Published:Updated:

நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்!

நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்!
பிரீமியம் ஸ்டோரி
நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்!

நோலன் ரசிகர்கள் இறுதியில் வரும் அந்த ‘வாவ்’ தருணத்தை ‘நோலன் மொமன்ட்’ என்கிறார்கள்.

நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்!

நோலன் ரசிகர்கள் இறுதியில் வரும் அந்த ‘வாவ்’ தருணத்தை ‘நோலன் மொமன்ட்’ என்கிறார்கள்.

Published:Updated:
நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்!
பிரீமியம் ஸ்டோரி
நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்!
“மேஜிக் வித்தைகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலில் ‘The Pledge’, அதாவது ‘உறுதியளிப்பது.’ மேஜிக் செய்பவர் சீட்டுக்கட்டு அல்லது ஏதோ ஒரு பொருளை நம்மிடம் காட்டுவார்.

அதைச் சோதித்து அதில் எதுவும் தில்லுமுல்லு இல்லை என்பதை நம்மையே உறுதிசெய்யச் சொல்வார். இரண்டாவது பகுதி ‘The Turn’, அதாவது ‘செயல்.’ அந்த சாதாரணமானப் பொருளை வைத்து அசாதாரணமான ஒரு வித்தையைச் செய்துகாட்டுவார். இது நிகழ்ந்ததும் இது எப்படி சாத்தியம், அந்த ரகசியம் என்னவென்று தெரிந்துகொள்ள முற்படுவோம். ஆனால், அதை உணரவே முடியாது. ஏனென்றால் நமக்கு அதைக் கண்டறிவதில் நாட்டமில்லை. நாம் முட்டாளாக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவோம். ஆனால், இருப்பதை இல்லாமல் செய்வதுடன் மேஜிக் முடிந்துவிடுவதில்லை. மூன்றாவது பகுதி ஒன்று இருக்கிறது. ‘The Prestige’, அதாவது ‘கௌரவம்.’ மறைந்துபோனதைத் திரும்பவும் வரவைக்க வேண்டும். இதுதான் மேஜிக்கில் கடினமானது. அதனால்தான் அதன் பெயர் ‘The Prestige.’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

50 வயதை நெருங்கும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஐந்தாவது படம் ‘The Prestige.’ மாபெரும் மேஜிக் நிபுணரின் இரண்டு சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவன் என்பதை நிறுவப் போட்டிப் போடும் படம். அதில் மேஜிக் வித்தையைப் பற்றி வரும் இந்த வசனம்தான் கிட்டதட்ட நோலனின் அனைத்துப் படங்களின் சாராம்சமும். ‘இதுதான் நோலன் சினிமா’ என்று சொல்வதானால் அதில் என்னவெல்லாம் இருக்கும்? எப்படியெல்லாம் இருக்கும்? நேர விளையாட்டுகளின் மாய வித்தகனான நோலனின் சினிமா இலக்கணம் இதோ...

நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்!

நோலனின் திரைமொழி:

நோலன் தன் படங்கள் பார்க்க வருபவர்களை ஏமாற்றவே விரும்புகிறார். சாதாரணமாகத் தொடங்கும் கதை... மிகச் சாதாரணமான ஒரு நாயகன்... தொடரும் முக்கியமானதொரு நிகழ்வு... இதனால் நாயகன் அசாதாரணமானவனாக மாறுகிறான். நாம் ஆராவாரம் செய்கிறோம். ஆனால், இது மட்டுமா சினிமா?

ஏதோ ஓர் இடத்தில் அது நம்மை நெகிழச் செய்யவேண்டும். சினிமா எனும் மேஜிக்கின் மூன்றாவது பகுதி நம்மை யோசிக்க வைக்கவேண்டும். “இது எப்படி சாத்தியம்?” - இந்த எண்ணத்தை படம் பார்க்கும் நமக்கும் கடத்த வேண்டும். இதுதான் மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால், நாம் இந்தப் படத்தில் எந்த விஷயத்தையும் இதுவரை தவறவிடவில்லை. நம்மை ஏமாற்றவே முடியாது. ஆனால், இதைத்தான் இல்லை என எல்லா முறையும் நோலன் நிறுவ முயல்கிறார். நாம் கவனிக்கவில்லை. நாம் ஏமாறவே சினிமா பார்க்கிறோம் என நம்மையே நம்ப வைக்கிறார். அதற்குத் தன் திரைக்கதையின் இறுதியில் எதிர்பாராத ஆச்சர்யமொன்றைப் புதைத்து வைக்கிறார். எங்காவது ஒரு காட்சியை, ஏன் ஒரு ஷாட்டைத் தவற விட்டிருந்தால்கூட அந்த ‘மொமன்ட்’ நமக்குப் புரியாமல் போகலாம். நோலன் புதைத்த இந்தப் புரியாத ரகசியத்தைத் தோண்ட நாம் படத்தை மீண்டும் முதலிலிருந்து பார்க்க வேண்டியதாயிருக்கும்.

நோலன் ரசிகர்கள் இறுதியில் வரும் அந்த ‘வாவ்’ தருணத்தை ‘நோலன் மொமன்ட்’ என்கிறார்கள். அவரின் எல்லாப் படங்களிலும் அந்தத் தருணம் எது என அறியக் காத்திருக்கிறார்கள். படம் முழுக்க கவனித்த ஒருவரை இறுதியில் ஏமாற்ற நோலன் சில டெக்னிக்குகளைக் கையாள்கிறார். அதில் முக்கியமான ஒன்று புதிருக்கான விடைகளை அவர் மறைத்து வைக்கும் இடம். அதை ரகசிய அறையில் வைத்து அடைகாப்பதில்லை. மாறாக, வெட்ட வெளியில் ஆரம்பம் முதலே அந்த ரகசியத்தை உலாவ விடுவார்.

உதாரணமாக, ‘தி பிரஸ்டீஜ்’ படத்தில் பறவையை மறையவைத்து மீண்டும் கொண்டுவரும் மேஜிக் வித்தையைப் பார்க்கும் சிறுவன், “இது அந்தப் பறவையல்ல. அதன் சகோதரன். அந்தப் பறவை எங்கே?” என்று கேட்டு அழுவான். “ஷார்ப்பான பையனா இருக்கானே!” என அந்தச் சிறுவனுக்குப் பாராட்டு கிடைக்கும். கிட்டதட்ட ‘தி பிரஸ்டீஜ்’ படத்தின் மொத்தக் கதையையும் (ட்விஸ்ட் உட்பட), இந்த ஒற்றை வசனத்தில் புதைத்துவிட்டார். ஆனால், இதைப் புரிந்துகொள்ள படம் முடிந்ததும் இந்தக் காட்சியை நாம் தேடிவந்து திரும்பப் பார்க்கவேண்டும். நோலன், நாம் அந்தச் சிறுவனாக இருக்கவேண்டும் என்றே நினைக்கிறார். அவர் நிகழ்த்திக் காட்டும் இந்தக் கண்கட்டி வித்தையை ‘முடிந்தால் அம்பலப்படுத்துங்கள்’ என வெளிப்படையாகவே சவால் விடுகிறார்.

நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்!

நோலன் கையாளும் மற்றொரு டெக்னிக், படத்தின் சாராம்சத்தை ஓப்பனிங் ஷாட்டில் வைத்துவிடுவது. படத்தில் பின்னால் வரும் சில ஷாட்கள், ஒரு வசனம், அதை வாய்ஸ் ஒவராய் மாற்றி ஆரம்பத்தில் ஓட விடுவார். சுவாரஸ்யம் என்னவென்றால் அது நமக்கு அப்போது புரியாது. ஏனென்றால் அவர் விடைகளை அள்ளித் தெளித்திருக்கிறார். ஆனால், கேள்வியே தெரியாதே. படத்தை இரண்டாவது முறை பார்க்கும்போது வேண்டுமானால் ஒரு ‘Jigsaw Puzzle’ போல இதை நாம் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

நோலனின் படத்தொகுப்பு பாடம்:

நிஜ வாழ்வில் ‘கட்’ இருக்காது. அதை நம்மால் உணரவும் முடியாது. ஆனால் திரைமொழியில் அது அவசியமானது. செயற்கையானது என்றாலும் கதையை இதுதான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தும். ஆனால், இப்படிச் செய்யப்படும் ‘கட்’ நம்மை அடுத்த காட்சிக்கு மட்டுமே ஏன் கூட்டிச்செல்ல வேண்டும்? 17வது காட்சியின் ‘கட்’ 57-வது காட்சிக்கும், அதன் ‘கட்’ படத்தின் 2-வது காட்சிக்கும் நம்மைக் கூட்டிச் சென்றால் என்ன?

ஃப்ளாஷ்பேக், நான் - லீனியர் திரைக்கதை என இந்த வித்தையும் பலர் செய்ததுதான். ஆனால் இங்கே நோலன் ஒரு விதியை உடைக்கிறார். இந்தக் காட்சி களின் வரிசை மாறியி ருப்பதை அவர் பல படங்களில் நம்மிடமி ருந்து மறைத்திருப்பார். அடுத்தடுத்த காட்சிகளாகத் தோன்றும் இந்த வரிசையற்ற காட்சிகளைத் தன் திரைக்கதை மூலம் லாகவமாக முடிச்சுப் போட்டுக் காட்டுவார். இதனி டையே அவரின் கதா பாத்திரங்கள் காணும் கனவுகள், நினைவுகூரும் விஷயங்கள் என எல்லாவற்றையும் எந்தவித எச்சரிக்கையும் கொடுக்காமல் படத்தினுள்ளே வெறும் ‘கட்’களை மட்டும் வைத்துக் கொண்டே இணைத்து விடுவார். இதனால்தான் நோலன் படங்களை அவ்வளவு சிரத்தை யுடன் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. நாம் இந்த வேலையில் மூழ்கி யிருக்கும்போது அந்த ‘நோலன் மொமன்ட்’க்கான க்ளூவை மிகச் சுலபமாக வெட்ட வெளியிலேயே வைத்து மறைத்துவிடுகிறார். ஆனால், நம்மால் அதை அப்போது உணர்ந்துகொள்ள முடிவதேயில்லை.

நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்!

நோலனின் இரண்டாவது படமான ‘மெமன்டோ’ இந்த டிரிக்கில் அசாத்தியமானதொரு மைல்கல். ஒரு ‘கதையின்’ இறுதிக் காட்சியை ‘படத்தின்’ முதல் காட்சியாக வைத்துக் கொண்டு படம் ரிவர்ஸில் ஓடும். இந்த ரிவர்ஸ் டைம் லைனை கலரில் காட்டுவார்கள். இதனிடையே ‘கதையின்’ முதல் காட்சியைக் காட்டி அதன் அடுத்தடுத்த காட்சிகளை வழக்கமான வரிசையில் நகர்த்தும் ஃபார்வேர்டு டைம்லைன் ஒன்று ப்ளாக் அண்டு ஒயிட்டில் ஓடும். இந்த இரண்டும் சந்தித்துக்கொள்ளும் இடத்தில் ‘படம்’ முடிந்திருக்கும். அதாவது கிட்டத்தட்ட ‘கதையின் இடைவேளை’தான் படத்தின் ‘க்ளைமாக்ஸ்.’ இந்த டெக்னிக் ‘தி பிரெஸ்டிஜ்’, ‘இன்சப்ஷன்’, ‘டன்கிர்க்’ போன்ற படங்களிலும் இடம்பெற்றிருக்கும்.

நோலன் கட்டமைக்கும் உலகங்கள்:

தன் வசதிக்கேற்ற விதிமுறைகளுடன் கூடிய ஓர் உலகத்தை உருவாக்கிக்கொண்டு அதன் எல்லைக்குள் விளையாடுவார் நோலன். இதற்கு முக்கியக் காரணம் அவை நிஜ உலகில் நடந்தால் லாஜிக் மீறல்களும், அரசியல் ரீதியான கேள்விகளும் எழலாம். `இன்டர்ஸ்டெல்ல’ரில் எல்லாம் அழிந்துவிட்ட, மண் மூடப்போகும் உலகம், விண்வெளிப் பயணம் அதற்கான தனி லாஜிக் என்றால், ‘இன்செப்ஷ’னில் கனவு உலகம். அதுவும் கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள் கனவு என நேர விளையாட்டை சுவாரஸ்யமாக்கி யிருப்பார்.

நோலனின் கரியரில் மிக முக்கியமான ‘டார்க் நைட்’ ட்ரைலாஜி, சூப்பர்ஹீரோ ‘பேட்மேன்’ கதையை வித்தியாச மாகச் சொன்னது. ‘பேட்மேன்’ எனும் மூகமூடி அணிந்த சாகச ஹீரோவுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அவனின் ஆல்டர் ஈகோவான, அதாவது அந்த மூகமூடிக்குள்ளே இருக்கும் ப்ரூஸ் வெயின் எனும் சாதாரண மனிதனுக்கும் அளித்தது மிகப்பெரிய சோதனை முயற்சி எனலாம். அந்த சாதாரண மனிதனுக்கு ஏற்படும் தோல்விகள், துரோகங்கள், பிரச்னைகள் எப்படி அவனின் சூப்பர்ஹீரோ வெர்ஷனான ‘பேட்மேன்’ பாத்திரத்தைக் கட்டமைக்கிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருப்பார். இதற்கும் விதிமுறைகள் ஏதுமற்ற ‘கோதம்’ நகரம் எனும் உலகம் அவருக்கு உதவியிருக்கிறது.

நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்!

ரிலீஸுக்குக் காத்திருக்கும் அவரின் அடுத்த படமான ‘டெனட்’டும் இப்படியான விந்தையான ஓர் எதிர்கால உலகில், ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லர்’ போல நேர விளையாட்டுடன் தொடர்புடைய ஒன்றாகத் தெரிகிறது. “டைம் டிராவலின் ரிவர்ஸல் இது” போன்ற வசனங்கள் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கின்றன.

நோலன் எழுப்பும் கேள்விகளும் தத்துவார்த்தங்களும்:

இந்த வித்தைகள் மட்டும் தான் நோலன் படமா என்றால், இல்லை. இதையெல்லாம் தாண்டி அவர் அலசும் தத்துவார்த்தங்களும், பல இலக்கணங்களுக்கு எதிராக எழுப்பும் கேள்விகளும் சுவாரஸ்யமானவை. அதிலும் இருத்தலியல் பிரச்னை கொண்ட பாத்திரங்களைப் படைப்பதில் நோலன் கில்லாடி. அதுவரை வாழ்க்கையில் குறிக்கோளே இன்றி உலாவும் ஒருவன் உலகையே காக்கும் ஒரு பணிக்குத் தயாராவான். அல்லது, தன் குடும்பத்தை, தன் காதலைக் காக்க எந்த எல்லைக்கும் செல்ல ஒருவன் தயாராக இருப்பான். ‘பேட்மேன்’ பாத்திரத்தையே இப்படியான ஒரு கட்ட மைப்புக்குள்தான் நிறுவினார்.

நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்!

‘இன்டர்ஸ்டெல்லர்’ படத்தில் உலகைக் காக்க, மனித இனத்தின் எதிர்காலத்தை உறுதிசெய்ய, தன் செல்ல மகளை விட்டு நம் பிரபஞ்சம் தாண்டிய விண்வெளிப் பயணம் செய்கிறார் தந்தை. ‘நிச்சயம் திரும்பி வருவேன்’ என உறுதியளிக்கும் அவர் திரும்ப வரும்போது தன் மகளுக்குத் தன்னைவிட வயதாகிவிட்டதைப் பார்க்கிறார். இப்படியான முரணான ஹைக் கூக்கள் நோலன் படங்களில் நிறையவே உண்டு. நோலனின் ஆஸ்தான இசையமைப் பாளரான ஹேன்ஸ் ஜிம்மருக்கு நோலன் ‘இன்டர்ஸ்டெல்லர்’ ஸ்க்ரிப்டைச் சொன்ன விதம் சற்றே சுவாரஸ்யமானது. ‘ஒரு தந்தை தன் வேலை விஷயமாக மகளைப் பிரிந்து செல்கிறார்’ என்ற ஒன்லைனை மட்டும் சொல்லி அதற்கு இசை யமைக்கச் சொல்லியிருக்கிறார். அதிக பொருட்செலவில், ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் ஸ்பேஸ் த்ரில்லராக எடுக்கப்பட்டி ருந்தாலும் அந்தப் படத்தின் ஆன்மா என்னவோ ஒரு தந்தை தன் மகளைப் பிரிவது மட்டுமே என உணர்ந்திருந்தார் நோலன்.

கிறிஸ்டோபர் நோலனின் தம்பி ஜோனதன் நோலனும் ஒரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியர், இப்போது இயக்குநரும்கூட. இதுவரை நோலனின் ஐந்து படங்களுக்குத் திரைக்கதையிலும் உதவி யிருக்கிறார் ஜோனதன். கிறிஸ்டோபர் நோலனின் மனைவிதான் இவரின் பெரும்பாலான படங்களுக்குத் தயாரிப்பாளர். ஜூலை 30-ல் 50 வயதைத் தொடவிருக்கும் நோலன் இதுவரை வெறும் 11 படங்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். ஆனால், இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இயக்குநர்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் நோலனுக்கு அதில் நிச்சயம் ஓர் இடம் உண்டு. கொரோனாப் பேரிடரிலிருந்து ஹாலிவுட் திரையுலகம் மீள்வதற்கு அவர்கள் நம்பியிருப்பது நோலனின் 11-வது படமான ‘டெனட்’டைத்தான். ஏனென்றால், பரீட்சார்த்த முயற்சிகளான படங்கள் மட்டுமே எடுத்தாலும் அவை என்றுமே பாக்ஸ் ஆபீஸை நிரப்பத் தவறியதில்லை. அந்தவகையில்தான் நோலன் ‘ஏமாற்றும் கலைஞன்’ இல்லை.