Published:Updated:

அமேசானுடன் இணைய இருக்கும் எம்.ஜி.எம்... 4000 படங்கள் இனி அமேசான் வசம்?!

கார்த்தி
MGM
MGM ( MGM )

ஜேம்ஸ் பாண்டு மட்டுமல்ல ராக்கி சீரிஸ், ஹாபிட் சீரிஸ், போன்ற தொடர் படங்களும், பல்வேறு தொடர்களும் MGM லைப்ரரி வசம் உண்டு. ஃபார்கோ, வைக்கிங்ஸ் எனப் பல தொடர்கள் இனி அமேசான் ப்ரைம் வசம் செல்லலாம்.

மெட்ரோ - கோல்ட்வின் - மெயர் (அதாங்க படம் ஆரம்பிக்கும் போது ஒரு சிங்கம் கர்ஜனை செய்துட்டே தலையை சிலுப்பிக்கிட்டு ஒரு ரவுண்டுக்குள்ள நிக்குமே) நிறுவனம் தாமாக முன்வந்து அமேசானுடன் இணைய இருக்கிறது என்கிறது ஹாலிவுட் வட்டாரம். MGM நிறுவனம் கடந்த சில மாதங்களாக நல்லதொரு விற்பனையாளரை தேடிக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு 9 பில்லியன் டாலர் கொடுத்தீங்கன்னா முடிச்சுக்கலாம் என்பதுதான் MGM தரப்பு வாதமாம். ஆனால், இன்னமும் டீல் முடிந்ததாக இரு பக்கமும் எந்த அறிவிப்பும் வரவில்லை.

அமேசான் ப்ரைம் வீடிய்ப்ப்
அமேசான் ப்ரைம் வீடிய்ப்ப்

ஆப்பிள் நிறுவனமும், காம்காஸ்ட் நிறுவனமும் ஏற்கெனவே 6 பில்லியன் வரை பேரம் பேசியிருக்கிறார்கள். ஆனாலும் MGM 9 பில்லியன் என கறாராக இருந்திருக்கிறது. தற்போது அமேசான் அந்த டீலை எட்டிப் பிடிக்க இருக்கிறது என்கிறார்கள். இதன் மூலம் ஜேம்ஸ் பாண்டு படங்கள் உட்பட 4000 MGM திரைப்படங்கள் அமேசான் ப்ரைம் வசம் வந்துவிடும். ஜேம்ஸ் பாண்டு மட்டுமல்ல ராக்கி சீரிஸ், ஹாபிட் சீரிஸ், போன்ற தொடர் படங்களும், பல்வேறு தொடர்களும் MGM லைப்ரரி வசம் உண்டு. ஃபார்கோ, வைக்கிங்ஸ் எனப் பல தொடர்கள் இனி அமேசான் ப்ரைம் வசம் செல்லலாம். தங்களிடம் உள்ள 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களில், 175 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கடந்த ஆண்டு ப்ரைம் வீடியோ பயன்படுத்தியதாக சொல்கிறார் ஜெஃப் பெசோஸ். நெட்பிளிக்ஸ் அளவுக்கு, ப்ரைமில் புதிய கண்டெண்டுகள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. பழைய கண்டெண்டும் பெரிதாக ப்ரைமில் இல்லை என்பது தனிக்கதை. அதை மாற்றத்தான் தொடர்ந்து போராடி வருகிறது அமேசான். ஹாட்ஸ்டார், சோனி போல் விளையாட்டுத் தொடர்களை வாங்க ஆரம்பித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் MGM டீலையும் பார்க்க வேண்டியதிருக்கிறது.

உண்மையில் ஸ்டிரீங் தளங்களின் வருகைக்குப் பின்னர், 9 பில்லியன் எல்லாம் மிகவும் சின்ன டீல் தான். AT&T - டைம் வார்னர் 85 பில்லியன் டாலர்கள், டிஸ்னி - ஃபாக்ஸ் 71 பில்லியன் என்பதோடு இதை ஒப்பிட வேண்டியதிருக்கிறது. இன்னொன்று MGM எல்லாம் சின்ன மீன்தான். பெரிய மீன்களுக்கான போட்டி தனியாக நடந்துகொண்டிருக்கிறது. STX நிறுவன படங்களை கோச்சடையான் புகழ் ஈராஸ் இண்டர்நேஷனல் கடந்த ஆண்டு வாங்கியது.

டிஸ்னி ஹாட்ஸ்டார், HBO மேக்ஸ், ஆப்பிள் டிவி என புதிய வீரர்கள் வேகமாக உள்ளே நுழைய அமேசானும், நெட்பிளிக்ஸும் இன்னும் வேகமாக பெரிய படங்களை வாங்க ஆரம்பிக்கிறார்கள். லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் ஐந்து பாகத் தொடருக்கு மட்டும் 1 பில்லியன் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறது அமேசான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜேம்ஸ் பாண்டு படங்கள் என்னவாகும்?

ஜேம்ஸ் பாண்டு படங்களின் 50% பங்குகளைத்தான் MGM வைத்திருக்கிறது. மீதி 50% EON நிறுவனத்திடம் இருக்கிறது. அதன் நிறுவனர்களான பார்பரா ப்ரோக்கோளியும், மைக்கல் வில்சனும்தான் ஜேம்ஸ் பாண்டு படங்களில் கிரியேட்டிவ் லைசன்ஸ் வைத்திருப்பவர்கள். படத்தின் வசனம், விளம்பரம், சண்டைக் காட்சிகள், நடிகர்கள் என எல்லாமே இவர்களின் கையெழுத்துடன்தான் தொடர முடியும். 58 ஆண்டுக்கால ஜேம்ஸ் பாண்டு என்னும் பொன் முட்டையிடும் டிராகனை அறுக்க வில்சன் அனுமதித்ததே இல்லை. அவரால்தான் இன்றுவரையில் ஜேம்ஸ் பாண்டு படங்களுக்கு ஸ்பின் ஆஃப் வந்ததில்லை.

James Bond
James Bond
Nicola Dove

இன்னொரு பக்கம் 15 ஆண்டுக்கால ஜேம்ஸ் பாண்டு வாழ்க்கைக்குப் பின், அதிலிருந்து விலக இருக்கிறார் டேனியல் க்ரெய்க். அவரின் கடைசி ஜேம்ஸ் பாண்டு படமான No Time To Die (எந்த நேரத்தில் இந்தப் பெயர் தேர்ந்தெடுத்தார்களோ, உலகமே அப்படித்தான் இருக்கிறது) படம் கொரோனாவால் தள்ளிக்கொண்டே போய் இந்த ஆண்டு அக்டோபர் மாத ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. படத்தின் பட்ஜெட் 250 மில்லியன் டாலர். முந்தைய படமான ஸ்பெக்டர் உலக அளவில் 900 மில்லியன் டாலர்களை வசூலாக ஈட்டியது.

அடுத்த கட்டுரைக்கு