் வருடக்கணக்கில் இழுத்தடிக்க மாட்டார்கள். சிலபல எபிசொட்களில் ஒரு சீஸனை முடித்துவிடுவார்கள். அத்தகைய சில ஆங்கிலத் தொடர்கள் குறித்த ஓர் அலசல்...

13 Reasons Why:

Jay Asher என்பவரது `13 Reasons Why' என்ற புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தொடர் இது.  Clay Jensen என்கிற பதின்வயது மாணவன், ஒருநாள் பள்ளியைவிட்டு வீட்டுக்குத் திரும்புகையில் அவனது பெயர் எழுதப்பட்ட ஒரு பெட்டியை வராண்டாவில் பார்க்கிறான். அந்தப் பெட்டிக்குள் நிறைய டேப்கள் (cassette tapes) இருக்கின்றன. அவை, அவனது classmate-ஆன Hannah Baker (ஹன்னாஹ் பேகர்), தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தன் மரணத்துக்குக் காரணமான பதின்மூன்று காரணங்களையும் ஒலி வடிவில் தெரியப்படுத்தியுள்ள டேப்கள்.

கதையைக் கேட்கும்போதே ஒரு பதற்றமும் பதைபதைப்பும் நமக்குள் ஏற்படுகின்றன அல்லவா? இப்படித்தான் முழு தொடரும் இருக்கும்.

Sherlock:

துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம்கொண்டவர்களுக்கு, இந்தப் பெயர் மிகவும் பரிச்சயம். சிலர் ``ஜேம்ஸ் பாண்ட் வகை கதைகள்தான் துப்பறியும் வகையில் சிறந்தவை'' எனச் சொல்வர். வேறு சிலர் இன்னும் பல துப்பறியும் கதாபாத்திரங்கள் சிறந்தது என்று சொல்வார்கள்.  ஆனால், `அவை எதுவுமே ஷெர்லோக்கின் அளவுக்கு ஈடுகொடுக்க முடியாவை' என ஷெர்லோக் ரசிகர்கள் கர்வமாகவே கூறுவார்கள். ஷெர்லோக்கின் கதைகளைப் படிப்பவர்களுக்கு அதுவே உண்மை எனத் தோன்றும்.

Arthur Conan Doyle என்பவர் உருவாக்கிய `ஷெர்லோக்' கதாபாத்திரத்துக்கு, சின்னத்திரையில் உயிர் கொடுத்தவர்கள் Steven Moffat மற்றும் Mark Gatiss. ஷெர்லோக்கின் கதாபாத்திரத்தை மையமாகக்கொண்டு திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. லண்டனில் துப்பறிவாளரான ஷெர்லோக் ஹோம்ஸ், தன் நண்பரான வாட்சனுடன் இணைந்து பல வழக்குகளுக்கு தீர்வு கொடுப்பதே கதை. மேலும், பிரதான வில்லனான Professor Moriarty-யை எதிர்கொள்ள வேண்டும். இந்தத் தொடரின் சிறப்பே ஷெர்லோக் கதாபாத்திரத்தின் அறிவுத்திறனும் புத்திக்கூர்மையும்தான். ஒருவரைப் பார்த்த நொடிப்பொழுதில் அவர் யார், அவரது பின்புலம் போன்றவற்றை ஷெர்லோக் சொல்வது மிக சுவாரஸ்யமாக இருக்கும். Detective பாணியிலான கதைகளை விரும்புபவர்களுக்கு, இது மிகவும் பிடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Breaking Bad:

இந்த அமெரிக்கத் தொடரை உருவாக்கியவர், Vince Gilligan. கதையின் முதன்மைக் கதாபாத்திரமான Walter H. White என்பவர் வேதியியல் மேதை. பள்ளி ஒன்றில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் Walter-க்கு, நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த நோயால் தான் சில மாதங்களிலேயே உயிரிழக்கப்போகிறோம் என்பதை அறிந்துகொண்ட Walter, மாற்றுத்திறனாளியான தன் மகன் மற்றும் மனைவியின் வாழ்வாதாரத்துக்காகவும் பொருள் ஈட்ட தன் முன்னாள் மாணவரான Jesse Pinkman-னுடன் இணைந்து Methaphetamine என்னும் போதைப்பொருளை சட்டத்துக்கு எதிராகத் தயாரிக்கிறார். இதனால் ஏற்படும் பின்விளைவுகள்தான் கதை. ஆங்கிலத் தொடர்கள் பார்க்கும் பழக்கம்கொண்டவர்களுக்கு மிகவும் பிடித்தமான தொடர் இது.

Game Of Thrones:

இதை, பலரும் அறிந்திருக்கக்கூடும். தற்போது இதன் ஏழாவது சீஸனின் எபிசொட்களை HBO நிறுவனத்திலிருந்து ஹக்கேர்கள் திருடி, இணையதளங்களில் வெளியிட்டனர். எனினும், இந்தத் தொடருக்கு எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு மட்டும் குறையவே இல்லை. Iron Throne-னைக் கைப்பற்ற ஏழு சாம்ராஜ்ஜியங்களுக்கிடையில் நடக்கும் போட்டி, பொறாமையே கதை. காதல், துரோகம், வன்மம், நட்பு என அனைத்தும் இதில் நிறைந்திருந்தாலும், அதிகப்படியான  வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் குழந்தைகளுக்கு உகந்ததாக இந்தத் தொடர் இருக்காது.

Friends:

இது நகைச்சுவை ப்ரியர்களுக்கானது. Rachel Greene, Ross Geller, Monica Geller, Joey Tribbiani, Chandler Bing, Phoebe Buffay என ஆறு நண்பர்கள் நியூயார்க் நகரில் வசிப்பவர்களைப் பற்றிய கதை. அவர்கள், தங்களின் வாழ்வில் சந்திக்கும் மகிழ்ச்சி, துக்கம், காதல் என அனைத்து உணர்வுகளையும் காமெடியாகக் கூறியிருப்பதுதான் இதன் சிறப்பம்சம்.

சின்னத்திரை தமிழ் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களே... இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக்கோங்கப்பா!!!

புதுப்புதுக் கதைக்களத்தில் சின்னத்திரை தொடர்களைக் காண, பலரும் Waiting Boss!