Published:Updated:

கொடூரக் கொலைகள், கேங்ஸ்டர் நட்பு, டீ-ஏஜிங் புரட்சி! எப்படியிருக்கிறது ஸ்கார்சஸியின் #TheIrishman

கார்த்தி
ர.சீனிவாசன்

துப்பாக்கிகளுக்கு அஞ்சாதவர்... மகளுக்குப் பயந்து, அவளின் பாசத்துக்காக ஏங்குவது ஸ்கார்சஸியின் மேஜிக் டச்! #TheIrishman

``ஏன்..? ஏன் நீங்க போன் பண்ணலை?” மகள் பெக்கியின் கேள்வியும் அவளின் அந்த ஊடுருவும் பார்வையும், அப்பா ஃப்ராங்க் ஷீரன் இத்தனை வருடம் சேர்த்துவைத்திருந்த ஒட்டுமொத்த கேங்ஸ்டர் கெத்தை சுக்குநூறாக்குகின்றன. குற்ற உணர்ச்சி. அது எப்பேற்பட்ட அரக்கனுக்கும் வரும். எல்லோருக்கும் நண்பர். கபட வேடம் போடாத, ‘தி கிரேட் மேன்’ எனப் பட்டம் பெற்ற ஃப்ராங்கிற்கு மட்டும் வராமல் போய்விடுமா என்ன?
Al Pacino in The Irishman
Al Pacino in The Irishman

“எப்படிப்பட்ட ஒருத்தன், அப்படிப்பட்ட ஒரு போன்கால் பண்ணுவான்?” பின்னாளில், முதுமையில் ஃப்ராங்க் உளறும் இந்த வார்த்தைகள்தான் ‘தி ஐரிஷ்மேன்’ படத்தின் ஒட்டுமொத்த நிகழ்வை, அது நிகழும் உலகை, அதில் உலவும் மனிதர்களைத் தன்னுள் அடக்கி, நம்மை சிலிர்க்கவைக்கின்றன, கேங்க்ஸ்டர் கதைகளின் மன்னன் மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில்... ஆம், மார்வெல் படங்களை வம்புக்கு இழுத்து, ‘அதெல்லாம் சினிமாவே இல்லை’ என எள்ளல் செய்த அதே மனிதர்தான், தற்போது நெட்ஃப்ளிக்ஸில் தன் புதிய படத்தை வெளியிட்டுள்ளார்.

முதுமையில், மரணத்திற்காகத் தன் அறைக் கதவைத் திறந்தே வைத்து காத்திருக்கும் ஒருவரிடம், சொல்வதற்கு எத்தனை கதைகள் இருக்கும்? தன் இளமைப் பருவத்து நினைவுகள், பார்த்தவுடன் பற்றிக்கொண்ட காதல், மகள்களின் பாசம்... ஹிட்மேன் ஃப்ராங்க்கின் வாழ்க்கையில் இவை அனைத்தும் இருந்தாலும், அவர் சொல்லும் ஃப்ளாஷ்பேக்குகளில் முதன்மைப்படுத்தப்படுவது என்னவோ அவர் துரத்தித் துரத்தி செய்த கொலைகளும், கேங்ஸ்டர்களுடனான நட்பும், ஆங்காங்கே அரசியலும்!

Robert De Niro in The Irishman
Robert De Niro in The Irishman

பெண்களுக்கு, இந்தக் கதையில் சிகரெட் புகைப்பதைத் தவிர்த்து பெரிய ரோல் இல்லையென்றாலும், ஃப்ராங்க்கின் மகளாக வரும் பெக்கியின் பாத்திரப் படைப்பு பிரமிக்கவைக்கிறது. எண்ணிவிடக்கூடிய வார்த்தைகளை மட்டுமே உதிர்க்கும் பாத்திரம் என்றாலும், தன் அப்பாவை அவள் ஒவ்வொரு முறையும் பார்க்கும் பார்வையில், ஓராயிரம் அர்த்தங்கள் புதைந்திருக்கின்றன. துப்பாக்கிகளுக்கு அஞ்சாதவர்... மகளுக்குப் பயந்து, அவளின் பாசத்துக்காக ஏங்குவது ஸ்கார்சஸியின் மேஜிக் டச்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃப்ராங்க் ஷீரனாக ராபர்ட் டி நீரோ, ஜிம்மி ஹோஃபாவாக அல் பசினோ, ரஸல் பஃபலீனோவாக ஜோ பெஸ்சி என சூப்பர் சீனியர் நடிகர்களுடன் கேங்க்ஸ்டர் களம் கண்டுள்ளார், சூப்பர் சீனியர் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சஸி. எந்தச் சிக்கலையும் நிதானத்துடன் அணுகும் ராபர்ட் டி நீரோ கதாபாத்திரத்துக்கு நேரெதிர், அவரின் நண்பர் அல் பசினோவின் கதாபாத்திரம். ‘தளபதி’ மம்மூட்டி ரஜினி நட்பைப் போல ஒருவருக்கொருவர் உதவும் அந்த ப்ரோமேன்ஸ் (Bromance) ஈர்க்கிறது.

Al Pacino in The Irishman
Al Pacino in The Irishman
விமர்சனம்: ஃபோர்டு Vs ஃபெராரி

இவர்கள் இருவரையும் தாண்டி, ஜோ பெஸ்சியின் கதாபாத்திரம் இன்னமும் சுவாரஸ்யம் கூட்டுகிறது. இங்கே, நண்பர்களுடன் மதுக்கோப்பை பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டே வெளியே திசைகளையே மாற்றியமைக்கும் திறன்கொண்ட கேங்ஸ்டர் அவர். மூவருக்குமான நட்பும், அவர்களின் ஏற்ற இரக்கங்களும் வீழ்ச்சியும்தான் இந்த மூன்றரை மணி நேர சினிமா. ஆனால், கென்னடி குடும்ப அரசியலை ஆங்காங்கே தொட்டுச்செல்லும் பின்பாதியில், திரையை முழுக்கவே ஆக்கிரமித்திருப்பது என்னவோ, அல் பசினோவின் ஆளுமை மிக்க நடிப்புதான். ராபர்ட் டீ நிரோவும், ஜோ பெஸ்ஸியும் ஸ்கார்சஸி படங்களில் கடைசியாக, `கெசினோ'வில் நடித்திருந்தனர். `கெசினோ'வைப் போலவே `ஐரிஷ்மேனி'லும் இருவரும் நண்பர்கள். ஆனால், இதில் நண்பர்கள் ஆக்கப்படுகிறார்கள், அவ்வளவே!

( ஜிம்மி ஹோஃபா கதாபாத்திரம் பற்றி ஒரு சின்ன ஸ்பாய்லர் . ஸ்கிப் செய்ய நினைப்பவர்கள், அடுத்த பத்தியை ஸ்கிப் செய்யலாம்.)

ஐரிஷ்மேன் முழுக்கவே நிஜ மனிதர்களின் புனைவு என்பதால், படம் நெடுக 70-களின் இடங்கள் செட்டுகளாக விரிகின்றன. யூனியன் தலைவராக இருக்கும் ஜிம்மி ஹோஃபா, 1975-ல் மாயமாக மறைகிறார். 1975-ம் ஆண்டு ஜூலை மாதம், இந்தச் சம்பவம் அங்கிருக்கும் ஓர் உணவகத்தில் நடக்கிறது. ஹோஃபாவுக்கு இதுவொரு செட்டப் எனத் தெரியவர, அங்கிருந்து தப்பிக்க முடிவுசெய்கிறார். ஆனால், அதற்குப் பின்னர் அவரைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. பின்பு, 1982-ல் அவர் இறந்துவிட்டதாக வரலாறு எழுதப்படுகிறது.

ஹோஃபா மாயமாய் மறைந்த இடம்
ஹோஃபா மாயமாய் மறைந்த இடம்

1992-ம் ஆண்டு, ஜெம்மி ஹோஃபாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, `ஹோஃபா' என்கிற திரைப்படம் வெளியானது. ஹோஃபாவாக ஜேக் நிக்கல்சன் மிரட்டியிருப்பார். கேங்ஸ்டர்கள், ஹோஃபாவை ஒரு காரில் அழைத்துச்செல்லும் ஓர் அந்தி மாலைப் பொழுதுடன் `ஹோஃபா' திரைப்படம் முடியும். 2003-ம் ஆண்டு ஃபிராங்க் ஷீரனின் மறைவுக்குப் பின்னர், எழுத்தாளர் சார்லஸ் பிராண்டட் ஷீரனின் வாழ்க்கையையொட்டி I Heard You Paint Houses: Frank "The Irishman" Sheeran and Closing the Case on Jimmy Hoffa என்கிற புத்தகத்தை வெளியிட்டார். இதுதான் ஸ்கார்சஸியின் இந்த 'தி ஐரிஷ்மேன்' படத்துக்கான அடிப்படை. புத்தகத்தில் ஷீரனின் வரிகள் இதுதான், `The decision was made to paint the house.'

ஸ்பாய்லர் முடிவு

முன்னாள் ராணுவ வீரர் ஃப்ராங்க்காக ராபர்ட் டி நீரோ, மாட்டுக்கறி சப்ளை செய்கிறார். பின்னர், பஃபலீனோ வம்சத்துக்கு ஃபிக்ஸராக (கணக்கை நேர் செய்பவர்) பணியாற்றுகிறார். ஒரு திருட்டு கேஸில் மாட்டும் அவருக்கு, பஃபலீனோ குடும்பத்தின் பவர்ஃபுல் ஆளான ரஸலின் நட்பு கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் ஃப்ராங்ககைக் காப்பாற்றுகிறார் ரஸல். ஃபிக்ஸர் என்பதைத் தாண்டி ஹிட்மேனாக ப்ரொமோஷன் பெறுகிறார். ரஸல் மூலமாக ஹோஃபாவின் நட்பைப் பெறுபவர், பரந்துபட்ட நிழல் உலகம், அது வெளியே காட்டும் அரசியல் மற்றும் யூனியன் முகம் என இரண்டிலும் முக்கிய இடம்பிடிக்கிறார். அவரின் நிதானமான பேச்சு, செயல், உதவும் தன்மை என இவைதான் அவரை எல்லோரும் மதிக்கும் மனிதராக்குகிறது. ஆனால், நிழலுலகம் ஒருவரை அப்படியே இருக்க விட்டுவிடுமா என்ன?

The Irishman
The Irishman

முதல் முறையாக ‘I Heard You Paint Houses’ செய்கிறார், ஃப்ராங்க். எல்லாவற்றையும் உள் இழுத்துவைத்துக்கொண்டு சாந்தமாக, எந்தச் சலனமுமின்றி இருக்கும் அந்த நீரோடை, அப்படியே அந்த துப்பாக்கியையும் உள்ளிழுத்துக்கொள்கிறது. அங்கே, அந்த மண்ணில் ஓராயிரம் துப்பாகிகள் இப்படியாக புதைக்கப்பட்டிருக்கின்றன. ஃப்ராங்க் , 'Think out Of the Box' எனச் சொல்லிவிட்டு, அதன்பின் நடக்கும் இந்தக் காட்சி, அழகானதொரு ஓவியம். ஆனால், எல்லாம் ஒரு கட்டத்தில் மிதக்க ஆரம்பிக்கும், குற்றங்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். அந்தத் தருணங்களும் வர, படமும் சூடுபிடிக்கிறது.

ஹாலிவுட்டில், டீ-ஏஜிங் கலாசாரம் கடந்த சில ஆண்டுகளாக இளமைததும்ப விளையாடுகிறது. சாமுவேல் ஜாக்சன், அர்னால்டு, வில் ஸ்மித் வரிசையில் இந்த முறை,`தி ஐரிஷ்மேன்' படத்தில் இருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் டீ-ஏஜிங் முறையில் மாற்றப்பட்டிருக்கிறார்கள். படத்தின் பெரும் பொருட்செலவு டீ-ஏஜிங்கிற்காக செலவுசெய்யப்பட்டிருக்கிறது.

ஒரு நாற்காலியில் அமர்ந்து, தன் வாழ்க்கையை அசைபோடுகிறார் 70 வயதான ஃபிராங்க் ஷீரன். அவரது வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு காலநிலைகளைக் கதை பிரதிபலிக்கிறது. படத்தின் மிகப்பெறும் பலமும், பலவீனமும் அதுதான்!

irishman Deaging
irishman Deaging
காதலுக்கு ஏது இலக்கணம்?

முதன்மை கதாபாத்திரத்தின் இளவயதுக்கு வேறு நபர்களை எளிதாகப் பயன்படுத்தியிருக்க முடியும். ராபர்ட் டீ நிரோவின் சாயலில், அல் பசீனோவின் சாயலில், ஜோ பெஸ்சியின் சாயலில் நபர்களைத் தேடியிருக்கலாம். ஆனால், ஸ்கார்சஸி `Out of the Box' யோசித்திருக்கிறார். இந்த ஜாம்பவான்களின் இளவயதை மீட்டுக்கொடுத்திருக்கிறார், ஸ்கார்சஸி. அதுவும் ஜோ பெஸ்ஸி எல்லாம் நடித்தே சில ஆண்டுகள் ஆகிவிட்டன. சொல்லப்போனால், கிட்டத்தட்ட சினிமாவிலிருந்தே ஓய்வு பெற்றுவிட்டார். அல் பசினோவுக்கும், ஜோ பெஸ்ஸிக்கும் டீ ஏஜிங் பெருமளவில் கைகொடுத்திருக்கிறது.

`குட்ஃபெல்லாஸ்' (1990) படத்தில் ராபர்ட் டீ நீரோவும், ஜோ பெஸ்ஸியும் சிறுவயது முதலே தவறான செயல்கள் செய்யும் நண்பர்கள். படத்தின் இறுதியில், ஜோ பெஸ்ஸியின் (சிறந்த துணை நடிகர் - ஆஸ்கர்) கதாபாத்திரத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும். `குட்ஃபெல்லாஸ்' வெளிவந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.

Irishman
Irishman

ஜோ பெஸ்ஸி, வயதான கதாபாத்திரத்துக்கு அப்படியே செட் ஆகிப்போகிறார். இளமையான ரோலும் பெரிதாக உறுத்தவில்லை. டீ-ஏஜிங் சொதப்பியது ராபர்ட் டீ நீரோவுக்குத்தான். அவரின் சிறுவயது போர்ஷனில், ஏதோ பொம்மைபோல் இருக்கிறார். இன்னொன்று, 'ஐரிஷ்மேனில்' ஜோ பெஸ்ஸியின் கதாபாத்திரமான ரஸல் பஃபலீனோ, ஷீரனுக்கு (டீ நீரோ) சீனியர். ஆனால், இருவருக்கும் ஒரே வயது என்பதால் அது பெரிதும் உறுத்துகிறது. படத்தில் அட்டகாசமாக நடித்திருக்கும் அல் பசினோவுக்கே டீ- ஏஜிங் காட்சியில் நடப்பதும், நாற்காலியில் இருந்து எழுவதும் ஏனோதானோவென இருக்கிறது. அதுவும் சிறுவயது ராபர்ட் டீ நீரோ, மெதுவாக நடந்துவரும்போதெல்லாம் நாம் முன்பு பார்த்த ராபர்ட் டீ நீரொவின் படங்களை ஒப்பிட வேண்டியதிருக்கிறது. ஜாம்பவான் நடிகர்களுக்கு டீ- ஏஜிங்தான் எதிர்காலம். சினிமாவுக்கு அதுதான் கடந்த காலத்தை, திரை என்னும் மாய மொழிக்கு மீட்டுக்கொண்டு வர இருக்கும் எதிர்காலம். ஆனால், தற்போதைக்கு இன்னும் அது முழுமைபெறாத ஒன்றுதான்!

209 நிமிடங்கள் என்பதாலேயே இந்தப் படத்தைப் பார்க்க பலரும் ப்ளே பட்டனை அழுத்துவதில்லை. ஸ்கார்சஸியின் முந்தைய படங்களான `குட்ஃபெல்லாஸ்', `கெசினோ' போல் இதில் கேங்ஸ்டர்கள் க்ளோரிஃபை செய்யப்படவில்லை. இறுதிக் காட்சியில், எல்லாம் முடிந்தும் மரணத்துகாக கதவுகளைத் திறந்து, காத்துக்கிடக்கும் ஷீரனே அதற்கு சாட்சி. ஃபீனிக்ஸ் நடித்த `ஜோக்கர்' படத்தைப் பார்த்து, யாரும் ஜோக்கர் ஆகப்போவதில்லை. ஆனால், ஸ்கார்சஸியின் முந்தைய கேங்ஸ்டர் படங்களைப் பார்த்து, கேங்ஸ்டர் கனவு கண்டவர்கள் ஏராளம். கேங்ஸ்டர் எல்லாம் பார்க்கத்தான் நன்றாக இருக்கும், ஆனால், நமக்கு வேண்டாம் என 1993-ம் ஆண்டே தான் இயக்கிய முதல் படமான `A Bronx Tale' படத்தில் விளக்கியிருப்பார், ராபர்ட் டீ நீரோ. இந்த முறை கேங்ஸ்டர் வேண்டாம் என்கிறார் ஸ்கார்சஸி. அப்படியும் படம் நீளம் எனக் கருதுபவர்கள், ட்விட்டரில் ஒருவர் சொன்ன வெர்ஷனைப் பின்பற்றலாம். காரணம், இது வெப் சீரிஸின் காலம்!

நம்மைப்போல் இருவர்!

நிஜ சம்பவங்களை நிகழ்வுகளாக அடுக்கும் நிஜ ஃப்ராங்க் ஷீரனின் பார்வையில், நாவலாக விரிந்த சார்ல்ஸ் ப்ரான்ட்டின் ‘I Heard You Paint Houses’ கதையை அப்படியே திரைமொழிக்கு ஏற்றவாறு மாற்றியிருக்கிறார், ஸ்டீவன் சைலியன். சட் சட்டென தயக்கமே இன்றி துப்பாக்கியால் தலையில் சுடும் ஹிட்மேன்கள், பின்னாலிருக்கும் சுவரை குருதியால் நனைக்கின்றனர். இதை வைத்து... ஒரு ஹிட்மேனை அணுக சங்கேத வார்த்தைகளாகப் பயன்படுத்தப்படும் ‘I Heard You Paint Houses’ என்பதுடன் துவங்கும், ‘தி ஐரிஷ்மேனை'க் கொடுத்த ஸ்கார்சஸிக்கு அதே பாணியில் “I heard you paint movies!” என்று கூறி ஹார்ட்டின் விடலாம். இந்த ஆண்டின் ஆஸ்கரில், இந்தப் பிடரி நரைத்த சிங்கங்களின் பெயர் நிச்சயம் இடம்பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு