Published:Updated:

நிராகரிப்பின் ஓலம், விரக்தியின் கோபம், ஜோக்கரின் கொண்டாட்டம் எப்படி இருக்கிறது? #Joker

'பேட்மேனை'ப் போன்றதோரு சூப்பர் ஹீரோவை எதிர்க்கும் சூப்பரான வில்லனென்றுதான் ஜோக்கரைச் சொல்ல வேண்டும். காரணம், இவருக்கான தனித்துவம் இவரது விரக்தியும், கோபமும் மட்டுமே. தவிர, எந்தவொரு சூப்பர் வில்லன் தன்மையோ, திறனோ இவருக்காகப் பொறுத்தப்படவில்லை.

Joker
Joker ( Joaquin Phoenix )

'ஹாஹாஹா' என்ற சிரிப்பொலியோடு இந்தக் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தால் சரியாக இருக்கும். கலை ஏன் இவ்வளவு கொண்டாட்டத்திற்குரியது என்பதை நிரூபித்திருக்கிறது `ஜோக்கர்' திரைப்படம். ஸ்டாண்ட்-அப் காமெடியனாக மக்களை மகிழ்விக்க நினைக்கும் ஒருவனை இச்சமூகம் விரக்தியால் சிரிக்கவிட்டு, வேடிக்கையாக்கி, கொலை செய்யத் தூண்டி, இறுதியில் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் எனும் அரியணையில் ஏற்றுகிறது.  

ஜோக்கர்
ஜோக்கர்

திரும்பும் திசையெங்கும் நெகட்டிவ் எனர்ஜியை மட்டுமே உணர்பவர், ஆர்த்தர் ஃப்ளெக்/ஜோக்கர் (வகீன் ஃபீனிக்ஸ் - Joaquin Phoenix). ஒன்றல்ல, இரண்டல்ல... தன் மொத்த வாழ்நாளையே மோசமான சூழல் சூழக் கடக்கிறார். அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல், தன்னை `ஹேப்பி' என்ற செல்லப் பெயரில் அழைக்கும் அம்மா, பென்னி ஃப்ளெக் (ஃப்ரான்சஸ் கான்ராய்). உலகமே தன்னை அழவைத்து வேடிக்கை பார்க்க, ஆர்த்தருக்கு ஸ்டாண்ட்-அப் காமெடியனாகி,  மக்களைச் சிரிக்க வைக்க வேண்டுமென்பது ஆசை. விரக்தியடைந்தால் வெடித்துச் சிரிக்கும் வியாதியும் அவருக்கு இருக்கிறது. 

வலி, வேதனையை மட்டுமே தரும் இச்சமூகத்தைக் கண்டு, தன் நிழலைவிட வேகமாக ஓடும் ஆர்த்தர், ஒருநாள் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி திரும்பிப் பார்த்து தன்னை வதைத்த அதே சமூகத்தை என்னவெனக் கேட்கிறார். எவ்வித சைக்கோபாத் தனங்களும் இல்லாமல் பர்சனல் காரணங்களுக்காக சில கொலைகளையும் செய்கிறார். இவரின் இந்த வெறித்தனப் பயணத்தில் கோத்தம் நகரத்தின் கேப்டலிச தலைவரான தாமஸ் வெயின் குறிக்கிடுகிறார்.

ஜோக்கர்
ஜோக்கர்

ஆர்த்தரின் பிரத்யேக கதை ஒரு பக்கம் நகர்ந்துகொண்டிருக்க, கோத்தம் நகரத்தைக் குறிவைத்து நடக்கும் பொருளாதாரச் சரிவுக்கான போராட்டமும், கலவரமும் இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. மக்களை மகிழ்விக்க நினைக்கும் ஆர்த்தரின் கனவுப் பாதை திசைமாறி, மொத்தமாக வேறு பக்கம் சென்றுவிடுகிறது. இவரின் வெறிச்செயல்களுக்கு யார் யார் பலியாகிறார்கள், அதற்கு என்னென்ன காரணங்கள் என்பதுதான் மொத்தப் படமும்! 

கிறிஸ்டோஃபர் நோலனின் `பேட்மேன்' பட வரிசையின் 2-வது பாகத்தில் ஹீத் லெட்ஜர் ஜோக்கராக நடித்திருப்பார். ஆம், பேட்மேனின் பரம எதிரியான ஜோக்கர் கதாபாத்திரத்தின் நீட்சிதான், இப்படம். ஹீத் லெட்ஜர் அந்தக் கதாபாத்திரத்தில் தொட்ட உயரத்தைக் குறிப்பிடாமல் ஜோக்கர் கதாபாத்திரம் குறித்து எந்தக் கட்டுரையையும் எழுதிவிட முடியாது. ஆனால், ஹீத்தின் ஜோக்கரை எங்கும் நினைவுப்படுத்தாமல், இந்த ஜோக்கரின் கதாபாத்திரத்தைக் கட்டமைத்திருப்பது சிறப்போ சிறப்பு.

I just hope my death makes more cents (sense) than my life!
Joker

அழுது வடிந்த கண்களுடன், விரக்தியில் சிரித்த உதடுகளுடன் கோத்தம் நகரம் முழுவதும் உலாவி ஜோக்கரின் ஒப்பனையில் வெறியாட்டம் போட்டிருக்கிறார், வகீன் ஃபீனிக்ஸ். ஒட்டுமொத்தச் சமூகத்தாலும் காரணமின்றி ஒதுக்கப்படும்போதும், வெறுக்கப்படும்போதும் மனதில் எழும் ஒருவித அழுத்தத்தை அவரது கண்களும், வெடித்துச் சிரிக்கும் அவரது வாயுமே வெளிக்காட்டியிருக்கிறது. இந்நேரம் ஹீத் லெட்ஜர் இதைப் பார்த்திருந்தால் அவரது பாணியிலே 'Why so serious' என வகீனிடம் கேட்டிருப்பார். மகத்தான நடிகனிடன் மகத்தான நடிப்பு!

`பேட்மேனை'ப் போன்றதொரு சூப்பர் ஹீரோவை எதிர்க்கும் சூப்பரான வில்லன் என்றுதான் ஜோக்கரைச் சொல்ல வேண்டும். காரணம், இவருக்கான தனித்துவம் இவரது விரக்தியும், கோபமும் மட்டுமே. தவிர, எந்தவொரு சூப்பர்வில்லன் தன்மையோ, திறனோ இவருக்காகப் பொறுத்தப்படவில்லை. தனது ஸ்டாண்ட்-அப் காமெடியில் பயன்படுத்த சுற்றி நடக்கும் நிகழ்வுகள், தனது சிந்தனைகள் என அத்தனையையும் ஒரு டைரியில் கோணல் மாணலாகக் குறிப்பிட்டிருப்பார். அதுவே இவரை கேளிக்கை செய்பவர்களுக்குப் பாதகமாகிவிடும்.

ஜோக்கர்
ஜோக்கர்
`வெனோம், ஜோக்கர், சூசைட் ஸ்குவாட், டெட்ஷாட், ட்ரெஞ்ச்...’ - இது சூப்பர் வில்லன்களின் காலம்

வகீன் ஃபீனிக்ஸ் படத்தின் முதன்மைக் கதாபாத்திரமென்றால், கண்ணால் பார்க்க முடியாத, காதால் கேட்க முடிகிற இசையமைப்புதான் படத்தின் இரண்டாம் நாயகன். நிராகரிப்பின்போது எழும் ஓலமாகட்டும், விரக்தியில் உண்டாகும் கோபகாமட்டும், ஜோக்கராகத் தெளிந்து, துணிந்து பின் வெளிப்படும் கொண்டாட்டமாகட்டும்... இது போன்ற உணர்வுகளைத் தனது இசையின் மூலம் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார், இசையமைப்பாளர் ஹில்டர்.

ஒரு பிரபலத்தைத் தூரத்திலிருந்து ரசிப்பதற்கும், உடனிருந்து பழகுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அவர்களது வாழ்க்கை முறை திரையுலகிற்கும், நிஜ வாழ்க்கைக்கும் கட்டாயம் வேறுபடும். இதில், அப்படியொரு ஸ்டாண்ட்-அப் காமெடியனான முர்ரேய் ஃப்ராங்க்ளினை (ராபர்ட் டி நீரோ) பிரமிப்போடு வழிபட்டு வருவார், ஆர்த்தர். ஒருகட்டத்தில், தான் பயன்படுத்தப்படுகிறோம் எனத் தெரியவந்த பின்னும், ஜோக்கராக உருமாறிய பின்னும், ராபர்ட் டி நீரோவுடனான உரையாடல் ஒன்று படத்தில் நிகழும். அதுதான் க்ளைமாக்ஸ் காட்சி.

ஜோக்கர்
ஜோக்கர்

அப்போது ராபார் டி நீரோவிடம், வகீன் கேட்கும் கேள்விகள் அனைத்தும் அவரது துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவைவிட வேகமாயிருந்தது. வகீனை அந்தக் கதாபாத்திரத்தில் எவ்விதத் தயக்கமுமின்றி கம்பீரமாக அமர்த்தியதும் அந்த மொமன்ட்தான். ரசிகர்கள் வெகுவாக அவரை ஜோக்கராக ஏற்றுக்கொண்டதும் அப்போதுதான். 

ஆர்த்தர் (எ) ஜோக்கர் தனக்கு வேண்டியதை அதற்கு முன் கெஞ்சிக் கேட்டார்; யாருக்கும் கேட்கவில்லை. கதறிப் பார்த்தார்; ஒருவர்கூட சீண்டவில்லை. அழுது வடிந்தார்; துடைப்பதற்கு நாதியில்லை. வன்முறையக் கையிலெடுத்தார்; சில கோரக் கொலைகளை மக்களின் பார்வைக்குத் தெரியும்படி செய்தார். இறுதியில் காவல்துறையால் கைதும் செய்யப்பட்டார்... ஊரே அவரைத் திரும்பிப் பார்த்தது, ஜோக்கர் முகமுடி போட்ட மொத்தக் கூட்டத்துக்கும் அவரைத் தலைவானாக்கியது. மக்களின் பயமெனும் பலவீனத்தைத் தன்னுடைய பலமாக மாற்றிக்கொண்டார். அதுவரை விரக்தியில் சிரித்த மனிதர், சந்தோஷத்தில் சிரித்தார்.

சூடோபல்பர் எஃபெக்ட், வித்தியாச உடல்மொழி, சாடிஸ்டிக் சிரிப்பு...  `ஜோக்கர்' பார்க்க ரெடியா?!

படம் முடிந்தபின் 30 நொடிகள் அமைதி. இயக்குநரின் பெயர், டாட் ஃபிலிப்ஸ் என வந்தவுடன் மொத்தக் கூட்டமும் கைதட்டிப் பாராட்டியது. மக்களின் அந்தப் பாராட்டை இங்கேயும் பதிவு செய்கிறேன். படம் எந்த வகைத் தாக்கத்தை கொடுக்கப்போகிறது என்பது அவரவர் பார்வையில்தான் உள்ளது. ஆனால், பொதுவாக ஆர்த்தரின்... ஸாரி, ஜோக்கரின் அந்தச் சிரிப்புச் சத்தம் கண்டிப்பாக உங்களது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். வாழ்த்துகள் ஜோக்கர்!