Published:Updated:

The Father : ஒரு அபார்ட்மென்ட் அறையும் 80 வயதுக் குழந்தையும்... கண்களைக் குளமாக்கும் காவியம்!

இந்த வருடம் ஆறு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு அதில் இரண்டை வென்ற இந்த 'தி ஃபாதர்' படம் தற்போது 'லயன்ஸ்கேட் ப்ளே' (Lionsgate Play) ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அது குறித்த ஒரு சிறப்புப் பார்வை இங்கே!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வயதாகிவிட்ட ஆந்தனிக்கு டிமென்ஷியா. ஞாபக மறதியால் பல குழப்பங்களுக்கு உள்ளாகிறார். தன்னை விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முடிவெடுக்கும் மகள் மீது கோபம் கொள்கிறார். அவள் ஏற்பாடு செய்யும் பாதுகாவலரையும் ஏற்க மறுக்கிறார். தன்னைச் சுற்றியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்க, தன் மீது அன்பாக இருக்கும் மனிதர்களையும் சந்தேகிக்கத் தொடங்குகிறார். எது நிழல், எது நிஜம் என்ற கேள்வியும் அவ்வப்போது அவரைக் குழப்பியடிக்கிறது. ஆந்தனியின் தேவைதான் என்ன?

ஆந்தனியாக மூத்த நடிகர் ஆந்தனி ஹாப்கின்ஸ். 1992-ல் 'தி சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ்' படத்தில் 16 நிமிடங்கள் மட்டுமே தோன்றி சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றவர். தற்போது 83 வயதாகும் ஹாப்கின்ஸ் தொட்ட உயரங்கள் ஏராளம் என்றாலும் 'The Father' (தி ஃபாதர்) படத்தில் மற்றுமொரு உச்சத்தைத் தொட்டிருக்கிறார். தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம் என்றாலும் அதில் ஒரு குழந்தைத் தன்மையையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதொரு சவாலான வேடம். கச்சிதமாக அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

The Father | தி பாதர்
The Father | தி பாதர்

தன் கையில் வாட்ச் இருக்கிறதா என்பதை அடிக்கடி பார்த்துக்கொள்ளும் மேனரிசம் தொடங்கி தனக்கு வயதாகவில்லை என்பதைக் காட்ட 'டேப் டான்ஸ்' ஆடிக் காட்டுவது, கோபம் வரும்போது குழந்தையாய் சிணுங்குவது என நம் குடும்பத்து சீனியர் சிட்டிசன்களை கண்முன் கொண்டுவருகிறார். 90 நிமிடப் படத்தை ஒற்றை ஆளாகத் தாங்குவது ஆந்தனி ஹாப்கின்ஸ்தான். இதன் ஆழம் உணர்ந்துதான் மற்ற பரிந்துரைகளைவிடுத்து ஹாப்கின்ஸை வெற்றியாளராக 'தி அகாடமி' கௌரவித்தது என்று தயங்காமல் சொல்லலாம்.

ஆன்னியாக ஒலிவியா கோல்மேனுக்கு முக்கியமானதொரு பாத்திரம். தன் தந்தையின் செயல்களைக் கண்டு மனம் வருந்துவது, ஒரு கட்டத்தில் தன் மீது தவறோ எனக் குற்ற உணர்வில் கூனிக்குறுகுவது, பல சமயங்களில் செய்வதறியாது திகைப்பது என யதார்த்தமானதொரு நடிப்பை வழங்கியிருக்கிறார். கேத்ரின் பாத்திரத்தில் தோன்றும் ஒலிவியா வில்லியம்ஸ் கேர்டேக்கர் நர்ஸாக கிளைமாக்ஸில் நெகிழச் செய்கிறார். அவர் ஆந்தனியைச் சமாதானப்படுத்தும் இறுதிக் காட்சியில் இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருக்கின்றனர்.

The Father | தி பாதர்
The Father | தி பாதர்

பொதுவாக மேடை நாடகங்களை சினிமாவாக மாற்றுவதில் பல சிக்கல்கள் எட்டிப் பார்க்கும். என்னதான் திரைக்கதை அமைத்து திரைமொழிக்கு நாடகக் கதையை மாற்றினாலும் பல இடங்களில் அதன் நாடக பிம்பத்தை அது வெளிப்படுத்தியே தீரும். ஒரு நாடகத்தின் தழுவலான இந்தப் படத்தை, அந்த நாடகத்தின் இயக்குநரான ஃப்ளோரியன் ஸெல்லரே இயக்கியும் இருப்பதால் அவர் எடுக்க நினைத்த சினிமாவை சமரசமின்றி காட்சிப்படுத்தியிருக்கிறார். கதை நகரும் இடம் ஒரேயொரு வீடு எனும்போதே நாடகம் பார்க்கும் உணர்வு எட்டிப் பார்க்கும் என்றாலும், கதையின் ஆழமும், நடிகர்களின் பங்களிப்பும் அதை மறக்கடிக்க வைக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃப்ளோரியன் ஸெல்லர் மற்றும் கிறிஸ்டோபர் ஹேம்ப்டனின் ஆஸ்கர் வென்ற திரைக்கதை டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரின் எண்ணவோட்டங்களை அற்புதமாகப் பதிவு செய்கிறது. தன் அபார்ட்மென்டில் அடிக்கடி தோன்றும் சம்பந்தமில்லாத மனிதர்கள், ஒரே ஆள் வேறொரு பெயருடன் வருவது, ஒரே பெயரில் இரு வேறு ஆள்கள் வருவது, இறுதியில் அபார்ட்மென்ட்டுக்கு வேறொரு உருவத்தைக் கொடுத்திருப்பது என மிரட்டியிருக்கிறார்கள்.

அதாவது எந்தவித எச்சரிக்கையும் இல்லாமல், பாயின்ட் ஆஃப் வியூ கேமரா ஆங்கிளும் இல்லாமல், ஆந்தனியின் அகத்திற்குள் நம்மைக் கூட்டிச் சென்று அவர் பார்வையில் அவரின் உலகைப் பார்க்க வைத்திருக்கிறார்கள்.
The Father | தி பாதர்
The Father | தி பாதர்

குறிப்பாக, படத்தின் தொடக்கக் காட்சிகள் ஆந்தனியின் குழப்பமான எண்ணவோட்டங்களை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. நிஜம் நிழலாவதும், நிழல் ஒன்று நிஜமானதொரு உணர்வைத் தருவதுமென பல படிநிலைகளைக் கடக்கிறது கதை. அதுவும் ஹோம்களில் பூட்டிய அறைக்குள் உலவும் வயதான மனிதர்களின் எண்ணவோட்டங்களை அதன் அசல் முகத்துடன் காட்சிப்படுத்தியிருப்பது கண்களைக் குளமாக்குகிறது. விட்டுவிட்டு போன மகளை மறந்துவிட்டு, தனக்கொரு பிரச்னை எனும்போது தன் தாயைத் தேடும் ஆந்தனியின் அந்த கிளைமாக்ஸ் துடிப்பு, வயோதிகர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஆயிரமாயிரம் அர்த்தங்களைச் சொல்லிச் செல்கிறது. 80 வயதானாலும் குழந்தைத் தன்மை எட்டிப் பார்க்கையில் தாயைத்தானே தேடுவோம்?!

Money Heist Part 5 Vol 1: ஓயாம துப்பாக்கில சுடுறது எல்லாம் இருக்கட்டும்... வாத்தி எப்ப கேம் ஆடுவார்?
The Father | தி பாதர்
The Father | தி பாதர்

கண்களில் நீர் வரவைக்க, உணர்வுகளை உரையச் செய்ய இரண்டு அறைகள் கொண்ட ஒரு வீடும், ஒரு பிரதான கதாபாத்திரமும் மட்டுமே போதும் என்று பாடம் எடுக்கிறது இந்தப் படம். ஆனால், படம் முடிந்த பின்னர், ஒரு முழு நீளப் படம் பார்த்த உணர்வு ஏற்படாமல் ஒரு குறும்படம் பார்த்த எண்ணமே இழையோடுகிறது. சொல்லவரும் கதை புரிந்த பின்னர் மீண்டும் ரிப்பீட்டாகும் காட்சிகளைத் தவிர்த்துவிட்டுச் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் பின்கதையைப் பலப்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமும் எழாமல் இல்லை. ஆனால், கவிதைகள் சில வரிகளில் முடிந்தால்தானே அழகு?!

வயோதிகம் என்பதையே ஒரு வியாதியாக அணுகும் மனிதர்கள், தலை நரைத்தவர்களை ஒதுக்கித் தள்ளும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம் 'தி ஃபாதர்'.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு