Published:Updated:

Hawkeye: "நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்றே நினைத்தேன்!"- விபத்து குறித்துப் பேசிய ஜெர்மி ரென்னர்

ஜெர்மி ரென்னர்

'அவெஞ்சர்ஸ்' நடிகர் ஜெர்மி ரென்னர் தன் சந்தித்த விபத்து குறித்தும், தான் அதிலிருந்து மீண்டுவந்தது குறித்தும் பேசியிருக்கிறார்.

Published:Updated:

Hawkeye: "நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்றே நினைத்தேன்!"- விபத்து குறித்துப் பேசிய ஜெர்மி ரென்னர்

'அவெஞ்சர்ஸ்' நடிகர் ஜெர்மி ரென்னர் தன் சந்தித்த விபத்து குறித்தும், தான் அதிலிருந்து மீண்டுவந்தது குறித்தும் பேசியிருக்கிறார்.

ஜெர்மி ரென்னர்

‘அவெஞ்சர்ஸ்’, ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ போன்ற படங்களில் ஹாக்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகர் ஜெர்மி ரென்னர். பல ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கும் ஜெர்மி ரென்னர், 2008-ல் ‘தி ஹர்ட் லாக்கர்’ படத்தில் நடித்தற்காகச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அதேபோல 2010-ம் ஆண்டு வெளியான ‘தி டவுன்’ படத்தில் நடித்தற்காகச் சிறந்த துணை நடிகர் ஆஸ்கர் விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

ஜெர்மி ரென்னர்
ஜெர்மி ரென்னர்

ஹாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழும் ஜெர்மி ரென்னருக்கு சமீபத்தில் விபத்து ஒன்று ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பும் போது பனிப்புயல் ஒன்றில் சிக்கியிருக்கிறார். அப்போது 'Snowplow' எனப்படும் 6500 கிலோ எடையுள்ள கனரக இயந்திரம் ஒன்றிடமிருந்து தன் சகோதரியின் மகன் அலெக்ஸைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். அப்போது அந்த இயந்திரத்தில் இவர் சிக்கிவிட, இவரின் பல எலும்புகள் உடைந்திருக்கின்றன. இவர் மீதே அந்த இயந்திரம் ஏறிச் சென்றுவிட, உடனடியாக ஜெர்மியை ஹெலிகாப்டர் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்தார்.

இந்நிலையில் ஜெர்மி ரென்னருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்  கிறிஸ்டோபர் வின்சென்ட் இந்த விபத்து குறித்துப் பேசியிருக்கிறார்.

“ஜெர்மி ரென்னர் நூலிழையில் உயிர் தப்பித்திருக்கிறார். அது அவருடைய அதிர்ஷ்டம். கொஞ்சம் விட்டிருந்தால் அவரது உடலில் உள்ள முக்கிய நரம்புகளும், உறுப்புகளும் பாதிக்கப்பட்டிருக்கும். ஜெர்மி ரென்னர் முழுமையாகக் குணமடைய வேண்டும். குணமடைந்த பின்னர் அவருக்கு மனரீதியாகவும் சிகிச்சைகள் தேவைப்படலாம். வலுவாகவும் சிறப்பாகவும் திரும்பி வர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.  

ஜெர்மி ரென்னர்
ஜெர்மி ரென்னர்

சிகிச்சை முடிந்து முதன்முதலாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஜெர்மி ரென்னர், "நான் தனியாக இருந்திருந்தால் அது ஒரு பயங்கரமான ஒரு மரண வழியாக இருந்திருக்கும். நிச்சயமாக நான் இறந்திருப்பேன். ஆனால் என்னுடன் எனது 'Nephew' அலெக்ஸ் இருந்தான். இந்த விபத்தில் எனக்கு 30க்கும் மேற்பட்ட எலும்புகள் உடைந்தன. இருப்பினும் நான் உயிர் பிழைப்பதையே விரும்பினேன்” என்று கூறினார்.

தொடர்ந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே பேசிய ஜெர்மி, "மருத்துவமனைக்குச் சென்றபோது நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்றுதான் நினைத்தேன். உடனே என்னுடைய மொபைலில் என் குடும்பத்தினருக்காக என்னுடைய கடைசி வார்த்தைகளை டைப் செய்துகொண்டிருந்தேன்" என்றவர், "இந்த விபத்தில் சிக்கியது தொடர்பாக எனக்கு மனவருத்தம் எதுவுமில்லை. அலெக்ஸைக் காப்பாற்ற மீண்டும்கூட இதை நான் செய்யத் தயாராக இருக்கிறேன். நான் உயிர் பிழைப்பேன் என்பதையே தேர்வு செய்திருக்கிறேன். இந்த விபத்து என்னைக் கொல்லப்போவதில்லை. நோ வே!" என்று நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.

சீக்கிரமே மீண்டு வாருங்கள் அவெஞ்சர்!