Published:Updated:

சத்தமிட்டால் மரணம்தான்... முதல் பாகத்தின் பரபரப்பை மிஞ்சுகிறதா இது?! - A Quiet Place II படம் எப்படி?

கார்த்தி

இந்தப் பாகத்தில், முதல் பாகம் நடப்பதற்கு முந்தைய காட்சிகளையும், லீயின் மறைவுக்குப் பின்னர் என்ன செய்கிறார்கள் என்பதான காட்சிகளையும் இணைத்து படமாக்கியிருக்கிறார்கள்.

சத்தம் கேட்டாலே போட்டுத் தள்ளும் உயிரினங்களிடமிருந்து தப்பிக்க ஒரு குடும்பம் என்னவெல்லாம் செய்கிறது என்பதைச் சொல்கிறது 'A Quiet Place 2' திரைப்படம். இந்த வாரம் வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது இந்த இரண்டாம் பாகம்.
A quiet place II
A quiet place II

உலக மக்களை மொத்தமாய் விழுங்கிய விநோத கண்களற்ற உயிரினங்கள் அபாட்டின் குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை. தந்தை லீ அபாட்டும், மகன் பியா அபாட்டும் முதல் பாகத்திலேயே மரணித்துவிட, மீதமிருப்பவர்கள் அடுத்த வழியை நோக்கி நகர்கிறார்கள். எஞ்சியிருக்கும் மனிதர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள பல்வேறு யுக்திகளைக் கையாள்கிறார்கள். லீ அபாட்டின் நண்பரான எம்மெட்டின் வலைக்குள் அபாட் குடும்பம் நுழைய அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்கின்றன. சத்தமற்ற வெளியில் சத்தம் ஒலியாக கீழ விழ, மீண்டும் வேட்டையைத் தொடங்குகின்றன உயிரினங்கள்.

அபாட் குடும்பத்தில் புதிதாக இணைந்திருக்கும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும்; அதே சமயம், இந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்ல வேண்டும். என்ன செய்யப் போகிறது அபாட் குடும்பம்? எம்மெட் தடைக்கல்லா இல்லை படிக்கல்லா என நீள்கிறது A Quiet Place. சாரி நீளவெல்லாம் இல்லை 90 நிமிடங்கள்தான்.
Vikatan

முதல் பாகத்தில் குறைவான மனிதர்கள், அதுவும் ஒரே குடும்பம். (முதல் பாகத்தின் ஸ்பாய்லர் அபாட் குடும்பம் இல்லாமலும் சிலர் இருப்பார்கள்). எப்படித் தப்பிக்கிறார்கள், யார் மரணிக்கிறார்கள் என மிகவும் க்ரிப்பாக கதை நகரும். அதுவும் பேசக்கூடாது என்பதால், சைகை மொழியிலேயே கதையை நகர்த்துவது என நடிகரும் இயக்குநருமான ஜான் கிரசின்ஸ்கி பல்வேறு யுக்திகளைக் கையாண்டிருப்பார். அதுவும் அந்த நீர்வீழ்ச்சிக்குச் சென்று இழந்தபோன பேச்சை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்து பேசும் காட்சியாகட்டும், இறுதியில் குடும்பத்துக்காக அந்த முடிவை எடுக்கும் தருணமாகட்டும் செமையான எமோஷனல் தருணங்கள் அவை.

A quiet place II
A quiet place II

இந்தப் பாகத்தில், முதல் பாகம் நடப்பதற்கு முந்தைய காட்சிகளையும், லீயின் மறைவுக்குப் பின்னர் என்ன செய்கிறார்கள் என்பதான காட்சிகளையும் இணைத்து படமாக்கியிருக்கிறார்கள். முதல் பாகத்திலேயே இந்த உயிரினங்களைக் கொல்வதற்கான வழியை லீயும், லீயின் மகளும் கண்டுபிடித்துவிடுவதால், இந்தப் பாகத்தில் அந்தக் காட்சிகள் அதன் நீட்சியாக இருக்கின்றனவே அன்றி, புதிய சுவாரஸ்யம் எதையும் கொடுக்க மறுக்கிறது. அதிலும் அந்த பேஸ்பால் விளையாட்டு காட்சிகள் தரும் பதற்றத்துக்குப் பின்னர் வரும் காட்சிகளில் சிலியன் மர்ஃபியின் அறிமுகம் தவிர பெரிதாக கதை நகர மறுக்கிறது. சம்பவமாகவும் எதுவும் அரங்கேறவில்லை. அதேபோல் இந்த விநோத உயிரினங்கள் செய்யும் அட்ராசிட்டிகள் ஏற்கெனவே பல படங்களில் பார்த்த நினைவையும் தருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராக்கின் JUNGLE CRUISE | ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு மருந்து... அப்புறம் என்னாச்சுனா?!

ஆனால், இவற்றுக்கெல்லாம் சேர்த்து இரண்டாம் பாதியில்... 90 நிமிடங்களில் என்ன இரண்டாம் பாதி என்கிறீர்களா? நம்மூர் திரையரங்குகளில் ஆங்கிலப் படங்களில் நடிகர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே பாதியில் கட் செய்து விளக்கு போடுவார்களே, அப்படியானதொரு தருணம்தான் இரண்டாம் பாதி. புதிய மனிதர்கள்; புதிய இடங்கள்; உயிரினங்களின் வீக்னெஸ்கள் என புதிய சுவாரஸ்யங்களை இணைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். சிலியன் மர்ஃபி, எமிலி பிளண்ட் என சீனியர் நடிகர்கள் இருந்தாலும், இந்தப் பாகத்திலும் ஸ்கோர் செய்வது லீ அபாட்டின் மகளான ரீகன் அபாட். (செவித்திறன் சவால் கொண்டவராக நடித்திருக்கும் மில்லிசெண்ட் சிம்மண்ட்ஸ்தான்). நிஜ வாழ்வில், மில்லிசெண்ட் ஒரு வயதாக இருக்கும் போதே, மாத்திரைகள் அதிகமாக உட்கொண்டதால் செவித்திறனை இழந்த குழந்தை. மூன்று வயதிலிருந்தே நாடகங்களுக்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கும் இவர்தான் இந்தப் படத்துக்கான மிகப்பெரிய பிளஸ்.

A quiet place II
A quiet place II

படத்தில் பெரும்பாலும் சைகை மொழியில்தான் மொழிப் பரிமாற்றம் நடக்கும் என்பதால், சப் டைட்டிலைக் கவனிப்பது மிகவும் அவசியம். முதல் பாகம் அளவுக்கு எமோஷனலாக இல்லையென்றாலும், ஒரு நம்பிக்கையான இரண்டாம் பாகமாக இதை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜான் கிரசன்ஸ்கி.

90 நிமிடங்களில் ஒரு வித்தியாசமான த்ரில்லராக, எமோஷனல் விஷயங்கள் குறைவாகக் கொண்டிருக்கும் சீக்குவலாக திருப்திப்பட்டுக்கொள்கிறது இந்த A Quiet Place 2.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு