பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

உங்களுக்கு இது புரிய வாய்ப்பே இல்லை!

Joker
பிரீமியம் ஸ்டோரி
News
Joker

கோதம் நகரில் ஓர் அசாதாரணச் சூழல் நிலவுகிறது. பொருளாதார மந்தநிலை ஒருபுறம்.

ரில் அதிகரித்துவிட்ட பெருச்சாளிகளின் தொல்லை ஒருபுறம். நோய்கள் பரவுவதைத் தடுக்க, எலிகளைத் தூர விரட்ட, கதைகளில் வரும் Pied piper போன்று ஒருவன் வருவானா என்பதே நகரவாசிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், உண்மையில் அந்த எலிகளைவிட ஆபத்தானவர்கள் கோதம் நகரின் மனிதர்கள்தான். அவர்களைக் கட்டுக்குள் வைத்து அந்த நகரின் நிழல் உலகை ஆள ஒருவன் தேவைப்படுகிறான். ஆர்தர் ஃப்ளெக் எனும் ஜோக்கர் உருவாகிறான்.

சூப்பர்ஹீரோ படங்களின் அடையாளங்களான ‘வாவ்’ கிராபிக்ஸ், அசத்தும் ஸ்டன்ட் கொரியோகிராபி, 3D டெப்த் என மாயாஜாலங்கள் அனைத்தையும் தவிர்த்த ஒரு வித்தியாசமான காமிக் புக் படமாக வந்திருக்கிறது இந்த ‘ஜோக்கர்.’

Joker
Joker

ஜோக்கர் என்றாலே பேட்மேனின் பரம எதிரி; கோதம் நகர மக்களைத் துன்புறுத்தி ரசிக்கும் சைக்கோ என்பதுதான் இதுவரையான பிம்பம். ஆனால், யார் இந்த ஜோக்கர், அவன் ஏன் இப்படி ஆனான் எனக் காரணம் சொல்லும் கதையாகத் திரையில் விரிகிறது ‘ஜோக்கர்.’ ஒரு மனிதனுக்குத் தேவையான குடும்பம், நண்பர்கள், நல்ல வேலை, சமூக அந்தஸ்து என அனைத்தையும் அவனுக்குக் கிடைக்காதவாறு செய்துவிட்டால், அந்த மனிதன்தான் இந்த சமுதாயமே அஞ்சி நடுங்கும் ஒருவனாக உருவெடுப்பான். இந்த ஒற்றை வரிக் கதையை எவ்வித சமரசமும் இல்லாமல், ஒவ்வொரு காட்சியையும் ஒருவித குரூர அழகியலுடன் அணுகி, அதில் தன் நாயகனின் மிரட்டல் நடிப்பைக் கலக்கவிட்டு மிரட்சி ஏற்படுத்துகிறார் ‘ஹேங் ஓவர்’ புகழ் இயக்குநர் டாட் ஃபிலிப்ஸ்.

‘ஜோக்கர்’ என்கிற ஆர்தர் ஃப்ளெக்காக வகீன் ஃபீனிக்ஸ். எலும்பும் தோலுமான உடல் (22 கிலோ எடை குறைத்திருக்கிறார்), சம்பந்தமில்லாத நேரங்களில் தன் நோய் காரணமாக அடக்க முடியாமல் பீறிடும் சிரிப்பு, கொலைகள் செய்துவிட்டு நடனமாடும் மனோபாவம் என, தான் வரும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நம் கண்களை அவர் பக்கமே இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார். மூத்த நடிகர் ராபர்ட் டி நீரோவைக்கூட ஓரங்கட்டிவிட்டு திரையை ஆக்கிரமிக்கும் அந்த அசாத்தியத் திறன்... இப்போதே ஆஸ்கர் விருதில் ஃபீனிக்ஸ் பெயரைப் பொறித்துவிடலாம்.

ஜோக்கர் எவ்வித அரசியல் கொள்கைக்குள்ளும் அடங்காமல், சொல்லப்போனால் பரந்துபட்ட நோக்கம் எதுவும் இல்லாமல், தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே சமுதாய அடுக்குகளைக் கேள்வி கேட்பவனாக இருக்கிறான். அதனால்தான் அவனால் கொடூரமாகக் கொலைகள் செய்ய முடிகிறது. குற்றவுணர்வு எதுவும் இல்லாமல் திரிய முடிகிறது.

ஃபீனிக்ஸைத் தாண்டி படத்தில் ஈர்ப்பது பெண் இசையமைப்பாளர் ஹில்துரின் பின்னணி இசை. எப்போதும் கசியும் அந்த ரீங்கார ஒலி, சமயங்களில் அலறும் வயலின், மெல்லிசையில் காட்சிக்கு அமானுஷ்ய சாயம் பூசும் பியானோ இசை என, படத்தின் திகில் தன்மைக்கு மேலும் வலுச் சேர்க்கிறார் அம்மணி. பெரும்பாலும் இருட்டில் உலாவும் லாரன்ஸ் ஷெர்ரின் கேமரா, ஜோக்கருக்கு வெகு அருகில் நம்மை அமர்த்தி அவனின் கதையைப் பார்க்க வைக்கிறது.

Joker
Joker

“நான் மட்டுமா, அல்லது, இந்த நகரத்துக்கே மனநலம் பிறழ்ந்துவருகிறதா?”, “என்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தும்போது ஜோக்கர் என்று அறிமுகப்படுத்துங்கள்!”, “எந்தக் கோழை இப்படியொரு படுபாதகத்தைச் செய்வான், முகமூடிக்குப் பின் ஒளியும் ஒருவன்தானே?” போன்ற வசனங்கள் ஒரு முழுநீளக் காட்சி சொல்ல வேண்டியதை நறுக்கென்று சொல்லி முடிக்கின்றன. கடைசி 20 நிமிடங்களும், அந்த லைவ் டிவி நிகழ்ச்சியும் எப்பேர்ப்பட்டவர்களையும் சற்றே பதறவைக்கும்.

இவ்வளவு வன்முறை தேவையா, பிரச்னையான வாழ்க்கை என்றால் கொலைகாரனாக மாறவேண்டுமா போன்று தர்க்கரீதியாகவும், படம் பேசும் அரசியல் ரீதியாகவும் இந்த ஜோக்கரை விமர்சிக்கலாம்தான். ஆனால், ஒரு சைக்கோபாத்தின் கதையைத் தர்மப்படிதான் சொல்லிவிட முடியுமா?

இறுதிக்காட்சியில், மனநல மருத்துவரிடம் கட்டுக்கடங்காமல் சிரிப்பான் ஜோக்கர். தனக்கு ஒரு ஜோக் தோன்றியதாக அந்தச் சிரிப்புக்குக் காரணம் சொல்வான். மருத்துவர் அவனிடம் தனக்கும் அந்த ஜோக்கைக் கூறுமாறு கேட்க, அதற்கு ஜோக்கர் சொல்லும் அந்த ஒரு வரி வசனம்தான் இந்தப் படம் சொல்லும் சேதி.

“உங்களுக்கு இது புரிய வாய்ப்பே இல்லை!”

(You won’t get that!) ஆம், ஆர்தர் ஏன் ‘ஜோக்கர்’ ஆனான் என்பதை அவனால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.