Published:Updated:

வசூலில் சாதித்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்! - அவதாரின் 9 ஆண்டுகள் சாதனை முறியடிப்பு

தினேஷ் ராமையா

உலக அளவில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை `அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படம் பெற்றிருக்கிறது.

Avengers End Game
Avengers End Game ( Marvel )

அயர்ன்மேன் தொடங்கி தோர், கேப்டன் அமெரிக்கா, ஆன்ட்மேன், ப்ளாக் விடோ, ப்ளாக் பாந்தர் என சூப்பர் ஹீரோக்களும் ஒரே இடத்தில் சங்கமித்து, தீய சக்திகளுக்கு எதிராகச் சண்டையிட்டு உலகத்தைக் காப்பாற்றுவதுதான் அவெஞ்சர்ஸ் படத்தின் கதை. இந்தப் படத்தின் நான்காவது பாகமான `எண்டு கேம்' கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியானது.

Kevin Feige
Kevin Feige
Loopers

மார்வெல் காமிக்ஸின் அதிரிபுதிரி ஹிட் வெர்ஷனான அவெஞ்சர்ஸ் வரிசையில் வெளியான எண்ட் கேம், பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவித்தது. உலக அளவில் பெரும் வசூலை ஈட்டியிருக்கும் இந்தப் படம், ஆல்டைம் வசூல் சக்கரவர்த்தியான அவதாரின் 9 ஆண்டுகள் சாதனையை முறியடித்திருக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான அவதார் படம், உலக அளவில் 2.78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.19,210 கோடி). கேட்கவே மலைப்பாக இருக்கும் இந்த வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்திருப்பதாக அறிவித்திருக்கிறார் மார்வெல் ஸ்டுடியோஸ் உரிமையாளர் கெவின் ஃபீஜ் (Kevin Feige).

இதுதொடர்பாக அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை வெளியிட்ட டிஸ்னி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரண்டு படங்களின் வசூல் தொகைக்கான வித்தியாசம் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 50,000 அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.3.44 கோடி) இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த வித்தியாசத்தை முந்தி உலக அளவில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முடிவில் முறியடிக்கும் என்றும் டிஸ்னி தெரிவித்திருந்தது.

Avengers End Game
Avengers End Game
Marvel

இதுகுறித்து பேசிய கெவின், `ரசிகர்களுக்கு நன்றி. உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பெற்றிருக்கிறது' என்று தெரிவித்திருக்கிறார். டெலீட் செய்யப்பட்ட ஹல்க் தொடர்பான காட்சிகள், சூப்பர் ஹீரோக்களின் பிதாமகர் என்று அறியப்படும் ஸ்டான் லீக்கு மரியாதை செய்யும் காட்சிகள் மற்றும் போஸ்ட் கிரடிட்டில் ஸ்பைடர் மேன்; ஃபார் ப்ரம் ஹோம் படத்தின் காட்சிகள் ஆகியவற்றை சேர்த்து கடந்த ஜுன் 28ல் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றநிலையில், வசூலும் புதிய உச்சத்தைத் தொட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.