``சினிமாவைக் காப்பாற்ற வால்ட் டிஸ்னி நிறுவனம் உடையவேண்டும்!'' - ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?!

டிஸ்னி நிறுவனத்துக்குப் போட்டியாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. ஒரு தொழிலில் போட்டியே இல்லையென்றால், அதுவும் அது கலைத் துறையாக இருந்தால், அங்கே படைப்பாற்றல் குறையத்தானே செய்யும்!
எந்தவொரு வணிகமும் ஒரு தனி முதலாளியின் கையில் இருந்தால், அந்த வணிகம் சார்ந்த அத்தனை முடிவுகளும் அந்த முதலாளியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அவர் வைப்பதுதான் சட்டம், அவர் நிர்ணயம் செய்வதுதான் விலை, அவர் ஏற்படுத்துவதே அந்தப் பொருள் அல்லது சேவைக்கான தேவை என்றாகிவிடும். இன்றைய சூழலில், வணிகமயமாக்கப்படும் கலைகளுக்கும் இது பொருந்தும். குறிப்பாக, கோடிகள் புரளும் திரைத்துறைக்குப் பொருந்தும். கலைத்துறையில் தனி முதலாளியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதென்றால், அதில் மேலும் ஒரு சிக்கல் நேரும், படைப்பாற்றல் குறைபாடு ஏற்படும்.

வால்ட் டிஸ்னி நிறுவனம், ஹாலிவுட்டின் பெரும் தயாரிப்பு நிறுவனங்களை ஒவ்வொன்றாக சொந்தமாக்கிக்கொண்டு வரும் சூழல்குறித்து, சமீபத்தில் உலகின் முன்னணி திரை ஆர்வலர்களில் ஒருவரான கை லாட்ஜ் எழுதிய ஒரு திறனாய்வுக் கட்டுரையின் சாராம்சம் இதுதான். உண்மையில் ஒரு பெரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் மொத்த ஹாலிவுட்டும் இருந்தால், படைப்பாற்றல் திறன் குறைந்துவிடுமா என்ன, அதுவும் வால்ட் டிஸ்னி போன்ற பாரம்பர்யம் மிக்க நிறுவனம் என்றால்... அது வளர்ச்சிதானே?
இந்தக் கேள்விகளெல்லாம் எழுமாயின், மறைந்த வால்ட் டிஸ்னி, தன் நிறுவனத்தை நிறுவிய பிறகு கூறிய ஒரு வரியை நினைவில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. "நான், புதுமையை விரும்புகிறவன்!" என்பதுதான் அது. ஃபாக்ஸ், ஃபாக்ஸ் செர்ச்லைட், பிக்ஸார், மார்வெல், லூக்காஸ் ஃபிலிம்ஸ், ப்ளூ ஸ்கை ஸ்டூடியோஸ் எனப் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இப்போது டிஸ்னி வசம் உள்ளன. அதனால், டிஸ்னி நிறுவனத்துக்குப் போட்டியாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. ஒரு தொழிலில் போட்டியே இல்லையென்றால், அது கலைத்துறையாக இருந்தால், அங்கே படைப்பாற்றல் குறையத்தானே செய்யும். தன்னை மிஞ்சும் அளவுக்கு ஒருவன் படம் எடுத்துவிடுவானோ என்ற அச்சம் அல்லது கர்வம் இருக்கும்வரைதான் திரைத்துறை வளமாக இருக்கமுடியும். இப்போது, வால்ட் டிஸ்னி ஆசைப்பட்ட 'புதுமை'க்கே பங்கம் விளைவிக்க, அவருடைய சொந்த நிறுவனமே முயற்சி செய்கிறது என்பதுதான் வேதனைக்குரிய செய்தி.

இந்த ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றியடைந்த படங்களில் முதல் நான்கு இடத்தில் இருப்பவை டிஸ்னியின் நிறுவனங்கள் தயாரித்த படங்கள்தாம். 'டாய் ஸ்டோரி 4', 'அவெஞ்சர்ஸ் எண்டு கேம்', 'கேப்டன் மார்வெல்' மற்றும் 'அலாவுதின்' உள்ளிட்ட அந்த நான்கு படங்கள் மட்டுமல்லாது, இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான 'ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்', சமீபத்தில் வெளியான 'தி லயன் கிங்', பில்லியன் டாலர்களுக்கு வணிகம் செய்யும் அளவுக்குத் திறன்கொண்ட மேலும் இரண்டு படங்களும் அதில் அடக்கம். இதில், 'தி லயன் கிங்' தவிர்த்து இதுவரை வெளியான ஐந்து படங்களும் டிஸ்னிக்கு 5 பில்லியன் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளன. இதுவரை 600 மில்லியனுக்கும் மேல் வசூல் செய்துள்ள 'ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்' திரைப்படம் இன்னமும் ஒன்றரை மாதங்களுக்கு ஓடும் என்றும், அதுமட்டுமே தனியாக 2 பில்லியன் டாலர்கள் வரை வசூல் செய்யலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வேடிக்கை என்னவென்றால், இந்த ஆண்டு டிஸ்னி தயாரித்து, வெளியிட்டு பெரிதும் ஓடாத படமான 'டம்போ'கூட போட்ட முதலீட்டைவிட இரு மடங்கு லாபம் பார்த்தது. ஆனால், சில நூறு மில்லியன்களில் படம் எடுத்துவிட்டு, பில்லியன்களை வசூல் செய்யும் டிஸ்னிக்கு அது குறைவுதானாம்.

இதுபோக, இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகவிருக்கும் 'ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்', 'ஃப்ரோஸன் 2', மற்றும் 'மேல்ஃபிஸண்ட்: மிஸ்ட்ரெஸ் ஆஃப் ஈவில்' உள்ளிட்ட படங்கள் மூலமாக இந்த ஆண்டின் மொத்த வருமானமாக 10 முதல் 12 பில்லியன் டாலர்கள் வரை குறிவைத்திருக்கிறது, டிஸ்னி.
டிஸ்னியின் போட்டி நிறுவனமான வார்னர் ப்ரோஸ் தற்போதுதான் மெல்ல மெல்ல தனது வணிகத்தைப் பரவலாக்கி வருகிறது. அதன் பங்குக்கு சில தயாரிப்பு நிறுவனங்களை சொந்தமாக்கிக்கொண்டும் வருகிறது. என்றாலும், டிஸ்னியின் இந்த அசுர வளர்ச்சியை ஈடுகட்ட, அந்த நிறுவனத்துக்கு இன்னும் 10 ஆண்டுகள் தேவைப்படும். தோல்விப் படங்களாக கொடுத்துவந்தால், அது முடியாமலும் போகலாம். அப்படியொரு சூழல் வந்தால், டிஸ்னி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வார்னர் நிறுவனத்தையும் விலைக்கு வாங்கிவிடும் என்கிறார்கள், திரைப்பட ஆர்வலர்கள்.

ஹாலிவுட்டுக்கு மட்டுமல்லாது, உலகின் மொத்த சினிமா வணிகத்துக்கும் சேர்த்தே இதுவொரு ஆபத்தான போக்கு எனலாம். ஹாலிவுட்டை மையமாகவைத்து இங்கே உருவாக்கப்படும் திரைப்படத் தொழில்நுட்பங்கள், அங்கிருக்கும் படைப்பாளிகளின் படைப்பாற்றலுக்கும் தேவைக்கும் ஏற்றவாறு உருவாக்கப்படுகின்றன. தனி முதலாளியின் கட்டுப்பாட்டுக்கு ஒரு கலை வடிவம் செல்கிறதென்றால், அதைச் சார்ந்த தொழில்நுட்பமும் அந்த நிறுவனத்தின் தேவைக்கேற்ப மாறும். அப்படியானால், உலக சினிமாவுக்கான மொத்த வளர்ச்சியும் முடிவுகளும் டிஸ்னி எடுப்பவைதாம் என்றாகிவிடும். 'தி லயன் கிங்' படத்தின் வருகையால் 'ஆடை', 'கடாரம் கொண்டான்' போன்ற தமிழ் படங்களுக்கு தமிழகத்திலேயே தேவையான அளவு திரைகள் கிடைக்கவில்லை என்பதும், '2.0' படத்தின் சீனா வெளியீடு காலவரையரையின்றி தள்ளிவைக்கப்படுகிறது என்பதும் இங்கே கூடுதல் தகவல்கள்.
ஏற்கெனவே, 'அலாவுதின்', 'டாய் ஸ்டோரி', 'லயன் கிங்' என நாஸ்டால்ஜியா சார்ந்த சினிமாவாக இந்த ஆண்டின் ஹாலிவுட் சினிமாவின் போக்கையே மாற்றிவிட்டது, டிஸ்னி. இது தொடர்ந்தால், தன் ரசிகர்கள் இதைப் பார்த்தால் போதும் என அவர்களின் ரசனையையும் மொத்தமாக டிஸ்னியே நிர்ணயிக்கும். இதுபோக, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் 'வெஸ்ட் சைடு ஸ்டோரி', வெளியாகவிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் நான்கு 'அவதார்' பாகங்கள் என எட்டு ஆண்டுகளுக்கு திட்டம் தீட்டிவிட்டது, டிஸ்னி நிறுவனம்.

இதுபோக, தன் ஆஸ்தான மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் Phase-4க்கு புது ஸ்கெட்ச்சும் போட்டுவிட்டது டிஸ்னி. Black Widow, The Falcon and the Winter Soldier, Eternals, Shang-Chi, Wanda Vision, Doctor Strange in the Multiverse of Madness, Loki, What If...?, Hawkeye, Thor 4-ம் பாகம் என படங்கள் மற்றும் வெப் சீரிஸ் எனக் கலந்துகட்டி கட்டம் போட்டிருக்கிறது. இதன்மூலம், டிஸ்னிக்கு சொந்தமான Disney+ ஸ்ட்ரீமிங் தளமும் பிரபலம் அடையும் எனலாம்.
எந்த நோக்கத்தோடு வால்ட் டிஸ்னி தன் நிறுவனத்தைத் தொடங்கினாரோ, அதையே இங்கே கேள்விக்குறியாக்கிவிட்டு, உலக சினிமா மீது தனி ஆதிக்கம் என்பதைக் குறிக்கோளாக்கிக்கொண்டது, டிஸ்னி.

இந்த நிலை தொடராமல் இருக்க, டிஸ்னி நிறுவனம் உடனடியாக உடைய வேண்டும் என்ற காத்திரமான கருத்தையே முன்வைக்கின்றனர், பல சினிமா ஆர்வலர்கள். படைப்பாளிகள் கையிலிருக்கும் சினிமா, வணிகர்களின் கைக்குச் செல்வது ஆபத்து என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.