Published:Updated:

`ஸ்பைடி மீண்டும் அவெஞ்சர்ஸில் இணைய வேண்டும்!' - மார்வெல் ரசிகர்களின் கதறல்

Spiderman
Spiderman

சூப்பர் ஹீரோ சப்ஜெட்டில் பல படங்கள் வந்திருந்தாலும் மார்வெலுக்கும் டி.சி-க்கும்தான் தனித் தனி ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஸ்பைடர்மேன் மார்வெல்லின் திரைப்பட உலகமான MCU-வில் இருந்து பிரிந்ததுதான் ஹாலிவுட்டின் ஹாட் நியூஸ்.

ஸ்பைடர்மேன் என்ற சூப்பர் ஹீரோவை யாராலும் மறந்திருக்க முடியாது. நான் சொல்வது ஆரம்ப காலகட்டத்து ஸ்பைடர்மேன். மார்வெல், டி.சி, அவெஞ்சர்ஸ், ஜஸ்டிஸ் லீக் போன்ற எந்தவித ஒப்பீடுகளும் இல்லாத காலகட்டத்தில் வெளிவந்த படம், `ஸ்பைடர்மேன்'. பொதுவாக, சூப்பர் ஹீரோக்கள் படங்கள் அனைத்தும் காமிக்ஸைத் தழுவியதுதான். வெறும் பொம்மைகளை வைத்து புத்தகங்களில் கதைகளாகச் சொல்லப்பட்டு வந்தன. அதன் பின்னர், கார்ட்டூன் படங்களாக வெளிவந்தன. தொடர்ந்து டெக்னாலஜி வளர வளர அதற்கு உயிர்கொடுத்து நடிகர்களையே நடிக்க வைத்து படங்கள் வெளியாக ஆரம்பித்தன. அதற்கு மிக உதவியாக இருந்தது தொழில்நுட்பமும் சி.ஜி-யும். நாளுக்கு நாள் அதன் வீச்சு அதிகரிக்க, பல்வேறு விஷுவல் ட்ரீட்களை ரசிகர்களாகிய நமக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறது.

Tobey Maguire
Tobey Maguire
Spiderman

விவரம் தெரிந்த பிறகு, நிஜ ஸ்பைடர்மேனாக நாம் பார்த்து வளர்ந்த ஓர் ஆள், டோபி மக்வொயர். இவரின் நிஜப் பெயர் இதுவாக இருந்தாலும் ஸ்பைடர்மேனாகவும், பீட்டர் பார்க்கராகவும்தான் இவரை நமக்கு அடையாளம் தெரியும். சாம் ரைமி என்பவர்தான் இப்படத்தின் இயக்குநர். என்னதான் அடுத்தடுத்து இரு பாகங்கள் வெளிவந்து வெற்றி கண்டிருந்தாலும், முதல் பாகம்தான் என்றும் ஃபேவரைட். ஒரு சிலந்தி இவரைக் கையில் கடித்த பின், வலுப்பெற்ற சிலந்திமனிதனாக மாறிவிடுவார். படத்தைப் பார்த்த பின், `வீட்டின் ஒட்டடையில் செவ்வனே எனப் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் சிலந்தியை வம்படியாகக் கையில் கடிக்கவிட்டு சிலந்தி வலை வருதா...' என்ற பார்த்தவர்களில் நானும் ஒருவன். அதுவும் போக ஹீரோயின் மேரி ஜேன் தடுமாறும்போது ஸ்டைலாக லபக் என்று பிடித்து மாஸ் காட்டும் மொமென்டை யாரால் மறக்க முடியும்? இதுபோன்ற சின்னச் சின்ன ஃபேன்டஸி விஷயங்களில் நம்மை இளைபாற்றிய படம்தான், 2002-ல் வெளியான 'ஸ்பைடர்மேன்'.

இதுபோல் ஸ்பைடி என்ற ஒற்றை சூப்பர் ஹீரோவுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இப்படியே டெக்னாலஜி அடுத்தகட்ட வளர்ச்சியை அடைய, ஸ்பைடர்மேனின் கதாபாத்திர தன்மையும் அவருடைய திறமையும் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது. இப்படிப் படிப்படியாக மார்வெல்லின் அவெஞ்சர்ஸ் அணியிலும் இணைந்தார் ஸ்பைடி. ஆனால், இம்முறை ஸ்பைடர்மேனாக டாம் ஹோலாண்டு என்பவர் அறிமுகமாகியிருந்தார். ராபர்ட் டௌனியின் 'அயர்ன்மேன்' கதாபாத்திரத்துக்கு இன்ட்ரோவே தேவையில்லை. `இதுல என்னைத் தவிர யாரும் நடிக்க முடியாது பார்க்கிறியா' என்றபடி அந்தக் கதாபாத்திரத்தைப் பிரித்து மேய்ந்தார். ரசிகர்களிடையே தாக்கத்தை உருவாக்க தன்னுடைய உயிரையும் `எண்டு கேம்' படத்தில் மாய்த்துக்கொண்டார். அப்படிப்பட்ட அயர்ன்மேனின் செல்லப் பிள்ளைதான் ஸ்பைடர்மேன் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தவிர, ஸ்பைடர்மேனின் சூப்பர் நேச்சுரல் தன்மையைத் தகர்ந்தெறிந்து, தன்னைப் போலவே டெக்னிக்கல் யுக்திகளை ஸ்பைடர்மேனுக்குள் புகுத்தியிருந்தார் அயர்ன்மேன்.

Tom Holland - Robert Downey JR.
Tom Holland - Robert Downey JR.
Avengers

டாம் ஹோலாண்டு ஸ்பைடர்மேன் பொறுப்பை ஏற்ற பிறகு `கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்', `ஸ்பைடர்மேன் : ஹோம் கம்மிங்', `அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்', `எண்டு கேம்', `ஸ்பைடர் மேன் : ஃபார் ஃப்ரம் ஹோம்' என 5 மார்வெல் படங்களில் நடித்திருந்தார். மார்வெல்லின் கான்செப்ட்டே ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்களையும் அவெஞ்சர்ஸாக மாற்றுவதுதான். அவெஞ்சர்ஸ் படத்தில் மொத்த சூப்பர் ஹீரோக்களும் ஒன்றிணைந்து சண்டையிடுவார்கள். மற்ற படங்களில், அவரவருக்கான வாழ்க்கையும், அவர்களைச் சுற்றி நடக்கும் பிரச்னைகளும் தனி டிராக்கில் பயணிக்கும். இந்நிலையில், தயாரிப்பு ஒப்பந்தத்தில் சில பல பிரச்னைகளும் சிக்கல்களும் ஏற்பட்ட காரணத்தால், `இனி வரும் மார்வெல் படங்களில் ஸ்பைடர்மேன் இருக்க மாட்டார்' என்று தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது, எம்.சி.யூ. அதாவது அவெஞ்சர்ஸ் அணியிலிருந்து 'ஸ்பைடர்மேன்' நீக்கப்பட்டார் என்றுதான் சினிமா மொழியில் சொல்ல வேண்டும். இதுதான் நேற்றிலிருந்து வைரலாகப் போய்க்கொண்டிருக்கிறது.

பொதுவாக, மார்வெல்லின் கதைகளை படங்களாக சோனியும் டிஸ்னியும்தான் மாறி மாறி வெளியிடும். இது இவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம். (முன்னர் இந்த அணியில் இருந்த ஃபாக்ஸும் தற்போது டிஸ்னியுடன் இணைந்துவிட்டது.)
``சினிமாவைக் காப்பாற்ற வால்ட் டிஸ்னி நிறுவனம் உடையவேண்டும்!'' - ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?!

மார்வெல்லைச் சேர்ந்த சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் ஒரு சில கதாபாத்திரங்களின் காப்புரிமை தற்போதும் சோனியிடம்தான் இருக்கிறது. அதில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரமும் ஒன்று. டோபி மக்வொயர் நடித்த மூன்று பாகங்களில் ஆரம்பித்து டாம் ஹோலாண்டு நடித்த ஸ்பைடர்மேன், டாம் ஹார்டி நடித்த 'வெணம்' வரைக்கும் சில படங்களை சோனி நிறுவனம்தான் தன்னுடைய பேனரில் தயாரித்து வெளியிட்டது.

'ஹோம் அலோன்' படங்களை ரீபூட் செய்யும் டிஸ்னி - கதறும் 90'ஸ் கிட்ஸ்!

இது சாத்தியமாவதற்கு, ஸ்பைடர்மேன் படங்களையும் அதன் கதாபாத்திரங்களையும் டிஸ்னி பயன்படுத்தலாம் என்றும் பதிலுக்கு டிஸ்னி வசம் இருக்கும் அவெஞ்சர்ஸ் பாத்திரங்களையும் சோனி பயன்படுத்தலாம் என்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் அடிப்படையில்தான், புது ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் 'அவெஞ்சர்ஸ்' தொடரில் இணைந்தது. இதனிடையே, தற்போது மார்வெல்லுக்கும் சோனிக்கும் இடையே தயாரிப்பு ரீதியில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அக்ரீமென்ட் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், ஸ்பைடர்மேன் பட வரிசையில் இனி எதிலும் டிஸ்னியின் பங்கு இருக்காது என்று தெரிகிறது. இதனால், ஸ்பைடர்மேன் மீண்டும் சோனியிடமே சென்றுவிடும். ஆக, மார்வெல்லின் அவெஞ்சர்ஸ் அணியிலும் இனி ஸ்பைடர்மேன் இருக்க மாட்டார் என்பதுதான் இதன் சாராம்சம்.

Avengers
Avengers

’அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' படத்தில் அயர்ன்மேன் இறந்து ஏற்படுத்திய இழப்பிலிருந்தே இன்னும் முக்கால்வாசி பேர் மீளவில்லை. இதைத் தொடர்ந்து ஸ்பைடர்மேன், அவெஞ்சர்ஸ் அணியிலிருந்தே நீக்கப்பட்டதால் சமூக வலைதளங்களில் மார்வெல் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அதில் நடித்த சில நடிகர்களே 'We want Spidey back' என்று தங்களுடைய ஆதங்கத்தையும் ஸ்பைடிக்கும் ஆதரவும் தெரிவித்து கருத்து கூறி வருகின்றனர். என்ன இருந்தாலும் டாம் ஹோலாண்டின் ஸ்பைடர்மேனை ஒரு இமேஜில் பார்த்தாகிவிட்டது. மக்களும் எம்.சி.யூ ரசிகர்களும் அவரை ஸ்பைடர்மேனாக, குறிப்பாக ஒரு அவெஞ்சராக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இந்நிலையில் வணிக ரீதியிலும் தயாரிப்பு ரீதியிலும் சில சிக்கல்கள் ஏற்பட்ட காரணத்தால் மொத்த ரசிகர்களையும் இது பாதிக்கும் செயலாக அமைந்துவிட்டது. எப்படியாவது ஸ்பைடி மீண்டும் அவெஞ்சர்ஸில் இணைந்தால் போதுமென இருக்கிறார்கள் மார்வெல் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரைக்கு