உலகளவில் பிரசித்தி பெற்ற மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) 31வது படமாகவும், Phase 5-ன் முதல் படமாகவும் வெளியாகியிருக்கும் `Ant-Man and the Wasp: Quantumania' எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கின்றதா? Phase 4-ல் வெளியான படங்களில் `Spider-Man: No way Home' தவிர பிற படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பெரும் பொறுப்பு இந்தப் படத்தில் ஆன்ட்-மேனுக்கு இருக்கிறது. அதை பால் ரட் சிறப்பாகச் செய்தாரா?

அவெஞ்சர்ஸாகக் கிடைத்த புகழை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மினி செலிபிரிட்டியாகக் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறார் ஆன்ட்-மேனான ஸ்காட் லாங்க். அதோடு 'வாஸ்ப்' ஹோப்புடன் காதல், டேட்டிங், மகள் கேஸியின் மீது பாசம் என்பதாக அவரின் வாழ்வு கழிகிறது. 'ஒரு அவெஞ்சருக்கு ரிட்டையர்மென்ட் வாழ்க்கையா, நெவர்' என்பதுபோல ஒரு விபத்து அவரையும் அவரின் குடும்பத்தையும் குவான்டம் ரியலத்துக்குள் இழுத்துவிடுகிறது. அங்கே 'காங்க், தி கான்கொரர்' தன் சக்திகள் மற்றும் டெக்னாலஜி மூலம் குவான்டம் உலகத்தையும் அதிலிருப்பவர்களையும் அடிமைப்படுத்தி ஆண்டுவருகிறார். ஆன்ட்-மேன் குடும்பத்தார் உள்ளே வந்ததையடுத்து அவர்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குவான்டம் உலகை விட்டு வெளியே வர ஸ்கெட்ச் போடுகிறார் காங். அதில் அவர் வெற்றிப் பெற்றாரா, இல்லை ஆன்ட்-மேன் அவரை தடுத்து நிறுத்தினாரா என்பதே இந்தப் படத்தின் கதை.
சீனியர்களான பால் ரட் - இவேஞ்சலின் லில்லி ஜோடி ஆன்ட்-மேன் மற்றும் வாஸ்ப்பாக மீண்டும் தடம்பதிக்கின்றனர். தன்னை 'ஸ்பைடர்மேன்' என்று மக்கள் தவறுதலாக அடையாளம் கண்டாலும் அது குறித்து பெரிதாகக் கவலைப்படாமல் தனக்குக் கிடைத்த புகழ் வெளிச்சத்தில் ஜாலியாக வாழும் பாத்திரத்தில் மைன்ட் வாய்ஸில் 'மார்வெல்' ரக காமெடி செய்யதிருக்கிறார் பால் ரட். அதே சமயம், குவான்டம் உலகில் சீரியஸான சாகசப் பயணம், மகளைக் காக்கப் போராட்டம் எனத் தன் நடிப்பின் வேறொரு பரிமந்த்தையும் காட்டியிருக்கிறார். குறிப்பாக, 'Probability Storm'-ல் நிறைய பால் ரட்கள் தோன்றும் காட்சியில் அவரின் நடிப்பு அட்டகாசம். கேஸியின் இளம்பெண் வெர்ஷனை கேத்ரின் நியூட்டன் சிறப்பாகவே திரையில் கொண்டு வந்திருக்கிறார். அந்த வயதுக்கே உரியத் துடிப்பு, சாகசம் செய்ய விரும்பும் மனம் என அனைத்தையும் சிறப்பாகப் பிரதிபலித்திருக்கிறார்.

இவர்கள் அனைவரையும் தாண்டி தான் வரும் பிரேமில் எல்லாம் திரையை ஆள்வது காங்காக வரும் ஜொனதன் மேஜர்ஸ்தான். ஏற்கெனவே 'லோகி' வெப்சீரிஸில் இவர் அறிமுகமாகிவிட்டாலும், இதில்தான் அவரின் பாத்திரம் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறது. அவரின் நோக்கம் என்ன, அவரின் சக்திகள் என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறது அவரது பாத்திர வார்ப்பு. எதிர்பார்த்தபடியே அவர் 'Phase 5'-ன் முக்கிய வில்லனாக வலம் வருவதற்கான அறிகுறிகள் படம் முழுக்கவே இருக்கின்றன.
இரண்டு மணிநேரப் படத்தில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் குவான்டம் உலகத்துக்குள், அந்த விநோத உலகத்துக்குள் மட்டுமே நடக்கிறது. ஆனால், அந்த உலகை நிரப்ப உருவாக்கப்பட்டிருக்கும் விதவிதமான உயிரினங்களில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். முக்கியமாக காங்கின் ஆயுதமாக வரும் 'MODAK' பாத்திரத்தின் முகத்தை இன்னமும் சிறப்பாக வார்த்திருக்கலாம். விநோத உயிரினங்கள், இடங்கள் போன்றவற்றின் உச்சத்தை ஏற்கெனவே 'அவதார்' உள்ளிட்ட படங்களில் பார்த்துவிட்டதால், ஆன்ட்-மேனின் இந்த குவான்டம் உலகம் சற்றே சுவாரஸ்யம் இழந்து நிற்கிறது.
குவான்டம் உலகத்துக்குள் வந்தவுடனேயே திரைக்கதை எப்படிப் பயணிக்கப் போகிறது, வரும் கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து என்னவெல்லாம் செய்யும், வரப்போகும் ட்விஸ்ட்கள் என்னென்ன என்பது வரைக்கும் மிகச் சுலபமாகக் கணிக்கக்கூடிய ஒரு படமாகவே விரிகிறது இந்த `Quantumania'. க்ளைமாக்ஸ் காட்சி தவிர்த்து, யார் எப்போது வந்து கை கொடுப்பார்கள், `MODAK' என்ற வில்லன் பாத்திரம் என்னவாகும் என்பதுவரை அனைத்துமே பார்த்துப் பழகிய 'சினிமா'தான்.

வழக்கமான இரண்டு சுவாரஸ்ய எண்டு கிரெடிட்ஸ், அடுத்த படத்துக்கான லீட், சாகசக் காட்சிகள், வில்லன் பாத்திரத்தின் தன்மை, காமெடி வசனங்கள் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி, திரைக்கதையில் பெரியளவில் கோட்டை விட்டிருக்கிறது மார்வெல். இவற்றை எல்லாம் தாண்டி ஆன்ட்-மேனின் பயணம் இனி எப்படியிருக்கும், காங்கின் பாத்திரம் என்னவாகும் என இப்படியான சுவாரஸ்யங்களுக்காக மட்டும் அடுத்த படத்துக்கும், 'லோகி' சீரிஸின் இரண்டாவது சீசனுக்காகவும் காத்திருக்கலாம்.
பார்த்து பண்ணுங்க மார்வெல்!