Published:Updated:

கொரோனா பேண்டமிக்.... அப்போதே கணித்த ஹாலிவுட்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற பேரழிவு நிகழும்போதெல்லாம் அதை முன்னரே கணித்துவிட்டதாக பல்வேறு திரைப்படக் காட்சிகளும் பேட்டிகளும் சமூக வலைதளங்களில் உலாவரும்.

1
கன்டேஜியன்

தமிழில் கமல்ஹாசனின் `தசாவதாரம்', முருகதாஸின் 'ஏழாம் அறிவு' எனச் சில படங்கள் தொற்றுக் கிருமி கதையை கருவாக கொண்டிருந்தாலும் அதற்கான பாதிப்பு காட்சியமைப்புகள் குறைவாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், உலக அழிவு பற்றிய படங்களை மாதம் ஒருமுறை வெளியிட்டுக்கொண்டிருக்கும் ஹாலிவுட் திரையுலகில் இதுபோன்ற ஆச்சர்யங்களுக்குக் குறைவில்லை. வெளிவந்த சமயத்தில் கூட சரியாக ஓடாத படங்கள் இதுபோன்ற திடீர் டிரெண்டிங் வழியாக வைரல் ஆகிவிடும்.

அந்த வகையில் தற்போது வைரலாகிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படம்தான் கன்டேஜியன் (Contagion). 2011-ம் ஆண்டு ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கி வெளியான இந்தத் திரைப்படம் அப்போதே செம ஹிட் அடித்தது.

படத்தின் கதை இதுதான். நாயகி ஹாங்காங் பயணத்தின்போது அந்த நாட்டு சமையல்காரர் ஒருவருடன் கைகுலுக்கும் இடத்தில்தான் படம் தொடங்குகிறது. அவர் அமெரிக்கா திரும்பியவுடன் தும்மல், இருமல் என உடல் மோசமடைந்து இறுதியில் திடீரென இறந்துவிடுகிறார்.

அவரது உறவினர்கள் தொடங்கி அவர் பயணத்தில் தொட்ட இடத்தில் எல்லாம் பரவும் தொற்று நோய், பின்னர் உலகமெங்கும் பரவி விடுகிறது. அதிவேக தொற்றுக் கிருமியைக் கட்டுப்படுத்த இப்போது போலவே உலக விமான நிலையங்கள் முடக்கப்படுகின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

எம்இவி-1 என்று அறியப்படும் வைரஸால் அடுத்தடுத்து பல கதாபாத்திரங்கள் உயிரிழக்க நேரிட, உலக இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 20% ஆகிவிடுகிறது. புதிய மருந்து கண்டுபிடிப்பது, பின்னணியில் நடக்கும் அரசியல் எனப் பல அறிவியல் திருப்பங்கள் கொண்டு கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

தற்போது கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து உலகமெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், நடப்பு நிகழ்வுகளை முன்னரே கணித்து எடுத்திருப்பது போன்ற இந்தப் படத்தை பற்றி பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதனால் உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் தற்போது கன்டேஜியன் படம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

2
12 Monkeys

12 Monkeys

கொரோனா குவாரன்டைனும் உலக மக்களின் சில சேட்டை வீடியோக்களும்! #Viral

இது ஓர் அறிவியல் புனைவு திரைப்படம். கால பயணத்தின் வழியாக ஒரு மிகப்பெரிய தொற்று நோயை உருவாக்கி அதன் விளைவாக மொத்த மனித குலத்தையும் ஒரு குழு அழிக்க முயற்சி செய்யும் கதைதான் இது. படத்தில் பிளேக் பரவுதல் பற்றி மிக நேர்த்தியாக காட்டப்படிருக்கும். இதே பெயரில் ஒரு ஆங்கில தொலைக்காட்சி தொடரும் வந்து பிரபலமானது. மாறுபட்ட வேடத்தில் பிராட் பிட்டும், ஹீரோவாக 'டை ஹார்டு' புகழ் ப்ரூஸ் வில்லீஸும் நடித்திருப்பார்கள்.

3
Outbreak

Outbreak

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு குரங்கின் வழியாகக் கடத்தப்படும் ஒரு வைரஸ், அதன் அழிவுகள், கண்டுபிடிப்பு... இதுதான் அவுட்பிரேக். ராணுவ மையத்தைத் தாண்டி வெளியே பரவ ஆரம்பிக்கும் வைரஸையும் கண்டறிந்து, மருத்துவர்கள் அதை எப்படிக் கட்டுப்படுத்தி அந்த ஊரைக் காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை. வுல்ஃப்கேங் பீட்டர்சன் என்பவரால் இயக்கப்பட்டு 1995 வெளியான இப்படம் அப்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இப்படங்களைத் தாண்டி The Omega man, World War Z, Pandemic போன்ற திரைப்படங்கள் வைரஸால் பாதிக்கப்படும் மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிரபல ஜாம்பி படங்கள்.

மேலும், பிரபல அமெரிக்க நாவல்கள் இரண்டும் வைரஸ் பரவுதலை எப்போதோ கணித்துள்ளன. அதில் ஒன்று 1981-ம் ஆண்டு வெளிவந்த The Eyes of Darkness என்ற நாவல். இந்தக் கதையில் ஆராய்ச்சி மையத்தில் கண்டுபிடிக்கப்படும் ஒரு கிருமியில் வுகான் வைரஸ் (Wuhan Virus) பரவுவதாக 40 வருடங்களுக்கு முன்னரே எழுதியிருக்கிறார் எழுத்தாளர் டீன் கூன்ட்ஸ்.

4
Sylvia Browne - American Author

End of Days

இரண்டாவது புத்தகம் சில்வியா பிரவுன் எழுதிய End of Days: Predictions and Prophecies about the End of the World. இதை நீங்கள் நிச்சயமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் கவனித்திருக்கலாம். 2008 வெளிவந்த இந்தக் கணிப்புகள் சார்ந்த புத்தகம், மிகச்சரியாக 2020-ம் ஆண்டு ஒரு மோசமான தோற்று நோய் உலகமெங்கும் பரவும் என்றும் அது நுரையீரலைப் பாதித்து எந்த எதிர்ப்பு மருந்துக்கும் கட்டுப்படாது என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஆச்சர்யம் அதோடு நிற்கவில்லை. இந்த தொற்றுப் பரவலால் உயிரிழப்புகள் ஏற்படும் என்றாலும் அது தானாகவே கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் மீண்டும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றி பின்னர் மொத்தமாக மறைந்து விடும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரெயொரு காமெடி என்னவென்றால், சில்வியா பிரவுன் தன்னை ஒரு சைக்கிக் என்று பிரகடனப்படுத்தி வருகிறார். அதாவது, அமானுஷ்யங்களோடு தொடர்புடையவர். இந்த நாவலிலும் பல அழிவுகளைப் பற்றி எழுதியிருக்கிறார் சில்வியா பிரவுன். அதில், இந்த வைரஸ் அழிவு மட்டுமே உண்மையாகியிருக்கிறது.

ஹாலிவுட்னா சும்மா இல்லை மக்களே!

அடுத்த கட்டுரைக்கு