
புத்தக விளம்பரத்துக்காக அவர் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம்தான் இந்த ஆவணம்.
அமெரிக்கக் குடியரசின் முதல் பெண்மணிகள் தங்கள் பதவிக்காலத்துக்குப் பிறகு சுயசரிதை எழுதுவது வழக்கமான வெள்ளை மாளிகை நடைமுறைதான். கிளின்டன்மீதான சர்ச்சையை நிராகரிக்கவே கூடுதலாக இரண்டு சுயசரிதைப் புத்தகங்களை எழுதியிருக்கிறார் ஹிலாரி.
“உனது சுயசரிதையைவிட எனது சுயசரிதைதான் அதிகம் விற்பனையாகும்” என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அதிபர் ஜெரால்ட் போர்ட்டுக்கு அவரின் இணையர் பெட்டி ஃபோர்ட் வழங்கியதாக வெள்ளை மாளிகைப் பதிவுகள் இருக்கின்றன. வெள்ளை மாளிகை அதிகாரமும் அதன் நிழல் அரசியலும் அது சார்ந்த சர்ச்சைகளும் மட்டுமே இதுபோன்ற சுயசரிதைகளில் பெரும்பாலும் இடம்பெறும். இதிலிருந்து முன்னாள் முதல் பெண்மணி மிஷல் ஒபாமா எழுதிய `பிகமிங்’ மாறுபடுவதுதான் முக்கியத்துவம் வாய்ந்தது. 2018-ல் வெளியாகி பத்து மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்த புத்தகம் தற்போது நெட்ஃபிளிக்ஸில் ஆவணப்படமாக வெளிவந்துள்ளது.

புத்தக விளம்பரத்துக்காக அவர் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம்தான் இந்த ஆவணம். ஆனாலும் வெறுமனே விளம்பரம் எனப் புறந்தள்ளிவிடவும் முடியாது. எட்டு வருட வெள்ளை மாளிகை வாழ்க்கைக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறியவரிடம் உலகத்துக்குச் சொல்ல என்ன இருக்கிறது? வெள்ளை மாளிகையிலிருந்து குடும்பத்துடன் வெளியேறியவர், ஹெலிகாப்டரில் அமர்ந்தபடி 30 நிமிடங்கள் அழுததாகச் சொல்கிறார்.
“இவை எதுவுமே இனி நமக்குச் சொந்தம் கிடையாது என்பதற்காக அழுதீர்களா?” எனக் கேட்கிறார் அவர் எதிரில் அமர்ந்து பேட்டி எடுப்பவர்.
“இல்லை, ஏதோ ஒரு பெரிய அழுத்தத்தை இறக்கி வைத்ததாக உணர்ந்தேன். அதை இனிச் சுமக்கத் தேவையில்லை என்கிற சுதந்திரம் கொடுத்த அழுகை அது” என்கிறார் மிஷல். அந்தக் காட்சியிலிருந்து தொடங்கி ஒரு தோழியுடனான மானசிக உரையாடல்போல விரிகிறது ஆவணம். பாட்டியின் பியானோவுடன் கழிந்த தனது குழந்தைப் பருவம், நிறவெறியால் திறமை இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்ட தனது தாத்தாவின் தாக்கத்துடன் வளர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் எனப் பலவற்றைப் பகிர்ந்துகொள்கிறார். தனது வீட்டின் டைனிங் டேபிள் உரையாடல்தான் தன்னை உருவாக்கியதாகச் சொல்கிறார்.
“நாங்கள் டைனிங் டேபிளில் ஒன்றாக அமர்ந்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அங்கே எதைப் பற்றியும் விவாதிக்கும் சுதந்திரம் எங்களுக்கு இருந்தது” என்கிறார். தன் பாட்டியின் பியானோவைக் கற்றுக்கொள்வதுதான் தனக்குப் பெரும் போராட்டமாக இருக்கும் என நினைத்திருந்த சிறுமி மிஷலுக்குத் தன் நிறமே தனக்கான போராட்டம் என உணர்த்தியது அந்த டைனிங் அறைதான். அண்ணனைப் போலவே தானும் பிரின்ஸ்டன் செல்ல முடிவெடுக்கும்போது அவர் ஆசிரியரே ’நீ பிரின்ஸ்டன் செல்வது வீண்’ எனச் சொல்லி ஒதுக்குகிறார். அதே டைனிங் அறைதான் அப்போதும் அவருக்குப் பக்கபலமாக இருக்கிறது, பிரின்ஸ்டன், ஹார்வர்டு எனப் பயணிக்க வைக்கிறது.
ஒபாமாவின் அதிபர் தேர்தலுக்கான பயணங்களில் பங்கெடுக்கும் மிஷல் ஒவ்வொரு மேடையிலும் தன் கதையைத்தான் பகிர்கிறார். தன் மக்களின் கதையைச் சொல்கிறார். “வாக்கு சேகரிப்பதற்காக இல்லாத நிறவெறி இருப்பதாக நாடகமாடுகிறார். தன்னை பாதிக்கப்பட்டவளாகக் காட்டிக்கொள்கிறார்” என அவரைப் பரிகாசம் செய்கின்றன ஊடகங்கள்.
“இந்தக் கேலியும் பரிகாசமும்கூட அரசியல்தான் என்றார்கள். அதைப் பொறுத்துக்கொள்ளச் சொன்னார்கள். ஆனால் அவை நம் ஆன்மாவை அடியோடு மாற்றிவிடுகின்றன. அது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடியதல்ல” என்கிறார் மிஷல்.

மற்ற எந்த முதல் பெண்மணிகளும் தங்களுடைய சுயசரிதைகளில் பேசாத ‘முதல் தலைமுறைக் கல்வி’ குறித்து மிஷல் தனது புத்தகத்தில் பேசுகிறார். அவரது கதையும் அவர் பேசும் கல்வி உரிமையும்தான் சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களுடன் அவரை இணைக்கிறது.
தனக்காக உழைத்த அப்பா உடல்நிலை சரியில்லாமல்போனதும் தன் உடன்பிறந்தவர்களுக்காகவும் சேர்த்துப் பகுதி நேரமாக வேலை செய்தபடியே படிக்கும் ஒரு பெண், மிஷலை அந்தச் சுற்றுப்பயணத்தில் சந்திக்க வருகிறார். அவரது குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி அந்தப் பெண்.
“உங்களைச் சந்திக்க நான் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டேன், என்னைவிடச் சிறந்தவர்கள் என் கல்லூரியில் இருந்தார்களே?” என மிஷலிடம் கேள்வி எழுப்புகிறாள் அவள்.
“உனது கதையைவிட உனக்கு வேறென்ன சிறப்பு வேண்டும். உனது கதைதான் உனது பலம்” என்கிறார் மிஷல்.
நூறு வயது மதிக்கத்தக்க கறுப்பினக் கிழத்தி மிஷலின் கரம்பிடித்து இப்படியாகச் சொல்கிறாள், “நீங்கள் அதிகாரத்துக்கு வந்தது எனக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி. என் தந்தை அப்படி யாரையேனும் பார்க்க வேண்டும் என நினைத்தார். அவரால் பார்க்கமுடியவில்லை; ஆனால் நான் அதைப் பார்த்தேன். அவர் சார்பாக நான் அதை மனதாரப் பார்த்தேன்” என்கிறார்.
ஒடுக்குமுறைகளைக் கடந்து அதிகாரத்தைக் கைப்பற்றுபவர்களின் கதைகளுக்கு வல்லமை அதிகம். அதற்குச் சாதி, நிறம், வகுப்பு, வர்க்கம், பாலினம் என அத்தனை படிநிலைகளிலும் ஒடுக்கப்படும் மக்களை ஒன்றிணைக்கும் சக்தி உண்டு. ‘பிகமிங்’ அதைத்தான் செய்திருக்கிறது. ஒன்றரை மணிநேர ஆவணப்படம் என்பதால் புத்தகத்திலிருந்து பல பக்கங்கள் இதில் விடுபட்டிருக்கின்றன, இருந்தாலும் நிச்சயம் பார்க்கவேண்டியது.