Published:Updated:

டாம் அண்ட் ஜெரி தாத்தா!

ஜீன் டைச்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீன் டைச்

கொரோனா பேஷன் உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

2கே கிட்ஸ் மட்டுமல்ல. 60ஸ் கிட் வரைக்கும் பிடித்த விஷயமென இந்த உலகில் ஒன்றுண்டு. சிறுபிள்ளைகளைப் போல கவலைகளே இல்லாமல், சுற்றியிருப்பவர்களை எல்லாம் மறந்து, கண்களில் கண்ணீர் வர சிரிக்க வேண்டுமா? உடல் லேசாகி மனது காற்றில் மிதக்க வேண்டுமா? அரை ட்ரவுஸர் காலங்களும், குட்டை ஸ்கர்ட் காலங்களும் நினைவில் அலைமோத வேண்டுமா? ஒரு முறை டாம் அண்ட் ஜெரி பார்த்தால் போதும், அனைத்தையும் மீட்டெடுத்துவிடலாம். தலைமுறை கடந்து உயிர்த்திருக்கும் உன்னத படைப்பு டாமும் ஜெரியும்.

 டாம் ஜெரி
டாம் ஜெரி

வலிமைக்கு உருவகம் டாம் என்கிற பூனை என்றால் எளிமைக்கு அடையாளம் ஜெரியாகிய எலி. எளியவனை வலியவன் அடிப்பதைப் பார்த்தால் மனசு பதறும். வலியவனிடமிருந்து எளியவன் தப்பித்துக் கொள்ள மாட்டானா என்றுதான் அது ஏங்கும். அதிலும், அந்த எளியவன் தான் தப்பிப்பதோடு வலியவனுக்கு புத்தியும் புகட்டிவிட்டால் தானாகவே நாம் துள்ளிக்குதிப்போம்.

விவிலியத்தில் சொல்லப்படும் கொலியாத் - டேவிட் கதை துவங்கி விஜய், விக்ரம் படங்கள்வரைக்கும் இதுதான் மையக்கரு. டாம் அண்ட் ஜெரியின் கதைக் கருவும் அதுவேதான். வில்லியம் ஹன்னாவும் ஜோசப் பர்பராவும் இணைந்து உருவாக்கிய டாம் - ஜெரி கதாபாத்திரங்களை வைத்து எம்.ஜி.எம் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட எபிசோடுகளைத் தயாரித்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இதற்குப் பலர் கதை எழுதியிருக்கிறார்கள்; பலர் இயக்கியிருக்கிறார்கள். இதில் முக்கியமானவர் ஜீன் டைச். டாம் அண்ட் ஜெரியின் 13 எபிசோடுகளை இயக்கியவர். அனுபவமிக்க, தேர்ந்த அனிமேட்டர் என்பதால் 1961ல் இவரிடம் டாம் அண்ட் ஜெரியை இயக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. நகைச்சுவை என்ற போர்வையில் வன்முறை அதிகமாக இருப்பதாக கருதியதால், ஜீன் டைச்க்கு டாம் அண்ட் ஜெரி பிடிக்காது. இருந்தாலும் அதை ஒரு அசைன்மெண்ட் போலத்தான் ஏற்றுக் கொண்டார். டாம் அண்ட் ஜெரி இவர் கைகளுக்கு வந்த பிறகு வர்த்தக ரீதியாக இது பெரும் வெற்றிபெற்றது. அப்போது மேலை நாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்த லூனி ட்யூன்ஸ் போன்றவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு டாம் அன்ட் ஜெரி ரசிகர்களின் மனசை அள்ளியது. டாம் அண்ட் ஜெரியைத்தாண்டி, இவரது பங்களிப்பை ‘பப்பாயி தி செய்லர்’ துவங்கி...’ஆலீஸ் ஆஃப் வொண்டர் லேண்ட்’வரை பலவற்றில் பார்க்கலாம்.

இவர் டாம் அண்ட் ஜெரியை இயக்கிய காலம்தான் டாம் அண்ட் ஜெரியின் இருண்ட காலம் என்று வந்த விமர்சனத்தையும் சரி, இவர் பெற்ற ஆஸ்கார் விருதையும் சரி... ஒரே மாதிரிதான் இவர் எதிர்கொண்டிருக்கிறார். தனது 95வது வயதில், அதாவது, இறப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவைத் தன் கோணத்தில் இருந்து பார்த்து ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்ட கருத்து பலரையும் ஆச்சரியத்தோடு பார்க்கவைத்தது. அந்தப் பதிவு இதுதான்.

ஜீன் டைச்
ஜீன் டைச்

’கொரோனா பேஷன் உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இனி முககவசத்துக்கு மேட்சாக டி-ஷர்ட், ப்ளவுஸ் எல்லாம் விற்பனையாகப் போகிறது. டி ஷர்ட் வாக்கியங்கள் எல்லாம் இனி முககவசத்துக்கு இடம்மாறப் போகிறது.” ஜீனிடம் இருந்த கிரியேட்டிவிட்டி, அவர் வாழ்நாளின் கடைசி நாள் வரை அவரை உயிர்ப்போடு வைத்திருந்திருக்கிறது. அவர் இயக்கிய டாமும் ஜெரியும் இந்த உலகை அப்படி வைத்திருக்கும்.