Published:Updated:

The Tomorrow War: அதே ஏலியன், அதே டைம்டிராவல், அதே சென்டிமென்ட்... டெம்ப்ளேட்டை மாத்துங்க ஹாலிவுட்!

The Tomorrow War
News
The Tomorrow War

எபிசோடுகளாக எடுக்கப்படும் வெப்சீரிஸ் எல்லாம் இன்றைய பிரச்னைப்பாடுகளையும் அதற்கான தீர்வுகளையும் காட்டத்தொடங்கிவிட்டன. ஆனால், படங்கள்..?

"இந்த உலகத்தைக் காப்பாற்றினால் என் மகளைக் காப்பாற்ற முடியும் என்றால் நான் அதைக் கண்டிப்பாகச் செய்வேன்" - `The Tomorrow War’ திரைப்படத்தின் நாயகன் பேசும் வசனம் இது. காலப்பயணம், வேற்றுக்கிரகவாசிகள் போன்ற கற்பனைகள் ஜார்ஜ் பால், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன், கிரிஸ்டோபர் நோலன், ஜோஸ் வேடன் போன்றவர்களால் சினிமாவாகச் செய்யப்பட்டு வந்தாலும், பெரும்பாலான படங்கள் ஒரே மாதிரி க்ளிஷேக்களாகவே வருகின்றன.

ஜூலை 2 அன்று அமேசான் ப்ரைமில் வெளியானது `தி டுமாரோ வார்.’ காலப்பயணம், அயல் கிரகவாசி இரண்டையும் இணைத்து ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி, சென்டிமென்ட் என எல்லாம் கலந்து அரைத்திருக்கிறார்கள். இயக்குநர் கிரிஸ் மெக்கே ஏற்கெனவே திரைப்படம், டிவி தொடர் ஆகியவற்றில் இயக்கம், எழுத்து, தயாரிப்பு, படத்தொகுப்பு என எல்லாவகையிலும் செயல்பட்டுவருபவர்தான் என்றாலும், இந்த வரிசைப்படங்களில் என்னவெல்லாம் அடுத்தடுத்து நடக்கும் என நாம் தெளிவாக யூகிக்கிறோமோ அவையெல்லாம் 0.01 கூட மாறாமல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் 'நாளைய போர்' என்பது நமக்கு இன்றைய `போர்’ ஆகத்தான் இருக்கிறது.

The Tomorrow War
The Tomorrow War

முதன்மை நடிகர்களாக கிரிஸ் ப்ரேட் (அவெஞ்சர்ஸ் - ஸ்டார் லார்டு), யோன்னே ட்ராவ்ஸ்கி (எட்ஜ், தி பிரிடேட்டர்), ஜே.கே.சிம்மன்ஸ், ஜாஸ்மின் மேத்திவ், சாம் ரிச்சர்சன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் பெரிய, ஒரே பலம் நடிகர்கள்தாம். கிரிஸ் ப்ரேட்டும் யோன்னேவும் தந்தை மகளாக எந்த ஓர் உணர்வையும் மிகைகுறைவின்றி வெளிப்படுத்தியிருப்பது படத்தில் நம்மை ஒன்றியிருக்கச் செய்துவிடுகிறது. குழந்தைப்பருவ மகளாக வரும் சிறுமி ரியான் கியரா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் நடிகர்களிடம் சிறப்பான நடிப்பை வாங்கியிருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒருவேளை இதன் பிரமாண்டக் காட்சிப்படுத்தல்களால் இந்தப் படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்தால் ரசிக்கவைத்திருக்குமோ என்னவோ! இசையும் குறைவான பங்களிப்பையே செய்திருக்கிறது. படத்தின் நேரம் கூடுதலாக உணரப்படுவதும் ஒரு குறைதான். இதன் தமிழ் டப்பிங் ஒரு பிளஸ் என்றாலும், நகைச்சுவை என நினைத்து எழுதப்பட்ட சில வசனங்கள் ஆங்காங்கே எரிச்சலூட்டுகின்றன.

பொதுவாக ஏலியன் படம் என்றாலே டைனோசரையும் ஆக்டோபஸ்ஸையும் கலந்த கலவையாகத்தான் ஏலியன்களைக் காட்டவேண்டும் என்பதை எவ்வளவு காலத்துக்குப் பிடித்துக்கொண்டிருப்பார்கள் எனத் தெரியவில்லை. `ஈ.டி’, `அவதார்’ படங்கள் போல் இல்லாவிட்டாலும் `சைன்ஸ்’ படத்தில் காட்டப்படுவது போன்றேனும் வடிவமைக்கலாம். அவதாரேனும் மூன்றாம் உலகநாடுகளை வைத்து பிற நாடுகள் செய்யும் இயற்கை வள அரசியல் பாடுகளைப்பற்றிப் பேசியது. காலப்பயணம், வேற்றுக்கிரக வாசிகளை எல்லாம் வைத்து இனியும் எத்தனை நாள்களுக்கு வெறும் மசாலா படங்களை மட்டுமே எடுப்பார்கள் எனத் தெரியவில்லை.

The Tomorrow War
The Tomorrow War
எபிசோடுகளாக எடுக்கப்படும் வெப்சீரிஸ் எல்லாம் இன்றைய பிரச்னைப்பாடுகளையும் அதற்கான தீர்வுகளையும் காட்டத்தொடங்கிவிட்டன. இன்றைய திரைப்படம் அதற்கான கலையமைதியோடு இன்னும் வேறுபல அழகியல்களையும், அதனுடன் வலிமையான அரசியலையும் பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

எங்கிருந்தோ நம் அறிவியற்கண்களுக்குத் தெரியாத தொலைவிலிருந்து இங்கு வந்துசேரும் அளவு விஞ்ஞான அறிவு பெற்றுவிட்ட அயல் உயிரைக்காட்டும்போதும் அதன் பெண்ணினத்தைப் பொத்திவைத்து ஆண் இனம் காவல்காக்கிறது என்பதான ஆணாதிக்கச் சிந்தனையெல்லாம் 'தி டுமாரோ வார்'-இன் பிரமாண்டத்தை ரசிக்கவிடாமல் செய்கிறது.

மனிதர்களான தந்தை மகள் உரையாடல் தவிர்க்கமுடியாத சென்டிமென்ட் திணிப்பாகத் தெரிந்தாலும், அவர்கள் இருவரின் நடிப்பும், பாத்திரப் படைப்பும்தான் இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2051-ல் `என்னையும் அம்மாவையும் விட்டு நீங்கள் பிரிந்துசென்றுவிட்டீர்கள்’ என்று மகள் அழுவதைப்பார்த்து, நிகழ்காலத்தில் (2022) தன்னை உணர்ந்து திருத்திக்கொள்ளும் தந்தையைப் பாராட்டலாம்தான் என்றாலும், தற்போது நிறைய குடும்பங்கள் ஆண்களின் துணையில்லாமலேயே எழுந்து நிற்கும்போது இதுவும் ஒரு வகையில் ஆணாதிக்கச் சிந்தனையை விதைப்பதாகத்தான் தோன்றுகிறது.

The Tomorrow War
The Tomorrow War

முதல் வரியில் படிக்கப்பட்ட வசனம் ஒன்றை உணர்த்துகிறது. தன்னை, தன் மகளை, தன் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஒருவர் இந்த உலகத்தையே அழிப்பேன் என்றில்லாமல், மொத்த உலகமும் நன்றாக இருந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழும் என்ற சிந்தனை இன்றைய சூழலுக்கு அவசியமானது. அதை உணர்த்த வேற்று கிரகத்திலிருந்து ஆபத்தைக் கொண்டுவரத் தேவையில்லை. இந்தக் கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்துக்கான குறியீடாக வேண்டுமானால் இதை எடுத்துக்கொள்ளலாம்.

திரை நேரத்தில் முக்கால்வாசியை ஆயுதங்களும் சண்டையும் எடுத்துக்கொள்ளும் படங்களை `வேற லெவல்’ என்பவர்கள், சென்டிமென்ட் விரும்பிகள் கண்டிப்பாகப் பார்க்கலாம்.